Ad Space Available here

உழ்ஹிய்யா வீண்விரயம்?????- A,R.M. இனாஸ் -

தினமும் இறைச்சி வாங்கி சாப்பிடும் ஒருவரை பார்த்து கலீபா உமா(றழி) அவர்கள் நீங்கள் தினமும் இறைச்சி சாப்பிட வேண்டாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இறைச்சி சாப்பிடுங்கள் என்று அறிவுரை சொன்னார்.
இவ்வறிவுரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் வரலாற்று ஆசிரியர்கள் கலீபா உமர் இவ்வாறு அந்த மனிதனுக்கு அறிவுரை பகர ஒரு தூர நோக்குடைய காரணம் இருக்கிறது.

அது தான் நாட்டில் உள்ள அனைவரும் தினமும் இறைச்சி சாப்பிட்டால் இறைச்சிக்கான மிருகங்கள் விரைவில் குறைந்துவிடும். அக்காலத்தில் விவசாயத்துக்கு மிருகங்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்டன. அப்படியிருக்கும் போது நாட்டு மக்கள் அதிகம் இறைச்சி நுகர தொடாங்கினால் விவசாயத்துக்கான கால் நடைகள் அருகிப் போகும். அதனால் விவசாயம் பாதிக்கப்படும்.

மேற்குறிப்பிட்டவாறான ஒரு தூர நோக்குடனேயே கலீபா உமர்(றழி) அவர்கள் அந்த மனிதனுக்கு அவ்வாறானதொரு அறிவுரையை வழங்கினார்.
இப்போது ஹஜ் பெருநாள் காலம். ஹஜ்ஜின் முக்கிய இபாதத்களில் ஒன்று தான் உழ்ஹிய்யா. இது ஒரு முக்கியமான கட்டாயமான சுன்னத். இந்த உயரிய இபாதத்தை சிறந்த முறையில் நிறைவேற்றுவது தொடர்பில் பகிர்ந்துகொள்ளப்படாத சில கருத்துக்களை பகிர்ந்துகொள்வது பொருத்தம் என நினைக்கிறேன்.

இஸ்லாம் எப்பொழுதும் வீண்விரயத்தை கடுமையாக கண்டிக்கிறது. வீண்விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் நண்பர்கள் என்று ஹதீஸ்களும் இருக்கின்றன. மேலும் ஒரு விடயத்தை செய்யும் போது மிக அழகாக திட்டமிட்டு செய்வதனை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில் பல குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் வந்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

பொதுவாக இலங்கையில் பெரும்பாலானாவர்கள் மஸ்ஜிதின் ஊடாகவே தமது உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுகின்றனர். மேலும் உழ்ஹிய்யா காலத்தில் வரும் ஒரு பாரியதொரு குறைபாடு தான் உழ்ஹிய்யாவுக்கான இறைச்சி பொதுவாக அனைவருக்கும்  சென்றடைவதில்லை. பல பிரதேசங்களில் ஒரு பகுதியனருக்கு அதிகமாகவும் இன்னுல் சில பகுதியனருக்கு உழ்ஹிய்யா இறைச்சி கிடைக்காமலேயே போகும் சந்தர்ப்பங்களும் உண்டு.

அது மட்டுமல்ல ஒரு சிலருக்கு மாதக் கணக்கில் சேமித்து வைத்து பயன்படுத்த இறைச்சி கிடைக்கும் அதே வேளை இன்னும் பலருக்கு ஹஜ் பெருநாள் தினத்துக்கு பயன்படுத்தக் கூட இறைச்சி கிடைப்பதில்லை.
ஆனாலும் மாடுகளை பொறுத்தவரையில் தேவைக்கு அதிகமாகவே அறுக்கப்படுகிறது. அதிகமான இறைச்சி பொதிகள் கிடைக்கும் பலரின் இறைச்சி பொதிகள் பழுதடைந்து போவதனையும் பரவலாக காண முடிகிறது. அதாவது இறைச்சியை பாதுகாத்து வைப்பதற்கான குளிர்சாதன வசதிகள் இல்லாமை காரணமாக.
மேலும் ஹஜ் காலத்தில் மாட்டுக்கான தட்டுப்பாடு காரணமாக மாட்டின் விலையும் பல மடங்கால் அதிகரிப்பதனையும் வழமையாக காண முடிகிறது.
உண்மையில் இப்படியான சிக்கல்களை தீர்க்க ஏதாவது வழிமுறைகள் உள்ளதா? இந்தப் பிரச்சினையை முடியுமானளவு எப்படி குறைக்கலாம்?
பெரும்பாலும் இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்வது ஏதாவது மஸ்ஜிதை அண்மித்தே அதே போல் குறிப்பிட்ட பகுதியில் வாழும் முஸ்லிம்கள் ஏதோ ஒரு மஹல்லாவுக்கு கீழால் வருவார்கள்.

குறிப்பிட்ட மஹல்லாவில் இருக்கும் மஸ்ஜித் தனக்கு கீழ் இருக்கும் மக்களின் தொகையை கணிப்பிட வேண்டும். ஏதாவது ஒரு முறையை பயன்படுத்தி கணிப்பிட்டு குறிப்பிட்ட மஹல்லாவுக்கு எவ்வளவு இறைச்சி தேவை? அனைத்து வீடுகளுக்கும் போதுமானளவு இறைச்சி வழங்க எத்தனை கிலோ இறைச்சி தேவை என்பதனை கணிப்பிட்டு அந்த தேவைக்கேற்ப அறுக்கும் மாட்டின் தொகையை தீர்மானிக்கலாம்.
மேலதிமாக கிடைக்கும் மாடுகளை உழ்ஹிய்யா இறைச்சி கிடைக்காத ஊர்களுக்கு மஹல்லாக்களுக்கு அனுப்பலாம்.

இந்த முறையை சிறப்பாக திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி நடைமுறைபடுத்தினால் இறைச்சி வீண்விரயம் தவிர்க்கப்படும். அறுக்கப்படும் மாட்டின் தொகையும் குறிப்பிடத்தக்களவு குறையும். மாட்டுக்கான தட்டுப்பாடும் குறைவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும்.
இப்படி அனைத்து மஹல்லாக்களும் ஒரு ஒழுங்குக்கு வந்தால் நபியவர்களின் முக்கிய சுன்னாக்களில் ஒன்றான திட்டமிட்டு அழகாக செய்தல், வீண்விரயம் என்ற தீமையை இல்லாமல் செய்தல் என்ற இரண்டு உயரிய சுன்னாக்கள் நடைமுறைக்கு வரும்.
மஸ்ஜித்களை பொறுத்தவரையில் இது கடினமானதொரு பணியல்ல.

உழ்ஹிய்யா என்று வரும் போது அதன் சட்டதிட்டங்கள, ஷரத்துக்கள், 10 நாளுக்கு முன் நகம் முடி வெட்டாமல் இருத்தல் போன்ற சுன்னாக்களை உயிர்ப்பிப்பதில் அனைவரும்  அதீத கவனம் செலுத்துகின்றனர். ஆனால் அதனை விட முக்கியமான, அதனை விட சமூகத்துக்கு பாரிய நன்மையை கொண்டு வரும் இவ்வாறான சுன்னாக்களை கொஞ்சமாவது நாம் கவனத்தில் கொள்வதில்லை அப்படியே விட்டுவிடுகிறோம் .

உண்மையில் இந்த நிலைமை  மாற வேண்டும். மேற்குறிப்பிட்டவாறான நடைமுறைகள் அமுலுக்கு வரும் பட்சத்தில் மாற்று மதத்தவருக்கு இருக்கும் உழ்ஹிய்யா என்ற பெயரில் முஸ்லிம்கள் வீணாக  மாடுகளை கொலை செய்து தள்ளுகிறார்கள் என்ற குற்றச்சாட்டிலிருந்து கூட எமக்கு மீளலாம்.
இந்த மாற்றங்களை உடனடியாக கொண்டுவருவது சாத்தியமில்லை. எனினும் இஸ்லாம் இப்படியான கோணங்களில் கூட சிந்திக்கும் மார்க்கம் என்பதனை மக்களுக்கு நாம் உணர்த்த வேண்டும். இதற்கு கட்டாயம் குத்பாக்கள் பயன்படுத்தப்படவேண்டும். இஸ்லாம் வீண்விரயத்தை தடுக்கிறது, திட்டமிட்டு அழகாக வேலை செய்வதனை ஊக்கிவிக்கிறது என்பதனை நீரூபிக்க ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் பயான்கள் தேவையில்லை. வருடத்துக்கு ஒரு முறை வரும் இந்த உழ்ஹிய்யா கடமையை அழகுற திட்டமிட்டு வீண்விரயத்தை தவிர்த்து அழகிய முறையில்  நடைமுறைபடுத்தினாலே போதும்.

பொதுவாக இனவாதிகள் தமது தரப்புக்கு ஆட்களை சேர்க்க உழ்ஹிய்யா போனற் விடயங்களையே அதிகமாக பயன்படுத்துகின்றனர். சிறுபான்மையாக வாழும் நாங்கள் இந்த விடயத்தில் விடும் சிறு தவறு கூட பாரிய எதிர் விளைவுகளை கொண்டுவரக் கூடும். ஆகவே காலம் தாழ்த்தாமல் நாம் உடனடியாக ஒரு ஒழுங்குக்கு வரவேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறோம். நாம் இதனை புறக்கணிக்கு பட்சத்தில் நமக்கு மட்டுமல்ல வரவிருக்கும் எதிர்கால சந்ததியினருக்கு இது பெரும் தலையிடியாகவும் பெரும் சவாலாக வும் இருந்துகொண்டேயிருக்கும்.
“உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளாதவரை அல்லாஹ் உங்களை மாற்றமாட்டான்”
உழ்ஹிய்யா வீண்விரயம்????? உழ்ஹிய்யா வீண்விரயம்????? Reviewed by Madawala News on 9/04/2016 06:51:00 PM Rating: 5