Yahya

ஈராக் குவைத் மீது நடத்திய ஆக்கிரமிப்பு..

லத்தீப் பாரூக்
ஈரானுடன் எட்டு வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் ஈராக் வெற்றியீட்டியது. இந்த யுத்தத்தில் 30 லட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இது தவிர இரு நாடுகளினதும் பில்லியன் கணக்கான டொலர்கள் பெறுமதி மிக்க உட்கட்டமைப்பு வளங்களும் ஏனைய கட்டமைப்புக்களும் அழிக்கப்பட்டன.

இதனால் விழிப்படைந்த இஸ்ரேல் ஈராக்கின் யுத்த பலத்தை அழித்தொழிக்க சதித் திட்டம் தீட்டியது. இந்த சதித் திட்டத்தில் இஸ்ரேலின் நாசகார திட்டங்களுக்கு வழமையாக துணைபோகும் அதன் பங்காளிகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என்பனவும் இணைந்து கொண்டன. இதில் பக்தாத்தில் அப்போது இருந்த அமெரிக்க தூதுவர் ஏப்ரல்கெஸ்பி பிரதான கருவியாக இணைத்துக் கொள்ளப்பட்டார். அவர் மூலம் குவைத் மீது படையெடுக்குமாறு சதாம் ஹுசேன் தூண்டப்பட்டார். இது சம்பந்தமாக ஈராக் அதிபர் சதாம் ஹுசேனுக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் ஒரு முக்கிய சந்திப்பு 1990 ஜுலை 25ல் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது குவைத் மீதான படையெடுப்பில் சதாமுக்கு ஆர்வத்தை ஏற்படுத்திய ஏப்ரல் கெஸ்பி 'அரபுலக முரண்பாடுகள் பற்றி எங்களுக்கு எந்த அபிப்பிராயங்களும் கிடையாது. 

குவைத்துடன் உங்களுக்கு இருக்கும் எல்லை முரண்பாட்டிலும் இதே நிலைதான்' என்று கூறினார். குவைத் மீது நீங்கள் படையெடுப்பு நடத்தினாலும் நாங்கள் அதை உத்தியோகப்பூர்வமாக கண்டு கொள்ள மாட்டோம் என்பது தான் இதன் பொருள்.
இது குவைத் மீது படையnடுப்பு நடத்த சதாமுக்கு காட்டப்பட்ட பச்சைக் கொடி.
ஈரான் மீதான யுத்தத்தால் வெற்றி மோகத்தில் மூழ்கியிருந்த சதாம் இதை அப்படியே நம்பினார். 1990 ஆகஸ்ட் 2இல் குவைத் மீது தனது படைகளை ஏவிவிட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் (சீனியர் – தந்தை) இந்த பிரச்சினையை சமாதானமாக தீர்க்கக் கூடிய சகல வழிகளையும் முடக்கினார். பல நாடுகள் மீது அச்சுறுத்தல்களை பிரயோகித்தார். பல வறிய நாடுகளை அவற்றின் விருப்புக்கு மாறாக இணைத்து 32 நாடுகளைக் கொண்ட ஒரு கூட்டணியை உருவாக்கினார். இதற்காக வறிய நாடுகள் பலவற்றுக்கு அவர் இலஞ்சமும் வழங்கினார்.
ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் இலக்கம் 678 நிறைவேற்றப்பட்டது. 

குவைத்தை ஆக்கிரமித்துள்ள ஈராக் படைகளை அங்கிருந்து வெளியேற்ற படைபலத்தை பிரயோகிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வஞ்சகமாகத் திட்டமிடப்பட்ட யுத்தத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்கியது.

யூத பயங்கரவாதியாக இருந்து இஸ்ரேலின் பிரதமராக வந்த யிட்ஷாக் ஷாமிர் யுத்தம் முடிந்து சில நாற்களின் பின் இது பற்றி குறிப்பிடுகையில் 'ஈராக்கின் யுத்த பலத்தை கூட்டணி படைகள் நசுக்கி இருக்காவிட்டால் இஸ்ரேல் வேறு தெரிவுகள் இன்றி சதாமை எதிர்த்து தானே ஒரு யுத்தத்தை தொடுத்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும். அதில் நாம் வெற்றி அடைந்திருக்கலாம். ஆனால் அதற்கு பாரிய உயிர் இழப்பை விலையாக செலுத்தி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்' என்றார். இஸ்ரேலுக்கு எந்த சேதங்களும் இல்லாமல் ஈராக்கின் யுத்த பலம் அழிக்கப்பட்டதையே இது குறிக்கின்றது.
இந்த அழிவை தடுத்துக் கொள்ள சதாமுக்கும் போதிய கால அவகாசம் இருந்தது. ஆனால் ஜ.நா. விதித்த 1991 ஜனவரி 15 காலக்கெடுவுக்கு முன் அவர் குவைத்தில் இருந்து வெளியேற மறுத்தார். 

இந்த மறுப்பு சதாமை கவிழ்க்க காத்திருந்த அவரின் எதிரிகளுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியது.
குவைத் மீது ஈராக் உரிமை கோரியது ஒன்றும் புதிய விடயமல்ல. ஏற்கனவே அரை நூற்றாண்டுகளாக அந்தப் பிரச்சினை இருந்து வந்தது. 1938 முதல் மாறி மாறி ஈராக்கில் ஆட்சி செய்தவர்கள் குவைத் தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஈராக்கின் ஒரு பகுதியாக குவைத் அமைய வேண்டும் என்றோ அல்லது வளைகுடா நீரிணையில் தாங்களும் நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் கோரிக்கைகள் இருந்து வந்துள்ளன.

பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த முன்னாள சி.ஐ.ஏ உளவாளி பிலிப் எஜீ அமெரிக்கா அதன் நிரந்தரமான யுத்த பொருளாதாரத்தை நியாயப்படுத்தும் வகையில் மத்திய கிழக்கில் மோதல்களை உருவாக்கியது. ஐரோப்பாவில் நாற்பது வருடங்களாக நீடித்த மோதல் நிலைமைகளுக்கு ஒரு மாற்றீடாக உலகில் இன்னொரு பிராந்தியத்தில் மோதல்கள் தொடருவதை அமெரிக்கா விரும்பியது என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா தலைமையிலான அழிவுகளை ஏற்படுத்தும் விமானத் தாக்குதல்கள் தொடங்கியதும் குவைத்தை விடுவிக்க வேண்டும் என்பதிலும் பார்க்க ஈராக்கை அழிக்க வேண்டும் என்பதிலேயே ஆகக் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டது. இது ஐ.நா. தீர்மானத்துக்கு முற்றிலும் முரணானது. இந்த பாரிய தாக்குதல் மூலம் ஒரு சில தினங்களில் ஈராக்கின் தண்ணீர் வசதி, மின்சார வசதி, வடிகான் கட்டமைப்புக்கள், பாலங்கள், வீதிகள், பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், பொது மக்கள் குடியிருப்பு பகுதிகள் என எல்லாமே இலக்கு வைத்து நிர்மூலமாக்கப்பட்டன. அவற்றோடு சேர்த்து ஈராக்கின் அப்பாவி மக்களின் குரல்களும் நசுக்கப்பட்டன.
அமெரிக்கா தலைமையிலான படைகள் தம் வசம் வைத்திருந்த அனைத்து அதிநவீன நாசகார ஆயுதங்களையும் பரீட்சித்துப் பார்க்கும் களமாக ஈராக் மாறியது. இந்த ஆயுதங்களின் பாவனையால் ஈராக்கிய மக்கள் ஆட்டு மந்தைகளைப் போல் சுட்டெறித்து அழிக்கப்பட்டனர்.

அமெரிக்கா மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்று குண்டு வீச்சுக்களை நடத்தியது. இரண்டு லட்சம் தொன்களுக்கும் அதிகமான நாசகார குண்டுகளை அமெரிக்கா ஈராக்கில் பொழிந்தது. பெப்ரவரி 13ல் தரைவழி தாக்குதலை தொடுப்பதற்கு முன்பே பல சிவிலியன் குடியிருப்புக்களை அழித்து நாசமாக்கியது. 'ஈராக்கில் அமெரிக்கா பாவித்த ஒரு வகை குண்டு மனித உடல்களில் தெறித்து மோசமான வெட்டுக்காயங்களையும் பயங்கர கீறல் காயங்களையும் ஏற்படுத்தியது. ஆஸ்பத்திரி கட்மைப்பு ஏற்கனவே நாசமாக்கப்பட்ட நிலையில் இந்த வெட்டுக் காயங்களால் மக்கள் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு மரணத்தை தழுவினர்' என்று அமெரிக்க தாக்குதலில் பங்கேற்ற உயர் அதிகாரி ஒருவர் பிற்காலத்தில் தெரிவித்திருந்தார்.

43தினங்களாக இந்த நாசகார விமானத் தாக்குதல் தொடர்ந்தது. அன்றைய காலகட்டத்தில் மிக மோசமான வெடிமருந்தாக இருந்த இந்தத் தாக்குதலில் தாராளமாகப் பாவிக்கப்பட்டது. 

மொத்தத்தில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய ஜப்பானிய நகரங்களில் அமெரிக்கா பாவித்த அணுகுண்டை விட ஆறு மடங்கு அழிவு தரும் விமான குண்டுகளை அது ஈராக்கில் பாவித்தது. முஸ்லிம்களை கினி நாட்டு பன்றிகள் எனக் கருதி கிறிஸ்தவர்களும் யூதர்களும் நடத்திய தாக்குதலே இதுவென்று ஒரு சவூதி அரேபிய பிரஜை வர்ணித்துள்ளார். தாங்கள் புதிதாகத் தயாரித்த அதி நவீன ஆயுதங்கள் அனைத்தையும் பரீட்சித்துப் பார்க்கவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

'குவைத்தைப் பற்றி கவலை பட வேண்டாம். அது ஒரு தூசு. ஈராக்கிய இராணுவம் தான் எமது இலக்கு. அதை நாம் அழித்து விட்டால் குவைத் தானாகவே விடுதலையாகிவிடும்' அமெரிக்க படை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட விளக்கம் இதுதான்.

அந்த வகையில் ஈராக்கை துவம்சம் செய்வதும் ஈராக்கியர்களைப் படுகொலை செய்வதும் தொடர்ந்தது. சர்வதேச ரீதியாகத் தடை செய்யப்பட்டுள்ள நேபாம் குண்டுகளும் எரிபொருள் விமானக் குண்டுகளும் கூட இங்கு தாராளமாகப் பாவிக்கப்பட்டன. ஈராக்கில் உள்ள சுமார் 500 எண்ணெய் கிணறுகளும் தீயிட்டு கொழுத்தப்பட்டன.

உடல் பாகங்களை கூறு போடும் கொத்தணி குண்டுகளைப் பாவித்து மனித உயிர்கள் பந்தாடப்பட்டதோடு அவற்றை மேலும் கருகச் செய்யும் வகையில் நேபாம் மற்றும் வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளும் உபயோகிக்கப்பட்டன. விமானங்களில் இருந்து வீசப்பட்டட எரிபொருள் குண்டுகள் சிறிய வகை அணுகுண்டுகளுக்குச் சமமானவையாகக் காணப்பட்டன. உலக வரலாற்றில் அதுவரை அறியப்பட்டிராத வகையில் இந்த குண்டு வீச்சு தாக்குதல்கள் மோசமானவையாக அமைந்திருந்தன. அப்பாவி மக்கள் மீது இந்த சாகசங்களை நடத்தி ஈராக்கை வரலாற்றுக்கு முந்திய காலப்பகுதிக்குச் தள்ளிச் சென்றவர் முன்னாள் அமெரிக்க ஜகாதிபதி ஜோர்ஜ் புஸ். இரண்டாவது உலக மகா யுத்தத்தில் வீசப்பட்ட குண்டுகளின் மொத்த எண்ணிக்கையிலும் பார்க்க ஈராக் மீது போடப்பட்ட குண்டுகளின் எண்ணிக்கை அதிகமானதாகும். சவூதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளும் ஆதரவளித்த இந்த அட்டூழிய யுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவி ஈராக்கிய பொது மக்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ஆகும்.

அமெரிக்காவுக்கு இந்த தாக்குதலை நடத்துவதற்கான முழு சுதந்திரத்தையும் ஐ.நா. பாதுகாப்புச் சபை வழங்கியிருந்தது. கூட்டுப் படைகளின் கோரிக்கைக்கு பக்தாத் செவி சாய்க்கும் வரை அந்தப் பிராந்தியத்திலேயே தங்கியிருந்து மேலும் தாக்குதலை நடத்த முடியும் என்ற ரீதியில் முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஈராக் மீதான அமெரிக்க தலைமையிலான விமானத் தாக்குதல்களின் போது சுமார் 125000 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர் என்பதை பிற்காலத்தில் அமெரிக்க உயர் அதிகாரிகள் பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கிளர்ச்சி
ஈராக்கிய மக்கள் கிளர்ந்து எழுந்து சதாம் ஹுசேனை பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்று புஸ் வேண்டுகோள் விடுத்தார். ஈராக்கியர்கள் கிளர்ந்தெழுந்தனர் ஆனால் புஸ் அவர்களை ஏமாற்றினார். காரணம் இந்த கிளாச்சிகளால் சதாம் பலவீனம் அடைந்தால், அதை அடக்க அவர் தனது உதவியை நாடுவார் என்றும் அப்போது அவரை தனது நலன்களுக்காக மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தலாம் என்றும் அமெரிக்கா கருதியது.

இந்த நிலைமைகளின் பலன்களை ஒரு சில மாதங்களிலேயே சியோனிஸ்ட்டுகள் முழுமையாக அனுபவிக்க தொடங்கினர். இந்த நிலைமையை அடுத்து பல நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளை மேம்படுத்த ஓட்டம் பிடித்தன.

இவற்றுள் பல ஏற்கனவே இஸ்ரேலுடன் இரகசிய உறவுகளைக் கொண்டிருந்தன. ஆனால் இந்த சந்தர்ப்பத்தை அவை முறையாகப் பயன்படுத்திக் கொண்டன. ரஷ;யா, சீனா, இந்தியா மற்றும் இன்னும் சுமார் 30 சிறிய அளவிலான நாடுகள் இந்த வரிசையில் அடங்கும். பலஸ்தீனத்துடன் கொள்கை அளவில் ஈடுபாட்டைக் கொண்டிருந்த மூன்றாம் மண்டல நாடுகள் பல அரபு நாடுகள் பலவும் மேற்படி வரிசையில் இருப்பதைக் கண்டு அசௌகரியம் அடைந்தன.

இந்த நிலையை சாதகமாகப் பயன்படுத்திய அமெரிக்கா அரபு உலக சர்வாதிகார ஆட்சியாளர்களை இஸ்ரேலுடன் சமாதான பேச்சுக்களில் ஈடுபடுமாறு வற்புறுத்தியது. இந்த ஏமாற்றுகரமான சமாதான பேச்சுக்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் நிலைமையை தனக்கு சாதகமாக்கி தான் பெற வேண்டிய அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொண்டது.

அமெரிக்காவின் ஜோர்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஒரு ஆய்வரங்கில் இந்த யுத்தம் காரணமாக அரபிகளுக்கு ஏற்பட்ட இழப்பு 438 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டது. அரபு லீக்கின் பொருளாதார அறிக்கைகளின் படி இந்த இழப்பு 450 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமானதாகும். 

இராணுவ வளங்கள், எண்ணெய் வளங்கள் மற்றும் பொருளாதார வளங்கள் என சகலதையும் உள்ளடக்கியதாக இந்த மதிப்பீடு அமைந்திருந்தது. பின்னர் 1992 இல் இந்த இழப்புக்கள் மீள் மதிப்பீடு செய்யப்பட்டு ஐக்கியப்படுத்தப்பட்ட அரபு பொருளாதார அறிக்கையின் படி 620 பில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்பட்டது. ஈராக்கினதும் குவைத்தினதும் பொருளாதார வளங்களுக்கு எற்படுத்தப்பட்ட சேதங்கள் மூலமாகவே பெரும்பாலான இழப்புக்கள உண்டாகியிருந்தன. இந்த இழப்புக்கள் ஈராக்கில் 190 பில்லியன் மற்றும் குவைத்தில் 160 பில்லியன் டொலர்களாக காணப்பட்டன. 1990 மற்றும் 91 இல் சவூதி மட்டும் இதற்கென 62 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டிருந்தது.
இரண்டு வருடங்கள் கழித்து 1993ல் இந்த இழப்பு 676 பில்லியன் டொலர்கள் என அரபு நாணய நிதியத்தின் தலைவர் ஒஸாமா ஜப்பார் பாக்கி புதிய தகவலைத் தெரிவித்தார். பெண்டகன் தகவல்களின் படி அமெரிக்கா இந்த யுத்தத்துக்காக செலவிட்ட தொகை 61 பில்லியன் அமெரிக்க டொலாகள் மட்டுமே. அதிலும் கூட 52.4 பில்லியன் டொலர்களை அமெரிக்கா ஆறு அரபு நாடுகளிடம் இருந்து மீள வசூலித்துக் கொண்டது.
யுத்தத்துக்குப் பின் குவைத்தின் சொத்துக்களின் பெறுமதி 100 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைந்து 1993 முற்பகுதியில் அது 15 பில்லியன் டொலர்களாக இருந்தது.

இந்த யுத்தத்தில் சவூதி கொண்டிருந்த நிலைப்பாடு பல நாடுகளில் அதன் இஸ்லாமிய இயல்புகளைக் கேள்விக்குள்ளாக்கியது.வளைகுடா நெருக்கடியின் போது சுதந்திரமாக கருத்து வெளியட்ட பல இமாம்களையும் ஏனைய தலைவர்களையும் சவூதி கைது செய்தது.
ஐ.நா சபையானது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளின் தேவைகளை நிறைவேற்றும் ஒரு அமைப்பு மட்டுமே என்பதை இந்த யுத்தம் நன்கு புலப்படுத்தியது. முஸ்லிம்களுக்கு எதிரான அவர்களின் தீய நோக்கத்தை நிறைவேற்ற ஒரு ஆயதமாக ஐ.நா பயன்படுத்தப் படுகின்றது என்பதும் நிருபணமானது. சர்வதேச சட்டம் என்று ஒன்று உலகில் உள்ளதா என்பதையே இந்த யுத்தம் கேள்விக்குள்ளாக்கியது. உலகில் தானும் ஒரு வல்லரசாக வரவேண்டும் என்பதற்காக இஸ்ரேல் முஸ்லிம் உலகை அழிக்கும் தனது திட்டத்தை தொடர்ந்தும் வெற்றிகரமாக அரங்கேற்றி வருகின்றது.

ஈராக் குவைத் மீது நடத்திய ஆக்கிரமிப்பு.. ஈராக் குவைத் மீது நடத்திய ஆக்கிரமிப்பு.. Reviewed by Madawala News on 9/03/2016 07:27:00 PM Rating: 5