Kidny

Kidny

யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை மிகவும் நிதானத்தோடு கையாள்கின்றேன்.


யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை மிகவும் நிதானத்தோடு கையாள்கின்றேன். 

இன்று 4 செப்டம்பர் 2016 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் ஜே 87 மற்றும் ஜே88 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கான “மக்கள் சந்திப்பு” நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2010ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 6 வருடங்களாக நான் எமது மக்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளில் நான் கவனம் செலுத்தி வருகின்றேன், இதற்கு நீங்கள்தான் சாட்சியாக இருக்கின்றீர்கள், எமது மக்களை உணர்சிவயப்படுத்தி வழிநடாத்த நான் விரும்பவில்லை; ஏன் எதற்கு என்ற விளக்கத்தோடு மக்கள் எங்களைப் பின் தொடரவேண்டும் என்பதுவே எனது விருப்பமாகும். இதனை நீங்கள் நன்கு புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றோம். 

எமது மக்களின் மீள்குடியேற்றத்திலே இருக்கின்ற மிகப்பிரதானமான தடை அவர்களுக்கான அரசியல் தலைமைத்துவம் யார் என்பதுதான். அதனை நாம் தீர்மானிக்க வேண்டும். எம்முடைய தேவைகள், எம்முடைய பிரச்சினைகள், எமக்கான தீர்வுகளை பாராளுமன்றத்திலே அல்லது உரிய அமைச்சு மட்டங்களிலே முன்வைப்பதற்கு எவரும் இல்லை என்ற சூழ்நிலை இருக்கின்றது. இவ்வாறான சூழலில் எமக்கான பாராளுமன்றப் பிரதிநிதி யார்? என்ற கேள்வி எமக்கு முன்னால் வருகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள், அவர்கள் அனைவரும் எமது மக்களுக்காக குரல் கொடுக்க முன்வரக்கூடும், ஆனால் நான் சார்ந்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு 5பாராளுமன்றப் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள், அவர்கள் ஊடாக எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நான் முயற்சிக்கின்றேன். இதனைத் தவறு என்று ஒரு சிலர் அர்த்தம் கற்பிக்க முயல்கின்றார்கள்.

முஸ்லிம் சமூகத்திலே பல பராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள், அவர்கள் தமக்கான அதிகார எல்லைகளைக் கொண்டிருக்கின்றார்கள். அமைச்சர் றிசாத், அமைச்சர் ஹக்கீன், பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் போன்றவர்கள் எமது மக்களுக்காகப் பேச முடியும்; ஆனால் குறிப்பிட்ட மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களால் மாத்திரமே தீர்மானங்களை அதிகாரபூர்வமாக நிறைவேற்ற முடியும்; இதனை நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும். அன்று நடைபெற்ற மீள்குடியேற்றத்திற்கான நடமாடும் சேவையை நானே ஏற்பாடு செய்தேன் என்று ஒரு சந்தர்ப்பத்திலும் நான் கூறியதில்லை; அது யாழ் முஸ்லிம் சமூகத்தின் எல்லா தரப்பினருடையதும் பங்களிப்போடு இடம்பெற்றது. அங்கு என்னுடைய அழைப்பின்பேரில் யாழ்ப்பாண மாட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களுள் ஒருவரான அண்ணன் கௌரவ மாவை சேனாதிராஜா அவர்கள் பங்கேற்றார்கள், இதனை சிலர் விமர்சித்தார்கள், ஆனால் அவருடைய வருகை பல நன்மைகளை எமக்குப் பெற்றுத் தந்ததுள்ளது. அங்கு 250ற்கும் அதிகமான அதிகாரிகள் இருந்தார்கள், அந்த அதிகாரிகளின் தலைவராகவே தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களுடைய வருகை அமைந்திருந்தது.  

அவர் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். எமது மக்களின் பிரச்சினைகளை அமைச்சர் றிசாத் முன்வைத்தாலும், அமைச்சர் ஹக்கீம் முன்வைத்தாலும் அதனை நடைமுறைப்படுத்துகின்ற யாழ் மாவட செயலகம் மற்றும் அதன் அபிவிருத்தி ஒருங்கிணைப்புத் துணைத் தலைவர் என்ற ரீதியில் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களுடைய பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானதாகும். இதனை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பது எனது வேண்டுகோலாகும்.

வீட்டுத்திட்டம், காணியற்றோரது பிரச்சினைகள், வாழ்வாதாரம், போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து நாம் தீவிர கவனம் செலுத்துகின்றோம். இவை தொடர்பான விளக்கங்களை வழங்குவதே இன்றைய சந்திப்பின் நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.

அத்தோடு யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை சீரழிப்பதற்காக, எமது மக்களை வைத்து வாக்குவேட்டை அரசியல் செய்வதற்கு ஒருசில கனவு காண்கின்றார்கள், நான் மிகவுமே நிதானமாக செயற்படுகின்றேன், அன்றைய ஆர்பாட்டத்திலே பங்கேற்ற ஒரு சிலர் இன்று இந்த மக்கள் சந்திப்பிற்கு வந்திருக்கின்றீர்கள்; உங்களது தவறை நீங்களே உணர்ந்து ஏற்றுக்கொண்டுள்ளீர்கள், இவ்வாறான தவறுகள் இனிவரும் காலங்களில் நடக்காது; மக்கள் மிகவும் நிதானமாக, உணர்ச்சியூட்டல்களுக்கு அடிபணியாது இருந்தால் அதுவே சிறப்பானது. என்றும் தெரிவித்தார். மேற்படி சந்திப்பில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

தகவல்; என்.எம்.அப்துல்லாஹ்

யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை மிகவும் நிதானத்தோடு கையாள்கின்றேன். யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை மிகவும் நிதானத்தோடு கையாள்கின்றேன். Reviewed by Madawala News on 9/04/2016 11:49:00 PM Rating: 5