Friday, September 9, 2016

அந்நிய மயமாகும் பொத்துவில் பிரதேசத்தின் எல்லைகள். :(

Published by Madawala News on Friday, September 9, 2016  | பொத்துவில் என்றால்  அநேகரின் சிந்தனையில் அலைபாயும் விடயம்தான் அதன் எழில் மிகு அழகு.சாலையோற இரு மருங்கிலும் பச்சைபசேல் என்ற வயல்வெளிகள்🌾பார்ப்பவர் இதயத்தை ஆர்ப்பரிக்கும் அழகிய காட்சிகள். கதிர் பறியும் காலம் கனிந்தால் வீசும் இளந்தென்றலில் அவை ஆடி மகிழும். அதன் வாசனை உச்சி குளிரச் செய்யும்.கிழக்கே நீலப் பெருங்கடல் நீண்டு விரிந்திருக்கிறது. சாதியினம் பாராது திரவியம் தேடும் யாவருக்கும் தன்னுள்ளுள்ளதை பகிர்தளிக்கும். சமுத்திர வானில் பறவைகளின் சங்கமம் சகலருக்கும் விருந்தளிக்கும்.


விடுமுறை காலம் வந்தால் நாலாபுறங்களிலும் உள்ளோர் களிப்பாறுவதற்கும், களைப்பாற்றுவதற்கும் தேடுமிடம் நாவலாறு. பொத்துவில் மண்ணுக்கே, அது அழிக்க முடியா தொண்மை வரலாறு.
கொட்டுக்கல் நம் முன்னோர்கள் ஆடி ஓடித் திரிந்த எச்சங்கள். எமக்காக அவர்கள் விட்டுச் சென்ற மிச்சம்கள். பலங்கதை பேசி ஒன்றாய் கூடி மகிழ்ந்த நாட்கள் மீண்டும் மலராதா எனும் ஏக்கம் மண் வாசனை உள்ளோர் மனதை நெருடிச் செல்லும் நீங்கா துயர் ஆகும். எட்டே ஒழிந்து நின்று ஓரக்கண்ணால் பார்த்து விட்டு பெருமூச்சு விடும் காலம் வெகு தூரமில்லை. இதை இன்னும் விளங்கிக் கொள்ள நமக்கு நேரமில்லையா?.

ஆமரப்புட்டி என்று எம்மவர்கள் அழைக்கும் மண்மலை ஒரு வரலாற்று ஆவணம். அதன் நிலவொளியில் இராக் கதை பேசி நிலாச் சோறு உண்ட நாழிகை இன்னும் மறக்க முடியாதுள்ளது.அதற்குள் ஆயிரம் வேலிகள் தடைகளாய் இருக்கிறது. .

வலைகளை தோல்களில் சுமந்து ஆயிரம் வலிகளோடு வள்ளத்தில் ஏறி வாவிகளை கடந்து சென்று மீன்களை பிடித்து கரை ஒதுங்கினால் அங்கே காற்சட்டை அணிந்தவன் காத்திருக்கிறான். மொத்தமாக கொடு சில்லறையை பிடி என்கிறான்.

அடிப்படை வசதியற்ற மீனவ சமூகம் அல்லல் படும் போதும் அவர்களின் வியர்வை துளிகளை காசாக்கி ஏப்பமிடும் ஈவிரக்கமற்ற முதலாளித்துவ சமூகம் குடைக்குள் மறைந்திருக்கிறது.

அரசியல் காய்நகர்த்தல்கள் கன கச்சிதமாய் அரங்கேருகிறது. அபிவிருத்தி எனும் பெயரில் சுயம், நலம் விருத்திக்கான அடித்தளம் அமைக்கப் படும் அடையாளம் ஆங்காங்கே தென்படுகிறது. மண்ணை தாரை வார்த்து அந்நியர் பாதம் படைத்துப் பின்னர் பிரதேச வாதம் பேசும் அரசியல் பெண்டிர்களும் இல்லாமலில்லை.

மனிதம் அற்ற சில பொத்துவில் மகவுகளால் மண்ணுக்கே அவமானம்.
அவர்களை வாழ வைத்த தாயகத்தை துறந்து புதுயுகம் தேடி புறப்படுகின்றனர். பெண்ணுக்கும், பொன்னுக்கும் ஆசைப்பட்டு பேரம் பேசி விற்கப் படுகின்றனர்.
அறிவமுதை அள்ளிப் பருகிய பின், ஊரின் பெயரைக் கூறுவதற்கே கூச்சப்படுகின்றனர்.

அருகம்பே என்று அனைவராலும் அழைக்கப்படுகின்ற உல்லை பிரதேசம் இன்று தொல்லையாய் மாறிவிட்டது. அதன் எல்லைகள் அந்நிய மயமாகும் அபாயங்கள். எங்கு திரும்பினாலும் ஆபாச அறை கூவல். அரைகுறை ஆடையோடு அயல்நாட்டவர் அணிவகுப்பு. இஸ்லாமிய நெறிமுறைகள் காலப்போக்கில் மறைந்திடுமோ என்ற ஏக்கம் ஆறா ரணமாய் இதயத்தை துளைக்கிறது.

இதற்கு நம்மவர்களின் குறைமதியும், பேராசையுமே முக்கிய காரணம்.
வஞ்சக வார்த்தைகளுக்கடிபணிந்து வாழ்ந்த பூமியை அற்ப விலைக்கு கொடுத்து ஏமார்ந்த ஏமாளிகள் நம்மில் அதிகம் .பலஸ்தீன பிரதேசத்தில் நில ஆக்கிரமிப்பு தடைகளை தாண்டி பிரவாகம் எடுக்கிறது.

நில ஆக்கிரமிப்பு ஒரு காலத்தில் நம்மவர்களுக்கும் வரலாம். காசுக்காய் நிலத்தை விற்றவர்கள்நடுத் தெருவில் என்று உலகமே எம்மை உமிழ்ந்து கொள்ளும். அது நமது மண்ணறைக்கு ஒரு சாபக்கேடாய் அமையலாம். எனவே,இனியும் தாமதிக்க நேரமில்லை. விழித்திடு என் சமூகமே எனும் முரசொலியோடு விடை பெறுகிறேன்.

இவன்.
இஸ்ஹாக் இர்பான் (ஷரயீ )
மாணவன்
தென் கிழக்கு பல்கலைக்கழகம்.
ஒழுவில்


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top