Ad Space Available here

அஷ்ரப்... .எப்பேர்பட்ட ஆளுமை தெரியுமா? இந்த அதிரடி சரவெடி சம்பவமே சாட்சி.-ஸபார் அஹ்மத்-

பிரதமர் பிரமேதாஸவின் மேசைக்கு புலனாய்வு அறிக்கைகள் வந்து குவிந்தன..1988 டிசம்பர் 19 ஜனாதிபதி தேர்தலை இலேசில் வெல்ல முடியாது..தேவை வாக்கு வங்கியில் பாரிய செல்வாக்கை செலுத்தக் கூடிய ஒரு சூப்பர் பவர்,கிங் மேக்கர்.

இந்தக் காலகட்டத்தில் அஷ்ரப் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் பாரிய சக்தியாய் கிழக்கு மாகாணம் எங்கும் தனது ஆணிவேரை ஊடுறுவி அரசுக்கு ஒரு டிஸ்கோ டான்ஸ் ஆட்டம் காண்பித்துக் கொண்டிருக்க,இந்த விளைச்சலின் நாயகனாய் இருந்தார் அஷ்ரப்...சுட்டு விரல் அசைவில் சர்வமும் அடக்கம்...கிழக்கின் நிலமை சுடச்சுட அப்பம் போல பிரேமதாஸவின் பார்வைக்கு வர அமைச்சர்களுக்கு அடுத்த கட்டளை பறந்து வந்தது..." அஷ்ரபை வளைத்துப் பிடி"

ஏஸி மெலிசாய் உறுமிக் கொண்டிருந்த அந்த அறையில் அஷ்ரபுடன் மொத்தம் மூன்று பேர்..பிரபல அமைச்சரும் அஷ்ரபின் சட்டக்கல்லூரி நண்பருமான லலித் அத்துலத் முதலி, மற்றும் பிரதமர் பிரேமதாச,

.....”ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதமர் பிரேமதாஸவை ஆதரிக்கும்..ஆனால் ஒரு நிபந்தனை”..அஷ்ரப் சொன்னார்....அவ்வளவு தான்..ஒரு கணம் ஆடிப் போன லலித்தும் பிரமேதாஸவும் இயல்பு நிலைக்கு வர சில நிமிசங்கள் கரைந்தன...


“இதுவரை பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற ஒரு கட்சி மாவட்டத்தில் மொத்த வாக்குகளில் 12.5 வீதமான வாக்குகளைப் பெற வேண்டும்.என்று இருக்கிறது.இதை 5 வீதமாய் குறைக்க வேண்டும்..உறுதி மொழி எல்லாம் கிடையாது..இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும்".1989 பாராளுமன்றத் தேர்தலில் முதல் தடவையாய் போட்டி இட இருக்கும் நோக்கத்தைக் கருத்திற் கொண்டு அஷ்ரப் ஆடிய மங்காத்தா ஆட்டம் இது....


அணுகுண்டுகள் வெடித்துச் சிதறிய ஹிரோஷிமா போல் ஆனது பிரேமதாசவின் மனசு..”இந்தக் கல்யாணம் நடக்கும்..இப்பவே பத்திரிகை அடிக்கிறோம்”...என்று சொல்வதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை...

அதன் பின்னர் நடந்தவைகளைச் சரித்திரம் அறியும்..குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முதல் டிசம்பர் 17 இல் இருந்து அமுலுக்கு வந்தது...இதுவே 15 வது அரசியல் அமைப்புத் திருத்தம்...பாராளுமனறத்தைக் கூட பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு கட்சியின் தலைவன் இலங்கை அரசியல் அமைப்புத் திருத்தம் ஒன்றில் மறைகரமாய் இருந்த வரலாற்று விநோதம் அது....எப்பேர்பட்ட ஆளுமை....
இந்த அதிரடி சரவெடி சம்பவம் அஷ்ரப் இன் தேசிய அரசியலில் ஆரம்பமே சிக்ஸர் ரகம் என்பதை தெள்ளத் தெளிவாக கட்டியம் கூறுகிறது...


இன்று அஷ்ரப் நினைவு நாள்.அஷ்ரப் இன் ஆளுமைகள்,சேவைகள் , எதிர் கொண்ட சவால்கள்,விமர்சனங்கள் என்று பல்லாயிரம் கதைகள் இருக்கின்றன...அஷ்ரப் ஒரு தன்னிகரற்ற சக்தியாய் 1994 முதல் 2000 வரையிலான சந்திரிக்கா அரசில் இருந்தார்.வெறும் மேலதிக ஒரே ஒரு ஆசனத்தால் தப்பிப் பிழைத்த சந்திரிக்கா அரசுக்கு தடுப்புச் சுவர்..அணை, ராகுல் டிராவிட் எல்லாம் அஷ்ரப் தான்...

இன்று பலருக்கு அரசியல் என்ற பேரில் அங்கலாவாண்யங்களாய் மாறிவிட்ட கொள்ளைகளுக்கு அஷ்ரபின் திரு உருவப் படம் தேவைப் படுவது தான்..உச்சக்கட்ட சோகம்.அஷ்ரபும் தந்தைமார்களும் ஒன்று தான்..இருக்கும் போது அதன் அருமை எமக்கு தெரிவதில்லை...
அஷ்ரப்... .எப்பேர்பட்ட ஆளுமை தெரியுமா? இந்த அதிரடி சரவெடி சம்பவமே சாட்சி. அஷ்ரப்... .எப்பேர்பட்ட ஆளுமை தெரியுமா? இந்த அதிரடி சரவெடி சம்பவமே சாட்சி. Reviewed by Madawala News on 9/16/2016 09:52:00 AM Rating: 5