Kidny

Kidny

நாட்டில் சீராக சென்று கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரசை நாங்கள் குழப்புகிறோமா? எந்த நாட்டில் என்று சொல்ல முடியுமா? #slmc(எம்.ஏ.றமீஸ்)

நாட்டில் சீராக சென்று கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகளை குழப்பியடிப்பதற்காகவே கிழக்கின் எழுச்சி அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்று கிழக்கின் முதல்வரான ஹபீஸ் நஸீர் அஹமட் ஊடகங்கள் வாயிலாக தெரிவித்திருந்தார்.

தெரிவித்திருந்ததாக பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த நாட்டில் சீராக சென்று கொண்டிருக்கிறது என்பது பற்றி அவர் தெளிவாக குறிப்பிடத் தவறியுள்ளார் என கிழக்கின் எழுச்சி அமைப்பின் செயலாளர் சேகு இஸ்ஸடீன் அஸ்ஸுஹூர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கிழக்கின் எழுச்சி பற்றி தெரிவித்துள்ள கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் கிழக்கின் எழுச்சி சார்பாக அதன் செயலாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், இலங்கை நாட்டில் சீராக செல்லவில்லை என்பது ஊரறிந்த ரகசியமென்றாலும், அவருக்கும் மக்களுக்கும் இது தொடர்பில் ஒரு தெளிவை அளிக்குமுகமாக எமது கருத்தையும் பதிவு செய்து கொள்வதற்காக இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது.

முஸ்லிம் காங்கிரஸ் யாப்பை முன்னாள் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் எழுதினார்கள் என்றும் அதில் கிழக்கிலிருந்துதான் தலைவர் வர வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் முதலமைச்சரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மு. கா வின் யாப்பை யார் எழுதினார்கள் என்பது தெரியாமலேயே அக்கட்சியில் சேர்ந்து முதலமைச்சராகி விடலாம் எனும் நிலமை இருப்பதுவே மு.கா வின் பலவீனமாகும். இடை நடுவில் கட்சிக்குள் புகுந்து பழைய போராளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்காமல் பணம் படைத்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவது மு.காவை அதன் தீவிர போராளிகள் வெறுப்பதற்கும் எழுச்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் ஒரு காரணமென்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் மு.கா தலைமை கிழக்கிற்கு வேண்டும் என்று கேட்பது யாப்புக்கு இசைவாகத்தான் என்று முதலமைச்சருக்கு அறிவித்தது எது? இவ்வளவு புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பை கிழக்கின் எழுச்சியின் மேல் காழ்ப்புணர்வு கொண்டு விமர்சிக்கும் எவரும் சொன்னதில்லை. ஏனெனில் தலைமை கிழக்கிற்குத்தான் வேண்டும் என்று, யாப்பின் பிரகாரம்தான் நாங்கள் கேட்கிறோம் என்பதை நம்புகின்ற அளவுக்கு முதலமைச்சர் அரசியலில் ஒரு கத்துக்குட்டியல்ல என்பதை நாம் நன்கு அறிவோம்.

தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸின் கட்சித் தலைமை கிழக்கிற்கு வெளியில்தான் இருக்க வேண்டுமெனில் அந்த யாப்பில் அப்படியாக எந்த இடத்திலும் எழுதப்படவில்லை கிழக்கின் முதல்வர் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்தக் கட்சி ஹகீம் அவர்களால் சிறப்பாக நடாத்தப்படுகிறது என்று சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறாயின் கிடைக்கப்போகும் இரண்டு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காக பலருக்கு வாக்களித்து,  இன்று யாருக்குக் கொடுப்பது என்று குழம்பி விழி பிதுங்கி நிற்பதுதான் சிறப்பான வழி நடத்தலா?

அல்லது முறையற்ற விதத்தில் கட்சியின் செயலாளரின் அதிகாரங்களைக் குறைப்பதற்காக செய்த தந்திரங்கள் அம்பலமாகி கட்சியை நீதிமன்றுக்குப் போக வேண்டிய நிலைக்கு கொண்டு வந்து விட்டிருப்பதுதான் சிறப்பான வழி காட்டுதலா?

எதிர் வரும் தேர்தலில் கட்சி மரச்சின்னத்தில் போட்டியிட முடியுமா எனும் சந்தேகமான நிலையில் இருக்கிறது. இதுதான் சிறப்பான வழி காட்டலா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முதலமைச்சர் எத்தனிக்கின்றார். கடந்த காலங்களைப்போல் மக்கள் தற்போதில்லை என்பதையும் நேரம் பார்த்து மக்கள் ஏமாற்றுக்காரர்களை பாதாளக் குழிக்குள் தள்ளி விடுவார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடந்த பதினாறு வருடங்களாக தமக்கு நன்மை நடக்கும் என்று நம்பி நம்பி வாக்களித்து ஏமாந்து போனவர்கள் நமது கட்சியின் போராளிகளான ஏழை மக்கள். தொடர்ந்து அமைச்சுப் பதவிகளை அனுபவித்துக் கொண்டு மக்களுக்கு உருப்படியாக எதையுமே செய்யாமல் போலிக் காரணக்களைக் கூறி ஏமாற்றிக் கொண்டிருப்பதை இவர்கள் உணரத் தொடங்கியதுதான் கிழக்கின் எழுச்சியாய் இன்று எழுந்து நிற்கிறது.

பதினெட்டாம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததில் இலங்கை முஸ்லிம்கள் அடைந்த மாபெரும் நன்மை அல்லது அபிவிருத்தி என்ன என்று கூறமுடியுமா? அல்லது அவர்கள் பெற்ற உரிமைகள் என்ன என்பது பற்றியாவது கூறமுடியுமா?

அது பற்றி கூற முடியாது போனால்,  சிறப்பாக கட்சியை வழி நடத்திக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் கூறும் ஹகீம் அவர்கள் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸை 2006ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு முடக்கிய முதல்வருக்கு கிழக்கின் எழுச்சி கட்சியை முடக்கும் நடவடிக்கை என விமர்சிக்க என்ன அருகதையுள்ளது என்பது பற்றியாவது கூறமுடியுமா?

கட்சியிலுள்ள புல்லுருவிகள் திருந்தி கட்சிக்குள் வந்து தலைவருக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக கூறியிருப்பதில்,  அவர்களை அவமதித்து அவர்கள் கட்சிக்குள் எவ்விதத்திலும் வந்துவிடக் கூடாது எனும் தொனியில் அறிக்கையிட்டிருப்பது ஏன்? கட்சிக்குள் முதலமைச்சரை விடவும் மூத்த அரசியல்வாதிகள் இருப்பது அவருக்கு எந்த விடயத்தில் அசௌகரியப்படுத்தும் என்பதைக் கூட உணர்ந்துகொள்ள முடியாதவர்களாகவா எழுச்சியாளர்களையும் மக்களையும் முதல்வர் பார்க்கின்றார்.

மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இறந்தபோது அந்நாரின் பாரியார் பேரியல் அவர்களிடம் தலைமைத்துவம் இருப்பது கிழக்கிற்கு அதை மீளப்பெற வசதியாயிருக்கும் என்று கருதிய முதலமைச்சர் என்ன அடிப்படையில் மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டீர்கள் என்பதும் கட்சியின் தீர்க்கப்படாத உள்வீட்டு மர்மங்களில் ஒன்றாக இன்னும் இருக்கின்றது.

மு.காவின் கட்சியின் விளையாட்டுத் துறைப் பிரதியமைச்சரோ இனப்பிரச்சினைக்கான யாப்பு மாற்ற தீர்வுத்திட்டத்தில், கரையோர மாவட்டத்திற்கு தீர்வு வேண்டுமென்கிறார். தயவு செய்து அவரை முஸ்லிம்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு விடயங்களில் விளையாட்டுத்தனமாக இருக்க வேண்டாம் என்று கூறவேண்டியுள்ளது.

அம்பாறையை தளமாகக்கொண்ட பேரின  நிர்வாக அசௌகரியங்கள், புறக்கணிப்புக்கள், அநீதிகளிலிருந்து பாதுகாப்புப் பெற்ற நிர்வாக அலகாக முன்வைக்கப்பட்ட தனியான கரையோர மாவட்டக் கோரிக்கையை இனப்பிரச்சினைக்கான தீர்வின் போதான முஸ்லிம்களுக்கான கோரிக்கையாக முன்வைப்பது  பிரதி அமைச்சரின் அரசியல் அடிப்படை அறிவீனத்தையே சாட்சி பகர்கின்றது.

விஷேட வர்த்தமானியூடாக சம்பந்தப்பட்ட அமைச்சரினால் பிரகடனப்படுத்தப்பட வேண்டிய கரையோர நிர்வாக மாவட்ட உருவாக்கலை நாட்டின் யாப்பு மாற்றத்துக்குள் உள்ளாக்க வேண்டிய விடயம் என்று கோருவது அறிவீனத்தின் உச்சத்தை வெளிக்காட்டுகிறது.

மேலும் இணைந்த வட-கிழக்கில்   அமைய வேண்டிய  முஸ்லிம்களுக்கான தனியான அதிகார அலகுக் கோரிக்கையை வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்கும் இந்த காலகட்டத்தில் முன்வைப்பதானது வடக்கையும் கிழக்கையும் மீண்டும்   இணைப்பதற்கான தர்க்கவியல் ஆதரவாகவே நோக்கப்படும்  என்பதை புரிந்து கொள்ள முடியாமை அரசியல் அறிவீனத்தின் இன்னுமொரு ஆதாரமாகும்.

இவர்கள்தான் தம்மிடம் கேள்விகள் கேட்கப்படாமலேயே வலிந்து கிழக்கின் எழுச்சி பற்றி விமர்சிக்கிறார்கள். தாம் இது பற்றி எதுவும் எதிர்ப்புத் தெரிவிக்காவிட்டால் கிழக்கின் எழுச்சியின் ஆதரவாளர்களாக எண்ணப்பட்டு விடுவோமென்ற பயத்தில் அவசர அவசரமாக எதிர்ப்பைக் காட்டுகின்றது தெரிகிறது.

கிழக்கின் எழுச்சி ஒரு வெற்றுக் கோஷமென்றும், அதைப்பற்றி அலட்டிக்கொள்ள தேவையில்லை என்றும் கூறிவிட்டு, மாறி மாறி அது பற்றி அறிக்கைகளாகவும் மேடைப் பேச்சுக்களாகவும் மு.கா பிரமுகர்கள் கிலி பிடித்து பேசிக்கொண்டிருப்பதே அதன் வளர்ச்சியைப் பறை சாற்றுகின்றது.

இதன் மீது சேறு பூசுவதற்காக, இதன் பின்னணியில் பிரதம செயற்பாட்டாளர்களின் மிக நெருங்கிய உறவினர்கள் இருப்பதாகவும், அவர்களது தேவைகளுக் கேற்றவாறு நாம் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. ஆனால் அவர்கள் கிழக்கின் எழுச்சியில் குளிர் காய வேண்டிய தேவைகளற்ற முதுசங்கள் என்பதை முழு முஸ்லிம் சமுகமும் அறிந்துள்ளது.

மேலும் அவர்கள் சமுகத்திற்கு பிழைகள் இழைத்திருந்தால், தேவையேற்படும் போது அவர்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றத்தயங்காத தன்னிச்சையான, சுய ஆசாபாசங்களைக் கடந்த, காத்திரமான அமைப்பாகவே கிழக்கின் எழுச்சியை முன்னெடுக்கின்றோம்.

கிழக்கின் எழுச்சியின் உருவாக்கத்தின் அவசியம் பற்றி போதுமானளவு விளக்கங்களை கொடுத்தாயிற்று. மக்கள் அவற்றை சரி கண்டு எம்முடன் சாரி சாரியாக இணைகின்றனர்.

மு.கா தலைமைக்கு கண்மூடித்தனமான ஆதரவை தனிப்பட்ட காரணங்களுக்காக வழங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இன்னும் விளக்கங்கள் தேவையாயின் அவர்கள் அதனைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சிறந்த இடம் அவர்களது மனச்சாட்சியே என்பதை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறோம் என்றார்.
நாட்டில் சீராக சென்று கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரசை நாங்கள் குழப்புகிறோமா? எந்த நாட்டில் என்று சொல்ல முடியுமா? #slmc நாட்டில் சீராக சென்று கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரசை நாங்கள் குழப்புகிறோமா? எந்த நாட்டில் என்று சொல்ல முடியுமா? #slmc Reviewed by Madawala News on 8/08/2016 10:26:00 AM Rating: 5