Thursday, September 8, 2016

மாற்றத்துக்கான தியாகம்!

Published by Madawala News on Thursday, September 8, 2016  | - எம்.எம்.ஏ.ஸமட்

பொதுவாக சவால்கள் வெற்றி கொள்ளப்பட வேண்டுமாயின் அச்சவால்களை வெற்றிகொள்வதற்காக பல்வேறு விடயங்கள் தியாகம் செய்யப்படுவது அவசியமாகும்.  ஒரு சமூகம் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள வேண்டுமாயின் அச்சமூகம் அச்சவால்களை வெற்றிகொள்வதற்காக ஒற்றுமைப்படுவதும் அதற்காக தியாகங்கள் புரிவதும் இன்றியமையாததாகும். அத்தகைய தியாகத்தை புனித ஹஜ் கடமையானது உணரவைக்கிறது. ஒவ்வொரு வருடமும் நிறைவேற்றப்படும்  ஹஜ் கடமையானது ஒற்றுமை மற்றும் தியாகம் தொடர்பில் பல படிப்பினையினைகளைக் கற்றுத் தருகிறது.

ஒற்றுமையும், ஒற்றுமைப்படுவதற்கான தியாகமும் அத்தியாகத்துடனான செயற்பாடுகளும்; சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த வழிவகுக்கும். சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தியாக மனப்பாங்கு ஒவ்வொருவரது சிந்தனையிலும் ஏற்பட வேண்டும். சிந்தனை மாற்றப்பெறும்போது மனப்பாங்கிலும் மாற்றம் ஏற்படும். அம்மாற்றமானது  செயற்பாடுகளிலும் நல்ல மாற்றத்தை உருவாக்கும் அவ்வாறு உருவாகும்.  மாற்றங்கள் சமூகத்தின் எதிர்காலத்தை வளமிக்கதாக்கும். வளமிக்க எதிர்காலத்தை அடைவதற்கு நிகழ்காலத்தில் ஒற்றுமையோடும் தியாகத்தோடும் செயற்பட வேண்டியுள்ளது.

முஸ்லிம்களும் மனப்பாங்கும்

ஓற்றுமையென்ற கயிற்றை இருகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள் என அல்குர்ஆன் கட்டளையிடுகிறது. ஆனால்,  அல்குர்ஆனின் வழிகாட்டல்களும், வலியுறுத்தல்களும் முஸ்லிம்களின் வாழ்க்கையில் முற்று முழுதாகப் பின்பற்றப்படாததன் விளைவு அவமானத்தையும், அமைதியின்மையையும், அழிவுகளையும் சந்திக்க நேரிட்டுள்ளது.

அரபுலக மண்ணில் இடம்பெற்று வரும் கொள்கைக்கான போராட்டம் இலட்சக்கனக்கான அப்பாவி முஸ்லிம்களின் உயிர்களை காவு கொள்ளச் செய்துள்ளதுடன் அனாதைகளாகவும், அங்கவீனர்களாகவும் ஆக்கியுள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் முகவரியற்ற ஏழை அகதிகளாக அலைந்து திரிகின்றனர். ஒவ்வொரு விடியலும் இத்தகைய நிழ்;வுகளை அரபு மண்ணில் அரங்கேற்றிக் கொண்டிருப்பதை தினமும் காணொலிகளினூடாக பார்த்து வருகின்றோம்.

ஒற்றுமைப்பட்டுப் பொது எதிரிகளை எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் தங்களுக்குள் எதிரிகளை உருவாக்கிக் கொண்டு அல்லது தாங்களாகவே எதிரிகளாக மாறிக் கொண்டு மாண்டு கொண்டிருக்கிறார்கள்.  இத்தனைக்கும் காரணம் ஒற்றுமை இழக்கப்பட்டதும்;  ஓற்றுமையை ஏற்படுத்தவதற்கான முயற்சிகளும் தியாக மனப்பாங்கும் உருவாகாமல் இருப்பதுமாகும்.

அரபுலக முஸ்லிம்களின் நிலை இவ்வாறு இருக்கையில், இலங்கையில் வாழும் முஸ்லிம்களிடையேயும் ஒற்றுமை இல்லை. ஏறக்குறைய 10 வீதம் வாழுகின்ற முஸ்லிம்களுக்குள்; இறை ஏகத்துவக் கொள்கைகளில் மாற்றமில்லையென்றபோதிலும், தங்களுக்குள் ஆன்மீக மற்றும் அரசியல் ரீதியில் உருவாக்கிக் கொள்ளப்பட்ட கொள்கைகளின் அடிப்படையிலும் சுயநலம் கொண்ட நிகழ்ச்சி நிரல்களினாலும் பிரிந்து நின்று செயற்படுவதைக் காண முடிகிறது.

சமுதாயத்தின் ஆன்மீக மற்றும் அரசியலில் ஒற்றுமை சிதைவடைந்து பலயீனம் ஏற்படுகின்றபோது, அந்த ஒற்றுமையற்ற பலயீனமான நிலைகள் கடந்த காலத்திலும் சமகாலத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையானது, எதிர்காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. சமூகத்திற்குள் பிரச்சினை காணப்படுகின்றபோது அல்லது சமூகத்தை நோக்கி பிரச்சினைகள் எழுகின்றபோது, அப் பிரச்சினைகளிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க ;சமூகத்தின் மத்தியிலிருந்து ஒன்றுபட்ட கருத்துக்கள் வெளி வரவேண்டியது அவசியமாகும். அதற்கான குரல் ஒருமித்து ஒலிக்க வேண்டும்.

மாறாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கைத்தளத்தியிலிருந்து கொண்டு முரண்பட்ட கருத்துக்களைத் சமூகத்தின் சார்ப்பில் முன்வைக்கின்றபோது அவை முழுச் சமூகத்தையுமே பாதிக்கும். அதன் விளைவு சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வை பின்னடையச் செய்யும் அல்லது நீத்துப் போகச் செய்யும்.

முஸ்லிம் சமூகத்தின் சமூகக் கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்பட வேண்டும். நீண்ட கால பிரச்சினைகள், அடிப்படைப் பிரச்சினைகள், சமகாலப் பிரச்சினைகள் என்பவற்றுக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.   இந்நாட்டிலுள்ள 9 மாகாணங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்கின்ற பிரசேதங்களில் எதிர்நோக்கும் நீண்ட காலப் பிரச்சினைகள் மற்றும் சமகாலத் தேவைகள் தொடர்பில் முழுமையான ஆவணப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும். நாடுதழுவிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில் உறுதியுடன் பகிரங்கப்படுத்தக் கூடிய அளவிற்கு ஆவணப் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்த கருத்துக்களும் அறிக்கைகளும் அதிகாரமுள்ளவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கப்படுவதை காணமுடியாதுள்ளது.

இந்நிலையினை மாற்றியமைக்க வேண்டுமாயின,; சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும். அந்த ஒற்றுமைக்கு இடைஞ்சலாக காணப்படுகின்ற காரணிகளை உடைந்துதெரியும் மனப்பாங்குகள் உருவாக வேண்டும். அம்மனப்பாங்கை ஏற்படுத்துவதற்கு தியாகம் புரியப்படுவது அவசியமாகவுள்ளது.

ஹஜ் கற்றுத்தரும் ஒற்றுமை மற்றும் தியாகம் என்பன தியாகத் திருநாளில் பள்ளிவாசல்களில், திறந்த மைதானங்களில் கூட்டாக நின்று தொழுவதினாலும் அல்லது தனியாகவோ அல்லது கூட்டாகவோ இணைந்து குர்பான் கொடுப்பதனாலும் மாத்திரம் ஏற்பட்டுவிடாது. அவை கடமை. ஆனால் அக்கடமைகளானது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்போதுதான் அக்கடமைகளுக்கான தார்ப்பரியத்தை அடையந்து கொள்ள முடியும்.

ஒற்றுமைப்படுவதற்கும் அதற்கான தியாகங்களைப் புரிவதற்கும் மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த மனப்பாங்கு மாற்றமே நமக்குள் வேற்றுமையை மறக்கச் செய்து  விட்டுக்கொடுப்புக்களையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும்.

எதிர்காலத்தில் அரசியல் ரதியாகவோ ஆன்மீக ரீதியாகவோ பலம் பெற வேண்டுமாயின் கொள்கை கோட்பாடுகளுக்கு அப்பால் அரசியல் தலைமைகள் என்று தங்களை அழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கிடையிலும்,  நாங்கள் சொல்லுவததான் மார்க்கம் அல்லது நாங்கள்தான் இஸ்லாத்தை வாழவைத்துக்கொண்டிருக்கின்றோம் அல்லது நாங்கள் செல்லும் பாதைதான் உண்மையான இஸ்லாமியப் பாதையென மார்ப்புதட்டிக்கொண்டிருக்கும் ஆன்மீகத் தலைமைகளிடையேயும்  ஒற்றுமை ஏற்படுவது அல்லது ஏற்படுத்தப்படுவது காலத்தின் தேவையாகவுள்ளது.

அவரவர் சுயநலன்களின் மேம்பாட்டுக்காக ஆளுக்கொரு கட்சி, ஆளுக்கொடு ஆன்மீகக் கொள்கை என்ற ரீதியில் செயற்பட்டு சுயநலன்கள் வெற்றிகொள்ளப்பட்டாலும் அல்லது அவை தன்னிறைவு அடைந்தாலும் அதனால் முஸ்லிம் சமூகம் எவ்வித பயனையும் அடையப்போவதில்லை. சமூகம் நன்மையடைய வேண்டுமாயின் முரண்பாடுகள் கலையப்பட்டு ஒற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஒற்றுமை பற்றி வார்த்தைகளால் எவ்வளவு கூறினாலும் அதற்கான செயற்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படாத விடத்து அந்த வார்த்தைகளுக்கு வெற்றி கிடைக்காது. போலிக் கௌரவங்களாலும் வீராப்புக்களாலும் தங்களது கொள்கைகளை விட்டுக் கொடுக்காது செயற்படுவதன் மூலமே நம்மை நாம் பலவீனப்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.

முஸ்லிம் சமூகம் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பல சவால்களை எதிர்நோக்கியிருப்பதுடன்  தேவைகளையும் குறைகளையும் வேண்டிநிற்கின்றன. இச்சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு சமூகம் எவ்வாறு தங்களைத் தயார்படுத்துவது. அதற்கான வழிகாட்டல்கள் எவை.  அவர்கள் வேண்டிநிற்கும் குறைகளையும் தேவைகளையும் எவ்வாறு பெற்றுக்கொடுப்பது என்ற கேள்விகளிலிருந்து அவற்றிற்கான முறையான திட்டங்கள் வகுக்கப்படுவது அவசியமாகும்

தேர்தல் காலத்தில் மற்றும் மக்கள் குறைகள் தொடர்பில் பேசப்படுவதும் வாக்குறுதிகள் அளிக்கப்படுவதும் பின்னர் அவை நிறைவேற்றாமல் விடப்படுவதும் மறக்கப்படுவதும் என்ற நிலை மாற்றியமைக்கப்படுவதும் அவசியம். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மனப்பாங்குகள் மக்கள் பிரதிநிதிகள் மனங்களிலும் உருவாக வேண்டும். ஆதற்காக தியாகங்கள் புரியப்பட வேண்டும்.

கடந்த பாராளுமன்றத்தை விடவும் 8வது பாராளுமன்றம் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. கட்சி, கொள்கை, பிராந்திய, பிரதேச வேறுபாடுகளைத் துறந்து, எதிர்கால சமூகத்தின் நலனுக்காக அவற்றை தியாகம் செய்து, சமூகத்தின் எழுச்சிக்கான புரட்சியை ஏற்படுத்துவற்காக இந்த 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபடுவதும் ஒன்றுபட்டு செயற்படுவதற்னான கூட்டமைப்பொன்றை உருவாக்குவதும் காலத்தின் கட்டாயமாகும். சமூகத்தின் எதிர்காலத்தை ஆரோக்கியமாக்குவதற்கும் சமூகமும், சமூகத்தின் தனிநபர்களும் எதிர்நோக்கும் சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இக்கூட்டமைப்பு  வழியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

எதிர்கால மாற்றமும் தியாகமும்

சமூகத்தில் சிலர் வாழ்வின் இன்பத்தைச் சுவைத்துக் கொண்டிருந்தாலும் பலர் சோதனைகளையும,; வேதனைகளையும், சவால்களையும் சுமந்து  கொண்டிருக்கிறார்கள். வல்ல இறைவன்  சோதிப்பதற்காகவே   சிலரை எல்லா வளமும் கொண்டவர்களாகவும் இன்னும் சிலரை வளமாற்றவர்களாகவும் படைத்துள்ளான் என்பதை மறக்க முடியாது.
இறைவனால் அனுப்பப்பட்ட இறைதூதர்களும் சோதிக்கப்பட்டிருக்கிறார்கள். அச்சோதனைகளிலிருந்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். நபி இப்றாகிம் (அலை) அவர்கள் எதிர்நோக்கிய சோதனையை வெற்றி கொள்வதற்காகப்  புரிந்த தியாகத்தையோ  நாம் தியாகத் திருநாளாகக் கொண்டாடுகிறோம்
நம்பில் பலர் உடல், உள, குடும்ப, பொருளாதார சமூக ரீதியில் பல்வேறு சோதனைகளையும் சுமைகளையும் சுமந்தவர்களாக இப்பெருநாளை எதிர்நோக்கியிருக்கிறார்கள்;.

குடியிருக்க வீடுவாசல் இல்லாமல் வாடகை வீட்டிலும் மாற்றார் தயவிலும்  வாழ்க்கைச் சக்கரத்தைச் சுழற்றுபவர்களாகவும், உடல் உபாதைகளுக்குள்ளாகி வைத்தியசாலைக்; கட்டில்களின் சொந்தக்காரர்களாகவும், வாழ்க்கையின் நெருக்குவாரங்களால் உள்ளம் உருக்குழைந்து தன்நிலை மறந்த உள நோயாளர்களாகவும்,  வருமானம் வற்றிக் குடும்பச் சுமையின் அவஸ்தையால் அல்லறுபவர்களாகவும் பொருளாதாரப் பற்றாக்குறைக்காகவும் பெருமை வாழ்க்கைக்காகவும்  கை நீட்டி வாங்கிய கடனைத் திருப்பியளிக்க இயலாது அதன் வலியால் சுய கௌரவத்தை காற்றில் வீசிவர்களாகவும் இன்னும் பற்பல இன்னல்களோடும், சவால்களோடும் சமூகத்தில பலர் வாழ்கிறார்கள்.

இவர்களின் இதய வேதனைகளை சந்தோஷத்தால் நனைப்பவர்கள் யார்? இவர்களும் பெருநாளின் இன்பப் பொழுதை ரம்பியமாகக் கழிக்கக் கூடாதா? என்ற கேள்விகளுக்கு சமூகத்தின் மத்தியில் சகல வளங்களும் பெற்றவர்களிடம்; விடை இருக்கிறது. ஆனால் அதற்கு விடைகொடுக்க மனப்பாங்கு இடம் வழங்காமால் இருக்கிறது.

'அயல் வீட்டார் அன்னியவராக இருந்தாலும் அவர் அயல்வீட்டார் என்பதற்காக அவரிலும் நமக்கு பொறுப்பு உள்ளது' என்ற  நபிகளாரின் திருவசனம் நம்மில் பலரது உள்ளங்களிலிருந்து எடுபட்டுவிட்டது. இதனால்தான்,  அண்டைவீட்டு நம் சகோதரன் குடிசை வீட்டில் பாயில் படுத்துறங்க, நம்மில் பலர் மாடா மாடிகைகளில் பஞ்சன மெத்தையில் புரண்டு எழும்புகின்றனர்.
ஒரு வேளை  சோற்றுக்காக நம் சகோதர சகோரிகள் ஏங்கிக் கிடக்க நம்மில் பலர் புரியாணி சாப்பிட்டு மிஞ்சியதை குப்பையில் வீசி விட்டு ஏப்பமிடுகின்றனர்.

கல்யாண வாழ்க்கைக்காக காந்திருந்து காந்திருந்து காலம் கடந்த பின்  மணவாழ்க்கையைக் காணது கண்ணீரால் காவியம் வடிக்கும் நமது சமுதாயக் கன்னியரைப் பற்றிக் கொஞ்சமும் கவலை கொள்ளாது, நம்மில் பல கொடை வள்ளல்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பணத்தை வீண்விரையம் செய்து தங்கள் பெண்மணிகளுக்கு திருமணம் நடத்தி அழகு பார்க்கின்றனர். கேலிக்கைக் கூத்துக்களை அரங்கேற்றி அவற்றை இணைத்தளங்களில் உலா வர விடுகின்றனர்.
அல்லாஹ்வையும் அண்ணல் நபியையும் அவர்களின் அருமைத் தோழர்களையும் அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளையும் வாய் கிழியப் பேசுவர்கள், தங்கள் வாழ்க்கையில் அவற்றைக் கடைபிடிக்காது போலிக் கௌரவத்தை மதித்து ஊருக்குதான் உபதேசம் எனக்கல்ல என்ற நிலையில் வாழ்கின்றனர்.

சமுதாயத்திலுள்ள வளம் படைத்தோர் தங்கள் வளத்தை முறையாக சமுதாய எழுச்சிக்காக, சமுதாய மேம்பாடுக்காக பயன்படுத்தத் தவறுவதனால் சமுதயாத்திலுள்ள வளம் குன்றியவர்கள், தேவையுள்ளவர்கள் அவற்றை நிறைவேற்ற அல்லாஹ்வும் ரஸுலும் விரும்பாத வழிகளை நாடுகின்றனர்.
இதனால் சமுதாயத்தின் மானமும் மரியாதையும் காற்றில் பறக்க அவமானத்தோடும் கவலையோடும் சமுதாயத்திலுள்ள சமூக நேசர்கள்  கண்ணீர் சிந்துகின்றனர். இவற்றுக்கெல்லாம் காரணம் முஸ்லிம்களில் வளம் பெற்றோர் அவ்வளத்தை சமுதாயத்தின் தேவைக்காக,  மாற்றத்திற்காக பயன்படுத்ததுவதில்லை. சமுதாய மாற்றம் தொடர்பில் சிந்தப்பதில்லை. அதற்காக தங்களது மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதில்லை. தியாகம் செய்வதில்லை. இதனால் முஸ்லிம்களில் பலர் பெருநாட்களிலும் கவலையோடு நிமிடங்களைக் கடத்துகின்றனர்.

முஸ்லிம் சமூகம் ஒவ்வொரு துறையிலும் பின்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், அவை சரியாக அடையாளம் காணப்படவில்லை. மாற்றமின்றிய வாழ்க்கைப் பயணத்தை மாற்றுவதற்காக பலர் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுவதற்கான  முறையான வழிகாட்டல்கள், பொறிமுறைகள் ஏற்படுத்தப்படவில்லை.

சமூகம் மாற்றம் பெற வேண்டுமாயின் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு துறைசார்ந்தோரும் தங்களால் முடிந்த சமூகப் பங்களிப்பை நிறைவேற்றுவதற்கான மனப்பாங்கை உருவாக்கி அந்த மனப்பாங்குடன் சமூக மாற்றத்திற்கான தியாகங்களைப் புரிய முன்வர வேண்டும். அப்போதுதான் நிகழ்கால சமூகம் எதிர்பார்க்கின்ற மாற்றம் எதிர்காலத்தில் ஏற்படும்.இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top