Accaddemy

இணையதளங்களை வைத்துக்கொண்டு தங்களைத் தாங்களே முஸ்லிம்களின் சத்திய தேசிய தலைவர் என அடையாளப்படுத்துகின்றனர்..

(ஏ.எல் றியாஸ்)

கிழக்கு மாகாணத்தில் பல அரசியல் தலைவர்களும்,  கல்விமான்களும், அரசியல் சானக்கியம் உள்ளவர்களும் நிறைந்திருக்கின்ற இக்காலகட்டத்தில் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வந்து கிழக்கின் தலைமையை கைப்பற்றுவதற்கு நாடகமாடிக்கொண்டிருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஹூனைஸ் பாறுக் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் (17) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வன்னி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர். கிழக்கிலுள்ள அரசியல் தலைமைகள் ஒன்றுபட வேண்டிய இக்காலகட்டத்தில் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வந்து கிழக்கின் தலைமையை கைப்பற்றுவதற்கு முயற்ச்சித்துக் கொண்டிருக்கிறார். இன்று அவருக்குத் தேவையானதொன்று நான்தான் இலங்கை முஸ்லிம்களின் சத்திய தேசிய தலைவர் என்று உலகத்திற்கும், முஸ்லிம் நாடுகளுக்கும் காட்ட வேண்டும். அதற்காக 30 இணையதளங்களை சம்பளம் கொடுத்து நடாத்திக்கொண்டிருக்கிறார்.

இன்று யார் தேசிய தலைவர் அல்லது அதற்கு மேல் ஏதாவது சொல் இருந்தால் அந்தத்தலைவர் என்று தங்களை இனங்காட்டிக்கொள்வதற்கு எமது அரசியல் தலைமைகள் மத்தியில் பெரும் போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது. தற்போது தேசிய தலைமை என்பதனையும் தான்டி சத்திய தேசியத் தலைமை என்ற ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கென்று சில இணையதளங்களை வைத்துக்கொண்டு அதன் மூலம் செய்திகளையும் பரப்புகின்றார்கள். தங்களைத் தாங்களே இந்நாட்டு முஸ்லிம்களின் சத்திய தேசிய தலைவர் என்றும் அடையாளப்படுத்துகின்றார்கள்.

குறிப்பாக வடக்கில் பயங்கரவாதத்தால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதற்கு அங்கு எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி புத்தளத்திலே அகதி முகாம்களில் முடங்கிக் கிடக்கின்றார்கள். இவ்வாறான நிலையிலும் வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவருக்கு வாக்களித்த முசலி மக்களுடைய சாதாரண தேவைகளைக்கூட நிறைவேற்றிக்கொடுக்க வக்கில்லாதவர். இன்று கிழக்கு மாகாண தலைமைத்துவத்தையும் பொறுப்பெடுப்பதற்காக புறப்பட்டிருக்கிறார்.

குறிப்பாக ஒரு கட்டடத்தைக் கட்டுவதென்றால் அதனை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு செய்தியும், ஆரம்பிக்கும் போது ஒரு செய்தியும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் போது இன்னுமொரு செய்தியும் என நூற்றுக்கணக்கான செய்திகள் வெளியாகிறது. அதனைத்தான் சத்திய தேசிய தலைவர் செய்துகொண்டிருக்கிறார். பார்ப்பவர்களுக்கு பெரிதாகத்தான் தெரியும் அவருடைய சேவைகள். நீங்கள் அவரின் சொந்த ஊருக்கு, வன்னி மாவட்டத்திற்குச் சென்று பாருங்கள் அங்கு ஒன்றுமே நடைபெறவில்லை.

வில்பத்துவில் மக்கள் குடியேறுவதற்கு அரசாங்கம் தடுக்கிறது என வில்பத்து பிரச்சிணையைக் கொண்டு வந்து பெரிய நாடகத்தைப் போட்டு அந்த நேரத்தில் நடந்த தேர்தலை வெற்றிகொள்வதற்காக மக்களை ஏமாற்றினார். அதனை ஒரு தேசியப் பிரச்சிணையாக மாற்றி நான்தான் இந்த நாட்டு முஸ்லிம்களின் தேசிய தலைவர் என்று இந்தநாட்டுக்கும் வெளிநாடுகளுக்கும் போட்டோக்களையும், வீடியோக்களையும் காட்டுவதற்காக ஆடிய ஒரு நாடகம்தான் வில்பத்து நாடகம் இவ்வாறு காலத்துக்குக் காலம் நாடகமாடித்தான் அவர் அங்கு அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்கின்றார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இணையதளங்களை வைத்துக்கொண்டு தங்களைத் தாங்களே முஸ்லிம்களின் சத்திய தேசிய தலைவர் என அடையாளப்படுத்துகின்றனர்.. இணையதளங்களை வைத்துக்கொண்டு தங்களைத் தாங்களே முஸ்லிம்களின் சத்திய தேசிய தலைவர் என அடையாளப்படுத்துகின்றனர்.. Reviewed by Madawala News on 9/19/2016 02:30:00 PM Rating: 5