Sunday, September 18, 2016

இலங்கை முஸ்லிம்களின் தனித்துவத்தினை இவ்வுலகுக்கு அடையாளப்படுத்திய மாபெரும் தலைவர் அஷ்ரப் அவர்களின் அரசியல் பயணம்.

Published by Madawala News on Sunday, September 18, 2016  | முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது 

அரசியல் யாப்பில் இருக்கும் முஸ்லிம் சமூகத்தினை பாதிக்கின்ற தேர்தல் விகிதாசார முறையில் பன்னிரெண்டரை சதவீதமாக இருந்த வெட்டுப்புள்ளியை ஐந்து சதவீதமாக குறைக்க செய்யுமாறு கோரப்பட்டதே பிரேமதாசாவுக்கு தலைவர் அஷ்ரப் அவர்கள் வித்தித்த அந்த நிபந்தனையாகும். பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு பத்து நாட்களே இருந்த நிலையில் தலைவர் அஷ்ரப் அவர்களின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.


தலைவர் அஷ்ரப் அவர்களின் இந்த தீர்க்கதரிசனமான செயற்பாட்டின் மூலம் சிறுபான்மை சமூக கட்சிகள் மட்டுமல்ல, பெரும்பான்மை சமூகத்தின் சிறிய கட்சிகள் கூட பாராளுமன்றம் செல்லக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டது.
1989ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தளில் முஸ்லிம் காங்கிரஸ் முதன்முதலாக பொதுத்தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு நாடு முழுவதிலுமிருந்து 202,016 வாக்குகளை பெற்று நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று பாராளுமன்றம் சென்றது. தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு முதல்முதலாக பாராளுமன்றம் சென்றார். அத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்ற தலைவர் அஷ்ரப் அவர்களின் இலக்கை அடைய முடியாதது ஓர் அதிர்ச்சியான விடயமாகும்.
முஸ்லிம் காங்கிரசின் தோற்றமும், தொடர்ந்து வந்த வடகிழக்கு மாகாணசபை தேர்தல் மற்றும் பொது தேர்தல் மூலமாக முஸ்லிம் மக்களின் ஆணை இக்கட்சிக்கு கிடைத்ததனால் இலங்கையில் பேரம் பேசும் சக்தியுள்ள ஓர் அரசியல் கட்சியாக வளர்ச்சியடைந்ததுடன், அதன் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஆளுமையும், திறமையும் பலரையும் திரும்பிப்பார்க்க செய்தது.


இதனால் காழ்ப்புனர்ச்சிகொண்டு சிலர் தலைவர் அஷ்ரப் அவர்களை கொலை செய்வதற்கும் முயன்றனர். அந்தவகையில் இந்திய படையினருடன் ஓட்டிக்கொண்டு தனது இனத்துக்காக போராடிய சகோதரர்களை காட்டிக்கொடுத்து கொலை செய்துகொண்டிருந்த ஈ.என்.டி.எல்.எப் என்ற தமிழ் ஆயுத குழுவினர் 1989.08.22 அம் திகதி மருதமுனை பிரதேசத்தில்வைத்து தலைவர் அஷ்ரப் அவர்களை கொலை செய்வதற்கு துரத்தியபொழுது தலைவர் அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார்.  


1989 ஆம் ஆண்டு தொடக்கம் 1994 ஆம் ஆண்டு வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டு ஒவ்வொரு பாராளுமன்ற அமர்விலும் முஸ்லிம் மக்களுக்காக தலைவர் அஷ்ரப் அவர்கள் துனிச்சலுடன் உரை நிகழ்த்தியிருந்தார். தலைவர் அஷ்ரப் அவர்களின் அயராத உழைப்பினால் முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் ஓர் தனித்துவ தேசிய இனம் என்பதனை உள்நாட்டில் மட்டுமல்ல தர்வதேசமும் அங்கீகரிக்கும் வகையில் தனது செயற்பாட்டினை முன்னெடுத்திருந்தார்.


199௦ ஆம் ஆண்டில் புலிகளுக்கும் பிரேமதாசாவுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததன் பின்பு முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களை அழித்தொழிக்கும் பணியில் விடுதலை புலிகள் ஈடுபட்டிருந்தனர். பல முக்கிய உறுப்பினர்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள்.

தலைவர் அஷ்ரப் அவர்கள் புலிகளின் கொலைபட்டியலில் முக்கிய நபராக கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியில் தனது அரசியலை துணிச்சலுடன் முன்னெடுத்தார்.


தலைவர் அஷ்ரப் அவர்கள் தனது தீவிர அரசியல் செயற்பாட்டினை ஆரம்பித்து பல சாதனைகளையும், வரலாற்று தடயங்களையும் ஏற்படுத்தினார். அதேவேளை, தனது அரசியல் பயணத்துக்கு தடையாக இருந்த துரோகிகள் பலரை கட்சியிலிருந்து தூக்கி வீசினார்.

அந்தவகையில், தலைவருடன் ஏற்பட்ட தொடர்ச்சியான கருத்துவேறுபாடு காரணமாக தவிசாளராக இருந்த சேகு இஸ்ஸதீன் அவர்கள் முஸ்லிம் காங்கிரசிலிருந்து விலக்கப்பட்டார். இதன் மூலம் கட்சியில் பிளவு ஒன்று ஏற்பட்டு புதிய கட்சி ஒன்று உருவானது.  ஆனாலும் அது முஸ்லிம் காங்கிரசினை எந்தவகையிலும் பாதிக்கவில்லை.


1994.07.01 ஆம் திகதி சந்திரிக்காவுடன் தலைவர் அஷ்ரப் அவர்கள் ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டு அவ்வாண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சந்திரிக்கா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியை ஆட்சியில் அமர்த்துவதற்கு தலைவர் அஷ்ரப் அவர்களின் பங்களிப்பு பிரதானமானதாகும். அத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஏழு பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொண்டது. யாழ்பாணம் மாவட்டத்திலிருந்தும் முஸ்லிம் காங்கிரசுக்கு ஓர் ஆசனம் கிடைக்கப்பெற்றது. இத்தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கும் ஓர் பேரம்பேசும் சக்தியாக தன்னை இவ்வுலகுக்கு நிரூபித்து காட்டினார்.


பத்தாவது பாராளுமன்றத்தில் கப்பல், துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சராக பதவி ஏற்று துறைமுக அதிகார சபையிலும், மற்றும் ஏனைய திணைக்களங்களிலும், ஏராளமான இளைஞ்சர்களுக்கு தொழில்வாய்ப்பினை வழங்கினார்.

அத்துடன் இந்நாட்டில் முஸ்லிம்களுக்கென்று ஒரு பல்கலைக்கழகம் இல்லாத நிலையினை உணர்ந்த தலைவர் அவர்கள், முஸ்லிம்களின் உயர்கல்வியினை அபிவிருத்தி செய்யும்பொருட்டு 1995.10.23 ஆம் திகதி ஒலுவில் பிரதேசத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக்கத்தினை உருவாக்கினார். பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் முஸ்லிம்களுக்காக உயர் கல்விக்கென்று ஓர் நிறுவனம் உருவாக்கப்பட்டதானது நினைத்துகூட பார்க்கமுடியாத ஒரு வரலாற்று சாதனயாகும். அத்துடன் ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகம் ஒன்றினையும் அபிவிருத்தி செய்தார்.
இனப்பிரச்சினை தீர்வின்போது முஸ்லிம்களுக்கென்று உருவாக்கப்பட இருக்கின்ற தென்கிழக்கு அலகு என்னும் முஸ்லிம் சுய ஆட்சி பிரதேசத்தில் ஒரு தனி இராச்சியத்துக்குரிய அனைத்து அம்சங்களும் அமைந்து இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதுவே அவரது கனவாகவும் இருந்தது.
தலைவர் அஷ்ரப் அவர்கள் ஓர் சிறந்த அரசியல் வாதியாக மட்டுமல்லாது, சிறந்த சட்டத்தரணியாகவும், ஓர் சிறந்த கவிஞ்ஜனாகவும் தன்னை அடையாளப்படுத்தி இருந்தார். அவர் எழுதிய கவிதை தொகுப்பான “நான் எனும் நீ” என்ற கவிதை நூல் 1999.09.26  ஆம் திகதி வெளியிடப்பட்டு சிறந்த வரவேற்பினை பெற்றிருந்தது.


சந்திரிக்கா அவர்கள் இரண்டாவது ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்ட வேளையில் அவரது ஆட்சியில் தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு ஏற்பட்ட கசப்புணர்வுகள் கடிதம் மூலமாக பரிமாறப்பட்டு, இறுதியில் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்கள் தலைவர் அஷ்ரப் அவர்களிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.


அதனை தொடர்ந்து தலைவர் அஷ்ரப் அவர்களின் தயவுடன் மீண்டும் சந்திரிக்கா 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதியானார். அதன் பின்பு 2000 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்காக மீண்டும் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் தலைமையிலான பொதுஜன முன்னணியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டது.


இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபடும்பொருட்டு 16.௦9.2௦௦௦ அன்று வானூர்தி மூலம் அம்பாறையை நோக்கி தலைவர் அஷ்ரப் அவர்கள் வந்துகொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக வானூர்தி வெடித்து சிதறியதன் மூலம் சஹீதானார். இவரது மரணம் திட்டமிட்ட கொலையா அல்லது விபத்தா என்று இதுவரையில் குழப்பமான நிலை இருந்து கொண்டிருக்கின்றது.


அம்பாறை மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெறும்பொருட்டு, அதற்கான வியூகத்தினை வகுத்திருந்த தலைவர் அஷ்ரப் அவர்கள், அந்த இலக்கினையும் தாண்டி நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தது ஒரு வரலாற்று சாதனையாகும். ஆனால் அந்த வரலாற்று சாதனையை பார்ப்பதற்கு தலைவர் அஷ்ரப் அவர்கள் உயிருடன் இருக்கவில்லை.    


இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் உலகம் அழியும்வரைக்கும் மாமனிதர், மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் தனித்துவ ஆளுமையும், அவரது சாதனைகளும் என்றென்றும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும். அவரது இழப்பு இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top