Free Space

புதிய அதிபரின் வருகைக்கு எதிராக கொதித்தெழுந்த மாணவிகள் .



யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்புப் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

நேற்று முன்தினத்திலிருந்து இவர்கள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டமும் தொடர்ந்து வருகின்றது.

கல்லூரி அதிபருக்கு இன்றுடன் 60 வயது பூர்த்தியாகின்றது. இவரை 60 வயதுடன் பதவியிலிருந்து ஓய்வு பெற வைப்பதாகவும், புதிய அதிபரை நியமிப்பதாகவும் கருத்துகள் எழுந்துள்ளன.

புதிய அதிபரை பாடசாலைக்கு நியமித்துள்ளதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அவர் பாடசாலைக்கு வர உள்ளதாகவும் மாணவிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் அந்த பகுதியில் சற்று பதட்டநிலை காணப்படுகின்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வருகைத்தந்து பார்வையிட்டதுடன் மாணவிகளுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் தமது உள்ளக்குமுறல்களை பாராளுமன்ற உறுப்பினரிடம் கொட்டித்தீர்த்துள்ளனர்.

தாம் ஆரம்பித்துள்ள இந்தப் போராட்டத்திற்கு இதுவரை எந்த அரசியல்வாதிகளும் வந்து பார்வையிடவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்தார்கள்.

புதிய அதிபரின் வருகைக்கு கடும் எதிர்ப்பை வெளியிடக் காத்திருக்கும் இந்த மாணவிகளுக்கு பெற்றோர்களும் பழைய மாணவிகளும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.

மேலும், இவர்களை பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இந்தப் பிரச்சினையை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும், இதற்கான தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தின்போது ஒரு மாணவி மயக்கமுற்ற நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய அதிபரின் வருகைக்கு எதிராக கொதித்தெழுந்த மாணவிகள் . புதிய அதிபரின் வருகைக்கு எதிராக கொதித்தெழுந்த மாணவிகள் . Reviewed by Madawala News on 9/07/2016 02:23:00 PM Rating: 5