Thursday, September 22, 2016

(ரம்புக்கணை) ஹுரீமலுவை பிலால் ஜும்மா பள்ளிவாயலின் திறப்பு விழாவும். முஸ்லிம் கிராமத்தின் சுவாரஸ்ய வரலாறும்.

Published by Madawala News on Thursday, September 22, 2016  | -ஹுரீமலுவை கிராமத்தின் வரலாறு-

ஹுரீமலுவை எனும் கிராமம் சப்ரகமுவ மாகாணத்தில், கேகாலை மாவட்டத்தில். இறம்புக்கணை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது.

இக்கிராமத்தின் மேற்கு எல்லையாக மகா ஓயாவும், வடக்கு எல்லையாக றம்புக்கன் ஓயாவும், தெற்கு எல்லையாக கொழும்பு கண்டி புகையிரத வீதியும், கிழக்கு எல்லையாக குரனாகல, இறம்புக்கணை பிரதான வீதியும் அமைந்துள்ளன. அல்லாஹ்வின் அருளால் இரண்டு நதிகள் இரு எல்லையாக இருப்பதனால் இக்கிராமத்திற்கு நீர் பற்றாக்குறை எக்காலத்திலும் கிடையாது.

இக்கிராமத்தில் 1700களின் பிற்பகுதியில் முஸ்லிம்கள் குடியேரியுள்ளனர்.

கண்டி மன்னன் முஸ்லிம்களுக்கு வழங்கிய ஒரு இடமாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

இக்கிராமத்தில் சூரிய காந்தி மலர்கள் அதிகமாக இருந்ததால் சூரிய மலுவ என்று ஆரம்பத்தில் பெயர் வைக்கப்பட்டது. பின் அது மாற்றம் பெற்று ஹுரீமலுவை என பெயர் பெற்றது.

இக்கிராமத்தின் ஆரம்பக் குடிகள் 1890ல் நூஹ் லெப்பை அவர்களின் காணியில் ஓலையினால் வேயப்பட்ட சிறியதொரு பள்ளிவாயிலை அமைந்து இறை வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்னர் தற்போதுள்ள பள்ளிக்கு முன்னால் ஒரு ஓலையினால் வேயப்பட்ட இடத்தை பள்ளியாக அமைத்து தொழுகைகளை நடாத்தி வந்தார்கள்.

இப்படியிருக்கும் போது 1905ம் ஆண்டு குப்பத் தம்பி ஹாஜியார் என்ற பெரியவர் பள்ளிவாயிலும் மைய வாடிக் கென்றே சுமார் 2 ½ ஏக்கர் காணியை வகுப் செய்தார்.

தற்போது பள்ளிக்கு அருகாமையில் உள்ள தாருல் உலும் முஸ்லிம் மகாவித்தியாலத்திற்கான காணியையும் குப்பத் தம்பி அவர்களே ஹாஜியார். அன்பளிப்பு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதில் 1906ம் ஆண்டு சிறிய பள்ளிவாயில் ஒன்று செங்கல்லினால் ஓட்டுக் கூரையுடன் கட்டப்பட்டது.

அதன் பின்னர் கிராமத்தின் சனத்தொகை கூடவே அப்பள்ளி 1936ம் ஆண்டு புணரமைக்கப்பட்டு உள்பள்ளி, வெளிப்பள்ளி புர்தா மடுவம், ஹவுல் உள்ளடங்களாக பூரணமானதாகக் கட்டப்பட்டது. அதற்கு மஸ்ஜிதுல் ஹரம் என்று பெயர் வைத்தனர்.

வருடம் தோறும் விசேட கந்தூரியும் கொடுக்கப்பட்டு வந்தது. இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் அக்கந்தூரிக்கு மக்கள் வருகை தந்தார்கள். அதனால் ஹுரீமலுவை என்ற ஊர் இலங்கையில் அக்காலத்தில் பிரபல்யம் பெற்றிருந்தது.

அதன் பின்னர் 1984/85 காலப்பகுதியில் அப்போது பள்ளிவாயிளின் நிர்வாக தலைவராக இருந்த ஆ.ர்.ஆ. ரவ்ப் ஆசிரியர் அவரது நண்பரான ஹலீம் என்று சொல்லக்கூடிய இஸ்லாத்தை தழுவிய ஒரு சகோதரர் மூலமாக குவைட் அறபி ஒருவரின் தொடர்பு ஏற்பட்டது.

அவரின் மூலமாக சுமார் 40 அடி அகலம் 45 அடி நீளமான ஒரு பள்ளிவாயில் பழைய பள்ளி இருந்த அதே இடத்தில் விசாலமாகக் கட்டப்பட்டது. அவ்வரபி சகோதரர் மஸ்ஜிதுல் ஹரம் என்ற பெயரை மாற்றுமாறும் மஸ்ஜிதுல் ஹரம் உலகில் ஒன்று தான் உள்ளது. எனவே இதற்கு மஸ்ஜித் பிலால் என்று பெயர் வைக்கும் படியும் கேட்டுக் கொண்டதற்கினங்க அதன் பின்னர் இப்பள்ளிவாயில் மஸ்ஜித் பிலால் என்றே அழைக்கப்பட்டது.

1990ல் இருந்த பள்ளிவாயிலுடன் இணைத்து அதன் பின்னால் ஹவ்ழ் உள்ளடங்களாக இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டது. அதன் பின் 2005ம் ஆண்டு ஒரு முகப்பு அமைக்கப்பட்டடு 2012ம் ஆண்டு வரை எல்லா விடயங்களுக்கும் அப்பள்ளிவாயிலே பயன்படுத்தப்பட்டது.

2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி எமது புதிய பள்ளிவாயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அது சுமார் 75 அடி அகலம் 120 அடி நீளம் கொண்ட இரு மாடி கட்டடமாகும். இஸ்லாமிய கட்டடக் கலை அம்சங்கள் நிரம்பிய அழகான ஒரு பள்ளிவாயிலாகும்.

இப்பள்ளிவாயலைக் கட்டுவதில் எமக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கியவர்கள் மர்ஹும் நயீம் ஹாஜியார் அவர்களின் புதல்வர்கள், பேரப் பிள்ளைகள். இதற்கு ஊர் மக்கள் சுமார் ஒரு கோடி ரூபாய்களும் மர்ஹும் நயீம் ஹாஜியார் அவர்களின் குடும்பத்தவர்கள் சுமார் 6 கோடி ரூபாய்கள் அளவிலும் செலவு செய்துள்ளார்கள். அல்லாஹ் அவர்களுக்குறிய கூலியை முழமையாக கொடுத்தருள வேண்டும் என்று பிரார்தித்துக்கொள்கின்றேன்.


அவ்வாறே எமது இந்த பள்ளிவாயிலுக்கு தனது உடலால், பொருளால், பணத்தால் அறிவால், ஆற்றலால் உதவி புரிந்த அனைவருக்கும் அல்லாஹ் மேலான கூலிகளைக் கொடுத்தருல் வதோடு மீதான் தராசிலே மிக கணமானதாக ஆக்குவானாக. இப்பள்ளிவாயிலில் நடைபெறும் அனைத்து நற்காரியங்களிலும் பங்காளிகளாக்குவானாக.

ஆமீன்.

இப்பள்ளிவாயில் இன்ஷா அல்லாஹ் 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் திகதி சனிக்கிழமை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அல் ஹாஜ் அல் ஹாபில் மௌலவி றிஸ்வி முப்தி அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது என்பதை நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.


இப்படிக்கு
பரிபாலன சபைத்தலைவர்
முகம்மது காமில் (நளீமி)
---------------------------------------------------------------------------------------------------------------------------------
தகவல் 
ரம்புக்கனை நிருபர்
N.A.M. அஸ்ரப்
இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top