Yahya

இலங்கையில் முதல் தடவையாக பிரமாண்ட அரங்க அமைப்புடன் கிராஅத் நிகழ்ச்சி மற்றும் அஷ்ரப் நினைவு தின நிகழ்வு ..


சுதந்திர இலங்கை தேசத்தில் முகவரியற்று இருந்தவர்களின் முகவரியாய் முளைத்த நமது மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் அகால மரணமடைந்த செப்டம்பர் பதினாறாம் திகதியாகிய நாளை பதினாறாவது ஆண்டு தொடங்குகின்றது.

தலைவர் அஷ்ரஃப் அவர்கள் தன் வாழ் நாளின் முக்கிய நிகழ்வுகள் அனைத்திலும் அவராகவே அமர்ந்திருந்து குர்ஆன் ஓதுவதை வழக்கமாக்கிக் கொண்டவர்.

கலந்தர் சிக்கந்தர் வொலியுள்ளாஹ் அவர்கள் அடங்கப் பெற்றுள்ள பிரபல்யம்பெற்ற சம்மாந்துறையில் அமைந்துள்ள மல்கம்பிட்டியில் கலந்தர் லெவ்வை மரைக்கார் சுலைமாலெவ்வை ஆலிம் அவர்களின் வம்சாவழி வந்த அஷ்ரஃப் அவர்கள் தனது தாய்வழி மற்றும் தந்தை வழி பாட்டனார்கள் கடந்துவந்த பாதையில் நின்று சன்மார்க்க நெறிமுறையிலும் சமூகத்தை வழி நடாத்தும் தன்மையிலும் ஒப்பாரும் மிக்காரும் இன்றி தொண்டாற்றி தன்னை அர்ப்பணித்தவராவார்.

அவர்கள் தன் இன்னுயிரை விடவும் அதிகம் நேசித்த அல்குர்ஆனை, அழகிய தொனியில் ஓதி அதன் அழகை பிறருக்குத் தெரியப்படுத்துவதன் மூலம் அவரை நினைவேந்தல் இன்றைய கால கட்டத்தில் மிகப்பொருத்தமானதாக அமையும்.

அவரின் அழகிய நினைவோடு; ஒரு தஃவா பயணத்தை தொடர்ந்து செல்லும் நோக்குடன் அவர் நமக்காய் விட்டுச்சென்ற அழகிய இயக்கம் இன்று அப்பணியை கச்சிதமாகவும் அர்ப்பணிப்போடும் செய்து வருகின்றது. ‘அழகிய தொனியில் அல்குர்ஆனை ஓதுதல்’ என்ற செயற்திட்டத்தின் முதலாவது கட்டமாக அகில இலங்கை ரீதியாக கிறாஅத் ஓதும் போட்டி நிகழ்ச்சி ஒன்றை அவர் நட்டு வைத்த அழகிய விருட்சமாகிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சென்ற மாதத்தின் இறுதித் தினங்களில் நடாத்தி முடித்திருந்தது.

இலங்கையில் இதுபோன்ற கிறாஅத் போட்டிகள் இதங்கு முன்னர் இடம்பெற்றிருந்தபோதும்கூட இந்த நிகழ்ச்சித் திட்டமானது பல்வேறு வகைகளில் முக்கியத்தவம் பெறுகின்றது. இதற்கு இலங்கை முழுவதுமாக விண்ணப்பித்திருந்த போட்டியாளர்கள் 900பேர். 

இவ்வாறு விண்ணப்பித்தோர்களுக்குள் ஆறு பெரும் பிரிவுகளாக இப்போட்டி நடை பெற்றது. அதில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் பிரிவுகளாகவும் 20 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பிரிவுகளாகவும் சர்வதேசப் போட்டிகளில் பங்கு பற்றிய ஆண், பெண் போட்டியாளர்களுக்கான பிரிவுகளாகவும் மொத்தமாக ஆறு போட்டிப் பிரிவுகளில் 650 போட்டியாளர்கள் பௌதீகப் பிரசன்னமாக கலந்து கொண்டுள்ளமை ஒரு வரலாற்றுத் தனிச்சிறப்பை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்படுத்தித் தந்தது.

2016 செப்டம்பர் 16ஆம் திகதி நடைபெறும் அஷ்ரஃப் நினைவேந்தல் நிகழ்வும் அதன் முதலாவது அம்சமாகிய தேசிய மட்ட கிறாஅத் போட்டிகளில் வெற்றியீட்டியோருக்கான விருது வழங்கல் நிகழ்வும் இன்று பிற்பகல் சரியாக ஐந்து மணிக்கு இலங்கையில் அதி நவீன கலை அரங்கமான தாமரைத் தடாகத்தில் நடைபெறவுள்ளது.

நாளை நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வானது இரண்டு அரங்கங்களாக நிகழ்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது குறித்த ஆறு பிரிவாக நடந்து முடிந்த போட்டிகளிலும் வெற்றியீட்டியோர்களின் கிறாஅத் அவைக்காற்றுகை நிகழ்வுறுவதாகும். அது மட்டுமன்றி, நடந்து முடிந்த கிறாஅத் போட்டிகளின் ஆவணத் தொகுப்பான அழகிய முறையில் அதி நவீன நுட்பங்களுடன் கலைத்துவமாகத் தயாரிக்கப்பட்ட குறும்படக் காட்சி ஒன்றும் அவைக்கு காண்பிக்கப்படும்.

மாஷா அல்லாஹ், முஸ்லிம் சமூகத்தக்க மட்டுமல்லாது 20ஆம் நுற்றாண்டின் கடைசி நாட்களில் இலங்கையின் அதி சிறந்த தலைமையாகத் திகழ்ந்நத தலைவர் அஷ்ரஃப் அவர்கள் ஒரு தலைசிறந்த கலைஞனாகவும் திகழ்ந்நதார். சிறந்த கலைஞனாகிய அத்தகு அழகிய தலைவனின் நினைவேந்தலின் ஓர் அங்கமான அல் குர்ஆனை அழகிய தொனியில் ஓதும் போட்டி நிகழ்ச்சிகள் நுட்பமான கலை அம்சங்களுடன் கூடிய ஓர் ஆவணப்படமாக காட்சிப்படுத்தலும் அவருக்கு வாய்த்த ஒரு சிறப்பேயாகும்.

இன்னுமொரு சிறப்பம்சமாக ‘மபாஹிபுல் உலூம்’ எனும் ‘ஸப்த இராகங்களில் குர்ஆனை ஓதுதல்’ எனும் ஸப்த நாடிகளையும் அதிர்வடையசட செய்யும் ஒரு நிகழ்ச்சியும் நாளை அவைக்காற்றப்பட இருக்கின்றது. இது ஏழு வகை இராகங்களில் குர்ஆனை ஓதுகின்ற ஓர் அழகியல் சார்ந்த நிகழ்ச்சியாகும். இலங்கையில் இத்தகைய நிகழ்வுகள் அரங்கக் கலைகளாக ஆற்றுப்படுத்தப்பட்டமைக்கான பதிவுகள் இல்லை. இதனைத் தொடர்ந்து இறைவனின் அழகிய திரு நாமங்களான அஸ்மாஉல் ஹ_ஸ்னாவை அழகிய கஸீதாவாக அவைக்கு ஆற்றுப்படுத்தம் நிகழ்ச்சியும் மேடையேற்றப்படவுள்ளது.

மஃரிப் தொழுகைக்கான அதான் ஒலிக்கப்பட்டதும் தொழுகைக்கான இடைவேளை வழங்கப்படும். இந்த பிரமாண்டமான நெலும்பொக்குண கலா மண்டபத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே தொழுகை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு வரும்போது ‘வுழு’வுடன் வருபவர்களுக்கு தொழுகையில் தாமதம் ஏற்பட முடியாது என ஏற்பாட்டாளர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அஷ்ரஃப் நினைவேந்தல் நிகழ்வின் இரண்டாம் அரங்கு 07.00 மணிமுதல் 08.30 வரை இடம்பெறும்.

இதில் வரவேற்புரையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் தலைவர் அஷ்ரஃப் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவரின் உச்ச நிலை நன்மதிப்பைப் பெற்றவருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் நிகழ்த்துவார். அஷ்ரஃப் ஞாபகார்த்த நிகழ்வுச் சொற்பொழிவாளராக கட்டார் பல்கலைக்கழகத்தின் ஷரீஆ பிரிவு பேராசிரியர் தீன் முஹம்மத் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.

சர்வதேச அளவில் நன்மதிப்பைப் பெற்றுள்ள பேராசிரியர் தீன் முஹம்மத் அவர்கள் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி ‘எங்கள் ஸ்தாபத் தலைவர்’ எனும் தலைப்பிலான ஆவணப் படம் ஒன்றும் இவ்விரண்டாம் அரங்கில் அவைக்கு ஆற்றப்படவுள்ளது. அத்துடன் சர்வதேச பிரபல்யம் பெற்ற காரிகளின் கிறாஅத் அரங்கேற்றமும் இவ்வரங்கில் நிகழ்த்திக் காட்டப்படவுள்ளது.

இவ்வரங்கிலேயே போட்டிகளில் வெற்றி பொற்றவர்களுக்கான விருது வழங்கல்களும் மட்டுமன்றி தங்களுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி, போட்டிகளை அணுப் பிரகாது நுண்ணாய்ந்து சிறப்பாக மதிப்பீடு செய்த மத்தியஸ்தர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியும் இடம் பெறவுள்ளது. இன்றைய நிகழ்வில் நன்றியுரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சருமான ஹஸன் அலி அவர்களால் நிழ்த்தப்படும்.

-ஷபீக் ஹுசைன்-

இலங்கையில் முதல் தடவையாக பிரமாண்ட அரங்க அமைப்புடன் கிராஅத் நிகழ்ச்சி மற்றும் அஷ்ரப் நினைவு தின நிகழ்வு .. இலங்கையில் முதல் தடவையாக பிரமாண்ட அரங்க அமைப்புடன் கிராஅத் நிகழ்ச்சி மற்றும் அஷ்ரப் நினைவு தின நிகழ்வு .. Reviewed by Madawala News on 9/16/2016 11:44:00 AM Rating: 5