Friday, September 16, 2016

நன்றிக் கடன் தீர்ப்பார்களா?

Published by Madawala News on Friday, September 16, 2016  | 


ஒரு சமூகத்தின் எழுச்சி நோக்கிய பயணத்திற்கும்,  வீழ்ச்சி நோக்கிய நகர்வுக்கும் காரணமாக அமைவது  ஆன்மீக, அரசியல் ரீதியில் அச்சமூகத்திற்கு தலைமை வகிக்கும்; தலைவர்களின் வழிகாட்டல்கள்தான்.

தலைவர்களின் முறையான, செயல் திறன் மிக்க வழிகாட்டல்களே சமூகத்தின் வளர்ச்சியில்; செல்வாக்குச் செலுத்தும் சமூகக் கட்டமைப்புக் கூறுகளின் விருத்திக்கு காரணமாக அமைகிறது. சமூக மட்டத்தில் உள்ள துறைகளுக்கு துறைசார்ந்த தலைவர்கள் தலைமைத்துவம் வழங்கினாலும், அச்சமூகத்தின் சார்ப்பில் அரசியல் துறையில் தலைமைத்துவம் வழங்கும் தலைவர்களின் செயற்பாடுகளும், தீர்மானங்களும் அச்சமூகத்திற்கு நன்மையளிக்கக் கூடியதாக அமைவது அவசியம்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முஸ்லிம் அரசியலை நோக்குகின்றபோது, 1948 முதல் 1980 வரையான காலப்பகுதியில் காணப்பட்ட   அரசியலும் 1980களின் பிற்பகுதி முதல் தற்போது வரை காணப்படும் அரசியலும் வௌ;வேறான படிமங்களைத் தாங்கி நிற்கிறது.

இருப்பினும், 1980களின் பின்னர் முஸ்லிம் அரசியலில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட அரசியல் புரட்சிக்கு வித்திட்டவர் மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் என்பதை மறுதளிக்க முடியாது.

1948ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி சம்மாந்துறை மண்ணில் பிறந்த அஷ்ரப் 2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி சமூகத்தின் பல கனவுகளோடு விண்ணில் பறக்கையில் மாவனல்ல அரநாயக்க வான்பரப்பில் அகலா மரணத்தைத் தழுவினார்.
தான் அங்கம் வகிக்கும் சமூகத்திற்காக மாத்திரமின்றி முழு சிறுபான்மை சமூகத்திற்காகவும் குரல் கொடுக்கும் தலைமையாக விளங்கிய அஷ்ரப் மரணத்தை எதிர்பார்த்தவராகவே அரசியல் பயணத்தை நகர்த்திச் சென்றார். அதைத் தனது 'போராளிகளே புறப்படுங்கள்' என்ற கவிதை வரிகளால் தனது மரணம் இவ்வாறுதான் அமையும் என்று மரணிக்கும் முன்னமே உறுதிப்படுத்தினார். தான் இவ்வாறுதான் மரணிப்பேன் என்பதை மரணிக்கும் முன்பே வெளிப்படுத்திய ஒரு தலைவரும் அஷ்ரப்தான்.மரணத்தை அஞ்சாது பதவிகளுக்கும் பஞ்சோந்திகளுக்கும் சோரம் போகாது சமூகத்தின் எதிர்கால கனவுகளை வெற்றி கொள்ளும் பயணத்தை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் முன்னெடுத்தார். அரசியல் அடையாளம் இன்றி அநாதைகளாக்கப்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலம் எத்தகையது என்பதை பெரும்பான்மைக் கட்சிகளுக்கு புடம்போட்டும் காட்டினார். வெற்றிகள் பலவற்றையும் அந்த ஆளுமை கண்டது.

அஷ்ரபின் பன்முக ஆளுமை கொண்ட தலைமைத்துவ அரசியல் வழிகாட்டல்களும், செயற்பாடுகளும், தீர்மானங்களும் முஸ்லிம் சமூகத்தில் அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியது.  அதுமாத்திரமின்றி, முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகளுக்கான உரிய அந்தஸ்தை தேர்தல் காலங்களில் பெற்றுக்கொடுத்தது. ஆட்சி மாற்றங்களுக்கான சக்தியாகவும் அந்த வாக்குகள் மாற்றப்பட்டன. இத்தiனைக்கும் ஆளுமைமிக்க அஷ்ரபின் அரசியல் தலைமைத்துவம் வழிவகுத்தது.

அவ்வாறு அஷ்ரப் எனும் ஆளுமையின் பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் விருட்சமாக வளர்க்கப்பட்ட கட்சி இன்று அதன் முகவரி தெரியாதவர்களின் கூடாராமாகக் காட்சியளிப்பது அவருக்காகவும் கட்சிக்காகவும் பல்வேறு தியாகங்கள் புரிந்த அவரது அபிமானிகளின் இதயப் பரப்புக்களை வேதனையால் நனைத்துக்கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.
ஆளுமைமிக்க தலைமைத்துவம்

தூரநோக்கோடு ஒன்றை உருவாக்கி அதை அடைவதற்கான செயல் நுணுக்கத்தை விருத்தி செய்து, ஏனையவர்களின் ஆதரவைத் திரட்டி, தூரநோக்கை அடைந்து கொள்வதற்கான செயற்பாட்டை ஊக்கப்படுத்தி. அதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை  1982 ஆண்டு உருவாக்கி அதனை 1988ஆம் ஆண்டு அரசியல் கட்சியாகப் பதிவு செய்தார் அஷ்ரப்.

இக்கட்சியை 12 வருடங்கள் வழிநடத்தியதன் மூலம் அவரது 12 வருட அரசியல் பயணத்தில் அவரின் செயல் திறன் மிக்க தலைமைத்துவ ஆளுமையினால் சாதித்தவை ஏராளம். அவர் முன்னெடுத்த செயற்பாடுகளை வெற்றிபெறச் செய்தது, அவரிடம் காணப்பட்ட செயல் திறன் மிக்க பன்முக ஆளுமை கொண்ட தலைமைத்துவ பண்புகளாகும்.

ஒரு செயல் திறன் மிக்க தலைவர் எதிர்காலம் பற்றிய தூர இலக்கை உருவாக்குவார். அத்தூர இலக்கை நோக்கி இயங்குவதற்கான அறிவுபூர்வமான செயல் உபாயங்களை விருத்தி செய்வார். அவ்வாறு இயங்குவதற்கு அவசியமாகின்ற ஆதரவையும் இணக்கத்தையும் குழு முயற்சியை வழங்கக் கூடிய மிக முக்கியமான அங்கத்தினர்களின் ஒத்துழைப்பையும் திரட்டுவார். அவற்றுடன் செயல் உபாயங்களை அமுல்படுத்தும் விடயத்தில் பங்குகொண்டு தொழிற்படக் கூடிய நபர்களை நல்ல முறையில் ஊக்கப்படுத்துவார்.

இவ்வாறன பண்புகள் பலவற்றை மறைந்த அஷ்ரப் கொண்டிருந்தனால் அவரையும் கட்சியையும் ஏற்று நாளுக்கு நாள் அபிமானிகள் ஆதரவாளர்கள் அவர் பக்கம் திரண்டனா.அதற்கான வரலாற்றுச் சான்றுகளாக நிழற்படங்களும் காணொலிகளும் இப்போதும் காட்சிகளாக உள்ளன. அக்காட்சிகள் முஸ்லிம் அரசியல் கட்சிகளினால் காலத்திற்குக் காலம் நடைபெறும் தேர்தல் காலங்களில் காண்பிக்கப்படுவதையும் அதைக் கண்டு அவரது அபிமானிகள் கண்கலங்குவதையும் வாக்குகளை அள்ளி வழங்குவதையும் காணமுடிகிறது.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ள வேண்டிய விடயங்களை நிர்ணைத்து, ஒழுங்குபடுத்தி, அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றத் தேவையான திட்டங்களை வகுத்து, அத்திட்டங்களைச் செயலுருப்படுத்த தம்மோடு இணைந்திருக்கும் பலரையும் ஆர்வத்தோடு பங்குகொள்ளச் செய்வதற்கும், குறித்த திட்டங்களைச் செயற்படுத்தும்போது அல்லது மேற்கொள்ளும்போது ஏற்படக் கூடிய முரண்பாடுகள், பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெறக் கூடியவராகவும் தலைவர் அல்லது தலைமைத்துவம் இருக்க வேண்டும். இத்தகைய தலைமைத்துவத்துக்கான அடிப்படைத் தகைமையை மறைந்த தலைவர் அஷ்ரப் கொண்டிருந்தார். அதனால்தான், இன்றுவரை அவரின் தலைமைத்துவ வழிகாட்டல்களையும் அவரால் சமூகம் அடைந்த நன்மைகளையும் அபிமானிகளால் மறக்க முடியாமல் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வற்புறுத்தல், வலுக்கட்டாயமில்லாத வழிகளினூடக மக்களைச் செயற்பட ஊக்குவிப்பதன் மூலம் ஒரு திட்டமிட்ட திசையில் நகர்த்திச் செல்லும் செயல்முறை கொண்ட தலைமைத்துவத்தினால் நீண்டகால, குறுகிய கால நோக்கங்களை அடைய முடியும். அதன் அடிப்படையில் பல குறுகிய கால செயற்றிட்டங்களில் வெற்றி கண்ட அஷ்ரப் நீண்ட கால செயற்றிட்டங்கள் பலவற்றையும் வகுத்துச் செயற்பட்டார். அதில் ஒன்றுதான் 2012ஆம் ஆண்டை நோக்கி என்ற அடிப்படையில் தேசிய ஐக்கிய முன்னணி என்ற அரசியல் கட்சியை புறாச் சின்னத்தில் ஸ்தாபித்து அதில் அனைத்து இனங்களையும் இணையச் செய்ததாகும்.

1998ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணி குறித்து 1999ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது மறைந்த தலைவர் அஷ்ரப் பாரளுமன்றத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அதவாது, 'முஸ்லிம் காங்கிரஸ் பார்வையில் மனித இனமும் அனைத்து ஸ்ரீலங்கா மக்களும் ஒரு குடும்பமே. எல்லாம் வல்ல இறைவனின் படைப்புக்களே நாம் அனைவரும். நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு குறுகிய பாதைகள் இல்லை என்பதை நாங்கள் திடமாக நம்புகிறோம். அது மலர்கள் இல்லாத முட்கள் நிறைந்த  நீண்ட கஷ்டமான பாதையாகும். நாட்டில் புரையோடிப் போயிருக்கும் சில பிரச்சினைகளுக்கு  விடைகாண்பதில் காங்கிரஸ் வெற்றி கண்டுள்ளது.

ஐக்கியத்தையும் ஒருங்கிணைப்பiயும் பிரதிபலிக்கும் பொருட்டு மூன்று நிறங்களையும் தேசியக் கொடியில் சந்திக்கச் செய்துள்ளோம். மூன்று சமூகங்களையும் கொண்டதாக ஒற்றுமைப்பட்ட மக்களின் நிறம்  ஒன்றையும் கண்டெடுப்பதில் நாங்கள் வெற்றி பெற்றோம். அதுதான் சிவப்பும், கருமஞ்சலும் பச்சையும் கூட்டுச் சேர்ந்த நிறமாகும். நிறம் சம்பந்தமாக அரசியல் கட்சிகளால் ஏற்படுத்தப்பட்ட கட்டுக்கதைகளை அறிந்து வானவில்லின் ஏழு அழகிய நிறங்களையும் கொண்ட தேசிய ஐக்கிய முன்னணி கொடியை ஏற்றியுள்ளோம். இறைவன் நாடினால் 2012ஆம் வருடமளவில் நமது மக்கள் அனைவருக்கும் சமாதானம் கிடைக்கும் வகையில் தொழில்படுகின்றோம்'. இவ்வாறு அவர் அன்று ஆற்றிய உரையானது எதிர்கால இலங்கையின் சமாதானத்தை அடைவது குறித்த தூர நோக்கை வெளிப்படுத்தியதாக அமைந்திருந்ததை சமகாலத்தில் சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும்.

தலைவர்கள், உண்மைத்தன்மை, நன்பகத்தன்மை, தூரநோக்குச் சிந்தனை, தொடர்பாடல் திறன், ஏனையவர்களுடன் சுமுகமான உறவு, செல்வாக்குச் செலுத்தும் தன்மை, நெகிழ்வுத் தன்மை, தீர்மானிக்கும் ஆற்றல், திட்டமிடல். கலந்துரையாடல் போன்ற பண்புடையர்வளாக இருத்தல் அவசியம.; அவ்வாறன தலைமைத்துவ குணாதிசயங்கள் பல அஷ்ரபிடம் காணப்பட்டதனாலும் அவற்றினால் அவர் மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தலைவராகத் திகழ்ந்ததனாலும்; அவர் மறைந்து இன்றுடன் 16 வருடங்கள்; கடந்தும் கூட அவரை அபிமானிகளால் மறக்க முடியாதுள்ளது.

ஆனால், அவர் கண்ட தேசிய ரீதியிலான தூர நோக்குகளும் சமூக ரீதியிலான எதிர்கால எதிர்பார்ப்புக்களும் அவரது பாசறையில் வளர்ந்தவர்களாலும் பயிற்றப்பட்டவர்களாலும்  அனுபவப்பட்டபவர்களாலும் அவரது மரணத்தோடு மறக்கப்பட்டுவிட்டனவா என்ற கேள்வி கடந்த 16 வருடங்களாக அவரது அபிமானிகளால் எழுப்பப்பட்டு வருகின்றன.

தேசிய நீரோட்டதில் மக்களை இணைத்து அதன் மூலம் நிரந்தர சமாதானத்தை இந்நாட்டில் ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணி கடந்த ஆட்சியாளர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக கலைக்கப்பட்டதன் மூலம் அஷ்ரபின் தேசிய ரீதியிலான தூரநோக்கு சிந்தனை சிதைக்கப்பட்டது. ஒன்றுதிரட்டப்பட்ட சக்தியின் மூலம் இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் உரிமைகள் அடங்களாக அத்தனை தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அவரது பாசறையில் வளர்;ந்தவர்களினால்  உடைக்கப்பட்டதன் மூலமும் இலக்குகள் இல்லாதவர்கள் அல்லது சமூக இலக்குகளை வகுத்து செயற்படத் தெரியதவர்கள் அவர் வளர்த்து விருட்மாக்கிய கட்சிக்குள் இணைக்கப்பட்டதன் ஊடாக அவரது சமூகம் தொடர்பான எதிர்கால சிந்தனையும் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.

இத்தனையையும் செய்தவர்கள் அவரது செயல் திறன்மிக்க தலைமைத்துவ வழிகாட்டலினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்காக முஸ்லிம் காங்கிரஸ் மூலமும் தேசிய ஐக்கிய முன்னணியின் மூலமும் நன்மையடைந்தவர்கள் என்பதை அஷ்ரபினால் எவ்வித நலன்களையும் அடையாது அவரை சமூகத்தின் அரசியல் தலைமை என விசுவாசித்து இன்றுவரை நினைவுபடுத்தும் அபிமானிகள் கூறுவதை மறுக்கமுடியாது..

தலைமைகளும் அபிமானிகளும்

தலைவர்கள் உருவாகுவதில்லை உருவாக்கப்படுகிறார்கள் என்று ஒரு சாராரும் தலைவர்கள் காலத்திற்குக் காலம் பிறக்கிறார்கள் என்று மற்றுமொரு சாராரும் கருத்தியல் முரண்பாட்டில் அன்று முதல் இன்று வரை உள்ள நிலையில், தலைவர்கள் உருவானாலோ அல்லது உருவாக்கப்பட்டாலோ அவர்கள் மக்கள் விரும்பும,; மக்களுக்காகச் செயற்படும் தலைவர்களாக மிளிர்வது காலத்தின் தேவையாகும். அத்தலைவர்களின உண்மையான அபிமானிகளின் விரும்பமும் அதுவாகத்தான் இருக்கும்.

ஒரு கட்சியின் உருவாக்கம் ஒரு தனி மனிதனாலேயே முதன் முதலில் அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது உண்மைதான் ஆனால் அவ்வாறான ஒரு கட்சி ஒரு தனி மனிதன் அல்ல.'ஒரே நோக்குள்ள பல மனிதர்கள் ஒரே சிந்தனையுடைவர்களாக ஒரு மித்து ஊக்கத்தோடும் விடாமுயற்சியோடும் தியாகத்தோடும் உழைக்கும்போதுதான் அந்தக் கட்சி பல கிளைவிட்டு படர்ந்து செல்கிறது.

நல்லெண்ணமும் தீர்க்கதரிசனமும் சரியான செயல்பாடும் இடையறாத இயக்கமும், காலதேச வர்த்தமானங்களை அனுசரித்த போக்கும், இலட்சியங்களை அடைவதற்கான உறுதியும் இன்னல்களையும் இடையூறுகளையும் தோல்விகளையும் கண்டு சலிப்புறாத மனமும் அங்கத்தவர்களிடையே பொது நோக்கங்களின் பேரில் ஒற்றுமையும். கூட்டு முயற்சியும், எதிரிகளினதும் சதிகாரர்களினதும் தந்திரோபாயங்களை, அடையாளம் காணும் சாமத்தியமும், சூழ்ச்சிகளை சுமுகமாக முறியடித்து முன்னேறும் சாணக்கியமும். எடுத்த கருத்தை முடித்து வைக்கும்  ஆத்ம பலமும், இறை நம்பிக்கையும், முன்னோடிகளான நல்லடியார்களின் மீது நேசமும் பற்றும் இருக்குமானால் நமது கட்சி (முஸ்லிம் காங்கிரஸ்) நிச்சமாக தனது பாதையிலும் பயணத்திலும் பரிபூரண வெற்றியை அடையும் என்பதை நான் உங்களுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்' என இற்றைக்கு 27 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் 6வது மகாநாட்டில் உரையாற்றும்போது மறைந்த தலைவர் அஷ்ரப் குறிப்பிட்டிருந்தார்;.

ஒரு கட்சியின் வெற்றிக்கு எத்தகைய செயற்பாடுகள், பண்புகள் அவசியம் என்பதை மறைந்த தலைவர் 27 வருடங்களுக்க முன்னரே கூறிச் சென்றுள்ளார். ஆனால், அவர்  கூறிய விடயங்களில் எவை முஸ்லிம் காங்கிரஸினாலும் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற கட்சிகளினாலும் கடைபிடிக்கப்படுகிறு என்ற கேள்வியும் அஷ்ரபின் அபிமானிகள் மத்தியில் 27 வருடங்களின் பின்னர் எழுந்துள்ளது.

ஒரு தூர நோக்கை இலக்காகக் கொண்டுதான் மறைந்த அஷ்ரபினால் முஸ்லிம்களுக்கான கட்சி உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த இலக்கு நோக்கிய பயணம் அவரது மரணத்துடன் திசைமாற்றப்பட்டுள்ளது. மறைந்த தலைவர் அஷ்ரபிற்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக வேண்டியாவது அவர் கொண்டிருந்த தேசிய மற்றும் சமூக ரீதியிலான  இலக்குகளை அடைவதற்கு இன்றைய முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் முயற்சி செய்கின்றனவா? அல்லது இலக்குகளின்றி பயணிக்கின்றனவா என்ற கேள்விகளும் அஷ்ரபின் அபிமானிகளால் கேட்கப்படுகிறது.

அஷ்ரபின் தேசிய மற்றும் சமூக ரீதியலான இலக்கை அடையாது அல்லது அடைய மறந்த முஸ்லிம் கட்சிகளின் தலைமமைகள் அந்த பெரும் தலைவர் மரணித்த இந்த செப்டம்பர் 16ல் இருந்தாவது அவர் சிந்தனையில் மலர்ந்திருந்த தேசிய சமாதானத்தை அடைவதற்கும் முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் பிரச்சினைகளுக்கான தீர்வை உரிய தரப்புக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கும் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும.;

இந்த ஒருமைப்பாடு அப்பெரும் தலைவருக்குச் செலுத்தும் நன்றிக் கடனாக அமையுமென்பதே அஷ்ரப் அபிமானிகளின் அபிலாஷையாகவும் எதிர்பார்ப்பாகவுமுள்ளது.இந்த எதிர்பார்ப்பை முஸ்லிம் தலைமைகள் நிறைவேற்றுமா? அல்லது முஸ்லிம்கள் ஆளுமையுள்ள அரசியல் தலைமையொன்றை உருவாக்கும் பயணத்தை தொடங்குவார்களா என்ற கேள்விகளுக்கு எதிர்காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top