Ad Space Available here

உறவுகளை இணைக்கும் பெருநாளும் திடல் தொழுகையும் .இருபெருநாள் தினங்களிலும் நடாத்தப்படுகின்ற பெருநாள் தொழுகைகள் தொடர்பாக இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இருவேறுபட்ட நிலைப்பாடுகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. பெருநாள் தொழுகையானது பள்ளியில் தொழ முடியும் என்று ஒருசாராரும் திடலில் தொழுவதே நபிவழி என்று மற்றொரு சாராரும் தமது நிலைப்பாட்டில் கருத்துக்களை முன்வைத்து முரண்படுகின்றனர்.

மார்கத்தில் மூதாதையர் முன்னோர் செய்த விடயங்களை வைத்துக் கொண்டு பள்ளியில் தொழுவது சரியென்று வாதிடும் சகோதரர்கள் ஒரு விடயத்தை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். எமது மூதாதையர் முன்னோர் என்பவர்களையும் தாண்டி மார்க்கத்தின் அச்சாணியான நபிகளார் செய்த விழுமியங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர்களது வழிமுறையையே இறைவனும் பின்பற்றுமாறு கட்டளையிட்டுள்ளான். எமது சிந்தனைகள் மூலம் இஜ்திஹாத் செய்தல் ஆகுமாக்கப்பட்டதுதான் சட்ட மூலாதாரங்களில் சரியான தெளிவான உண்மையான ஆதாரங்கள் இல்லாத போதே அவற்றிற்கு முக்கியத்துவமளிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நபிகளார் ஒரு காரியத்தை வழிகாட்டிச் சென்றால் கூட்டவோ குறைக்கவோ எமக்கு எந்தவித அருகதையும் அனுமதியுமில்லை. நபிகளாரின் காலத்தில் இரு பெருநாள் தொழுகைகளும் திடலிலேயே தொழுதார்கள் என்பதற்கான சஹீஹான ஆதாரங்கள் குவியலாகக் கொட்டிகிடக்க புதிதாக சில கருத்துக்களைத் திணித்து பள்ளியிலும் தொழலாம் என்ற நிலைப்பாட்டில் இருப்பதென்பது நபிகளாரின் வழிமுறையில் மாற்றம் செய்பவர்களாக எம்மை இறைவனிடத்தில் காட்டிக் கொடுத்துவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நபிகளாரின் காலத்தில் பெருநாள் தொழுகைகள் பின்வரும் காரணிகளை பிரதானமாகக் கொண்டு நடைபெற்றிருக்கலாம். முதலாவது இடப்பற்றாக்குறை.

அதாவது மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் நபிகளார் பெருநாள் தின தொழுகைகளுக்காக அழைத்துள்ளார்கள். அவர்களையும் சப்ஹலிலே இருதிவரிசையில் வந்து அமர்ந்து கொள்ளுமாறு வேண்டியும் இருக்கின்றார்கள். எனவே பள்ளியில் அனைவரும் ஒன்று கூடும் போது அவர்களுக்கான இடப்பற்றாக்குறை திடலில் தொழுவதால் நிவர்த்தி செய்யப்படலாம். எனவே இதன் காரணமாகவும் திடல் தொழுகையை வற்புறுத்தி இருக்கலாம்.

இரண்டாவது பெருநாள் தொழுகையை பள்ளியில் தொழக்கூடிய ஏனைய தொழுகைகளிலிருந்து வித்தியாசமாக காட்டுவதற்காகவும் திடல் தொழுகையை நபிகளார் வற்புறுத்தி இருக்கலாம். மூன்றாவது தொழுகை எனப்படும் புனித இபாதத்தை சுத்தமான எந்த இடத்திலும் தொழ முடியும் என்று காட்டுவதற்காகவும் திடல் தொழுகையை வற்புறுத்தி இருக்கலாம்.
இவ்வாறு நபிகளாரின் செயற்பாடுகளுக்கு நல்ல காரணிகளை ஆயிரமாயிரம் அடுக்கிக் கொண்டே போகலாம். நாம் காரணிகளை ஆராய்வதை விடுத்து ஆதாராபூர்வமான ஹதீஸ்களின் மூலம் நிறுவப்படும் இவ்வாறான விடயங்களுக்கும் கருத்து முரண்பாடுகளை அடுக்கி இடுக்கிக் கொள்கின்றோம்.

திடல் தொழுகையானது மனத்திருப்தியையும் இறைதிருப்தியையும் பெற்றுத்தரும் ஒரு வழிமுறை என்பது தொழுது அனுபவித்தவர்களுக்கு புரியும். வருகின்ற பெருநாளில் முடியுமான வரை அனைத்து கிராமங்களிலும் திடல் தொழுகையை வலியுறுத்தி கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவோம். ஊரிலுள்ள இளைஞர்கள் இந்த விடயத்தில் மிகுந்த சிரத்தை எடுத்து மார்க்கத்தின் முதுகெலும்பு நாம்தான் என பறைசாட்ட முயலுங்கள்.

எனவே முழு வாழ்விலும் நபிகளாரின் சுன்னாவைப் பின்பற்றி இறுதி மூச்சிலும் அவர்களது வழிமுறையில் மரணிக்கும் உறவுகளாக எம்மை வல்ல இறைவன் மாற்ற வேண்டும். இறைவன் என்னையும் உங்களையும் சுவனத்தில் சேர்க்க பிரார்த்திக்கின்றேன்.

- அனீஸ் பின் அலி முஹம்மத் 

உறவுகளை இணைக்கும் பெருநாளும் திடல் தொழுகையும் . உறவுகளை இணைக்கும் பெருநாளும் திடல் தொழுகையும் . Reviewed by Madawala News on 9/09/2016 02:20:00 PM Rating: 5