Monday, September 5, 2016

சிப்லி பாறூக்கிற்கு எதிரான குற்றச்சாட்டை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நிரூபிக்க வேண்டும்- முபீன்

Published by Madawala News on Monday, September 5, 2016  | 

 
-ஊடகப்பிரிவு-
நல்லாட்சிக்கான தேசிய முண்ணனி தனது உத்தியோகபூர்வ இதழான புதிய நாளை பத்திரிகையிலும் மற்றும் இணையத்தளங்களிலும் மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர்.சிப்லி பாறூக்கிற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.இக்குற்றச்சாட்டுக்களை நிறூபிக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் அவர்கள் நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியினரைக் கோரியிருப்பதாகவும் இவ்விடயம் தொடர்பாக தேசிய தௌஹீத் ஜமாஅத்தினரின் ஏற்பாட்டில் சந்திப்புகள் நடப்பதாக அறியக்கிடைத்துள்ளதாகவும் நகரதிட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினுடைய இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் தங்கள் கைகளில் பேனா இருக்கிறது என்பதற்காக யார் மீதும் யாரும் குற்றம் சாட்டிவிட முடியாது ஆதாரங்கள் இல்லாமல் காற்றுவாக்கில் வரும் வதந்திகளை உள்வாங்கி அதற்கென தனியான பத்திரிகையினை அச்சடித்து ஒரு நபரின் தனிப்பட்ட தன்மானத்தில் கைவைப்பது சிறுபிள்ளைத்தனமானதும் கண்டிக்கத்தக்கதுமாகும். இத்தகையதொரு மிகப்பெரும் மோசமான அநியாயத்தை நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியினரும் குறிப்பாக அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் எனக்கும் செய்தார்கள்.அந்தப்படுதூறினால் எனக்கு ஏற்பட்ட பெருத்த அவமானமும் மன உழைச்சலும் எனக்கும் எனது மணைவிக்கும் இன்னும் நீங்கவில்லை.இந்த அநியாயம் நான் காத்தான்குடி நகரசபையின் தலைவராக இருந்த பொழுது எனக்கு அப்போதிருந்த அரசியல் ரீதியான செல்வாக்கினை இல்லாமலாக்குவதற்கு திட்டமிட்ட அடிப்படையில் நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியினரால் மேற்கொள்ளப்பட்டது.
நடந்தது இதுதான்! நான் நகரசபைத் தலைவராக இருந்த போது எமதூரின் வீதிக்கட்டமைப்பு படுமோசமாகவிருந்தது.வீதிகளை செப்பணிடுவதற்கு பல்வேறு நிறுவனங்களை நாடி திட்ட முன் மொழிவுகளை சமர்ப்பித்திருந்தேன்.அப்போது உள்ளுராட்சி உற்கட்டமைப்பு செயற்திட்டம் (Local Government Infrasture Improvement Project) என்ற திட்டமூடாக சலுகைகக் கடனடிப்படையில் வீதி செப்பணிடுவதற்கான திட்டமொன்றுக்கு அப்போதைய சபை உறுப்பினர்கள் அணைவரினதும் சம்மதத்துடனும் இத்திட்டத்தை பெறுவதென்று சபை தீர்மானித்தது.பல மாதக் கணக்கில் இத்திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டு பல கூட்டத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே இத்திட்டம் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இத்திட்டத்தில் அப்போதைய நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் இரண்டு கௌரவ உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர்.ஆரம்ப உறுப்பினரான பொறியியலாளர் பழுல் ஹக் அவர்களும் அவரின் பின்னர் வந்த ஏ.ஜீ.எம்.ஹாறூன் அவர்களுமே அவர்கள் இருவருமாவர்.
பின்னர்  இச்செயற்திட்டம் அமுல்படுத்தப்படவிருந்த போது அப்போதைய ஆழும் கட்சி முக்கிய உறுப்பினர் ஒருவர் என்னை வந்து சந்தித்து இவ்வேலைத்திட்டமானது ஐந்து கோடி ரூபா பெறுமதியுடையது எனவும் இதற்காக கொந்தராத்துக்காரரிடமிருந்து பத்து வீதம்(10%) கொமிசன் எடுத்தால் ஐம்பது இலட்சம் ரூபா வரும்.எனவே இதனை கொந்தராத்துக் காரரிடமிருந்து பெற்று ஆழும் கட்சி உறுப்பினர்களிடையே பங்கிட வேண்டுமெனக் கோரியதுடன் இக்கோரிக்கையை ஆழும் கட்சி உறுப்பினர்கள் சார்பாக முன்வைப்பதாகவும் என்னிடம் கோரினார்.இக்கோரிக்கையில் குறித்த ஒரு ஆழும் கட்சி உறுப்பினர் மாத்திரம் உடன்படவில்லையெனவும் ஏனைய நான்கு உறுப்பினர்கள் சார்பாக முன்வைப்பதாகும் அவர் மேலும் தெரிவித்தார்.இதற்கு உடன்பட மறுத்த நான் “இந்த யாவாரம் பார்க்க என்னால் முடியாது நீங்கள் விரும்பினால் கொந்தராத்துக் காரரை நேரடியாக சந்தித்து அந்த இலஞ்சத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்னால் முடியாது” என மறுத்து விட்டேன்.இதன் பின்னர் குறித்த மற்றுமொரு முக்கிய உறுப்பினர் நான் இலஞ்சம் வாங்கிக் கொடுக்காத காழ்ப்புணர்ச்சியில் பொறியியலாளர்.அப்துர்ரஹ்மானைச் சந்தித்து நான் இலஞ்சம் பெற்றிருப்பதாக எனக்கெதிராக பொய்யைச் சொல்லி பிழையாக வழிநடாத்தினார்.படித்தவராக தன்னைக்கூறிக் கொள்ளும் நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியின் தவிசாளர் இதுபற்றி என்னிடம் எதுவுமே விசாரிக்காமல் அப்போதைய நோன்புப் பெருநாள் தினத்தன்று இவ்விடயம் தொடர்பில் தனியான புதிய நாளை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.ஆறு பக்கங்களைக் கொண்ட அப்பத்திரிகை என் மீது மிக மோசமாக மிகக் கீழ்த்தரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது.அன்றைய தினம் கடற்கரைக்கு தொழுகைக்குச் சென்ற நானும் எனது மணைவியும் மிக மோசமாக பாதிக்கப்பட்டோம்.அன்றைய பெருநாள் தினம் எங்களுக்கு மரணவீடு போல மாறியது.அன்றைய பெருநாள் உணவுகளைக் கூட எங்களால் சாப்பிடமுடியவில்லை.நடக்காத ஒன்றை நடந்ததாக அப்பத்திரிகை காட்டியிருந்தது.அப்பத்திரிகையை வாசிப்பவர்கள் இறுதியில் என்னை ஒரு கள்வனாகவும் கொள்ளைக்காரனாகவும் கருதும் வகையில் எழுதப்பட்டிருந்தது.
பின்னர் நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியினருடன் இவ்விடயம் தொடர்பாக நேரடி விவாதத்திற்குச் சென்றேன்.காத்தான்குடி பொது நூலகத்திலும் பின்னர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தினருடைய காரியாலயத்திலும் விவாதத்திற்குச் சென்றேன்.இறுதியில் இக்குற்றச்சாட்டு பொய்யென நிறூபிக்கப்பட்டது.மிகவும் மனப்பாதிப்புக்குள்ளான நான் சம்மேளத்தில் நடைபெற்ற விவாதத்தின் பொழுது இந்த படுதூறு எனக்கு நடந்த அநியாயமெனவும் நான் இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற புனிதமக்கா நகருக்குச் செல்கின்றேன் எனவும் நான் கஹ்பாவில் வைத்து அல்லாஹ்விடம் இதனைப் பாரம் கொடுப்பேன் எனவும் மனம் உருகிக் கூறினேன்.
பின்னர் மூன்று தினங்களின் பின்பு நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியினருக்கும் எனக்குமிடையிலான விவாதத்திற்கு இணைப்பாளர்களாக செயற்பட்ட சிரேஸ்ட வரி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.மாஹிர் நூலகர் எம்.ஐ.எம்.கலீல் மற்றும் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் ஆகிய மூவரும் என்னைச்சந்தித்தனர்.அவர்கள் பின்வருமாறு கோரிக்கையினை முன்வைத்தனர். “பொறயியலாளர்.அப்துர்ரஹ்மான் எங்களோடு பேசினார்.அவர்இப்போது மனம் வருந்துகின்றார்.உங்களோட மனம் விட்டுப் பேச விரும்புகின்றார்.எனவே நீங்கள் சந்திப்புக்கு வரவேண்டுமெனக் கூறியதுடன் இது நட்பு ரீதியான சந்திப்பாகவே இருக்கும்” என்று கூறினார்கள்.நான் ஹஜ்ஜுக்குச் செல்வதற்கான ஆயத்த வேலைகள் பல இருந்தும் நண்பர்களுடைய கோரிக்ககையின் பேரில் பொறியியலாளர்.அப்துர்ரஹ்மான் அவர்களை சகோதரர் மாஹிர் அவர்களினுடைய இல்லத்தில் சந்தித்தேன்.அச்சந்திப்பின் போது எனது கைகளைப் பிடித்து சகோதரர்.அப்துர்ரஹ்மான் பின்வருமாறு கூறினார். “பிழையான தகவல்களினடிப்படையில்   இவ்வாறு நடந்து விட்டது.உண்மையாகவே மணம் வருந்துகின்றேன்.என்ன பரிகாரம் செய்ய வேண்டும்” என என்னிடம் கேட்டுக்கொண்டார்.அதற்கு பின்வரும் கோரிக்கையினை நான் முன்வைத்தேன்.“நீங்கள் கடந்த நோன்புப் பெருநாள் தினத்தில் பத்திரிகை அச்சடித்து என்னுடைய மானத்தை வாங்கிவிட்டீர்கள்.எனவே தாங்களின் பத்திரிகையால் சீரழிக்கப்பட்ட எனது மானம் தாங்களின் பத்திரிகையாலே சீர்செய்யப்படவேண்டும்.எனவே எதிர்வரும் ஹஜ் பெருநாள் தினத்தன்று தாங்கள் நோன்புப் பெருநாள் தின புதிய நாளையில் வெளியிட்ட செய்தி பிழையானது என்று தெரிவித்து உண்மைகளை வெளிப்படுத்தி ஹஜ் பெருநாள் தினத்தன்று புதிய நாளைப்பத்திரிகையை வெளியிட்டு எனது மானத்தை சீர்செய்யவேண்டும்” எனக்கோறினேன். இதைச் செய்வதாக வாக்குறுதியளித்து அங்கிருந்து சென்ற பொறியியலாளர்.அப்துர்ரஹ்மான் பல ஹஜ்ஜுப் பெருநாட்கள் வந்து போயுள்ள நிலையிலும் அத்தகைய பத்திரிகையொன்றை வெளியிடவில்லை.
ஆக எனக்கு நடந்த அநீதி போன்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக்கிற்கும் நடந்து விடக்கூடாது எனவும் சிப்லி பாறூக்கிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நல்லாட்சிக்கான தேசிய முண்ணனி மக்கள் மன்றத்திற்கு முன் நிறூபிக்க வேண்டுமெனவும் நகரதிட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினுடைய இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top