Ad Space Available here

கண்ணீரை வரவழைக்கும் (ஐ.ஸ் ஐ.ஸ் பிடியில் உள்ள) மொசுல் நகர மக்களின் நிலை.- By: தில்ஷான் முகம்மத்-

மொசுல் என்ற நகரமும் அது அமைந்திருக்கும் நினேவா பிராந்தியமும் ஆரம்பகால மனித நாகரீகங்கள் தோன்றிய பிரதேசங்களாகும். உலக நாகரீகங்களின் தொட்டி என்றழைக்கப்படும் மேசப்பதோமியாவின் மையப்புள்ளியான டைக்கிரிஸ் நதிக்கரையில் இருக்கும் வளம் பொருந்திய மொசுல் குடியேற்றங்கள் இற்றைக்கு ஐயாயிரம் வருடங்கள் பழமையானது.


யூனுஸ் நபியும் அவரது சந்ததிகளும் வாழ்ந்து மறைந்த இந்த நினேவா பிராந்தியம் ,தனது ஐயாயிரம் வருட வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான ஒரு இருண்ட யுகத்திற்குள் சிக்கித்தவிக்கிறது.

உலகத்திற்கு நாகரீகம் என்றால் என்னவென்று பாடம் நடத்திய பரம்பரையில் வந்தவர்கள், வீதியோரங்களில் தினமும் மனித முண்டங்களையும் , ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமையான பூங்காக்களில் மலர்களுக்கு பதிலாக தினமும் வாய் பிளந்த நிலையில் இருக்கும் புதிய மனித மண்டையோடுகளையும் காணுறும் அவல நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.


இப்படியான அழகான அந்த நகரத்தை நோக்கி விரைவாக யுத்த மேகங்கள் சூழ்ந்து வருகின்றது. இந்த நகரத்தை கைப்பற்றும் யுத்தம் எந்தநேரமும் துவங்கப்படலாம் என்ற நிலையில் மொசுல் நகரை கைப்பற்றும் யுத்தம் ஆரம்பித்தால், அந்த நகருக்குள் தற்போது முற்றுகைக்குள் இருக்கும் 12-15 இலட்சம் மக்களும் வெளியேறுவார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

எதிர்பாக்கப்படும் இந்த இடம்பெயர்வு நடந்தால் அது இந்த நூற்றாண்டில் நடந்த மிகப்பெரும் இடம்பெயர்வாக சரித்திரத்தில் பதியப்படும்.

யுத்தத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகள் கடுமையான மோதலுக்கு தயாராகி வரும் அதேநேரம் மனிதாபிமான பணிகளுக்காக பல தொண்டு நிறுவங்கள் தம்மை தயார்படுத்தி வருகின்றன.

 மக்கள் வெளியேறும் முறைகள் பாதைகளை குறிக்கும் வரைபடங்களை உடைய பல லட்சம் நோட்டீஸ்கள் ஆகாயத்தில் இருந்து மொசுல் நகர வீதிகளில் கடந்த வாரம் வீசப்பட்டிருக்கின்றன.

வெளியேறும் மக்களின் மனிதாபிமான இந்த பணிகளுக்காக 284 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக அவசர நிலைகளில் மனிதாபிமான பணிகளை ஒன்றிணைக்கும் ஐநாவின் மனிதாபிமான ஒருங்கிணைப்பு அமையம் (UNOCHA) கோரியிருக்கிறது.

இதற்கிடையில் மொசுலை அண்டிய கிராமங்களில் இருந்து ஒரு லட்சம் மக்கள் கடந்தவாரம் வரை ஏற்கனவே இடம்பெயர்ந்து விட்டார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஐஸ்ஐஸ் அமைப்பின் தலைவன் அபூ பக்கர் பக்தாதியால் தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தை “கிலாபத்” என்று பிரகடனப்படுத்தப்பட்டது மொசுல் நகரில் இருந்தேயாகும்.

ஆனால் ஈராக்கில் இன்று அவர்கள் வசம் இருக்கும் ஒரேயொரு பிராந்திய நகராகவும் மொசுலே இருக்கிறது.

இதனால் தமது கடுப்பாட்டில் இருக்கும் இறுதி நகரை தக்கவைப்பதற்காக ஐஸ்ஐஸ் அமைப்பினர் இறுதிவரை யுத்தம் செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக வெளியேறப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியே.
கண்ணீரை வரவழைக்கும் (ஐ.ஸ் ஐ.ஸ் பிடியில் உள்ள) மொசுல் நகர மக்களின் நிலை. கண்ணீரை வரவழைக்கும் (ஐ.ஸ் ஐ.ஸ் பிடியில் உள்ள) மொசுல் நகர மக்களின் நிலை. Reviewed by Madawala News on 9/27/2016 10:51:00 AM Rating: 5