யாழ் பல்கலைக்கழக தொழுகை அறை விவகாரம்: வெளியார் தலையீடுகள் அவசியமற்றது...

யாழ் பல்கலைக்கழக தொழுகை அறை விவகாரம்: வெளியார் தலையீடுகள் அவசியமற்றது. யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லில் பிரதிநிதி முஹம்மத் நிப்ராஸ்..

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முஸ்லிம் மாணவர்களுக்கான தொழுகை அறை அண்மையில் ஒரு சில விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே; இதுகுறித்து யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முஸ்லிம் மாணவர்களால் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அத்தோடு பலகலைக்கழக மாணவர் சங்கத்தினரிடமும் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படும் என்பது எமது நம்பிக்கையாகும். 

மேற்படி விவகாரம் பல்கலைக்கழக சமூகத்தினரோடும், நிர்வாகத்தோடும் தொடர்புடைய ஒரு விடயமாகும், எனவே மேற்படி விடயத்தை வெளியில் எடுத்துச் செல்ல யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் மஜ்லிஸோ அல்லது முஸ்லிம் மாணவர்களோ விரும்பவில்லை. அவ்வாறு நாம் இதனை வெளியில் எடுத்துச் செல்வது மேற்படி இனவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்படுவதற்கு சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தக்கூடும். அவர்கள் தமிழ் முஸ்லிம் மாணவர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தவே விரும்புகின்றார்கள், அல்லது பல்கலைக்கழகத்தின் அமைதியைக் குலைக்கவே விரும்புகின்றார்கள், இத்தகையவர்கள் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும், ஆனால் அவர்கள் அந்த இனத்தின் பிரதிநிதிகள் அல்ல; ஏனெனில் இவ்வாறான செயற்பாடுகள் பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும், அது மாத்திரமன்றி இதனை குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் செய்தார்கள் என்று சுட்டிக்காட்டவும் முடியாது; பொதுவாக பல்கலைகழகத்தின் அமைதியைக் குலைக்கவிரும்பும் ஒரு சக்தியின் செயற்பாடே இதுவாகும்.

இவ்வாறான நிலையில் இதுவிடயத்தில் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருசிலர் அறிக்கைவிடுவதும், அல்லது அரசியல் ரீதியாக இதனை அணுகுவதும் சிறப்பானதல்ல; இதனை வைத்து ஊடகங்களில் தேவையற்ற கொதிநிலைகளை ஏற்படுத்துவதும் சிறப்பானதல்ல, உங்களது உதவிகள் தேவைப்படுகின்றபோது பலகலைக்கழக முஸ்லிம் மாணவர் சமூகம் நிச்சயம் உங்களை நாடிவருவார்கள், அதுவரை இதுவிடயத்தில் தலையீடு செய்வது சிறப்பானதல்ல; மீண்டுமொருதடவை இது பல்கலைக்கழக சமூகத்துடன் தொடர்புடைய விடயம். இதனை இதே மட்டத்தில் தீர்த்துக்கொள்வது சிறப்பானது. இதுவே யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களின் நிலைப்பாடு என்பதை தெரியப்படுத்துகின்றோம். என்றும் யாழ் பலகலைக்கழக முஸ்லிம் மாணவர் மஜ்லிஸ் சார்பில் கருத்து வெளியிட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் முஹம்மது நிப்ராஸ் குறிப்பிட்டார்.

தகவல்; என்.எம்.அப்துல்லாஹ்

யாழ் பல்கலைக்கழக தொழுகை அறை விவகாரம்: வெளியார் தலையீடுகள் அவசியமற்றது... யாழ் பல்கலைக்கழக தொழுகை அறை விவகாரம்: வெளியார் தலையீடுகள் அவசியமற்றது... Reviewed by Madawala News on 9/08/2016 04:58:00 PM Rating: 5