Kidny

Kidny

சும்மாயிருக்கும் சங்கை ஊதிக்கெடுப்பதேனோ?


- எம்.எம்.ஏ.ஸமட்-
 
பொதுவான நோக்கில் சண்டை, சச்சரவுகளின்றி அமைதியாக இருக்கும் ஒரு பிரசேத்தில் பிரச்சினைகளை உருவாக்க அல்லது கசப்புணர்வுகளை மறந்து சமாதானத்துடன்  வாழும் சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க மேற்கொள்ளப்படும் செயலுக்கு 'சும்மா இருக்கும் சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி' என்ற முதுமொழி பயன்படுத்தப்படுகிறது.
 
இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் சமூகங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இம்முதுமொழியின் அர்த்தத்தினை அறியாதவர்கள் இருப்பது  அரிது. இருப்பினும், இம்முதுமொழிக்கான அர்த்தத்தினை கடந்த காலங்களில் அங்காங்கே நடைபெற்ற சம்பவங்களும், சமகாலத்தில் நடைபெறுகின்ற சிற்சில நிகழ்வுகளும் அவற்றின் வெளிப்பாடன செயற்பாடுகளும், கருத்து வாதப் பிரதிவாதங்களும் புரியவைக்கின்றன.
 
சமூகங்களுக்கிடையில் காணப்படும் குரோத மனப்பாங்குகள் அகற்றப்பட வேண்டும். புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் ஏற்பட்டு சகவாழ்வு மலர வேண்டும் என்ற நோக்குடன் பல்வேறு வேலைத்திட்டங்கள் தேசிய, பிராந்திய, பிரதேச, பாடசாலை மற்றும் சமூக மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
இவ்வேளையில,; ஒரு சிலரினால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளும், முன்வைக்கின்ற கருத்துகளும்  எதிர்மறை மனப்பாங்குகளை உருவாக்கி, சந்தேகங்களையும் இனத்துப்பார்வையினையும் வளர்க்கும்; ஊக்கிகளாகச் செயற்படுவதைக் காணமுடிகிறது. சமூகங்களுக்கிடையில் அங்கங்கே சச்சரவுகள் இடம்பெறுவதற்கும், இனத்துவப் பார்வை மேலோங்குவதற்கும் காரணமாக இருப்பது சில அரசியல் மற்றும் மதவாதிகளின் வெறுப்புணர்வுப் பேச்சுக்களும் செயற்பாடுகளும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
 
இவ்வாறான சூழ்நிலையில். இவற்றிற்கு எதிராக ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தமிழ் முஸ்லிம் மக்களின் உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்துவதற்காக ஒரு சில அரசியல் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் விரும்பத்தகாத அல்லது முரண்பாடுகளைத் தோற்றுவிக்கக் கூடிய கருத்துக்களை முண்வைப்பது சிறுபான்மை சமூக உறவின் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கும்.
 
தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச, சமூகத்தின் மத்தியில் தங்களது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இவற்றுக்கான நிகழ்ச்சி நிரல்களை வகுத்து, அவற்றின் வழியே தங்களது  இருப்பையும,; பிரபல்யத்தையும் நிலைநிறுத்தி சுய இலாபம் அடைந்துகொள்வதற்காக அமைதியாக இருக்கும் பிரதேசங்களில் வாழும் மக்களிடையே சலசலப்புக்களை, வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்த முனைவது மனிதத்துவமாகாது.
 
தாம் பிரதிநிதித்துவப்படும் மக்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்பதற்காக பிராந்தியத்தில், சமூக மட்டத்தில் சமூகக் காயங்கள் ஏற்படுத்தப்படுவதை ஏற்க முடியாது. சமூகங்களுக்கிடையில் வாதப் பிரதிவாதங்களையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்துமொரு விடயமாக அல்லது சும்மா இருந்த சங்கை ஊதித்கெடுத்ததொரு நிகழ்வாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை அமைந்து விட்டது என்றதொரு நிலையை கல்முனைப் பிரதேச முஸ்லிம் சமூக ஆர்வலர்களினால் சமூகவலைத்தளங்களில் பதியப்படுகின்ற பதிவுகளையும் அவர்களால் வெளியிடப்படுகின்ற பத்திரிகைச் செய்திகள் மற்றும் அறிக்கைகளையும் நோக்குகின்றபோது புரியக் கூடியதாகவுள்ளது.
 
கல்முனைப் பிரதேசங்களினதும் இப்பிரதேசத்தில்வாழும் சமூகங்களினதும் மத, கலை, கலாசாரப் பண்பாடுகள்,  சமூகக் கட்டமைப்புக்கள், சமூக உறவுகள், நிர்வாக நடைமுறைகள் போன்றவற்றின்; வரலாற்றுப் பரிணாமம் அல்லது பின்னணி எத்தகையது என்பதை இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் நன்கு அறிவார்கள். இப்பிரதேச மக்கள் இப்பிரதேத்தின் வரலாற்றுப் பரிணாமங்களை அறிந்துள்ள அளவுக்கு ஏனைய பிரதேச அரசியல்வாதிகளோ, சமூக அமைப்புக்களோ அல்லது மக்களோ, தனிநபர்களோ அறிந்திருப்பார்களா என்பது கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியது.
 
இருப்பினும், இப்பிரதேச மக்களின் ஒவ்வொரு விடயத்திலும் அவ்வப்போது சமூகக் கீறல்களும், சமூகக் காயங்களும் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அக்கீறல்களும் காயங்களும் வரலாற்றில் மறக்க முடியாத பதிவுகளை இப்பிரதேசம் வாழ் சமூகங்களுக்கிடையில் ஏற்படுத்தியிருந்தாலும். ஆக்கீறல்களும் காயங்களும் யாசகனின் காலிலுள்ள புண்ணாக தொடர்ந்து இருப்பதற்கு அரசியல்வாதிகளும் சமூக அமைப்புக்ளின் பிரதிநிதிகளும் காரணகர்த்தாக்;களாக இருந்துவிடக்கூடாது.
 
பிரச்சினைகள், தவறுகள் இருப்பின் அதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள முயற்சிப்பது அப்பிரதேசத்தில் வாழும் மக்களே தவிர மாற்றுப் பிரதேச மக்களோ, தனிநபர்களோ அல்ல. கல்முனையின் வரலாற்றோடு ஒட்டியிணைந்த பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு இப்பிரதேச மக்கள் ஒரே மேசையில் ஒன்று கூடி, இதய சுத்தியுடனும், பரந்த மனப்பாங்குடனும், விட்டுக்கொடுப்புடன், புரிந்துணர்வுடனும் பேசித் தீர்த்துக்கொள்ளதன் மூலமே இப்பிரதேசத்தில் இரு சமூகத்தினதும் சமூக ஆரோக்கியத்தைப் பேண முடியும். மாறாக, மக்கள் மன்றங்களில் பேசுவதனாலோ அல்லது ஊடகங்களில் அறிக்கைகளை விடுவதனாலோ இப்பிரச்சினைகளுக்குத் தீர்வை எட்டுவது என்பது கல்லில் நார் உரிப்பதைப்போல் ஆகிவிடும்.
 
கல்முனையும் வரலாறும்
பிரித்தானிய ஆட்சியின்போது கல்முனை நகரை 1869ஆம் ஆண்டு ஒரு நகராகவும் 1940ஆம் ஆண்டு பட்டினசபையாகவும் பிரகடனம் செய்த பின் 1946ஆம் ஆண்டு அதன் முதலாவது தேர்தல் பிரித்தானியரின் ஆட்சியின்போது  நடைபெற்றதாக வரலாற்றுப் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

பிரித்தானியர் கரவாகுவை கல்முனை எனவும் அதன் எல்லையாக வடக்கே தாளவாட்டுவான் வீதிக்கும் தெற்கே கல்முனை ஸாகிறா கல்லூரி வீதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தை வரைபடத்தில் கல்முனை எனக் குறித்து அதன் அந்தஸ்தை 1887ல் சனிட்டரி போட்டாக உயர்த்தினா.; இதுவே  கல்முனைப் பட்டின சபையின் எல்லையாகவும் இருந்தது. இவ்வாறு எல்லை வகுக்கப்பட்டு கல்முனை எனப் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதானது கல்முனை என்பது ஒரு இனத்திற்கான பிரதேசமாகக் கொள்ளத்தகாதது என்பதைப் புரிந்துகொள்ளச் செய்கிறது.

பண்டைய கல்முனையின் நிர்வாக எல்லையானது மூன்று நிர்வாக கிராம சபைகளையும் ஒரு பட்டின சபையையும் கொண்டிருந்தது. கரவாகு வடக்கு, கரவாகு மேற்கு, கரவாகு தெற்கு மற்றும் கல்முனை பட்டின சபை என்பன அவையாகும். கரவாகு வடக்கு கிராம சபை கல்லாறு, துறைநீலாவனை, பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு கிராமங்களைக் கொண்டிருந்தது. இருப்பினும், 1960ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது கல்லாறும் துறைநீலாவணையும் மட்டக்களப்பு மாவட்டத்தோடு இணைக்கப்பட்டன.

கரவாகு மேற்கு கிராம சபை நற்பட்டிமுனை, மணற்சேனை, சேனக்குடியிருப்பு, துரவந்தியன்மேடு, ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாகவும். கரவாகு தெற்கு சபை சாய்ந்தமருது கிராமத்தை உள்ளடக்கியதாகவும் இருந்ததுடன், கல்முனைப் பட்டின சபையின் எல்லையானது கல்முனை சனிட்டரி போட்டின் எல்லையாக அதவாது, தாளவட்டுவான் வீதி முதல் கல்முனை ஸாகிறா வீதி வரையானது என கல்முனையின் வரலாற்றுப் பதிவுகள் சுட்டிக்காட்டுகிறது.

இவ்வாறு பட்டின சபையாக இருந்த கல்முனை 1987ஆம் ஆண்டு பிரதேச சபையாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்கான முதலாவது தேர்தல் 1994ஆம் ஆண்டு இடம்பெற்றது. இதன் பிற்பாடு மாநகர சபையாகத் தரம் உயர்தப்பட்ட பின் 2006ஆம் ஆண்டு இதற்கான முதலாவது தேர்தலும் நடைபெற்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்

1994ஆம் ஆண்டு முதல் களைக்கப்பட்ட மாநகர ஆட்சி வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை உள்ளுராட்சி மன்றத்தின் ஆளும் தரப்பாகவும் தமிழ் கட்சிகள் மற்றும் ஐ.தே.கட்சி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்தரப்பாகவும் இருந்து வந்துள்ளனர்.

பொதுவான விடயங்களில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்குமுள்ள உடன்பாடுகளின் அடிப்படையில் கல்முனையின் இரு சமூகங்கள் தொடர்பில் உள்ள  பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றிக்க முடியும்.

ஆனால், அதற்கான முயற்சிகள் இவ்விரு கட்சிகளுக்குமிடையே இதயசுத்தியோடு மேற்கொள்ளப்படவில்லை என்பதையே இன்றுவரை கல்முனை வாழ் சமூகங்களுக்கிடையில் காணப்படும்; சமூக முரண்பாடுகள் தீர்க்கப்படாமைக்கான காரணமெனலாம்.

கிழக்கு மாகாணத்தில் அமைச்சுக்களைப் பெற்று ஆட்சியமைக்க இரு கட்சிகளும் ஒன்றுபட்டுச் செயற்பட முடியுமென்றால், இம்மாகாணத்தின் கீழ் உள்ள ஒரு உள்ளுராட்சி மன்ற எல்லைக்குள் அதாவது தாளவட்டுவான் வீதி முதல் ஸாகிறா கல்லூரி வீதி வரையான 3 கிலோமீற்றர் தூரத்திற்குள் வாழும் இரு சமூகங்களினதும் பிரச்சினைக்கு ஏன் தீர்வைக் காண முடியவில்லை. இதனால், விட்டுக்கொடுப்புக்களும் புரிந்துணர்வுகளும் சுயநலன்களுக்காக பாவிக்கப்படுகிறதா அல்லது பொதுநலன்களுக்காகப் பாவிக்கப்படுகிறதா என்று மக்கள் கேட்பதில் தவறேதும் இல்லை என்றே கூற வேண்டும்.

கல்முனைப் பட்டின சபையின் தவிசாளராக எம்.எம். இஸ்மாயில் காரியப்பரும் உப தவிசாளராக எஸ் தங்கராசா மாஸ்டரும் பதவி வகித்த குறுகியகாலப்பகுதியில் கல்முனையில் நிலவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு சமூக உறவு பலப்படுத்தப்பட்டதாக வரலாறுகள் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், ஏறக்குறைய 20 வருடங்கள் ஆட்சி செய்த முஸ்லிம் காங்கிரஸினால் கல்முனையில் சமூக உறவை ஏற்படுத்துவதற்கு எடுத்த முயற்சிகள் எவை?. ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் மீது குற்றச் சுமத்தாது செய்த சேவைகள், மேற்கொண்ட அபிவிருத்திப் பணிகள் எத்தகையவை?. இவற்றிற்கு தமிழ் தரப்புகள் வழங்கிய ஒத்துழைப்புகள் எவை?

அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது அதிகாரத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் வளங்களை பயன்படுத்தி பாகுபாடின்றி சேவை செய்கின்றபோது ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் மீது காழ்புணர்ச்சியையோ அல்லது குற்றச்சாட்டுக்களையோ முன்வைக்காது.

மாறாக, அதிகாரங்கள் முறை தவறிப் பயன்படுத்தப்படுமாயின், அதனால் பாதிக்கப்படுகின்ற சமூகம் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்க முடியாது.

இருந்தபோதிலும், ஒரு மொழி பேசும் இரு தனித்துவ சமூகங்கள் என்ற ரீதியில்; கல்முனை வாழ் சாதாரண முஸ்லிம் தமிழ் மக்களுக்கிடையே  நீண்ட காலமாக உறவு இருந்து வருவதையும் மறுக்க முடியாது.

தமிழ் - முஸ்லிம் உறவு

பல்லாண்டு காலமாக கல்முனைப் பிரதேசத்தில் வாழும் இரு பிரதான சமூங்களான முஸ்லிம்களும் தமிழர்களும் மிக ஐக்கியமாக வாழ்ந்து வந்த காலங்களுக்கான வரலாற்றுச் சான்றுகள் இப்போதும் வரலாறாகவுள்ளன.

கல்வி, கலாசார விழாக்கள் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள் என பொதுவான பல விடயங்களில் ஒன்றிணைந்து செயற்பட்ட அந்த பொற்காலங்கள் காலத்தால் மறக்கப்பட முடியாதவை என கல்முனைப் பிரதேசத்தின் முதியோர் கூறுவதைக் கேட்க முடிகிறது.

ஐந்து அல்லது ஆறு தசாப்த காலங்களுக்கு முற்பட்ட காலங்களில் தமிழ் வாத்தியார்களே முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி போதித்துள்ளனர். முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்களாக தமிழ் சமூகத்தைச் சேர்ந்த அதிபர்கள் சேவையாற்றியுள்ளனர். முஸ்லிம்களின் வைத்தியத் தேவையும் தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய வைத்தியர்களினாலேயே அக்காலப்பகுதியில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதேபோன்று, இப்பிரதேச தமிழ் மக்களின் தொழில் மற்றும் வர்த்தகத் தேவைகள் இப்பிரதேச முஸ்லிம்களினால் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு இப்பிரதேசத்தில் இரு சமூகங்களும் பயனடையத்தக்க வகையில் சேவை செய்யததவர்களை நினைவு கூறும் முகமாக கல்முனையில் புகழ்பெற்ற மருத்துவராக இருந்த டாக்டர் முருகேசுப்பிள்ளையின் பெயரை கல்முனையின் வடக்கேவுள்ள வீதியொன்றுக்கு சூட்ட வேண்டும் என்ற பிரரேரனை முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் றியாஸினால் களைக்கப்பட்ட கல்முனை மாநகர சபையில் முன்வைக்கப்பட்டு அப்பிரரேரனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு அப்பெயர் அவ்வீதிக்கு சூட்டப்பட்டது.

இதேவேளை, கல்முனை நகரிலுள்ள சந்தாங்கேணி மைதானத்திற்குச் செல்லும் வீதிக்கு கல்முனை பட்டின சபையின் முதல் தவிசாளர் இஸ்மாயில் காரியப்பரின் பெயர் சூட்டப்பட்டு அது திறக்கப்பட்ட வேளை இவ்வீதிப் பெயர்பலகை உடைத்து சிதைக்கப்பட்டதையும், கல்முனையின் அபிவிருத்தித் தந்தை என வர்ணிக்கப்படும் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் பெயர் கல்முனை பொது நூலகத்திற்கு சூட்டப்;பட்டு இப்பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்ட பின்னர் அதுவும் அடித்து நொருக்கப்பட்டதையும் நினைவுபடுத்துவதும் அவசியமாகவுள்ளது.

 

இப்பிரதேசத்தில் தமிழர்களின் உறவு இல்லாமல் முஸ்லிம்களும் முஸ்லிம்களின் உறவு ஒத்தாசை இல்லாமல் தமிழர்களும் வாழ முடியாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. கல்வி, மருத்துவம், வியாபாரம், சமூக மேம்பாடு பிரதேச அபிவிருத்தி என அன்றாட வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளில் இரு சமூகங்களும் பிண்ணிப்பிணைந்து காணப்படுவதை நிராகரிக்க முடியாது.

இருந்தபோதிலும், கல்முனையின் இரு சமூகத்தினதும் ஒற்றுமைப்பட்ட வரலாறு ஒரு சில காலங்கள் சிதைவடைந்தும் காணப்பட்டது. இருப்பினும், 1990களின் பின்னர் இவ்விரு சமூகங்களிடையேயும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவுக்கு இன ரீதியான சமூகக் காயங்கள் ஏற்படவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்பட்ட விரும்பத்தகாத நிகழ்வுகள் இன ரீதியாக, இப்பிராந்திய சமூகங்களை சிந்திக்கச் செய்தது. இதற்கு பிராந்திய அதிகாரத் தரப்பினரும் ஆயுதம் ஏந்திய இளைஞர்களும் காரணமா இருந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதையும் இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.

கல்முனைப் பிராந்தியத்தில் வாழும் தமிழ,; முஸ்லிம் சமூகங்களை பிரித்தாளுவதற்கும் அவர்களின் ஒற்றுமையைச் சிதைப்பதற்கும் இப்பிராந்தியத்தில் பேரினவாதம் எடுத்த பல முயற்சிகள் தோற்றுப் போன போதிலும், ஒரு சில முயற்சிகளில் வெற்றி கண்டது. அவற்றில் ஒன்றுதான் இப்பிராந்தியத்தில் இன ரீதியாக பாடசாலைகள் உருவாக்கப்பட்டதும் பிரதேச செயலகம் இன ரீதியாகத் தோற்றுவிக்கப்பட்டதுமான கசப்பான நிகழ்வுகளாகும்.

இப்பிராந்தியத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் இனவுறவில் விரிசலை உருவாக்க பிரதேச செயலகப் பிரிப்பை கருவியாக, ஆயுதமாக  பேரினவாதம் பயன்படுத்த முனைந்துள்ளது. இன்றும் அது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவற்றை ஊக்குவிக்கும் குரல்; ஆங்கங்கே எதிரொலிக்கப்படுகின்றபோது அவற்றிற்கு எதிராக அல்லது அக்குரல்களுக்கு சமாந்திரமாக கருத்துக்களும் வாதப் பிரதி வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன இவ்வாறான கருத்துக்களும் வாதப் பிரதிவாதங்களும் சும்மாயிருந்த சங்கை ஊதிக்கெடுத்த நிலையை உருவாக்கி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

எவ்வாறான கருத்துக்கள் எங்கு ஒலித்தாலும் கல்முனைப் பிரதேசத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண இப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களும் அவர்களது பிரதிநிதிகளும் தமிழ் மக்களும் அவர்களது பிரதிநிதிகளும்; விட்டுக்கொடுப்புடனும்,புரிந்தணர்வுடனும் கூடிய மனப்பாங்குடன் ஒரே மேசையில் அமர்ந்து இதயசுத்தியுடன் பேசித் தீர்வைப் பெற வேண்டும் என்பதே சமூக ஒற்றுமையையும் சகவாழ்வையும் விரும்பும் மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. அவை கல்முனைப் பிராந்தியத்தில் சமூகங்களுக்கிடையே காணப்படும் சமூகக் காயங்களைக் குணப்படுத்தி ஆரோக்கியமான சமூக உறவை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
சும்மாயிருக்கும் சங்கை ஊதிக்கெடுப்பதேனோ? சும்மாயிருக்கும் சங்கை ஊதிக்கெடுப்பதேனோ? Reviewed by Madawala News on 9/22/2016 11:19:00 PM Rating: 5