tg

ஆக்கங்களின் உரித்துடையவர்களது பெயர்களை மாற்றும் இழிச்செயல் எப்பொழுது நிறுத்தாட்டப்படும்?~அ(z)ஸ்ஹான் ஹனீபா~

இன்றை நவீன யுகத்தில் copy & paste சர்வசாதாரணமாகியதன் காரணமாக ஒருசிலர் மற்றவர்களது சொந்த உழைப்பில் தயாரான  ஆக்கங்களைத் திருடி அவற்றை தாம் யோசித்து கஷ்டப்பட்டு எழுதியது போன்று உரியவர்களின் பெயரை நீக்கி தமது பெயர்களை எவ்வித வெட்கமுமின்றி மாற்றியமைப்பதை காணமுடிகின்றது.

அதிலும் குறிப்பாக வட்ஸ்அப்,முகநூல்,டெலிகிராம்,கூகுள் பிளஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் இவ்வெட்கமற்ற பெயர் மாற்றும் திருட்டுவேலை பரவலாகி நடைபெற்று வருகின்றது, ஒருவர் தனது மூளையை கசக்கிப்பழிந்து கடின உழைப்பின் பின் ஒரு ஆக்கத்தையோ அல்லது ஒரு நூலையோ வெளியிடுகின்றார், அவ்வேளையில் அவர் எடுத்த முயற்சிகள், செலவழித்த நேரங்கள், எதிர்கொண்ட கஷ்டங்கள் மற்றும் பிரச்சினைகள் யாவற்றையும் அவர் மாத்திரமே அறிவார், இவ்வாறிருக்கும் பொழுது எவ்வித முயற்சியையோ கஷ்டங்கங்களையோ உணராத ஒருவர் மாற்றானின் ஆக்கத்தை தனது ஆக்கமாக பெயர்மாற்றி வெளியிடுவது எந்தவகையில் ஞாயமாகும்!?

எவ்வாறு ஒரு நூலை அச்சுருப்படுத்தி வெளியிடும் எழுத்தாளருக்கு அதனை திருடி அனுமதியின்றி வெளியிடுபவர்கள், உரியவரின் பெயரை மாற்றி திரிபுகளை ஏற்படுத்துபவர்களுக்கெதிராக உரிய சட்டநடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் இருக்கின்றதோ அவ்வாறு தான் மின்னியல் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தமது ஆக்கங்களை பகிர்பவர்களுக்கும் வெளியிடுபவர்களுக்கும் தாராளமான அதிகாரமுண்டு.  உண்மையில் நிறைகுடம் எப்பொழுதும் தழும்பாதது போன்று அறிவாளிகள் ஒருபோதும் இக்கேவலமான செயலை நினைத்துக்கூட பார்க்கமாட்டார்கள் மாறாக குறைகுடங்களாக சமூகமட்டத்தில் சுற்றும் ஒருசில அற்பர்களே இவ்வாறான இழிவான செயல்களை முனைப்போடு செய்வதில் காரணி கருத்தாக்களாக அமைகின்றனர். இவர்களுக்கு அல்லாஹ் தான் தெளிவுகளைக் கொடுக்கப்போதுமானவன்.

இவ்வாறான பெயர்மாற்றங்களாலும் திரிபுகளாலும் உண்மையான எழுத்தாளன் யார் என்பதையும், எழுதப்பட்ட நோக்கம், சூழ்நிலை, ஆக்கங்கள் பொதிந்திருக்கும் கருப்பொருள் போன்றவற்றையும் அறியமுடியாமல் போய்விடுகின்றன, சிலநேரங்களில் இத்தகைய செயற்பாடு எதிர்மறையான கருத்துகளுக்கு வழிவகுப்பது மாத்திரமன்றி மக்கள் மன்றத்தில் தப்பபிப்பிராயத்தையும் தோற்றுவிக்கின்றது எனில் மிகையாகாது. ஆக்கங்கள் எப்பொழுதும் நன்நோக்கத்திற்காகவே எழுதப்படுகின்றன; ஆதலால் அவற்றை உள்ளால் உள்ளபடி பகிர்வதோ பிரசுரிப்பதோ குற்றமல்ல மாறாக அவற்றில் திரிபுகளையும் பெயர்மாற்றங்களையும் ஏற்படுத்தி பிரபல்யத்தின் வெளிப்பாடான சுயநலத்தை அடிப்படையாகக் கொள்வதே மிகப்பெரிய குற்றமாகும்.

எப்பொழுது தான் இச்செயலைத் தவிர்க்க வேண்டும் என்றாவது இந்த சமூகம் உணருமோ ?! இவ்விழி நிலை தொடருமாயின் எமக்குப்பின் வரவிருக்கும் புதுயுகத்தினர் கல்விப்பரிமாற்றல், தொடர்பாடல்,தரவுகள் பொன்ற இன்னோரன்ன விடயங்களில் நிச்சயமாக  அளவிலா கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடுவர்.

ஆகையால் மேற்குறித்த இழிவான செயலைத் தவிர்த்து மக்கள் மன்றத்திலும் சமூக வலைத்தளங்களிலும் உள்ளதை உள்ளபடி வெளிக்கொணர முயற்சிப்போம்

நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
19/09/2016

ஆக்கங்களின் உரித்துடையவர்களது பெயர்களை மாற்றும் இழிச்செயல் எப்பொழுது நிறுத்தாட்டப்படும்? ஆக்கங்களின் உரித்துடையவர்களது பெயர்களை மாற்றும் இழிச்செயல் எப்பொழுது நிறுத்தாட்டப்படும்? Reviewed by Madawala News on 9/19/2016 04:55:00 PM Rating: 5