Oceas

கலுகமுவ முஸ்லிம்களின் காணிகளுக்கு காணி உறுதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை...


-எம்.எம்.எம். ரம்ஸீன்-
கலுகமுவ முஸ்லிம்களின் காணிகளுக்கு காணி உறுதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

கெலிஓயா கலுகமுவ முஸ்லிம் குடியிருப்பில் கடந்த அறுபத்தைந்து வருடங்காளக வசித்து வரும் குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதிகள் பெற்றுக் கொள்வதில் கடந்த முப்பது வருடங்களாக இழுபறி நிலை நிலவி வருகின்றது. இதனால் இக்காணிகளில் வசிக்கும் குடும்பங்கள் தாம் வசிக்கும் காணிகளை தமது பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் முடியாத நிலை காணப்படுகின்றது.  

கம்பளை உடபலாத்த பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எப்.எம் முனாசிரீன் தலைமையிலான குழுவினர் அண்மையில் அமைச்சரை சந்தித்;து காணிப்பிரச்சினை தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்த போது அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

கலுகமுவ முஸ்லிம்கள் அரசாங்கத்தினால் 1947 களில் வழங்கப்பட்ட காணிகளில் வசித்து வருகின்றனர் இக்காணிகளில் சில காணிகளுக்கு கடந்த அரசாங்கத்தினால்  காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அதிகளவு காணித்துண்டுகளுக்கு  இதுவரை எதுவித உறுதிகளும் வழங்கப்படாமை பெரும் அநீதியாகும்.

எனவே இது தொடர்பாக பிரதியமைச்சர் அநுராத ஜயரட்ணவுடன் நடவடிக்கைகளை முன்னெடுத்து காணித் துண்டுகளுக்கு காணி உறுதிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  
இது தொடர்பாக குடியிருப்பாளரொருவர் குறிப்பிடுகையில், கடந்த காலங்களில் இக்காணிகளுக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கு பல இலட்சக்கணக்கான பணத்தை செலுத்துமாறு உடபலாத்த பிரதேச செயலகத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக  குடியிருப்பாளர்கள் பணத்தை செலுத்த முடியாத நிலையில் ஆட்சேபனைகளை ஜனாதிபதி பிரதமர் உட்பட அமைச்சர்களின் கவனத்திற்குக்  கொண்டு வந்தனர். ஆயினும் பின்னர் இக்காணிகளுக்கு காணி உறுதிகள் வழங்குவதற்குவதற்கான நடவடிக்கைகள் மிகவும் மந்த கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் காணிகளை பதிவு செய்து உறுதிகளை வழங்கும் பிம்சவிய முதலான  திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் எமது தேவைகள் நிறைவேறவில்லை என்றார்.
 
கலுகமுவ முஸ்லிம்களின் காணிகளுக்கு காணி உறுதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை... கலுகமுவ முஸ்லிம்களின் காணிகளுக்கு காணி உறுதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை... Reviewed by Madawala News on 9/03/2016 08:57:00 AM Rating: 5