Tuesday, September 20, 2016

கொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் நடவடிக்கையை உடன் கைவிடுங்கள்..

Published by Madawala News on Tuesday, September 20, 2016  | 

-ஊடகப்பிரிவு-

புத்தளம் தொகுதியில் அமைந்துள்ள நுரைச்சோலையில் அனல் மின்சாரத்தை அமைத்து கடந்த அரசாங்கம் அங்கு வாழ்ந்து வரும் மக்களை துன்பத்துக்குள்ளாக்கியது போல இந்த அரசாங்கமும் கொழும்பில் கொட்டப்படும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு போய் அந்த மக்களை தொடர்ந்தும் துன்பத்திற்கு உள்ளாக்கக் கூடாதென்று பாராளுமன்றத்தில்  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.

எத்தனையோ தொகுதிகளையும் மாவட்டங்களையும் தாண்டி, கொழும்பில் சேரும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு சென்று அங்கு கொட்டும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும் அவர் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் (20) அவர் உரையாற்றினார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை அந்த மக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் ஜனநாயக ரீதியான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியிலும் கடந்த அரசாங்கம் நிறுவியதால் புத்தளம் மக்கள் படுகின்ற வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்கள் அதனை இன்னுமே அனுபவிக்கின்றனர்.

இதனால் அந்தப் பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் பயிர்ச்செய்கை, காய்கறிச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டம் யுத்தத்தின் விளைவுகளால் நேரடியாக பாதிக்கப்பட்ட பிரதேசம்.

1990 ஆம் ஆண்டு வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் ஒரு இலட்சம் மக்களை இன்று வரை தாங்கிக்கொண்டிருக்கும் பூமி புத்தளம் மாவட்டம். இதனால் அந்த மக்கள் அனுபவிக்க வேண்டிய வளங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொழில் ரீதியிலும், கல்வித்துறையிலும், சுகாதாரத்துறையிலும் மற்றும் இன்னோரன்ன துறைகளிலும் அவர்கள் பாதிப்புற நேரிட்ட போதும் அதனையும் தாங்கிக் கொண்டு, அகதி மக்களின் மனங்களை ஒரு நாள் கூட புண்படுத்தாது அங்கு அகதிகளுடன் ஒற்றுமை பேணி வருகின்றனர். அதனை நாங்கள் நன்றியுணர்வோடு நோக்குகின்றோம்.

கடந்த 26 வருடங்களாக புத்தளம் தொகுதிக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பற்றி இரண்டு பெரும்பான்மைக்கட்சிகளும் அலட்டிக்கொள்ளவில்லை. அதனைக்கருத்திற்கெடுக்கவுமில்லையென்பதை நான் இங்கு வேதனையுடன் கூற விரும்புகின்றேன்.

நேற்று (19) புத்தளத்தின் "சைலன்ட் வொலன்டியர்ஸ்" என்ற அமைப்பினர் என்னை வந்து சந்தித்து "ஜனாதிபதியையும் இந்த அரசாங்கத்தையும் உருவாக்குவதற்கு அதிக பட்ச ஆதரவைத்தந்த புத்தளம் தொகுதி மக்களுக்கு நீங்கள் ஏன் இந்த அநியாயம் செய்கின்றீர்கள்?" என என்னிடம் கேட்ட போது எனக்குக் கூறுவதற்கு பதில் ஏதும் இருக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் நவவி எம் பியும் எனது கட்சி அமைப்பாளர் அலிசப்ரி மற்றும் முஹ்சி ஆசிரியரும் உடன் இருந்தனர்.  

அந்த அமைப்பினர் இது தொடர்பில் எனக்கொரு மகஜரையும் கையளித்து குப்பை கொட்டும் பிரதேசமாக புத்தளம் மாற்றப்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புக்களை விரிவாக எடுத்துரைத்தனர்.

யுத்த முடிவின் பின்னர் இதுவரை எந்த நன்மைகளும் கிடைக்கப்பெறாத புத்தளம் தேர்தல் தொகுதியில் தொடர்ந்தும் பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாதென நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

இவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டால் மீன்பிடி வாழ்வாதாரத்தை நம்பியிருக்கும் 20000 பேர் நேரடியாக பாதிக்கப்படுவர். புத்தளத்திலுள்ள 4 உப்பளங்களில் இலங்கையின் தேவைக்கு 40% ஆன உப்பு பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் இதன்மூலம் வருவாய் பெறும் ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்படைவர் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதே போன்று 16000 ஏக்கரில் விவசாயச்செய்கையும் 600 ஏக்கரில் இறால் செய்கையும் பாதிப்புறும் என்பதையும் இந்த உயர் சபையில் நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.

எனவே இவ்வாறான முயற்சிகளை இனியும் முன்னெடுக்க வேண்டாமென கோருகின்றேன்.

கடந்த 19ஆம் திகதி முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, ஒட்டு சுட்டான் ஆகிய பிரதேசங்களில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை நாம் நடாத்திய போது ஏழைத்தாய்மார்களும் வயோதிபத்தந்தைகளும் உறவுகளை இழந்த குடும்பங்களும் கண்ணீர்மல்க பதாதைகளை தாங்கிக் கொண்டு மிகவும் வேதனையுடன், "இருப்பதற்கேனும் ஒரு வீடு தாருங்கள்" என கோஷம் எழுப்பினர்.

இது தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி சிவமோகன், திருமதி சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா, காதர்மஸ்தான், சிவசக்தி ஆனந்தன் மற்றும் நான் அவர்களை ஆசுவாசப்படுத்தி, கொழும்புக்குச் சென்று பிரதமரையும் அமைச்சர் சுவாமிநாதனையும் சந்தித்து நல்ல முடிவொன்றை பெற்றுத்தருவோமல என உறுதியளித்துவிட்டு வந்தோம். 

வீடில்லாப் பிரச்சினை வட மாகாணத்தில் அத்தனை மாவட்டங்களிலும் இருக்கின்றது. மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் ஒருமித்து செயற்படுவதன் மூலமே பல்வேறு பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட முடியும். இரண்டு தரப்பும் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டுக் கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல என்றும் அமைச்சர் கூறினார்.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top