Ad Space Available here

(படங்கள்) மடவளை அன்சார் எம். ஷியாம் எழுதிய விழியோரம் மகா'வலி' மற்றும் எதிர் நீச்சல் சஞ்சிகை வெளியீடு.(ஜே.எம்.ஹபீஸ்)

மடவளை  அன்சார்  எம். ஷியாம்  எழுதிய விழியோரம்  மகா'வலி' என்ற சிறுகதைத்  தொகுப்பு மற்றும் எதிர் நீச்சல்  சஞ்சிகை என்பவற்றின்  வெளியீட்டு விழா (25.9.2016)  மதீனா மத்திய கல்லூரி  மண்டபத்தில் இடம் பெற்றது.

பிரதம அதிதியாக தேசிய நீர்வழங்கள் வடிகால் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹகீம்  கலந்து கொண்டார்.

விசேட அதிதிகளாக கண்டி மாவட்டப் பாராளு மன்ற அங்கத்தவர் வேலுகுமார் மத்திய மாகாண சபை அங்கத்தவர் எம்.ரி.எம். முத்தாலிப் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அதிதிகளாக ஜாமியுல் கைராத் ஜூம்மா பள்ளித் தலைவர் ஏ.டப்ளியு.எம். நாஜிம், உபதலைவர் ஏ.எஸ்.எம்.கியாஸ், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வத்தேகம கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் உடதலவின்னை சிபார் மரிக்கார் நூலய்வு செய்ததுடன் கண்டி பெண்கள் உயர் கல்லூரி உதவி அதிபர் எம்.கோலேஸ்வரி ராம்குமார் நூல் விமரிசனம் செய்தார். கவிஞர் மடவளைக் கலீல் கவிவாழ்த்துப் பாடினார்.

முன்னாள் உதவிக்கல்விப் பணிப்பாளர் செல்வி.எஸ்.கனபதிப்பிள்ளை, கலாபூசணம் ஜே.எம். ஹாபீஸ், கவிஞர் கலாபூசணம் மடவளை பஸார் நிசார், கலாபூசணம் எச்.ஏ.சக்கூர், கலாபூசணம் எச்.எம்.மன்சூர், லேக்கவுஸ் நிறுவனத்தைச் சேர்ந்த எம்.ஏ.அமீனுல்லா ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

மடவளை நிஸாரின் இஸ்லாமிய பாடலுக்கு சிறுவர்களின் அபிநய நடனமும் இடம் பெற்றது.

இங்கு உரையாற்றிய அமைச்சர் ரவுப் ஹகீம் தெரிவித்ததாவது-

இன்று வாசிப்பு பழக்கம் குன்றி விட்டது. நவீன சாதனங்கள் வாசிப்பின் மீதான எதிர் மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் வாதியான தன்னால் வாசிக்க போதிய நேரம் இல்லாத போதும் தான்வாசிப்பைத் தினம் கடைப்பிடித்து வருவதாகவும் கூறினார்.தான் வாசிப்பின் மூலமே தமிழையும் ஆங்கிலத்தையும் வளர்த்ததாகவும் தெரிவித்தார்.

தான் ஆரம்பகாலத்தில் அம்புலிமாமா கதைகளில் ஆரம்பித்து குமுதம், ஆனந்த விகடன் போன்ற வற்றை வாசித்து பின்னர் ஜெயகாந்தன், கல்கி, மு.வரதராசன், சுஜாத்தா  போன்ற பல தலைசிறந்த எழுத்தாளர்களது நூல்களை  வாசிக்கும் திறனைப் பெற்றதாகத் தெரிவித்தார்.

ஒருகாலத்தில் சமூக மாற்றத்திற்கு வானொலிக் கலைஞர்கள் அளப்பரிய சேவை புரிந்ததாகவும் இன்று இறக்கு மதி செய்யப்பட்ட தொலைக்காட்சி நாடகங்கள் உள்ளுர் கலை வளர்ச்சியையும் வாசிக்கும் அல்லது கலையைத் தேடுவதில் ஒரு எதிர்மறைத் தன்மை கொண்ட தாக்கத்தை தோற்று வித்துள்ளதமாகவும் கூறினார்.

இங்கு உரையாற்றிய பாராளு மன்ற உறுப்பினர் வேலு குமார் கூறியதாவது-
சமூக மாற்றத்திற்கு எழுத்துக்கள் வித்திடுகி;ன்றன. அந்த வித்துக்கள் விருட்சமாகி பலன் தரப் பத்திரிகைகள் தேவையாகும். பத்திரிகைகளை வாசிப்பதன் ஊடாகவே கலையின் அருவடையை சுவைக்க முடியும். ஆனால் பத்திரிகை துறை என்பது சவாலுக்கு மேல் சவாலான ஒன்று.

ஆங்கிலத்தை இழந்தாலும் சேக்பியரை இழக்க மாட்டோம் என்று அன்று கூறியது போல் நாம் எமது தாய் மொழியை இழந்தாலும் தாய் மொழியில் ஆக்கங்களை உருவாக்குவோரை இழந்து விடக் கூடாது. அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் பாதுகாக்கப்பட்டால் வெறுமனனே கலைகளும் மொழியும் உயிர் வாழும். அவ்வாறான கலைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பொருளாதாரம் ஒருசவாலாகும். ஆதனை நாம் உறுதியாக்கிக் கொடுக்க வேண்டும் என்றார்.

இங்கு உரையாற்றிய மாகாண சபை அங்கத்தவர் எம்.டி.எம். முத்ததாலிப் கூறியதாவது-

பேராதனைப் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் 140 பேர் கலந்து கொண்ட ஒரு நிகழ்விற்கு நான் போயிருந்தேன். அங்கு 10 மாணவர்களையும் 130 மாணவிகளையுமே கண்டேன். இது சரியான சமநிலையைத் தரவேண்டுமானால் 70 ற்கு 70 ஆக இருந்திருக்க வேண்டும். எமது சமூகத்தில் வாசிப்பு பழக்கம் குன்றியுள்ளது என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணமாகும்.

அதாவது கல்வியின் முக்கியத்துவம் பற்றி எவ்வளவு எடுத்துக் கூறினாலும் வாசித்து அல்லது காதுகொடுத்துக் கேட்டு அறிந்து கொள்ளும் நிலையில் எமது சமூகம் இல்லை என்பதை அதுகாட்டுகிறது என்றார்.
நூலாய்வில் சிபார் மரிக்கார் தெரிவித்ததாவது-

திக்வெல்லை கமால் தான் கையாலும் மொழியிலுள்ள மண் வாசனையை சர்வதேச ரீதியில் சிறுகதைகள் மூலம் எடுத்துச் சென்றவர். அதேபோல் சியாம் எம். ஆன்சாரும் தனது சிறுகதை மூலம் மடவளை மண்ணுக்கான வாசனையை நாடறிய எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளார். இவை அனைத்தும் ஒரு காலத்தில் பயன் உள்ளதாக மாற இடமுண்டு என்றார்.

கோகிலேஸ்வரி ராம்குமார் கூறுகையில் எஸ்.எம்.எஸ். கதைகளாக எமது எழுத்துக்கள் (குருந்தகவலாக) மாறக் கூடாது. அதேநேரம் மண் வாசனையை விட தமிழ்மொழி வாசனை ஒரு தமிழ் ஆக்கத்திற்கு மிகமுக்கியம். அது இல்லாத விடத்து ஒரு காலத்தில் இதுதானா செந்தமிழ் என தவறாக எடை போட வழிகாட்டுவதாகி விடும் என்றார்.

கவிஞர் மடவளைக் கலீல் தனது கவி வாழ்த்தில் மாண்புரு இச்சபையில் வீற்றுள்ள மைந்தர்கள் வளர, அவர்களுக்கு களம் அமைத்த மடவளை வளர, கல்விக் கண்திறந்த மதீனா வளர. ஆதன் அருவடையாக வந்துள்ள கவிஞர் மடவளை சியாம் வளர, எமது மடவளை மண்ணின் மைந்தர்கள் வளர வாழ்த்தி கவி மழை பொழிந்தார்.

படங்கள் : ஜே.எம்.ஹபீஸ் & Azry Hassim


(படங்கள்) மடவளை அன்சார் எம். ஷியாம் எழுதிய விழியோரம் மகா'வலி' மற்றும் எதிர் நீச்சல் சஞ்சிகை வெளியீடு. (படங்கள்) மடவளை  அன்சார் எம். ஷியாம் எழுதிய விழியோரம் மகா'வலி' மற்றும் எதிர் நீச்சல் சஞ்சிகை வெளியீடு. Reviewed by Madawala News on 9/24/2016 12:00:00 AM Rating: 5