Tuesday, September 20, 2016

( பெற்றோரின் வாக்குமூலம் மற்றும் விபர படம் உள்ளே இணைப்பு) பெண் பிள்ளையை காணவில்லை. ஊடகங்களில் பரவும் தகவல். உங்கள் உதவி தேவை.

Published by Madawala News on Tuesday, September 20, 2016  | 
News By: ரசானா மனாப் 

காணவில்லை என்ற தலைப்புடன் ஒரு யுவதியின் புகைப்படம் கடந்த சில நாட்களிருந்து வாட்சப்பில் , முகநூல் மேசஞ்சர் குறுப்களில், முகநூல் பக்கங்களில்  பரவலாக வலம்வந்து கொண்டிருக்கின்றது.

இவற்றில்  மட்டுமே வலம்வரும் இந்த செய்தி எந்தவொரு இணையதளங்களிலும் இதுவரையிலும் வெளியாகவில்லை, சில இணையதள செய்திச்சேவைகளுடன் தொடர்பை ஏற்படுத்தி வினவியபோது குறித்த செய்தியின் நம்பகத்தன்மை தெரியாமல் அவற்றை பிரசுரிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவைத்தனர்.

உண்மையில் இப்படியொரு யுவதி காணாமல் போனாரா அல்லது அந்த யுவதியின் குடும்பத்தினருடன் விரோதத்தில் இருக்கும் எவரினாலும் இப்படியொரு செய்தி முகநூலில் கட்டவிழ்த்து விடப்பட்டதா என்கின்ற சந்தேகத்திலும், குறித்த செய்தியின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளும் விதமாகவும் ஒரு இணையத்தள செய்திச்சேவையின் சார்பாக அந்த யுவதியின் குடும்பத்தினருடன் தொடர்பை ஏற்படுத்தியிருந்தேன்.,

சுமார் 25 நிமிட உரையாடலின் வழியாக யுவதி காணாமல் போன விடயம் உண்மை என ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

யுவதியின் தாய்க்கும் எனக்குமிடையில் நடைபெற்ற உரையாடல் கேள்வி பதில் வடிவில் இங்கு பதியப்படுள்ளது

(இந்த பதிவு குறிப்பிடப்பட்ட யுவதியின் தாயின் சம்மதத்தின் பேரில் பதிவு செய்யப்படுகின்றது அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்து அவரது மகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதற்காக)

நீண்ட நேர அழைப்புக்குப்பின் மறுமுனையில் தொலைபேசி உயிர்ப்பிக்கப்படுகின்றது..

 காணாமல் போன யுவதியின் தாயார் பேசுகிறார் ஸலாம் கூறியவாறு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

கேள்வி : ஒரு யுவதி கடந்த 5ம் திகதி முதல் காணாமல் போய்விட்டதாகவும் கண்டுபிடித்து உதவுமாறும் கோரி முகநூலில் பரவலாக ஒரு செய்தி உலாவந்து கொண்டிருக்கின்றது அதில் யுவதியின் புகைப்படமும் இருக்கின்றது இந்த சம்பவம் உண்மைதானா அல்லது உங்களுக்கு வேண்டாத நபர்களால் பரப்பப்படும் இட்டுக்கட்டலா ?

பதில் : இல்லை மகன் அந்த செய்தி உண்மையானதுதான் நாங்களாகவே அந்த செய்தியை எங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாக முகநூலில் பதிவு செய்தோம்.

கேள்வி : யுவதி காணாமல் போய் பதினைந்து நாட்கள் நிறைவடைகின்றது நீங்கள் பொலிசில் முறைப்பாடு செய்யவில்லையா ?

பதில் : பேராதெனிய பொலிஸ் நிலையத்திலும், கண்டி பொலிஸ் நிலையத்திலும் எமது முறைப்பாடுகளை பதிவு செய்தோம் அத்துடன் ஒன்பது தடவைக்கு மேலாக நாங்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று விசாரித்தும் விட்டோம் போகும் போதெல்லாம் நாங்கள் நாட்டின் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளோம் தகவல் கிடைத்தால் உங்களுக்கு அறிவிக்கிறோம் என்றே கூறுகிறார்கள் அத்துடன் ஹபாயா அணிந்துகொண்டு செல்லும் போதெல்லாம் மிகவும் தரக்குறைவான வார்த்தை பிரயோகங்களை உபயோகித்து கேலி செய்கிறார்கள் அதனால் இப்போதெல்லாம் போலிஸ் நிலையத்திற்கு செல்ல அச்சமாக உள்ளது.

கேள்வி : ஊடகங்களிடம் நீங்கள் உதவி கோரவில்லையா ?

பதில் : ஸ்வர்ணவாகினி தொலைக்காட்சியிலும், லங்காதீப பத்திரிகையிலும் விளம்பரம் கொடுத்திருந்தோம், எல்லா பத்திரிகையிலும் விளம்பரம் கொடுப்பதற்கு எங்களிடம் வசதியில்லை லங்காதீப பத்திரிகையில் வெளிவந்த சிறிய ஒரு விளம்பரத்திற்கு 3,000/= எடுத்தார்கள்.

கேள்வி : உங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாக போலீசாரை நாடவில்லையா ?

பதில் : கண்டியில் இருக்கும் ஒரு அரசியல் பிரமுகரை நாடினோம் அவரால் முடிந்த உதவிகளை அவர் செய்வதாக வாக்குறுதியளித்துள்ளார்.

கேள்வி : உங்கள் மகள் காணாமல் போனதன் பிற்பாடு உங்களுக்கு அனாமேதய தொலைபேசி அழைப்புகள் ஏதும் வந்ததா ? யாராவது உங்களிடம் கப்பம் கோரினார்களா ?

பதில் : அப்படி யாரும் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளவில்லை மகன்.

கேள்வி : உங்களின் மகளுக்கு காதல் தொடர்புகள் ஏதும் இருந்ததா ?

பதில் : இல்லை மகன் அப்படி எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

கேள்வி : யார்மீதாவது உங்களுக்கு சந்தேகங்கள் உண்டா ?

பதில் : ஆம், காலியை சேர்ந்த துமிந்த என்பவர் எமது பிரதேசத்தில் வசித்து வந்தார் அவர் ஏற்கனவே திருமணமானவர் அவரை சில நாட்களாக காணவில்லை.

கேள்வி : போலிஸ் முறைப்பாட்டில் அவரைப்பற்றி சொன்னீர்களா ?

பதில் : ஆம் அவரின் மனைவியையும் போலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகள் செய்தார்கள் ஆனால் அந்த பெண்ணுக்கும் எதுவும் தெரியவில்லை.

கேள்வி : காலிக்கு சென்று துமிந்தவை தேட முயற்சிக்கவில்லையா ?
பதில் : விசாரித்தோம் ஆனால் அவன் அங்கு இல்லை

கேள்வி : யுவதியின் தந்தையிடம் பேசவேண்டும் அவரிடம் கொடுப்பீர்களா ?
பதில் : அவர் தற்போதைக்கு வீட்டில் இல்லை மகன் மகள் காணாமல் போனதில் இருந்து அவர் தேடி தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

கேள்வி : சகோதரர்கள் யாராவது ?
பதில் : ஒரு சகோதரர் கடைக்கு சென்றுள்ளார் தம்பி, தங்கை இருவரும் பாடசாலைக்கு சென்றுள்ளார்கள்.

உங்களின் தகவல்களுக்கு மிகுந்த நன்றி உங்களின் மகள் விரைவில் கிடைக்கவேண்டும் என்று நாங்களும் பிரார்த்திக்கிறோம். இணையத்தளங்கள் வழியாக இந்த செய்தியை பரவலாக்க முயற்சிக்கிறோம்.

உங்களுக்கும் நன்றிகள் மகன்.. முடிந்தளவு இந்த செய்தியை பகிரங்கப்படுத்துங்கள் எப்படியாவது எங்களின் மகள் எங்களிடம் திரும்பி வந்தால் அதுவே எங்களுக்கு மிகப்பெரும் சந்தோசம்.

*காணாமல் போன யுவதி இன்னும் 18 வயதை தாண்டாதவர் என்பதினால் இது கடத்தல் வழக்காகவே மாறக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது..
எந்தவொரு பிரச்சினைக்கும் சமூகத்தினால் இலகுவாக தீர்வு கண்டுவிட முடியும், உதாரணம் ஏறாவூர் இரட்டை படுகொலையுடன் சம்மந்தப்பட்ட நபர்கள் குறுகிய காலத்துக்குள் கைது செய்யப்பட்டதை கூற முடியும் அதேபோன்று இந்த சம்பவத்திலும் சமூகத்தின் பல்வேறு பட்ட மட்டங்களில் இருக்கும் மக்களும் கரிசனை செலுத்துமிடத்து விரைவில் இந்த யுவதியை கண்டுபிடித்து அவரின் பெற்றோர்களிடத்தினில் சேர்க்கலாம்.

பெற்றோரால் லங்காதீப  தேசிய பத்திரிகை , மற்றும் சுவர்ணவாகினி , சில முகநூல் பக்கங்களில்  ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட படம் . இந்த யுவதியை கண்டுபிடித்து அவரின் பெற்றோர்களிடத்தினில் சேர்க்கும் நோக்கில் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.  இவரை எங்காவது  கண்டால் உடனடியாக கீழுள்ள  இலக்கத்தில் பெற்றோரை தொடர்பு கொள்ளவும். ஜசாக்  அல்லாஹ் 


போலீஸ் முறைப்பாடு


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top