Kidny

Kidny

அமைச்சர் மனோவின் கருத்துக்கு உலமா கட்சி கண்டனம்...


இனி வரும் காலங்களில் அரச ஊழியர்கள் சிங்களம், தமிழ் இரண்டு மொழிகளிலும் சித்தியடைந்திருக்க வேண்டும் என்ற அமைச்சர் மனோ கணேசனின் கருத்தை முஸ்லிம் உலமா கட்சி வண்மையாக கண்டித்திருப்பதுடன் மஹிந்த அரசில் சிறுபான்மை மக்களுக்கெதிராக முயற்சிக்கப்பட்ட விடயங்களை மனோ கணேசன் மீண்டும் கொண்டு வர முயற்சிக்கிறாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் பேசுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த மஹிந்த அரசில் சகல அரச ஊழியர்களும் சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர முயற்சி செய்யப்பட்டது. இதனை மஹிந்தவுக்கு ஆதரவாக இருந்த நிலையிலும் உலமா கட்சி கண்டித்ததுடன் இம்முயற்சியானது தமிழ் பேசும் மக்களின் அரச பதவிகளுக்கு வேட்டு வைக்கும் என்றும் சுட்டடிக்காட்டியதை தொடர்ந்து இது விடயம் கிடப்பில் போடப்பட்டது. அதனை மீண்டும் தமிழ் அமைச்சரான மனோ கணேசன் கொண்டு வர முயற்சிப்பது கவலை தருகிறது. 

வடக்கு கிழக்கை பொறுத்த வரை தமிழ் மொழி மூலமே கல்வி கற்பிக்கப்படுகிறது. அம்மக்களுக்கு சிங்கள மொழியை பாவிப்பதற்கான தேவைகள் சூழல் மிகக்குறைவு என்பதால் அம்மொழியை கற்பதில் சிரமங்களை மேற்கொள்கிறார்கள். 

இந்த நிலையில் வடக்கு கிழக்குக்கு வெளியில் உள்ளோர் இலகுவாக இவ்விரு மொழிகளையும் கற்பதற்கான சூழல் உள்ளது. இந்த நிலையில் அரச நியமனத்தின் போது இரு மொழிகளிலும் சித்தியடைந்திருக்க வேண்டும் என்ற சட்டத்தின் மூலம் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் ஓரம் கட்டப்பட்டு அந்தப்பகுதிகளில் வெளி மாகாண அரச ஊழியர்கள் நியமிக்கப்படலாம். இவ்வாறான நியமனத்தை தடைசெய்யும் சட்டமும் நாட்டில் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்மைக்காலத்துக்கு முன் 100 வீதம் தமிழ் பேசும் கல்முனைக்கு சிங்கள மொழி பேசும் ஒருவர் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டதை நாம் மறந்து விடக்கூடாது. அத்துடன் சிங்களவர்களும் தமிழ் மொழியில் சித்தியடைவதன் மூலம் அரச நியமனத்தின் போது இரு மொழிகளிலும் சித்தியடைந்த சிங்களவர் மற்றும் தமிழ் பேசும் இனத்தவர் என்று வரும் போது நிச்சயம் சிங்களவருக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்ற நாட்டின் அரசியல் கள யதார்த்தத்தை இன்னமும் மனோ கணேசன் போன்றோர் புரிந்து கொள்ளவில்லையா என கேட்கிறோம். 

இரு மொழிகளையும் ஒருவர் கற்றால் இனவாதத்தை இல்லாமலாக்கலாம் என்பது கற்பனையானதாகும். 1983ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது நன்றாக சிங்களம் பேசக்கூடிய கொழும்பு மற்றும் மலையக தமிழ் மக்கள் தாக்கப்பட்டதை நாம் கவனிக்க வேண்;டும். அதே போல் தமிழ் தவிர வேறு மொழியே பேசாத வடக்கு முஸ்லிம்கள் தமிழ் பேசுவோராலேயே அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்ட பின் வெளியேற்றப்பட்டார்கள் என்பதையும் கவனிக்கும் போது இனப்பிரச்சினைக்கு பிரதான காரணம் மொழியல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் கடந்த அரசாங்க காலத்தில் சிங்களவர்களை விட நன்றாக சிங்களம் பேசும் அளுத்கம முஸ்லிம்கள் சிங்கள காடையரால் தாக்கப்பட்டதும் இதனையே நமக்கு கற்றுத் தருகிறது.

ஆகவே அரச ஊழியர் ஒருவர் சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் சித்தியடைய வேண்டும் என்பது தமிழ் பேசும் மக்களுக்கே பாரிய ஆபத்தை எதிர் காலத்தில் ஏற்படுத்தும் என்பதை உலமா கட்சி எச்சரிக்கிறது. மஹிந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வர முயற்சிக்கப்பட்டு உலமா கட்சியால் கண்டிக்கப்பட்டு இல்லாமலாக்கப்பட்ட இச்சட்ட மூலத்தை ஐ தே க  அரசின் பேரினவாதிகள்  அமைச்சர் மனோ கணேசனை பயன்படுத்தி கொண்டு வர முயற்சிக்கிறார்களா  என்று அவரிடம் நாம் கேட்கீறோம். 

ஆகவே நோய் எதுவென்று புரியாமல் மருந்து போடுவதை பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ் பேசுபவர் தமிழ் மொழியிலும் சிங்களம் பேசுபவர் சிங்கள மொழியிலும் சித்தியடைந்திருத்தல் அவர் அரச நியமனம் பெற போதுமானதாகும் என்ற நடைமுறை சட்டத்தில் மாற்றம் கொண்டு வர முயற்சிக்கும் துரோகத்தை செய்ய வேண்டாம் என்றும் இதற்கு எத்தகைய உதவியையும் செய்ய வேண்டாம் என அமைச்சர் மனோ கணேசனை கேட்டுக்கொள்கிறோம். 

அமைச்சர் மனோவின் கருத்துக்கு உலமா கட்சி கண்டனம்... அமைச்சர் மனோவின் கருத்துக்கு உலமா கட்சி கண்டனம்... Reviewed by Madawala News on 9/05/2016 08:48:00 PM Rating: 5