Free Space

இந்து முன்னணி பிரமுகர் படுகொலை... கோவையில் பெரும் பதற்றம். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தாக்குதல்.



தமிழ்நாடு 

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் மர்ம நபர்கள் சிலரால் அரிவாளால் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டார். சம்பவத்தை கண்டித்து கோவை, திருப்பூரில் ஏராளமான பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. அறிவிக்கப்படாத பந்த் போல கோவை, திருப்பூர் மாநகரங்கள் முடங்கின.

இந்து முன்னணியின் கோவை மாநகர மாவட்ட மக்கள் செய்தி தொடர்பாளர் சசிக்குமார். இவர், நேற்று இரவு கோவை, சுப்பிரமணியபாளையத்தில் உள்ள வீட்டிற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல், சசிக்குமாரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பிச்சென்றனர்.


இந்த தாக்குதலில் சசிக்குமாருக்கு எட்டு இடங்களில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அப்பகுதியினரால் மீட்கப்பட்ட சசிக்குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சசிக்குமார் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். சசிக்குமார் இறந்த தகவல் அறிந்த இந்து முன்னணியினர், மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதையடுத்து சசிக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தோடர்பாக கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சசிக்குமார் கொலைக்கு கண்டனம் தெரிவித்து, கோவை, திருப்பூரில் கடைகளை அடைக்க வற்புறுத்தியதால், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. இதன் காரணமாக பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதி, உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

கோவை, திருப்பூர் பகுதியில் இயங்கிய 10க்கும் அதிகமான அரசு பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. அடுத்தடுத்து பேருந்துகள் மீது தாக்குதல் நடந்ததால் பேருந்து போக்குவரத்து பல இடங்களில் நிறுத்தப்பட்டது. கடைகள் அடைப்பு, பஸ்கள் ஓடாதது உள்ளிட்ட காரணங்களால் கோவை, திருப்பூர் மாநகரில் அறிவிக்கப்படாத பந்த் அமலானது. இதனால் கோவை, திருப்பூர் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே கோவை அரசு மருத்துவமனையில் கூடிய இந்து முன்னணியினர் சசிக்குமார் கொலையை கண்டித்து அரசு மருத்துவமனையில் இருந்து டவுன் ஹால் நோக்கி ஊர்வலமாக சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கோவையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்து முன்னணி நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, கோவையில் அமலான பந்த் போராட்டம் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. கடை உடைப்பு, மோதல் என கோயமுத்தூரின் திக் திக் நிமிடங்கள் கோவை வாசிகளை பதைபதைக்க வைத்துள்ளது.

இதற்கிடையில்இ ன்று கோவை, திருப்பூரில் கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. நள்ளிரவு பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், வழக்கம்போல் இன்று காலையில் கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து கடைகளை மூட இந்து முன்னணியினர் வற்புறுத்தியதையடுத்து கடைகள் அடைக்கப்பட்டன.

தொடர்ந்து கோவை திருப்பூரில் இயங்கிய அரசு பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. இதையடுத்து பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. ஆட்டோ, கார்களின் இயக்கமும் பல இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தால் கோவையில் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். சசிக்குமார் உடல் வைக்கப்பட்ட அரசு மருத்துவமனை முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.  இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து டவுன் ஹால் நோக்கி ஊர்வலமாக சென்றவர்கள், சாலையின் இருபுறமும் இருந்த கடைகள் மீது தாக்குதல் நடத்தினர். ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் என கண்ணில் பட்டவை எல்லாவற்றையும் தாக்கினர். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.


இரு தரப்பினரும்  நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழலும் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கல் வீசி தாக்குதல் நடத்திக்கொண்டனர். இதில் போலீஸ் ஏட்டு உட்பட சிலர் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சசிக்குமார் சடலம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மாநகர சாலைகளில் 10 கி.மீ தூரம் சசிக்குமாரின் உடல் ஊர்வலமாக அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. உடல் செல்லும் வழியெங்கும் பூட்டியிருந்த கடைகள் அனைத்தும் அடித்து உடைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஊர்வலத்தில் இந்து முன்னணியினர் பங்கேற்றனர்.

கோவையில் அடுத்தடுத்த நிகழ்வுகளால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் கோவையில் தேவையற்ற பதற்றத்தை தடுத்து அமைதியை நிலை நாட்டப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி : விகடன்
இந்து முன்னணி பிரமுகர் படுகொலை... கோவையில் பெரும் பதற்றம். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தாக்குதல். இந்து முன்னணி பிரமுகர் படுகொலை... கோவையில் பெரும் பதற்றம். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தாக்குதல். Reviewed by Madawala News on 9/23/2016 03:39:00 PM Rating: 5