Ad Space Available here

ஹிஜாபா ? நிகாபா ? என்ற வாதட்டங்களுக்கிடையே சில வினாக்கள்.அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி 

ஹிஜாபா ? நிகாபா ? என்ற வாதம் ஒரு புறமிருக்க அதனோடு தொடர்பு பட்ட என்னுள் எழுந்த சில வினாக்களை மட்டும் இங்கு பதிவிடுகின்றேன் சேர்ந்தே விடை தேட எத்தணிப்போம்.

முதிர் கன்னிகளாக வீட்டில் முடங்கிக் கிடந்து உதிரத்தை கண்ணீராக சிந்தக் காரணமாயிருக்கும் ஹராமாக்கப்பட்ட சீதனம் தொடர்பாக நாம் அலட்டிக் கொள்ளாமலிருப்பது ஏன் ?

அதனடியாக எத்தனையோ யுவதிகள் வீட்டுப் பணிப்பெண்களாக  மத்திய கிழக்கு செல்வது பற்றி வாயைத் திறக்காமாலிருப்பது ஏன்?

சில போது மத்திய கிழக்குக்கு வீட்டுப் பணிப் பெண்களாகச் செல்லும் பலர் தமது கற்பையே இழந்து நாடு திரும்புகிறார்களே இதற்கான மாற்றீடு பற்றி சிந்திக்காமலிருப்பது ஏன்?

பெண்களின் நிகாப் , ஹிஜாப் என்று வாய்கிழிய வாதாட்டம் நடாத்தும் நாம் பிரசவத்துக்காக யாரிடம் நம் மனைவி மக்களை சகோதரிகளை பிள்ளைகளை அழைத்துச் சொல்கிறோம்?

பெண்கள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்க வேண்டும் என்று போதிக்கின்ற நாம் அந்நிய ஆண்களிடமிருந்து எமது சகோதரிகளை பாதுகாத்து பிரசவத்தின் போது அந்நியர்களுக்கே அவர்களது மறுமஸ்தானத்தையே காட்ட நேரிடுவது பற்றி சப்தமிடுவதில்லையே ஏன்?

கணவனையிழந்த எத்தனையோ விதவைகள் உண்ண உணவின்றி தமது துயரங்களை சொல்ல ஆளின்றி பசியாலும் பட்டினியாலும் அவதிப்படுவதை கண்டு கொள்ளாமலிருப்பது ஏன்?

மகளுக்கு சீதனம் கொடுப்பதற்காகவே வெளிநாட்டுக்கு வேலை தேடிச் செல்லும் ஆண்களினது மனைவிமார்களோடு ஊருக்கே முன்னுதாரணமாக திகழ வேண்டிய பிரமுகர்களே கள்ளத் தொடர்பு வைத்திருப்பதை தடுத்து நிறுத்த  மறுப்பது ஏன் ?

ஒரு வேளை சாப்பாட்டுக்காக வேண்டியே தமது காதணிகளை கழட்டி அடகு வைக்க கூட்டம் கூட்டமாச் செல்லும் இவர்களது வறுமை நிலை பற்றி யோசிக்கமலிருப்பது ஏன் ?

பல கோடி செலவழித்துக் கட்டி வண்ண வண்ண பூச்சுக்களால் நிறந்தீட்டப்பட்டிருக்கும் பள்ளி வாசல்களுக்கு முன்னே நாள் தோறும் மடியில் இரு குழந்தைகளோடு கையேந்தி யாசகம் கேட்கும் பாதிமாக்களின் அவல நிலை பற்றி மிம்பர்கள் முழங்காமலிருப்பது ஏன்?

இதனோடு தொடர்பு பட்ட இலங்கை சிறு பான்மை முஸ்லிம்களின் இன்னும் பல வலிகளையும் வரிகளாக்க முடியும்...  எதனை முன்னுரிமைப்படுத்த வேண்டும்
( Priority ) என்ற பிக்ஹுல் அவ்லவிய்யாத்பற்றிய அறிவு இல்லாதவர்களல்ல நாம்  எனினும் அதனை மறந்தோ அல்லது வேறு பல நோக்கங்களுக்காகவோ வீண் விதண்டா வாதங்களிலே நேரத்தை செலவு செய்ய முயற்சிக்கிறோம்.

ஒரு விடயம் கூடும், கூடாது, உண்டு, இல்லை, என்று மார்க்கத்தீர்ப்புச் சொல்வது அறிஞர்களின் கடமையல்ல
அதனையும் தாண்டி மாற்றீடுகளும், வழிகாட்டல்களும், தூர நோக்குள்ள சிந்தனைகளும் அதனைத்தழுவிய வேலைத்திட்டங்களுமே நமது பிரதான பணியென்பதை எனது தாழ்மையான அபிப்பிராயமாக முன் மொழிகிறேன்.

ஹிஜாபா ? நிகாபா ? என்ற வாதட்டங்களுக்கிடையே சில வினாக்கள். ஹிஜாபா ? நிகாபா ?  என்ற வாதட்டங்களுக்கிடையே சில வினாக்கள். Reviewed by Madawala News on 9/17/2016 03:51:00 PM Rating: 5