Ad Space Available here

வட-கிழக்கு இணைப்பு விவகாரத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் துரோகியா?


ஏ. எச்.சித்தீக் காரியப்பர்
வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுவது தொடர்பில் இன்று பரவலாகப் பேசப்படுகிறது. வடக்குடன் கிழக்கை இணைக்க வேண்டுமென்ற விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை நாடியுள்ளதாகவும் அதற்கு கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உடன்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

சம்பந்தன் ஐயாவின் வேண்டுகோளுக்காகவும் புலம்பெயயர் தமிழ் மக்களின் கைமாறுக்காகவும் அமைச்சர் ஹக்கீம் அவர்கள் இந்த விடயத்தில் இணங்கி விட்டதாகவும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் தனித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு அமைச்சர் ஹக்கீம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்று கைகோர்த்து விட்டார் என்றும் பரவலான கதைகள் அடிபடுகின்றன.

 

ஆனால், இவ்வாறெல்லாம் அமைச்சர் ஹக்கீம் மீது குற்றஞ்சாட்டுவது என்பது ஒரு பாமரத்தனமான விடயமாகும். பிடிக்காத ஒருவரை அல்லது எதிரி ஒருவரை எப்போதும் எதிர்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதற்காக தொடர்ச்சியாக உண்மைக்கு மாறானவற்றை அவிழ்த்து விடுவது என்பது அநியாயமாகும். வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற விடயத்தில் அமைச்சர் ஹக்கீம் அவர்களை எடுத்த எடுப்பிலேயே குற்றஞ் சுமத்துவதனை  ஏற்றுக் கொள்ள முடியாது.

 

வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது உம்மாவின் பிள்ளைகள் எல்லாம்  ஒன்று சேர்ந்து ஊரானுக்கு சொத்துகளை எழுதிக் கொடுப்பது போன்ற இலகுவான காரியம் அல்ல. இது ஒரு தேசியப் பிரச்சினை. இரு மாகாணங்களும் இணைய வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் அமைச்சர் ஹக்கீம் அவர்கள் ஒப்பந்தம் செய்து தனது விருப்பத்தைக் கொடுத்தாலும் கூட இணைப்பு என்பது இடம்பெறும் காரியமா என்பதனை ஆழமாக அலசிப் பார்க்காமல் எடுத்த எடுப்பிலேயே ஹக்கீம் மீது குற்றம்சாட்டி சுட்டு விரலை நீட்டுவது பாமரத்தனமானது.

 

இன்னும் ஒருமுறை இரு மாகாணங்களையும் இணைத்தல் என்பதனை நினைத்துப்ப பார்க்கவே முடியாது. தேசிய ரீதியில் முக்கியத்துவம் பெற்ற இந்த விடயமானது பல படிமுறைகளைக் கொண்டது. பல கட்டங்களில் வெற்றி பெற்று பல தடைகளைத் தாண்டும் போது மட்டுமே வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது சாத்தியமாகும். ஆனால், இன்றைய தேசிய அரசியல் கொதி நிலையில் இந்த விவகாரம் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறி.

 

புதிய அரசின் மீது தென்னிலங்கை சிங்கள இனவாத சக்திகள் இன்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதுடன் சந்தேகங்களையும் வெளியிட்டுள்ளன. சர்வதேசத்தின் விருப்பங்களுக்கும் புலம்பெயர் தமிழர்களின் அபிலாஷைகளுக்குமே இந்த அரசாங்கம் முன்னுரிமை வழங்கி சிங்கள மக்களுக்கு துரோகம் செய்யும் எத்தணிப்புடன் செயற்படுவதாக தென்னிலங்கையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அவை சாதாரண சிங்கள மக்கள் மத்தியிலும் வேறூன்றியுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற விடயத்தில் அரசு விடடக் கொடுப்புடன் செயற்படுமா என்பது மிகப் பெரிய சந்தேகம். 

 

அத்துடன் இது தொடர்பில் இரு மாகாணங்களிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் இணைப்புக்கான ஆதரவுத்தன்மை என்ற விடயம் கேள்விக்குறியானது. வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது அந்த மாகாணங்களில் வாழக் கூடிய தமிழ் – முஸ்லிம் மக்களின் இணக்கப்பாட்டில் மட்டும் உருவாகக் கூடிய ஒன்றல்ல. அங்குள் சிங்கள மக்கள், சிங்கள அரசியல்வாதிகளினதும் கருத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டுமல்லவா? மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களும் இந்த இணைப்பு முயற்சிக்கு நேரடியாகவே எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

 

எனவே, இவற்றையெல்லாம் நிராகரித்து வடக்கு, கிழக்கை இணைக்கும் முயற்சி மற்றும் இணைப்பு என்ற விடயங்களில் இன்றைய தொங்கு நிலை அரசாங்கம் ஈடுபட்டால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த சிங்கள மக்கள் ஒன்றிணைந்தால் இந்த அரசாங்கம் நிச்சயமாக தூக்கி வீசப்படும். தமிழ் பேசும் மக்களின் எவ்வித ஆதரவும் இன்றியே இன்றைய அரசை வீட்டுக்கு அனுப்பும் சக்தி அனைத்து சிங்கள மக்களின் ஐக்கியத்தில் உள்ளது என்பதனை நாம் மறந்து விடமுடியாது. இவைகளை இன்றைய அரசு தெரியாதிருக்கவும் நியாயம் இல்லை. எனவே, சிங்கள மக்களின் எதிர்ப்பின்றியும் தங்களது அரசியல் இருப்புக்கு பாதகம் ஏற்படாமலுமே இந்த இணைப்பு விவகாரத்தை அரசு கையாள வேண்டும். ஆனால், அது நடக்காத விடயம்.

 

இவை அனைத்தையும் நன்கு புரிந்து கொண்டுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள், இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்தாலும் அதில் சேதாரமில்லை என்பதனை அவர் நன்கு உணர்ந்துள்ளார். தான் ஆதரவு வழங்கினாலும் இணைப்பு விடயம் சாத்தியமாகாத ஒன்று என்பதனை நன்கு புரிந்து கொண்ட ஹக்கீம் அவர்கள், வடக்கு-கிழக்கு இணைப்பு என்ற விடயம் முஸ்லிம்களால்தான் கைகூடாது போயவிட்டது என்று தமிழ் சமூகத்தினால் பழி நேரக் கூடாது. தனது சமூகம் பாதிக்கப்படக் கூடாது. வடக்கு, கிழக்கில் வாழக் கூடிய தமிழ-முஸ்லிம் மக்களிடையே சந்தேகங்கள், அதிருப்திகள் தோன்றி அதன் பாதிப்புகள் முஸ்லிம் மக்களை வந்தடையக் கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையிலே அவர் இந்த விடயத்தில் இவ்வாறு செயற்படுகிறார் என நான் நினைக்கிறேன். இது அவரது அரசியல் சாணக்கிய நகர்வாகவே நான் கருதுகிறேன். இந்த விடயத்தில் அமைச்சர் ஹக்கீம் மீது பழி சுமத்தி பறையடிப்பதில் பயன் இல்லை.

 

கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது சுழற்சிக் காலத்தை தங்களுக்கு விட்டுத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலவர் சம்பந்தன் ஐயா அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் கேட்டபோது அவ்வாறான விட்டுக் கொடுப்புக்கே இடமில்லை என்று பகிரங்கமாக தெரிவித்து முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்கியதனை நாம் மறந்து விடக் கூடாது. அவர் நினைத்திருந்தால் கிழக்கு மாகாண சபையின் இரண்டாம் சுழற்சிக் காலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்துக்கு விட்டுக் கொடுத்திருக்க முடியும். அதனை அவர் இலகுவாகச் செய்திருக்கலாம் அல்லவா?

 

வட-கிழக்கு இணைப்பு விவகாரத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் துரோகியா? வட-கிழக்கு இணைப்பு விவகாரத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் துரோகியா? Reviewed by Madawala News on 9/16/2016 11:11:00 PM Rating: 5