Kidny

Kidny

(நேரடி ஆடியோ) ஹக்கீமின் வீரகேசரி அறிக்கைக்கு எதிரான அஸ்ஸுஹுர் இஸ்ஸடீனின் படிலடி..ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் -


சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான அப்துர் ரவூப் ஹக்கீம் நேற்று செய்வாய்கிழமை (27.09.2016) வெளியான வீரகேசரி தமிழ் நாளிதழில் சாணக்கியம் தீர்வைத்தரும் என்ற தலைப்பிலும் மாகாண ஆளுநர்களின் அதிகாரங்கள் குறித்து ஆழமாக ஆராயப்பட வேண்டும் எனும் இரண்டு தலைப்புகளில் அறிக்கை விடுதுள்ளமைக்கு எதிராக கிழக்கின் எழுச்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸடீனின் மகனுமான அஸ்ஸுஹுர் இஸ்ஸடீன் விடுதுள்ள மறுப்பறிக்கையின் விரிவான விளக்கம் வருமாறு…

27.09.2016 வீரகேசரியில் சாணக்கியம் தீர்வைத்தரும் என்ற தலைப்பிலும் மாகாண ஆளுநர்களின் அதிகாரங்கள் குறித்து ஆழமாக ஆராயப்பட வேண்டும் எனும் இரண்டு தலைப்புகளில் பேட்டியொன்று வெளியாகியுள்ளது. அதில் கிழக்கின் எழுச்சியை தெற்கின் சிங்களப் பேரினவாதத்துடன் இணைத்து கருத்துக் கூறியிருப்பது எமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவரது சரிந்து வரும் அரசியல் செல்வாக்கினால் ஏற்பட்ட அரசியல் வங்குரோத்து நிலை காரணமாக இவ்வாறு கூறுகிறார் என்பது தெளிவாகிறது.

அண்மைக்காலமாக சகோதரர் ரவூப் ஹகீம் அவர்களிடம் ஏதாவது கேள்விகள் கேட்கப்பட்டால், அதை தனக்கு எதிராக செயற்படுபவர்களைத் திட்டித் தீர்ப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வதை அவதானிக்க முடிகிறது.

அவரது கிண்டல் மிகுந்த சொல்லாடல்களில் பதவி இழந்தவர்கள் என்றும், தோற்கடிக்கப்பட்டவர்கள் என்றும், தூக்கி எறியப்பட்டுப் பின்கதவால் அரசுடன் ஒட்டிக் கொண்டவர்கள் என்றும், அரசுடன் ஒட்டிக்கொள்ளக் காத்துக் கிடப்பவர்கள் என்றும் பல வார்த்தைப் பிரயோகங்கள் நிறைந்திருக்கின்றன.

இதன் மூலம் அவர் சொல்ல விரும்புவது என்ன? இவர் குறிப்பிடுகின்றவர்கள் எல்லாம் அரசியலில் எந்தக் கருத்தையும் முன்வைக்கும் தகுதியற்றவர்களா? அரசியலில் பதவியில் இருந்தால் மாத்திரம்தான் கருத்து சொல்ல முடியுமா? பதவி பதவி என்று ஆலாய்ப்பறந்து பெற்ற பதவிகளால் பதினாறு வருடங்களாக சாதித்தது என்ன? பதவிகளின்றி எத்தனையோ ஆளுமைகள் இன்று சமூகம் பற்றி சிந்திக்கிறார்கள், எழுதுகிறார்கள் அவர்களை எல்லாம் செல்லாக்காசுகளாகவா ஹகீம் அவர்கள் கருதுகிறார்.

பதவி கிடைக்காதவர்கள் என்று நீங்கள் எள்ளி நகையாடுகிறீர்களே, இவர்கள் மக்களினால் பதவி இழக்கச் செய்யப்பட்டவர்கள் அல்ல.
பதவி கிடைக்காதவர்களுக்குப் பதவி கிடைக்காமல் போக காரணம் என்ன? மக்களைச் சந்தித்து வெற்றி பெறும் வாய்ப்பை உங்கள் நீண்டகால திட்டமிடலின் மூலம் நயவஞ்சகத்தனமாக பதவி இழக்கச் செய்யப்பட்டவர்கள் அவர்கள்.

பக்குவமாகவும் சாணக்கியமாகவும் சமயோசிதமாகவும் செயற்பட்டால் தீர்வைக் காண முடியும் என்று தெரிவித்துள்ளார். இது உண்மைதான். ஆனால் இவையெல்லாம் உங்களிடம் இருக்கின்றது என்று மக்கள் எவ்வாறு நம்புவது? மக்கள் நம்புமாற்போல் கடந்த காலங்களில் உங்கள் நடவடிக்கைகள் இருந்ததில்லையே. மாபெரும் தவறுகளைச் செய்ததாய் தேர்தல் மேடைகளில் அங்காலாய்க்கும் வரலாற்றுக்குத்தானே நீங்கள் சொந்த்தக்காரர்.

மக்களுக்கும் நாட்டுக்கும் உங்கள் சாணக்கியத்தால் ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் நன்மைகளைப் பட்டியலிட முடியுமா?

கடந்த பதினாறு வருடங்களாக கிழக்கிற்கு வெளியே இருந்த தலைவர், முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு வெல்லக்கூடிய ஒரு மாவட்டத்தையாவது கிழக்கிற்கு வெளியே உருவாக்கி இருக்கிறாரா? குறைந்த பட்சம் அவரது சொந்த மாவட்டத்திலாவது முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு வெல்ல முடியுமா, அவரால் முடியாது.

கிழக்கிற்குள்ளாவது கட்சியை வளர்த்தெடுத்திருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. கிழக்கில் கட்சியின் வாக்காளர் தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கிழக்கு மக்களின் வாக்குகளால் தொடர்ந்தும் கபினட் அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியை அனுபவித்து வருகிறார். இதன் மூலம் கிழக்கு அடைந்த நன்மை என்ன? சொல்லும்படியான ஏதாவது அபிவிருத்தி நடந்துள்ளதா?

இவைகள்தான் இவரது சாணக்கியமா?

வரலாற்றுத் தவறுகளைப் புரிந்து விட்டு சர்வசாதரணமாக மன்னிப்புக் கேட்டும், அதையெல்லாம் சட்டை செய்யாத உங்கள் அடிவருடிகளும், இதன் தாற்பரியங்கள் விளங்காத, அரசியல் விழிப்புணர்ச்சியற்ற பாமர மக்களும் உங்களுக்கு ஆதரவளிக்கும் வரை உங்கள் ராஜாங்கம் நடந்து கொண்டிருக்கும்.

விட்டுக்கொடுப்பு அரசியலைச்செய்ய வேண்டியுள்ளது என்று அடிக்கடி கூறி வருகிறார். எதை எதை எல்லாம் விட்டுக் கொடுக்கவுள்ளார் என்பதில் தெளிவில்லாததால் மக்கள் கவலையடைந்துள்ளார்கள்.

உங்கள் சாணக்கியத்தின் சாமர்த்தியத்தை சமூகம் கேள்விக்குட்படுத்துகிறது, வைத்தியர் யூசுப் போன்றவர்கள் கேட்கும் கேள்விகள் இவை, இதற்கு உங்கள் பதில் என்ன?

1. வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தி தமிழ் தேசியம் தீவிர முன்னெடுப்புக்களை பல தசாப்தங்களாக முன்னெடுத்து வருகிறது. ஆனால் நீங்களோ அது பற்றி பேசுவதற்கு நேரம் வரவில்லை என்கிறீர்கள். உங்களுக்கு தொடர்ந்து கபினட் அமைச்சுப் பொறுப்பினை பெற்றுத்தரும் மக்களின் அரசியல் தலை எழுத்து எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது வாளாவிருந்து விட்டு, பின்னர் தவறு செய்துவிட்டன் என்று கழிவிரக்கம் தேடிக்கொள்ளலாம் என்று பார்க்கிறீர்களா?

2.தேர்தல் மேடைகளில் பதினாறு வருடங்களாக சொல்லிவரும் கரையோர மாவட்டத்தையாவது பெற்றுத் தந்திருக்கிறீர்களா? அதைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தும் அதனைப் பெறாமல் வேறு விடயங்களைப் பெற்று அனுபவிப்பது சந்தி சிரிக்கின்றதே? இதுவா சாணக்கியம்?

3.முஸ்லிம்களின் பாதுகாப்பு மற்றும் இருப்பை கேள்விக்குறிக்கு உள்ளாக்கி இருக்கும் அதிகாரப் பகிர்வை உத்தேசயாப்பில் எழுதி முடித்து விட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் வரை ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருப்பது சாணக்கியமா?

இல்லை முஸ்லிம்களின் Islamic (Personal) law எடுக்கப்படக்கூடிய வகையில் உத்தேச யாப்பில் எழுதப்படும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது சாணக்கியமா?

4.ஐ.நா.வின் பான்கி மூன், ஹுசைன் போன்றவர்கள் இலங்கையில் வருகை தரும் போது வடக்கையும் தமிழ் தலைவர்களையும் மாத்திரம் சந்தித்து விட்டு முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாதது போல் அவர்களைப் பற்றி சிந்திக்கவோ பேசாமலோ செல்வது உங்கள் சாணக்கியத்தாலா?  

5.வடக்கில் இழக்கப்பட்ட முஸ்லிம்களின் நிலங்களை பெற்றுக் கொடுக்க வாய்திறக்காத ஹக்கீம், தமிழர்கள் இழந்த நிலங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னையில் கூறியது சாணக்கியமா?

6.சர்வதேச யுத்த குற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கருதப்படும் தமிழர்களுக்கு அவர்களின் தலைவர்கள் நியாயம் வேண்டி போராடும் போது அதேயுத்த குற்றங்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நியாயம் வேண்டி போராடாதது இவரின் சாணக்கியத்தாலா?

7.கல்முனையின் உண்மையான சொந்தக்காரர்களாகிய முஸ்லிம்களை மோசடிக்காரர்களாக சித்தரித்து, தமிழர்களுக்கு சொந்தமான கல்முனையை முஸ்லிம்கள் கபளீகரம் செய்கிறார்கள் என்று கோடீஸ்வரன் எம்பி பாராளுமன்றத்தில்  பொய் பேசி ஹன்க்ஷாட்டில் பதியச்செய்து வடகிழக்கிற்கு சொந்தம் கொண்டாடும் வகையில் தமிழ் தலைவர்களால் தயாரிக்கப்பட்டிருக்கும் போலி அறிக்கைக்கு ஆவண ரீதியான ஆதாரம்  சேர்த்த போது  ஹக்கீம் பேசா மடந்தையாக இருந்து வேடிக்கை பார்த்தது சாணக்கியமா?

8.இன்றேல், தனது தலைமைத்துவத்தைக் காப்பாறிக்கொள்ளும் நோக்கோடு கட்சியின் உயர்பீடத்தில் தனது சொந்தக்காரர்களையும் நண்பர்களையும் பெரும்பான்மையாக வைத்துக் கொண்டு வடகிழக்கு அரசியலில்,  தான் காலை கை என்று சொன்னால் ஆம் தலைவா நீ சொல்வதே சரி என்று கூறக்கூடிய  படியாதவர்களையும் சுயநலக்கும்பல்களையும் அரசியல்வாதிகளாக்கி சமூகத்தை முட்டாளாக்கி அழகு பார்ப்பது சாணக்கியமா?

9.ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் முடிவெடுத்து விட்ட பின்னர், தபால் வாக்குகளும் பதிவு செய்யப்பட்ட பின்னர் பல்டி அடித்து, மந்தைகளால் மேய்க்கப்படும் இடையர்கள் என்று பெயர் வாங்கியது சாணக்கியமா?

கிழக்கு முஸ்லிம்களின் வாக்குப் பலத்தைக் கொண்டு கபினட் அமைச்சுப்பதவியை தொடர்ச்சியாகப் பெறும் நீங்கள் அம்மக்களுக்கான கடமைகளைச் சரி வர செய்துள்ளீர்கள் என்று மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் உங்களால் சொல்ல முடியுமா?

16 வருடங்கள் எனும் நீண்ட காலத்தை அவருக்கு பிரதேசவாதம் பாராமல் ஆண்டு அனுபவிக்கக் கொடுத்தவர்கள் கிழக்கு மக்கள். அந்த நன்றிக் கடனுக்காவது அம்மக்களுக்கான பேரியக்கத்தை அவர்களிடம் கொடுத்துவிடுவதுதான் ஹகீம் அவர்களுக்கு அழகாயிருக்கும்.


வார்த்தை ஜாலங்களால் அரசியல் செய்த காலம் கடந்து விட்டது. இனியும் மக்களை ஏமாற்ற முடியும் என்று கனவிலும் எண்ண வேண்டாம். கிழக்கில் நிலமை மாறிவிட்டிருக்கிறது.

(நேரடி ஆடியோ) ஹக்கீமின் வீரகேசரி அறிக்கைக்கு எதிரான அஸ்ஸுஹுர் இஸ்ஸடீனின் படிலடி.. (நேரடி ஆடியோ)  ஹக்கீமின் வீரகேசரி அறிக்கைக்கு எதிரான அஸ்ஸுஹுர் இஸ்ஸடீனின் படிலடி.. Reviewed by Madawala News on 9/28/2016 10:42:00 AM Rating: 5