Saturday, September 24, 2016

அமுலுக்கு வரும் மூன்றாவது குடியரசு அரசியல் சாசனமும் முஸ்லிம்களும்.

Published by Madawala News on Saturday, September 24, 2016  | 



 மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

தற்பொழுது பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக பிரகடனப் படுத்தப் பட்டு மூன்றாவது குடியரசு அரசியலமைப்பு வரையப் பட்டுக் கொண்டிருக்கின்றது, புதிய தேர்தல் முறை, உள்ளூராட்சித் தேர்தல்கள், தேர்தல் தொகுதிகளின், வட்டாரங்களின் எல்லைகள் மீள்நிர்ணயம், அதிகாரப் பரவலாக்கம் (வடகிழக்கு இணைப்பு பிரிப்பு) என வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்மானங்கள் மேற்கொள்ளப் படவிருக்கின்றன.


முஸ்லிம் அரசியல் சிவில் சன்மார்கத் தலைமைகள் எல்லா மட்டங்களிலும் வேற்றுமைகள் களைந்து மிகவும் சாணக்கியமாகவும் அவதானமாகவும் தத்தமது வரலாற்றுக் கடமையை செய்வதற்கு முன்வரல் வேண்டும், குறிப்பாக குழுக்களாக பிரிந்து நின்று போ(கோ)ட்டா போட்டி அரசியல் செய்வோர் ஏதாவது ஒரு ஒருங்கிணைப்புப் பொறிமுறை பற்றி அவசரமாக கவனம் செலுத்துதல் கட்டாயமாகும்.

தேவைப்படின் ஒருங்கிணைப்பாளர் பணியை செய்வதற்கு நானும் தயாராக இருக்கின்றேன், இன்ஷா அல்லாஹ்.
=================
இலங்கைப் பாராளுமன்றம் (05/04/2016) முதல் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது, புதிய தலை முறையினர் (எதிர்கால தலைவர்கள்) இது ஏன், எதற்கு என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நாட்டின் அடிப்படை அரசியல் சாசனத்தை முற்று முழுதாக மாற்றி மூன்றாவது குடியரசு அரசியல் சாசனத்தை வரைந்து அதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக தற்பொழுது அமுலில் உள்ள அரசியல் யாப்பு விதிகளுக்கு அமைய பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது.

இலங்கை சுதந்திரத்திற்கு முன்னர் பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்த பொழுது கோல்புறூக், டொனமூர், சோல்பரி ஆணைக்குழுக்களின் சாசனங்களூடாக நிர்வகிக்கப்பட்டு வந்தமை அறிந்திருப்பீர்கள்.
பின்னர் சுதந்திரம் கிடைத்தது முதல் காலனித்துவ மேலான்மையின் கீழ் சோல்பரி சாசனத்தினூடாக இலங்கை சட்டவாக்க சபை செனட் சபை, ஆளுநர் (இலங்கையர்) என்ற அதிகார மையங்களூடாக ஆட்சி செய்யப்பட்டு வந்தாலும் இலங்கைக்கான ஒருபுதிய அரசியலமைப்பின் தேவை உணரப்பட்டு வந்தது.

1970 ஆண்டு ஐக்கிய முன்னணி அரசின் தலைவியாக பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் ஒரு அரசியலமைப்பு குழுவை நியமித்து முதலாவது குடியரசு அரசியலமைப்பை வரைந்து 1972 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம்திகதி பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார். இலங்கை பிரித்தானிய மேலாண்மையிலிருந்து முழுமையாக விடுபட்ட குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டது, பாராளுமன்றம் தேசிய அரச பேரவை என அறிமுகம் செய்யப்பட்டது.

1977 ஆம் ஆண்டு ஜேஆர் ஜெயவர்த்தனா அவர்களின் தலைமையில் ஆறில் ஐந்து பெரும்பானயுடன் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசு 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி நிறைவேற்று அதிகாரங்களுடன் கூடிய ஜனாதிபதி முறை அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியல்யாப்பினை அறிமுகம் செய்தது, இன்றுவரை அதில் 20 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த அரசியலமைப்பு மாற்றப்படல் வேண்டுமென 1994 ஆம்ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய சந்திரிக்கா அம்மையார் முதல் பலரும் குரல் கொடுத்து வந்தனர், குறிப்பாக நல்லாட்சி முன்னெடுப்புடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அரசினை கவிழ்த்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியினரின் பிரதான கோஷமாகவும் அது இருந்தது.

2015 ஆம் ஆண்டு ஒரு அரசியலமைப்பு கவுன்சில் அமைக்கப்பட்டு இருக்கின்ற யாப்பில் 19 ஆவது சீர்திருத்தத்தை கொண்டு வந்து பல சுயாதீனக் குழுக்களை அறிமுகம் செய்து நல்லாட்சிக் கட்டமைப்பை ஜனாதிபதி மைத்ரி தலைமையிலான அரசு வலுப்படுத்தியமை நாம் அறிந்த விடயமாகும்.
என்றாலும் தற்போதைய கூட்டாச்சி அரசு மூன்றாவது குடியரசு அரசியல் சாசன சட்டமூலத்தை முழுமையாக வரைவு செய்வதற்காகவே பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றியுள்ளது.

பரவலான அபிப்பிராயங்கள் பல்வேறு தரப்புக்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் பெறப்பட்டு சட்டமூலம் தயாரிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்துடன் ஜனாதிபதி அவர்கள் புதிய அரசியல் சாசனத்தை பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பின் பின்னர் நாட்டின் குடியரசு அரசியல் சாசனமாக அதனை பிரகடனம் செய்வார்.

நாட்டின் பிரதான ஆட்சிக் கட்டமைப்புகளான ஜனாதிபதி, பாராளுமன்றம், நீதித்துறை, அமைச்சரவை சுயாதீன ஆணைக் குழுக்கள், அடிப்படை உரிமைகள், மாகாண, உள்ளூராட்சி அதிகாரமையங்கள், தேர்தல் முறைகள், அரச நிர்வாக கட்டமைப்புகள் என இன்னபிற சகல துறைகளுக்குமான அடிப்படை தத்துவங்கள், அதிகாரங்கள் சட்டவரம்புகள் என்பவற்றை அரசியலமைப்பு கொண்டிருக்கும்.

2017 ஆம் ஆண்டு முதல் மூன்றாவது குடியரசு அரசியல் சாசனம் அமுலுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.
الدكتور إنعام الله مسيح الدين النظيمي


இதனை நண்பர்களுடன் பகிரவும்.



    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top