Kidny

Kidny

முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் காலத்துக்கு பொருத்தமான ஒரு விளக்கம்.-இனாமுல்லாஹ் மசிஹுதீன் -

முஸ்லிம் மாதர்களின் ஆடை தொடர்பாக என்னிடம் பல நண்பர்கள் கேட்கின்றார்கள், முஸ்லிம் மாதர் முகம் கரங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளை மறைத்து, அங்க அவயவங்களின் அலங்காரங்கள் கவர்ச்சிகள் புலப்படாத வண்ணம் தளர்வான ஆடைகளை அணிதல் வேண்டும்.

முகத்தை முழுவதும் திரையிடுவது கட்டாயம் எனக் கருதும் நிலைப்பாட்டை கொண்டுள்ளோர் அதனை பின்பற்றுவது அவர்களது சுதந்திரமும் தெரிவுமாகும். அதே போன்று அடுத்த நிலைப்பாட்டில் இருப்பவர்களை ஹராத்தை செய்பவர்களாகவும் வழிகேடர்களாகவும் காபிர்களாகவும் அழைப்பது அறியாமையாகும்.

கருப்புநிற ஆடைகளை பெண்கள் கட்டாயம் அணிய வேண்டும் என்பதில்லை, வாழுகின்ற நாட்டின் சீதோஷன நிலைகளை கருத்தில் கொண்டு அதிக கவர்ச்சியற்ற தளர்வான ஆடைகளை அவர்கள் தாராளமாக அணியலாம்.
மாதர்கள் முகம்மூடி அணிந்தாலும், முகம்திறந்து அணிந்தாலும் அங்க அவயவங்களை புலப்படுத்துகின்ற கவர்ச்சியான இறுக்கமான ஆடைகளை அணிவதும் அவற்றை சந்தைப் படுத்துவதும் தவறாகும்.

அத்தோடு எத்தகைய ஆடைகளை அணிந்தாலும் மஹரம் துணையின்றி பொது இடங்களிலும், பொது போக்கு வரத்துகளிலும் தனித்து அலைந்து திரிவதை கண்டிப்பாக நாம் தவிர்ந்து கொள்ளல்வேண்டும், பொது இடங்களில் இஸ்லாமிய ஆடைகளை அடுத்தவர்கள் தரக்குறைவாக கருதும் வண்ணம் நடந்து கொள்வதும் தவிர்க்கப் படவேண்டிய விடயங்களாகும்.

மாதர்களது ஆடைகள் மாத்திரமன்றி ஆண்களது ஆடைகள் விடயத்திலும் சமூகம் அதிக கரிசனை காட்டுதல் வேண்டும், தமது அங்க அவயவங்களை அச்சொட்டாக காட்டுகின்ற கவர்சிகரமான இறுக்கமான ஆடைகளை ஆண்களும் தவிர்ந்து கொள்ளவேண்டும்.

பாதுகாப்பு காரணங்களிற்காக பரிசோதனைகள் இடம் பெறின் பெண் அதிகாரிகளின் துணையுடன் நாம் பாதுகாப்பு தரப்பினருக்கு நிபந்தநிகளுடன்கூடிய ஒத்துழைப்பை வழங்கலாம்,

அதேபோன்றே ஆள் அடையாள அட்டைகளிற்கான புகைப்படத்தை எடுத்துக் கொள்வதற்காக தமது முகத்திரையை ஓரளவு நகர்த்துவதில் மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை.

நவீன வடிமைப்புகளில் வரும் இடுப்பிற்கு கீழ் வழிந்தோடும், உள்ளாடைகளை அல்லது பின்புறத்தின் ஒரு பகுதியை வெளிக் காட்டும் கேவலமான ஆடைகளை இளைஞர்களும் தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.

முஸ்லிம் ஆடவருக்கும், மகளிருக்கும் பொருத்தமான தளர்வான ஆடைகளை வடிவமைத்து சந்தைப்படுத்தக் கூடிய தொழில் முனைவர்கள் இன்று அவசியப் படுகின்றனர்.

குறிப்பாக இஸ்லாம் ஏன் ஆடைவிடயத்தில் அதிக கரிசனை செலுத்துகின்றது என்ற அடிப்படை இலக்குகளை மனதில் கொள்வது பல்வேறு கேள்விகளிற்கு பதில்களைத் தரும்.

எமது ஆடைகளும், பண்பாடுகளும் எங்களுக்கிடையில் பரஸ்பர நல்லுறவை சகோதரத்துவத்தை ஏற்படுத்த வேண்டும், தீமைகளில் இருந்தும் தீங்குகளில் இருந்தும் எங்கள் தாய்க்குலத்திற்கும் சமூகத்திற்கும் பாதுகாப்பை தரவேண்டும், மாறாக அவற்றை மையமாக வைத்து நாமே பிளவுகளையும் பிணக்குகளையும் வன்முறைகளையும் உள்ளிருந்தும் புறமிருந்தும் வரவழைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

மாதர்களின் ஆடைகளில் கரிசனை செலுத்தும் ஒரு சமூகம் மாதர்களுக்கு எதிரான சமூக பொருளாதார கலாச்சார அநீதிகளையும் களைவதற்கு மாநாடுகளை நடத்த வேண்டும், நோய்களிற்குரிய அடிப்படை காரணிகளை கண்டு அவற்றிற்கு நாம் வைத்தியம் செய்ய தவறி விடுகின்றோம்.

உதாரணமாக இஸ்லாமிய ஆடையணிந்து மஹ்ரம் துணையுடன் மாதர் வீட்டைவிட்டு வெளியேறுவதை வலியுறுத்தும் ஒரு சமூகம் தமக்கொரு துணையை விலை கொடுத்து வாங்குவதற்கென வீட்டைவிட்டு வெளியேறி உழைக்கும் நிலையை கடல்கடந்து பயணிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ள சமூக கொடுமைகள் அநீதிகளை கண்டு கொள்ளாமல் இருக்கின்றமை தான் ஆச்சர்யமானது.

இஸ்லாத்தை பகுதி பகுதியாக பின்பற்றாது முழுமையான வாழ்வு நெறியாக நாம் எடுத்துக் கொள்கின்ற பொழுது ஏகப்பட்ட பிரச்சினைகளிற்கு தீர்வுகள் கிடைக்கின்றன.
முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் காலத்துக்கு பொருத்தமான ஒரு விளக்கம். முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் காலத்துக்கு பொருத்தமான ஒரு விளக்கம். Reviewed by Madawala News on 9/07/2016 10:57:00 AM Rating: 5