இலங்கை முஸ்லிம்களின் நிலை.



-எம்.எம்.எம். ரம்ஸீன்-

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம்  இந்நாட்டில்  இரண்டாவது சிறுபான்மையினமாக  பல நூறு வருடங்கள் வாழ்ந்து வருகின்றது. வடகிழக்கில் தமிழ் சகோதரர்களுடனும் வடகிழக்கிற்கு வெளியில்  பெரும்பான்மை சிங்கள மக்களுடன் வாழும் முஸ்லிம் சமூகம் புவியியல் ரீதியில் பெரும்பான்மை மக்களுக்கு மத்தியில் சிதறி  வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

சிங்கள, தமிழ் சமூகங்களுக்கு மத்தியில் இரண்டாவது சிறுபான்மையாக வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகம் தனது தனித்துவத்தைக் கட்டிக்காத்து பெரும்பான்மைக்குள் கலந்து கரைந்து போகாத வாழ்வுப் போக்கை முன்னெடுத்து வருகின்றது. முஸ்லிம் சமூகம்  மொழியால் அன்றி மதத்தினால் அடையாளப்படுத்தப்படும் நிலையில் சமூகத்தின்  நிலைப்பாடு என்பது சிறுபான்மையாக வாழும் நாட்டில் தீர்க்கமானதாக அமைகின்றது.
இலங்கை முஸ்லிம் சமூகம் வடகிழக்கில் தமிழ் சமூகத்துடனும் வடகிழக்குக்கு வெளியில் சிங்கள சமூகத்துடனும் அமைத்துக் கொண்டுள்ள வாழ்வொழுங்கை  நோக்கும்; போது இரு சமூகங்களுடனும் நெருக்கமான பிணைப்புமிக்க வாழ்வொழுங்கமை உள்வாங்கிக் கொண்டுள்ளமை தெட்டத் தெளிவானதாகும்.  இந்த வாழ்வொழுங்கு புவியியல் மற்றும் சனத்தொகையின் இனப்பரம்பலைப் பிண்னணியாகக் கொண்டு அமையப்பெற்றுள்ளது.

முஸ்லிம் சமூகம் சிங்கள – தமிழ் சமூகங்களுடன் கொண்டுள்ள வாழ்வொழுங்கு இரு சமூகங்களுக்குமிடையிலான நெருக்கமான பிணைப்பை உடைதெறியும் முயற்சிகள் அண்மைக்காலமாக நடைபெற்று வருவதைக் காணலாம். இம்முயற்சிகள் உள்நாட்டு அரசியல் மற்றும்  இன , மத ரீதியான தேவைப்பாடுகளின் பிண்னணியில் இடம்பெற்று வருகின்றமை  நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும்.  வடகிழக்கில் பிட்டும் தேங்காய் பூவுமாக வர்ணிக்கப்படும் தமிழ் - முஸ்லிம் உறவு  துரதிஸ்டவசமதாக 1990 ஆம் ஆண்டு பெரும் விரிசல் கண்டது யாவரும் அறிந்ததே.

வட கிழக்கில் முஸ்லிம்களை இலக்கு வைத்து 1990 இல் இடம்பெற்ற கசப்பான விடயங்கள் இரு சிறுபானக்மை இனங்களுக்கு மத்தியில் நிலவிய உறவல் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் வெளியேற்றம் மற்றும் இனப்படுகொலைகள் உட்பட இரு சமூகங்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்கள் குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் இரு சமூகங்கள் மத்தியிலும் சந்தேகங்களை தோற்றுவித்ததுடன்  இச்சந்தேகங்கள் இன்று ஆழமாக வலுவடைந்துள்ளமை பேரினவாதம் அடைந்து கொண்ட வெற்றியாகும் என்றால் பிழையாகாது.

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ்  தேசிய இனப் பிரச்சினைக்குத்  தீர்வு என்ற விடயம்  சர்வதேச அழுத்தங்களின் அல்லது வலியுறுத்தல்களின் பேரில் சாத்தியமாகக்கூடிய சூழ்நிலை உருவாகி வந்தாலும் கூட வடகிழக்கில் தமிழ் - முஸ்லிம் தரப்புக்களுக்கிடையில் நிலவும் சந்தேகம் வலிந்த  முரண்பாடுகளால் காலம் தாழ்த்தப்படும் சூழ்நிலை நிலவுகின்றது. எனவே தமிழ் - முஸ்லிம் தரப்புக்கள் இது விடயத்தில் மனந்திறந்த உரையாடல்களை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

முஸ்லிம் சமூகத்தின் மீது ஏற்பட்ட யுத்தத்தின் வடுக்கள் மறந்து விடப்பட்ட அல்லது மறைக்கப்பட்டு வரும்  பின்னணியில் முஸ்லிம் சமூகத்திற்கு  அரசியல்  தீர்வு அவசியம் என்ற விடயம் கேள்விக்குட்படுத்தப்படும் சாத்தியம் இல்லாமல் இல்லை.  எனவே முஸ்லிம் தலைமைகள் தமிழ் தலைமைகளை அணுகி இரு தரப்பும் திறந்த மனதுடனான கலந்துரையாடல்களை  காலம் கடந்துள்ள நிலையிலாவது ஆரம்பிப்பது மிகப்  பொருத்தமானது என்பதை வலியுறுத்த வேண்டியுள்ளது.

மேலும், வடகிழக்கிற்கு வெளியில் சிதறி வாழும் முஸ்லிம்களின் நிலை தொடர்ந்தும் கூர்மையடைந்து வரும் பேரினவாதத்திற்குள் சிக்கலுக்குள்ளான விடயமாக இருந்து வருகின்றது.      

கிழக்கு மாகாணத்தில் போன்று தென்னலங்கையில்  சிங்கள – முஸ்லிம் பௌதீக வாழ்விட அமைவு  பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நெருக்கமான உறவு ஏற்பட முக்கிய காரணியாக அமைந்தள்ளது. இதனால் இரு சமூகங்களுக்கும் இடையில் புரிந்துணர்மிக்க உறவு பல நூற்றாண்டுகள் நீடித்து நிலைத்து வருகின்றது. ஆனால் எதிர்காலத்தில்  இந்த உறவுகளை கேள்விக்குட்படுத்துவம் வகையில் சில பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் முன்னெடுத்து வரும் முஸ்லிம் சமூகத்திற்;கெதிரான பிரசாரம் அமைந்துள்ளது.

பேச்சுச்சுதந்திரம் மற்றும்; கருத்துச் சுதந்திரம் என்ற விடயங்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு  பகிரங்கமாக முஸ்லிம் சமூகத்தை நோக்கி  ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை பொதுபலசேன, சிங்கள ராவய , சிங்ஹ லே முதலான அமைப்புக்கள் முன்வைத்து வருகின்றன. இக்குற்றச்சாட்டுக்கள் ஆதாரம் ,  அடிப்படையற்றவையாகும். எனினும் ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லும் போது அதுவே உண்மையாகுகின்றது  என்ற அடிப்படையில் பாமர பெரும்பான்மை மக்கள் இத்தகைய வெறுப்புப் பிரசாரத்தை நம்பும் நிலை ஏற்பட்டு வருவது ஆபத்தமானதாகும்.
ஏதிர்வரும் ஹஜ் பெருநாட்களில் குர்பான் கடமையை முன்வைத்து இத்தகைய பிரசாரங்கள் சூடு பிடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு முஸ்லிம் சமூகத்திற்குள் இல்லாமல் இல்லை. இதன் மூலம் பௌத்த சமயத்தின் பாதுகாவலர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்பவர்கள்   முஸ்லிம்களைச் சீண்டி விடும் கைங்கரியத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சக்திகளின் செயற்பாடுகள் மற்றும் விசமப் பிரசாரங்கள் சில வாரங்களுக்கு  உச்சளவில் அமையும் வெறுப்புப் பிரச்சாரமாக அமைவதுடன்  பின்பு சில வாரங்களுக்கு எல்லாம் அடங்கியது போல் அமைதி காத்து மீண்டும் தலையெடுப்பதைக் வழக்கமாக்க கொண்டிருக்கின்றது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கட்டுக்கடங்காது சென்ற பேரினவாதிகளின் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான பிரசாரமும் அட்டுழியமும்  அளுத்கமையில் உயிரிழப்புக்களுடன் முடிவடைந்தது. ஒரே இரவில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் , வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இச்சம்பவம் முஸ்லிம் சமூகத்தின் ஆறிய காயங்களின் வலியாக இன்றும் உள்ளது.

இலங்கை முஸ்லிம்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் எடுத்த நிலைப்பாடு இதற்கு முன்பு நடைபெற்ற சகல தேர்தல்களிலும் எடுத்த நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாற்றமானதாகும்;. இதற்கு முன்பு  முஸ்லிம் சமூகம் பச்சை , நீலம் என்ற நிறத்தின் அடிப்படையில் கட்சி அஅரசியலை முன்வைத்து தேர்தல் காலங்களில் செயற்பட்டு வந்தது. ஆனால் கடந்த தேர்தலில் முஸ்லிம்களுக்கு கட்சி என்பது பிரச்சினைக்குரிய விடயமாக  இருக்கவில்லை.

இத்தேர்தலில் முஸ்லிம் சமூகம் தனது இருப்பு தொடர்பாக சிந்தித்தது. கடந்த ஜனவரி 8 இல் இடம்பெற்ற ஆட்சி மாற்றம்  பேரினவாதிகளின் செயற்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்ற நம்பிக்கையை முஸ்லிம்களின் மனதில் ஆழமாக ஏற்படுத்தியிருந்தது
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் முஸ்லிம்களின் மனதில் நிம்மதியை ஏற்படுத்தியது  என்பதில் ஐயமில்லை. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆரம்பத்தில் பேரினவாதிகள் அமைதி காத்து வந்தனர். இந்த அமைதி முஸ்லிம்கள் மத்தியில் கடந்த காலங்களில் தமக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளை மறக்குமளவுக்கு அமைந்திருந்தது.


புதிய அரசாங்கத்தில் சட்டத்தின் ஆட்சி எவ்வாறு இருக்கும்  என்ற நிலையை சரிவர அறியாத பேரினவாதம் ஆரம்பத்தில் கொஞ்ச காலம்  அமைதி காத்து வந்ததுடன் குட்டையைக் குழப்ப  முஸ்லிம் சமூகத்தின் பக்கம் இருந்து துரும்பு ஒன்று கிடைக்காதா? என்றும் எதிர்பார்த்திருந்தது. இதற்கேற்றால் போல் இடம்பெற்ற மஹியங்கனை கொடி எரிப்பு சம்பவம் , மடவளை மதீனா பாடசாலை சம்பவம் , கண்டி பள்ளிவாசல் மினாரா அமைத்தல் என்பன பேரினவாதத்திற்கு தீனி போட்டு விட்டது என்றால் மிகையாகாது. இதனையடுத்து முஸ்லிம் சமூகம் மீது வெறுப்புப் பிராசரம் தீவிரமாகியது. இவை வழமையான விடயமாக மாறிவிட்டது.  

ஆனால், பொதுபல சேன அமைப்பு முன்னெடுக்கும் முஸ்லிம் சமூகத்தின் மீதான எதிர்ப்புப் பிரச்சாரம் முஸ்லிம்களை சீண்டி விடும் பாணியில் அமைந்திருப்பதை தெளிவாகக் காண முடியும்.

இதில் அல்லாஹ்தஆலாவையும் நபிகளார் (ஸல்) அவர்களையும் தொடர்புபடுத்தி மேற்கொள்ளபப்ட்ட பிரசாரம், முஸ்லிம் தலைவர்களை விவாதத்திற்கு அழைத்தல் , அல்குர்ஆனை தடை செய்ய முன்னெடுக்கும்; முயற்சி சமூகத்தை பொறியில் சிக்க வைப்பதற்கான  தந்திரம் என்றால் மிகையாகாது. இவை முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளுடன் மட்டுமன்றி உணரச்சிகளுடனும் சம்பந்தப்பட்டது என்பதை பேரினவாதம் நன்கு அறிந்து வைத்துள்ளது.  

ஆனால் பெரும்பான்மை மக்கள் மத்தியில் இப்பிரச்சாரங்களுக்கு போதிய வரவேற்பு இல்லை என்பது யதார்த்தமாகும். இதில் முஸ்லிம் சமூகத்திற்கு நிம்மதியுண்டு.  

எனவே சமகாலத்தில் முஸ்லிம் சமூகம் மிகவும் நிதானமாக சிந்தித்து செயற்படுவது முக்கியமானதாகும்.  முஸ்லிம் சமூகத்தின் மீதான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களுக்கு முஸ்லிம் தலைவர்கள் ஊடக மாநாடுகள் மூலம்  உண்மைகளை வெளிப்படுத்துவது பெரும்பான்மை பாமர மக்கள் தவறாக வழிநடாத்தப்படுவதை தடுக்க உதவும்.
ஆனால் பெரும்பான்மை மக்கள் மத்தியில் போதிய அங்கீகாரம் பெறாத சக்திகளுக்கு பதிலளிப்பது எந்தளவுக்கு அவசியமானது என்பது பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.

இலங்கை முஸ்லிம்கள் சரியான தலைமைத்துவமின்றி அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் சமகாலத்தில் நமது அரசியல் தலைமைகள் இவ்விடயத்தில் முன்செல்வதை சமூகத்தின் ஒட்டுமொத்த தலைமைத்துவமாக பெரும்பான்மை சமூகம் நோக்கும். இத்தலைமைகள் அரசியல் ஆதாயங்களைக் கருதி    வெளியிடும் சில கருத்துக்கள் சமூகத்தின் கருத்துக்களாகப் பெருப்பிக்கப்பட்டு விபரீதங்களையும் கொண்டு வரலாம் என்பதை மறுக்க முடியாது. எனவே முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் குறித்த சிந்திப்பவர்கள் இதனைக்  கருத்தில் கொள்ள வேண்டும்.    

கடந்த காலங்களில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மத்ரசாக்கள் பயங்கரவாதத்தை போதிக்கும் இடங்களாகவும் ஆயுத களஞ்சியங்களாகவும் பிரச்சாரம் செய்யயப்பட்டன. ஆனால் இதுவரை எந்த பள்ளிவாசலில் இருந்தும் அவ்வாறு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை பெரும்பான்மை மக்கள் நன்கறிந்து வைத்துள்ளனர். இதனால் பெரும்பான்மை மக்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான கருத்துக்களை நம்பிக்கை வைத்து உள்வாங்கும் நிலையில் இல்லை என்பது உண்மையாகும். ஆனால் இந்நிலை எவ்வளவு காலத்திற்கு தொடரும் என்று கூற முடியாது.

இலங்கையை பொருத்தவரையில் பௌத்தர்களுக்கும்; முஸ்லிம்களுக்கும் இடையில் நிலவும் உறவை இலகுவில் உடைத்து விட முடியாது. இரு சமூகங்களுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்துவதாக இருப்பின் தொடர்ச்சியான எதிர்ப்புப் பிரசாரம் மூலம் தான் சாத்தியமாக்க முடியும் என்பதை பேரினவாதம் நன்குணர்ந்துள்ளதன் விளைவு தான் இன்றைய பிரசார அணுகுமுறைகளாகும். ஆயினும் தற்போதைய பேரினவாத்தின் பொறியில் இருந்து இலகுவில் முஸ்லிம் சமூகம் வெளியில் வருவதும் இலேசான காரியமுமல்ல.

உலகளாவிய ரீதியில் முஸ்லிம் என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டு வரும்   பயங்கரவாதம் மீதான பார்வை உலக மக்களை ஈர்த்து வரும் நிலையில் நமது நாட்டு மக்களும் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே பெரும்பான்மை மக்களின் அந்தப் பார்வை உள்நாட்டு முஸ்லிம்கள் மீது இல்லாவிட்டாலும் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான எதிர்ப்பப் பிரசாரம் ஒரளவுக்கேனும் சமூகத்தின் மீது சந்தேகப் பார்வையை தோற்றுவித்து வருவதை அவதானிக்க முடியும். இதனால் தான் எங்காவது முஸ்லிம் ஒருவர் செய்யும் சிறு தவறு பெரிதாக்கப்படுவதைக் காண முடிகின்றது.

நாட்டில் பேரினவாதத்தின் தேவையை நிறைவேற்றுவது போல் ஆங்காங்கே முஸ்லிம் சமூகத்தின் பக்கமிருந்து நடைபெறும் சில சம்பவங்கள் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. இதற்கு ஒரு காரணம் முஸ்லிம் சமூகத்தின் சிலர் தாம் இந்நாட்டில் பெரும்பான்மை இனம் என்ற மனப்பாங்கில் வாழ்ந்து வருவதாகக் கூறி சில நியாயங்களையும் நண்பரொருவர் முன்வைத்தார்.

எது எப்படியாயினும் இச்சம்பவங்களின் பின்னால் முஸ்லிம் தரப்பில் நியாயங்கள்   இருப்பினும்  அவை வெளிச்சத்திற்கு வருவதற்கு  முன்பு பொய்ப் பிரசாரங்களும் புனைவுகளும் பாமர மக்கள் மத்தியில்  விரைவில் பரப்பும்  நிலை  காணப்படுகின்றது என்பது மிகவும் கவலைக்குரியதாகும். இதனால் உண்மைகள் பல உறங்கிக் கொண்டிருப்பது தவிர்க்க முடியாததாகி விட்டன.        
இலங்கை முஸ்லிம்களின் நிலை. இலங்கை முஸ்லிம்களின் நிலை. Reviewed by Madawala News on 9/06/2016 11:08:00 AM Rating: 5