Yahya

பான் கீ மூன் வருகையும் ; இலங்கை முஸ்லிம்களின் அங்கலாய்ப்புகளும்..


ஐ.நா மன்றின் பொதுச் செயலாளர் அதி மேதகு பான் கீ மூன் அவர்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை இலங்கை அரசினது அழைப்பின் பேரில் நாட்டுக்கு வருக்கை தந்திருந்தார். 

(2016 ஆகஸ்ட் 31 முதல் 2016செப்டம்பர் 03 வரை) இதன்போது பல உயர் மட்ட சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள், விரிவுரைகள், கள விஜயங்கள் மேற்கொள்ளப்பட்டனஇலங்கையின் முஸ்லிம் மக்களையோ அல்லது முஸ்லிம் தலைவர்களையோ பான் கீ மூன் தனியாக சந்திக்கவில்லை என்ற ஆதங்கம் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக வெளிப்படுத்தப்படுகின்றது. 

கௌரவ அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தன் சக அமைச்சர் ஒருவருக்கு மேற்படி சந்திப்புக்களை காரணமாக வைத்து அச்சுறுத்தல் விடுத்தார் என்ற வீரதீரச் செய்திகளும் ஒரு சில ஊடகங்களில் இடம்பிடித்திருந்தன. இது தொடர்பிலான புரிதல்களில் உள்ள குறைபாடுகளே இவ்வாறான மனோநிலை ஏற்படவும், கருத்துக்கள் வெளிப்படவும், செய்திகள் உலாவரவும் காரணமாகியிருக்கின்றது. “கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை” என்ற ஒரு கூற்று இருக்கின்றது, இது ஒரு இரட்டை நிலைப்பாட்டைக் குறிக்கும் வழக்காறாகும். இலங்கை முஸ்லிம் மக்களுடைய நிலையும் இதுதான். 

அதாவது முஸ்லிம் மக்கள் இலங்கை அரசாங்கத்தோடு இருக்கின்றோம் என்றும் கூறவேண்டும், தனித்தும் நிற்கவேண்டும், என்ற இரண்டு நிலைகள் எம்மிடம் காணப்படுகின்றன. ஐ.நா மன்றைப் பொறுத்தவரையில் இலங்கை முஸ்லிம்கள் தனித்துவமான அரசியல் சமூகம் அல்ல என்பதே அடிப்படையான நிலைப்பாடாகும், 2012களிலே இலங்கையின் முஸ்லிம் மார்க்கத் தலைவர்கள் ஜெனீவா சென்று இதனை உறுதிப்படுத்தியிருந்தார்கள். இந்த உலமாக்களின் விஜயத்திற்கு அமைச்சர் கௌரவ. றிசாத் பதியுத்தீன் அவர்களே முழுமையான ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அரசியல் ரீதியாக தனித்துவமானவர்கள் என்று சொல்லப்படுகின்ற அதே சந்தர்ப்பத்தில்; இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தோடு இணைந்திருக்கின்ற மத கலாசார ரீதியான வேறுபாடுகளைக் கொண்ட அரசியல் ரீதியாக தனித்துவமற்ற சமூகம் என்ற பார்வையும் இருக்கின்றது. இந்தப் பார்வைகளே எமக்கான வாய்ப்புகளைத் தீர்மானிக்கின்றது. அத்தோடு மேற்படி பார்வைகளை நியாயப்படுத்துகின்றதாக முஸ்லிம் மக்களின் செயற்பாடுகளும் அமைந்திருக்கின்றன. இதுவே ஐ.நா மன்றின் செயலாளர் நாயகத்தின் விஜயத்தின்போதும் வெளிப்பட்டு நிற்கின்றது.

இலங்கைக்கும் ஐ.நா மன்றுக்கும் தற்சமயம் காணப்படும் மிகப்பிரதான விடயம் “ஐ.நா மனித உரிமை மன்றின் “ இலங்கை மீதான யுத்தக்குற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணையின் முடிவுகளின் அடிப்படையிலான தீர்மானங்கள்” நடைமுறையாகும். எனவே ஐ.நா வின் செயலாளர் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற சந்தர்ப்பத்தில், ஏனைய விடயங்களை விடவும் குறித்த “மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணை முடிவுகளின் அடிப்படையிலான முன்னேற்றங்கள்’ மிகுந்த முக்கியத்துவத்துடன் நோக்கப்படும். ஏனைய விடயங்கள் இரண்டாம் நிலையிலேயே கணிக்கப்படுகின்றன.

ஐ.நா மனித உரிமை விசாரணைகளை இலங்கை முஸ்லிம் சமூகம் மஹிந்த அரசிலும் புரிந்து கொள்ளவில்லை, மைத்திரி அரசிலும் புரிந்து கொள்ளவில்லை. அதற்காக முயற்சிப்பதாகவும் அறிய முடியவில்லை. மஹிந்த அரசில் அது மஹிந்தவுக்கு எதிரானது என்று நோக்கிய அதே சந்தர்ப்பத்தில் இப்போது மைத்திரி அரசில் அது மைத்திரிக்கும் ரணிலுக்கும் சார்பானது என்ற மனோநிலையினைத் தவிர வேறு எதுவும் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் அரங்கில் கலந்துரையாடப்படவோ அல்லது முக்கியத்துவமளிக்கப்படவோ இல்லை.

இலங்கையின் அரசியல் தளத்தில் யார் தேசியத் தலைவர் என்ற போட்டா போட்டிகளில் ஒரு சிலரும், தேசியக் கட்சிகளில் முஸ்லிம்களின் இருப்பையும் ஈடுபாட்டையும் உறுதிப்படுத்துவதில் இன்னும் சிலரும்; ஊழல் மோசடிகளுக்கு எதிரான விமர்சனங்கள், பகிரங்க வாதப்பிரதிவாதங்கள் என மற்றொரு தரப்பும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இதே சந்தர்ப்பத்தில், இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு சில ஜும்ஆ பிரச்சினைகள், ஹிஜாப் மாநாடு, குர்பான் தடைகள் என இன்னோரன்ன விவகாரங்களில் அதீத கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள் இதே சந்தர்ப்பத்தில்தான் பான் கீ மூன் அவர்கள் முஸ்லிம் தலைவர்களை தனித்து சந்திக்கவில்லை என்ற அவலுக்கும் வெறும் வாயை மெல்லுகின்றவர்களின் வாயில் போடப்பட்டிருக்கின்றது. 

ஐ.நா மனித உரிமை மன்றின்  இலங்கை மீதான யுத்தக் குற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணையின் முடிவுகளின் அடிப்படையிலான தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகள் அமுலாக்கம் என்பது ஒரு சாதாரண விடயம் அல்ல; தென்னிலங்கை முஸ்லிம் மக்களை விடவும் வடக்குக் கிழக்கு முஸ்லிம் மக்கள் இது குறித்து கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கின்றார்கள். ஐ.நா மனித உரிமை விசாரணை தீர்மானங்கள் பின்வரும் முக்கிய விடயங்களைக் கொண்டிருக்கின்றது.

தகவல் அறிதல் (Fact Findings)  ; யுத்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், பாதிப்புகள், அழிவுகள் முறையாக ஆவணப்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள், தீர்வுகளை எந்த அடிப்படைகளில் உருவாக்குதல் போன்ற விடயங்கள் இங்கு கையாளப்படுகின்றன, நிலைமாறுகால நீதி (Transitional Justice) என்னும் செயற்பாட்டினூடாக ஒரு தீர்வை நோக்கி மக்களைத் தயார்படுத்தல், அந்தப் பொறிமுறையினை அமுலாக்குவதற்கான ஏதுநிலைகளை ஏற்படுத்தல் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் ஒரு அம்சமாகவே காணமல் போனோர்க்கான அலுவலக (Office for Missing Persons) சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, சட்டமாக்கப்பட்டு இப்போது அதற்கான அலுவலகம் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நல்லிணக்கம்: (Reconciliation)  முரண்பாடுகளை எதிர்நோக்கியுள்ள சமூகங்களிடையே நல்லிணக்கத்தை, சகவாழ்வை ஏற்படுத்துவதற்கான பொறிமுறைகள் இதனூடாக கையாளபடுகின்றன, இதுவிடயத்தில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமான நல்லிணக்கத்திற்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவத்திற்கு சமாந்தரமாக குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மக்களின் நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும், இதுவிடயத்தில் முஸ்லிம் அரசியல் மற்றும் சமூகத் தலைமைகள் இதுவரை தேவையான முன்னெடுப்புகள் எதனையும் மேற்கொள்ளவில்லை, குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் நல்லிணக்கம் குறித்துப் பேசுவதற்கு தயக்கமான ஒரு சூழலே காணப்படுகின்றது, இது நீண்டகாலப் பாதிப்புகளை எமது மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் கூடியதாகும்.

நிரந்தரத் தீர்வு, (Permanent Solution) அல்லது அரசியலமைப்பு மாற்றங்கள்: இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு குறித்து ஐ.நா. மனித உரிமை விசாரணைகளில் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது, இது பிரதான விடயமாகும், இதன் அடிப்படையிலேயே அரசியலமைப்பு மாற்றங்கள் குறித்துப் பேசுகின்றார்கள், முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இனமுரண்பாடுகளைத் தவிர்த்தல் விடயத்திலும், சிறுபான்மைகளின் இருப்பு உரிமைகள் விடயத்திலும், சிறுபான்மை மக்களின் அரசியல் பங்கேற்பு விடயத்திலும், அவர்களுக்கான பாதுகாப்பு விடயத்திலும் பல்வேறு முக்கிய விடயங்கள் அரசியலமைப்பினூடாக உறுதி செய்யப்படுதல் வேண்டும். அத்தோடு மாகாணங்களுக்கு பகிரப்படவிருக்கின்ற அதிகாரங்கள் விடயத்தில் மாகாணங்களில் சிறுபான்மை மக்களாக வாழ்கின்றவர்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசபப்டவேண்டியிருக்கின்றது. இதுவிடயங்களில் முஸ்லிம் மக்களோ, அரசியல் தலைவர்களோ உரிய பங்களிப்பைச் செலுத்தியதாக இல்லை. அரசியலமைப்பு மாற்றம் என்பதில் “வடக்கு கிழக்கு இணைப்பு” விவகாரம் மட்டுமே முஸ்லிம் மக்களால் மிகவும் கூடுதல் கவனத்தோடு நோக்கப்படுகின்றது. வேறு விடயங்கள் எதுவும் அந்தளவிற்கு முக்கியத்துவத்தோடு நோக்கப்படவில்லை.

உண்மையைக் கண்டறிதல்; (Truth Commission) முரண்பாட்டுக் காலத்தில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணிகளாக இருந்தவை எவை என்றும், அவ்வாறான காரணிகள் இன்னமும் இருக்கின்றனவா, அவற்றை இல்லாமல் செய்வதற்கு என்ன உபாயங்களை கையாளமுடியும், அவை தேவையானவையா அல்லது தேவையற்றவையா, அவை பயன்பாடுள்ளவையா அல்லது பயனற்றவையா போன்ற விடயங்களைக் கண்டறிந்து, அவற்றை இல்லாமல் செய்வதற்கான வழிவகைகளை உருவாக்குதல் இந்தப் பொறிமுறையினூடாக கையாளப்படவிருக்கின்றன.

 இழப்பீடுகள், நஷ்ட ஈடுகளைப் பெற்றுக்கொடுத்தல்: (Reparations)  யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்பீடுகளை வழங்குவதன் மூலம், யுத்தப்பாதிப்புகளை ஈடு செய்தல் மற்றும் மீள்நிகழாமைக்கான சூழலை உறுதிப்படுத்தல், என்னும் இலக்கு அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது.

பொறுப்புக்கூறல்; (Responsibility) நிகழ்ந்த முரண்பாடுகள், இழப்புகள், அழிவுகள் போன்றவற்றுக்கு பொறுப்புக்கூறலும், இனிவரும் காலங்களில் இத்தகைய முரண்பாடுகள் ஏற்படாமல் இருப்பதை உத்தரவாதப்படுத்தலும், இது அரசாங்கத்தின் தரப்பிலும் தமிழ் மக்களின் தரப்பிலும் முன்னெடுக்கப்படவேண்டிய ஒரு முக்கிய விடயமாகும்.

இப்படியான ஒரு பாரிய வேலத்திட்டங்களை உள்ளடக்கியதுவே ஐ.நா. மனித உரிமை விசாரணைப் பொறிமுறையாகும். இதனை இதுவரை முஸ்லிம் மக்களோ அரசியல், சமூகத் தலைவர்களோ சரிவரப் புரிந்துகொண்டிருப்பார்கள்; என்று நான் கருதவில்லை. இவற்றிலே ஈடுபாட்டோடு இருக்கின்றார்கள்; என்றும் நான் அறியவில்லை. இந்த விவகாரங்களிலே முஸ்லிம் மக்களின் வகிபாகம் குறித்து எவரும் இதுவரை காத்திரமாக சிந்திக்கவோ அல்லது நிலைப்பாடுகளை உருவாக்கவோ இல்லை. வெளிநாட்டு இராஜதந்திரிகளோடு கிரமான உறவுகளைப் பேணவும், இலங்கை முஸ்லிம் மக்களின் விவகாரங்களை முறையாக எடுத்துரைக்கவோ, அல்லது ஐ.நா மனித உரிமை விசாரணைப் பொறிமுறையில் முஸ்லிம் மக்களின் உடன்பாடுகளை அல்லது முரண்பாடுகளை வெளிப்படுத்தவும் இல்லை;  ஆனால் ஐ.நா மன்றின் செயலாளர் நாயகம் முஸ்லிம் மக்களை தனியாக சந்திக்கவோ கலந்துரையாடவோ இல்லை என்ற ஆதங்கம் மட்டும் பரவலாக முன்வைக்கப்படுகின்றது.

இந்த ஆதங்கங்கள் ஒருபோதும் நியாயமானவை என்ற புரிதலை சர்வதேச சமூகத்திற்கு ஏற்படுத்தப் போதுமானதல்ல. குறிப்பாக முஸ்லிம் சமூகம் தனது நிலையினை வரையறை செய்தல் அவசியமாகும், மத கலாசார, மொழி ரீதியாக முஸ்லிம் சமூகம் பொதுவாக “இலங்கை முஸ்லிம்கள்” என்ற அடையாளத்தைக் கொண்டிருந்தாலும்; அரசியல் ரீதியாக தென்னிலை முஸ்லிம்கள், கிழக்கிலங்கை முஸ்லிம்கள் மற்றும் வடக்கு முஸ்லிம்கள்; என்ற மூன்று அலகுகளாகவே நோக்காப்படுதல் வேண்டும். இதனை பிராந்திய சமூகங்கள் என்றும் குறிப்பிடமுடியும்; இலங்கை முஸ்லிம் மக்களின் இந்த மூன்று அலகுகளும் அரசியல் ரீதியாக தமது அடையாளம், நிலைப்பாடுகள், தேவைகள், தாம் வாழும் சூழல் ஆகிய அடிப்படையில் தமக்கான அரசியல் ஒழுங்குகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இதுவே யதார்த்தமுமாகும்.

இவ்வாறா முஸ்லிம் மக்கள் தம்மை நிலைப்படுத்துகின்ற போது; தற்போதைய உள்நாட்டு அரசியல் அரங்கின் முன்னெடுப்புகளோடு தம்மை எவ்வாறு ஈடுபடுத்திக்கொள்தல் என்று தெளிவாக சிந்திக்கவும், அதற்கான வரைபுகளைத் தயாரிக்கவும் வாய்ப்பு ஏற்படும். கூட்டாக இலங்கை முஸ்லிம் மக்களின் அரசியல் அல்லது சர்வதேச விசாரணைப் பொறிமுறையில் முஸ்லிம் மக்களின் வகிபாகம் என்று சிந்திக்கின்றபோது அது பல்வேறு சிக்கல்களை எம்மிடையே ஏற்படுத்தும். மாற்றமாக முஸ்லிம் மக்கள் தமது நிலைப்பாடுகளை பிராந்திய ரீதியில் அணுகுகின்றபோது எம்மால் மிகவும் இலகுவாக எமது அரசியல் சார் விடயங்களைக் கையாள்வதற்கான வழிமுறைகளை வகுத்துக்கொள்ள முடியும் அதன் அடிப்படையில் நிலைப்பாடுகளும், செயற்திட்டங்களும் உருவாக்கப்பட்டு அவை தேசிய, மற்றும் சர்வதேசிய மட்டத்திற்குத் தெரியப்படுத்தப்படுகின்றபோது முஸ்லிம் மக்களின் குரல்களை நோக்கி தேசிய மற்றும் சர்வதேசிய அவதானம் ஏற்படுத்தப்படும். இதுவே இப்போதைய எமது அங்கலாய்ப்புகளுக்கான தீர்வாகவும் அமையும். 

 

பான் கீ மூன் வருகையும் ; இலங்கை முஸ்லிம்களின் அங்கலாய்ப்புகளும்.. பான் கீ மூன் வருகையும் ; இலங்கை முஸ்லிம்களின் அங்கலாய்ப்புகளும்.. Reviewed by Madawala News on 9/05/2016 11:20:00 PM Rating: 5