Monday, September 26, 2016

படுகுழியில் விழப்போகும் மஹிந்த .

Published by Madawala News on Monday, September 26, 2016  | கட்டுரை By:  எம்.ஐ.முபாறக் -

அரசியல் தீர்வு மற்றும் யுத்தக் குற்ற விசாரணை போன்ற தேசிய பிரச்சினைகளை  விடவும் ஜனாதிபதி மைத்திரிக்கு தலையிடியாக இருப்பது மஹிந்த தரப்பின் கூத்துத்தான்.

சுதந்திரக் கட்சியின்  தலைமைத்துவப் பதவியைக் கைப்பற்றுதல் அல்லது அக்கட்சியைப் பலவீனப்படுத்தி புதிய கட்சி ஒன்றை உருவாக்குதல் என்ற  நோக்கில் அவர்கள் செயற்படுவதே இதற்கு காரணம்.

சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவப் பதவியைக் கைப்பற்றுவது முடியாத காரியம் என்றாலும் புதிய கட்சி ஒன்றை உருவாக்குதல் என்பது சாத்தியமே.அவ்வாறு புதிய கட்சி ஒன்று உருவாகும்போது சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்படாவண்ணம் அது அமைய வேண்டும் என்பதே ஜனாதிபதி மைத்திரியின் நிலைப்பாடாகும்.ஆனால்,அவ்வாறானதொரு நிலை இல்லை என்பதுதான் உண்மை.

ஆனால்,சுதந்திரக் கட்சியின் அந்தப் பிளவு மஹிந்தவுக்கு நிரந்தர வெற்றியைக் கொடுக்காது என்பது உறுதி.இப்போது வேண்டுமானால் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அதிகமான எம்பிக்கள் மஹிந்த அணியுடன் இருக்கலாம்.ஆனால்,தேர்தல் ஒன்று வரும்போது அந்த எண்ணிக்கை குறைந்துவிடும்.

மஹிந்தவையும்  அவரது சகாக்களையும் அரசியலில் இருந்து துடைத்தெறிவதற்காக ஜனாதிபதி மைத்திரி பல வியூகங்களை வகுத்துச் செயற்படுகிறார்.அவற்றில் ஒன்றாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மைத்திரி சுதந்திரக் கட்சியின் வெற்றியைக் கூடத் தவிர்த்தார்.

மஹிந்த அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சுதந்திரக் கட்சியில்  அனுமதி வழங்கி அவரைத் தோற்கடிக்குமாறு மறைமுகமாக மக்களிடம் கோரிக்கை விடுத்ததையும் நாம் அறிவோம்.

தேர்தலின் பின் மஹிந்தவை வெறும் எம்பி என்ற வட்டத்துக்குள் கட்டுப்படுத்தி அவரின் அரசியல் வளர்ச்சிக்குத் தடையை ஏற்படுத்தினார்.சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்தவால் செல்வாக்குச் செலுத்த முடியாத நிலையை உருவாக்கினார்.

இந்த நிலை தொடர்ந்தால் அரசியலில் படு வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் என அஞ்சி புதுக் கட்சி ஒன்றை உருவாக்க மஹிந்த அணியினர் திட்டமிட்டனர்.புதுக் கட்சி எந்தளவு தூரம் அவர்களுக்கு சாதகமானதாக அமையும் என்று பார்ப்பதற்காக கள மட்டத்தில் அவர்கள் ஆய்வுகளையும் நடத்தினர்.

அந்தக் கட்சி வெற்றி பெறுகிறதோ இல்லையோ தனியான கட்சி அவசியமே என்ற நிலைப்பாட்டில் மஹிந்த அணியில் உள்ள பலர் உள்ளனர்.உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்குவதே இதற்கு காரணம்.
ஆனால்,அதே அணியில் உள்ள சுதந்திர  கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் புதுக் கட்சி உருவாக்கத்தை எதிர்க்கின்றனர்.

மஹிந்த அணியின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவும் சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சியைத் தடுப்பதற்காகவும் ஜனாதிபதி கிராம மட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றார்.மஹிந்தவுக்கு ஆதரவான அமைப்பாளர்களை நீக்கிவிட்டு தனக்கு விசுவாசமானவர்களை அவர் நியமித்து வருகின்றார்.

இப்போதுவரை உள்ளூராட்சி சபைகளில் மஹிந்தவுக்கு ஆதரவான உறுப்பினர்களே அதிகம் உள்ளனர் என்று சொல்லப்படுகின்றது.ஆனால்,வரப் போகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இவர்களை நீக்கிவிட்டு தனது ஆட்களையே மைத்திரி களத்தில் இறக்குவார்.இதனால் தேர்தல் முடிந்ததும் மஹிந்த உள்ளூராட்சி சபைகளிலும் தனது செல்வாக்கை இழந்து நிற்கப்போவது உறுதி.

இவர்களைத் தக்கவைத்துக்கொள்வதாக இருந்தால் தனிக் கட்சி ஒன்றின் ஊடாகவே இவர்களைத் தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும்.அதற்காகவே தேர்தலுக்கு முன் புதுக் கட்சியை உருவாக்க மஹிந்த அணியின் சிலர் முயற்சி செய்கின்றனர்.
.
மஹிந்தவுக்கு கிராம மட்டத்தில் மக்கள் செல்வாக்கு அதிகம் என்று சொல்லப்படுவது ஒரு மாயையாகும்.
சிங்களப் பகுதிகளில் இருந்த மஹிந்தவின் செல்வாக்குச் சரிந்துவிட்டது என்பது 2015 ஜனாதிபதித் தேர்தலின் பின்தான் தெரிந்தது.அவ்வாறுதான் இந்தக் கதையும்.

இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியையும் சுதந்திரக் கட்சியையும் வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கோ அல்லது பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை அடையும் அளவுக்கோ இவர்களால் வர முடியாது.

மஹிந்தவுக்கு இருக்கின்ற சொற்ப செல்வாக்கை-யுத்த வெற்றியாளர் என்ற பிரபல்யத்தை வைத்துக் கொண்டு அவருடன் இணைந்திருக்கும் சிலர் அடையத் துடிக்கும் அரசியல் இலாபத்துக்கு மஹிந்த பலியாகப் போகின்றார்;அரசியல் படுகுழியில் விழப்போகிறார்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே மைத்திரி வியூகம் அமைத்துள்ளார்.கிராம மட்டத்தில் கட்சியை மீளக்  கட்டியெழுப்பும் பனியைத்  தொடங்கியுள்ளார்.மஹிந்தவின் விசுவாசிகளை களையெடுக்கத் தொடங்கியுள்ளார்.

அதன் முதல் கட்டமாக சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.மஹிந்தவுக்கு ஆதரவான அமைப்பாளர்களை நீக்கிவிட்டு தனக்கு விசுவாசமானவர்களை மைத்திரி அமைப்பாளர்களாக நியமித்துள்ளார்.கிராம மட்டத்தில் கட்சியை மீளக் கட்டி எழுப்புவதற்கான-மஹிந்த அணியைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு சரியான நகர்வு என்றே இதைச் சொல்ல வேண்டும்.

இவ்வாறு மஹிந்தவும் மைத்திரியும் தங்கள் பலத்தை நிரூபிப்பதற்கான பலப் பரீட்சையில் இப்போது ஈடுபட்டுள்ளனர்.எதிர்வருகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்தான் இவர்கள் இருவரின் யுத்த களமாக இருக்கப் போகின்றது.

இத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்காகவே உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஜனாதிபதி ஒத்திப் போட்டுக்கொண்டு வருகின்றார்.மறுபுறம்,தனது அணி வென்றுவிட வேண்டும் என்பதற்காகவே மஹிந்தவும் வியூகம் வகுக்கின்றார்.ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளைக்கூட தேர்தலில் இறக்கி வெற்றி பெறுவதற்கான முயற்சியில் மஹிந்த ஈடுபட்டுள்ளார்.

இருந்தும்,எதிர்வருகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுதந்திரக் கட்சிகளுக்கிடையிலான போட்டியாக அமையுமே தவிர.சுதந்திரக் கட்சிக்கும் மஹிந்த அணிக்கும் இடையிலான போட்டியாக அமையாது.தேர்தலின் முடிவில் மஹிந்த அரசியல் படுகுழியில் விழப்போவது மாத்திரம் உறுதி.

[ எம்.ஐ.முபாறக் ]இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top