Madawala News

இரத்த நாளங்களில் ஊடுருவும் நாச்சியாதீவு பர்வீனின் மூன்றாவது இதயம்.-நஸார் இஜாஸ் -

உணர்வுகளின் நரம்புகளில் இரத்த ஓட்டம் எதுவுமின்றி ஓர் ஆத்மா இன்னொருவருக்காக லப்டப் ஓசையை வெளிக் கொணர்ந்தபடி ஒவ்வொரு கணப்பொழுதையும் சாசுவாதமாக கழித்துக் கொண்டிருக்கின்றது. பேனாவின் இரத்த நாளங்கள் ஒரு பிசாசைப் போல சமுகத்தின் தொடர்ந்தேர்ச்சையான நடத்தைப் பிறழ்வுகளையும், தாற்பாரியங்களையும் படம் போட்டுக் கொண்டிருப்பதோடு, ஒரு இறகைப் போல புன்னகையையும், புத்துணர்ச்சியையும் தூவிக் கொண்டிருக்கிறது. பேனாவை இருக்கிப் பற்றிப் பிடித்தவன் காகிதங்களில் சொற்களை மேய விட்டிருக்கிறானோ தெரியவில்லை. ஏனெனில் அத்தனை எழுத்துக்களும் தொன்னூறு பாகை செல்சியஸ் கொதிநிலையில்ஒரு வித மனோநிலையை உள்ளத்தில் ஊட்டிக் கொண்டிருக்கிறது.

நாச்சியாதீவின் விதைகளில் முளைகளாக எழுத்து, படிப்படியாகத் துளிர்த்து ஒட்டு மொத்த தேசமுமே திரும்பிப் பார்க்கின்ற அளவிற்கு அடர்ந்த எழுத்துக்களால் எண்திசைகளையும் ஒரு காந்தத்தைப் போல் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கும் பேனாக்களில் கைதேர்ந்த கவிஞரும், விரல் விட்டு சொல்லக் கூடிய எழுத்தாளர்களில் முன்னிலையில் இருக்கக்கூடிய எழுத்தாளருமான நாச்சியாதீவு பர்வீனின் பிரசவமே மூன்றாவது இதயம்.

கவிஞனாய் முகிழ்ந்து இன்று கவிதை, சிறுகதை, பத்தி, சிறுவர் இலக்கியம், கட்டுரை என தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பரிணாமங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி வருகின்றார். சிரட்டையும் மண்ணும், பேனாவால் பேசுகிறேன், மனவெளியின் பிரதிகள் எனும் தொகுப்புகளுக்கு அப்பால் தற்போது இவர் வெளியிட்டுள்ள தொகுப்பே மூன்றாவது இதயம் கவிதைத் தொகுதியாகும்.

இவர் சமுக அக்கறையுடனும், தெள்ளிய தமிழ் நடையுடனும் நேர்மையாக ஒளிரக் கூடிய ஒருவராவார். இவரது எழுத்துப்பணியை கௌரவித்து அகில இலங்கை சிங்கள கவிஞர் சம்மேளனம் இவரைப் பாராட்டி காவ்ய சிறீ பட்டம் வழங்கி இவரை கௌரவித்திருந்தது. அது மாத்திரமன்றி இவர் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் நிகழ்கால பொருளாளராகவும் இருப்பதுடன், அனுராதபுர தமிழ் இலக்கிய வட்டத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இவரது இலக்கியப் பயணம் விரிவடைந்து செல்கின்றது. ஆழ்ந்த வாசிப்பும், இலக்கியப் பரிச்சையமுடைய இவருடைய இதயம்தான் ஆராக்கியமாய் துடித்துக் கொண்டிருக்கிறது. அந்த இதயம் அவருடைய மூன்றாவது இதயம். ஆம்.. நான் சொல்வதிலும் ஓர் உண்மையிருக்கிறது என்பதை போகப் போகப் புரிந்து கொள்வீர்கள்.

மூன்றாவது இதயம் கவிதைத் தொகுதியிலுள்ள அத்தனை கவிதைகளும் ஒருவித மனப்பதிவினை ஒவ்வொருவருக்குள்ளும் ஊற்றிக் கொண்டிருக்கும் என்பதை இவருடைய கவிதைகளைப் படிக்கின்ற ஒவ்வொருவரும் புரிந்து கொள்வர். குறிப்பாக இவருடைய கவிதைகளைப் படிக்கின்ற போது தனக்கே உரிய கவிதைகளின் கதைச் சொல்லாடலையும், தான் வெளிக்கொணரும் அர்த்தத்தின் வெளிப்பாட்டையும் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடிய தன்மையையும் அவர் எமக்குள் ஏற்படுத்தியிருக்கிறார். படித்தோர் முதல் பாமரருக்கும் புரியும் வகையில் இவருடைய சொல்லாடல் இருக்கின்றமை வரவேற்கத்தக்கதொரு விடயமாகும். பாமர மக்களுக்கும் புரிகின்ற ஒரு மொழி இருக்கும்.

அது இனிக்கும் என்பதை நாச்சியாதீவு பர்வீன் தெளிவாகப் புரிந்து கொண்டு தனது கவிதைகளுக்கு வடிவம் தீட்டியிருக்கின்றார்.
காதல், குடும்பவியல், சமுகக்கட்டுமானம், கட்டமைப்பு, விரக்தி, எரிச்சல், அலைக்கழிப்பு எனப் பல்வேறு பரிமானங்களில் இவருடைய கவிதைகள் கலவை செய்யப்பட்டுள்ளது. களிமண்ணால் மெழுகு'சப்;பட்டு  ஓலைகளால் வேயப்பட்ட ஒரு மண்குடிசைத் திண்ணையில் உட்கார்ந்தபடி உம்மம்மாவின் மடியில் தலைசாய்ந்து கொண்டு கதைகளைக் கேட்டு வளந்தவன் தன் கிராமத்தின் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமேயில்லை. பாசத்தினால் பினாத்தித் திரிபவன் எல்லோரையும் போலவே இயற்கையை வாசிக்கின்றவனாகவும், ஒரு வீணையைப் மீட்டுகின்ற பரந்த மனமுடையவனாக இயற்கையோடு திணிக்கப்படுகிறான். அனுபவத்தின் சாளரங்களைத் திறந்து விடுகின்ற போது எதிர் கொள்கின்ற அத்தனை கூறுகளையும் வீறு கொண்டு சுமக்கின்ற கைங்கரியம் கற்றுத் தேர்ந்தவன் அத்தனை அனுபவக் கீறல்களையும் கவிதையாக்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. அதன் வெளிப்பாடே இத்தொகுதி என தனது உரையில் தனது மனக்கண்ணோட்டத்தினை நாச்சியாதீவு பர்வீன் வெளிக் கொணர்ந்துள்ளார்.

யார் அல்லது எது அந்த மூன்றாவது இதயம்...
தன் உயிரின் சரி நிகராகக் கொள்ளப்படும் ஒரு பொருளென்றால் ஒருவருக்கு அது எப்போதுமே தன் வாழ்வில் ஒன்றித்துப் போன ஒருவராகத்தான் இருக்க முடியும். அந்த இதயம் எது என்பது குறித்து அவரே அழகிய குறிப்பெழுதியுள்ளார். யார் அந்த மூன்றாவது இதயம்? அது என் இரண்டாவது மகள் ஸைனப். எனெனில் என் முதலாவது இதயம் மனைவி நஸ்மியா, இரண்டாவது இதயம் மகள் மரியம்.

ஆதலால் நான் இதயமில்லாதவன். மாத்திரமன்றி, விரல்களுக்குப் பழகிப்போன சொற்களை விட்டு எவருமே ஒதுங்கிவிட முடியாது. அவ்வாறான நிலை வாசகரிடையே ஏக்கத்தையும், எதிர்பார்ப்புகளையுமே எச்சங்களாக்கி விடும். நல்ல கவிதைகள் ஆழ்மனத்தினுள் புகுந்து ஒரு வித இதத்தை ஊட்டுகின்றவை. அந்த நிலையிலிருந்து தப்பிக்க முடியாத, இரட்டை ஆயுள் தண்டணை கைதியாக பர்வீன் தன்னை உட்செலுத்தியுள்ள பர்வீன்,தான் பிறந்து வளர்ந்த நாச்சியாதீவு மண்ணின் மீது கொண்டுள்ள வேட்கையை தனது கவிதைகளில் வெளிக் கொணர்ந்துள்ளார். 'நாச்சியாதீவு மாண்பியம்' என்ற கவிதை அதைப் பறை சாற்றி நிற்கிறது. இயற்கை வனப்புகளோடு பச்சைப் பசேலென வயல்வெளிகளுக்கிடையே பசுமை நிறைந்த தொன்மையான கிராமம் என தனது கிராமத்தினைப் பெருமைப் படுத்தி நெஞ்சு நிமிர்த்துகிறார் பர்வீன். அதே கவிதையில் ஊரில் காலாண்டு காலமாக பேசப்பட்டு வரும் பழைமையான கதைகளையும், கிராமிய பாரம்பரியங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்தியம்பியுள்ளார். ஒட்டு மொத்த தேசத்திற்கான ஆவணமாக இந்நூல் வெளிக்கொணரப்பட்டுள்ளது என்பதை விடவும், நாச்சியாதீவின் முக்கிய அம்சங்கள் தனது தொகுதியினூடாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதில் நாச்சியாதீவு பர்வீன் பெருமிதம் கொள்ளலாம்.


இவருடைய கவிதைகளில் உள்ள அத்தனை கவிதைகளும் விரும்பத்தக்க போதிலும், மீனவனின் ஒருநாள், நாச்சியாதீவு மாண்பியம், மனைவி எனும் உயிர், உம்மா எனும் தேவதையே, நதிகளின் மரணம், மூன்றாவது இதயம், ஒரு துயரத்தின் மொழி, காஸா பள்ளத்தாக்கின் குருதி சிந்தி வாழ்விழக்கும் ஒரு சகோதரனுக்கு எனும் கவிதைகள் அத்தனையும் மேலும் மீள் வாசிப்புக்குட்படுத்தப்படவேண்டியவையாகும்.


ஜீவநதி வெளியீடாக வந்திருக்கும் குறித்த நூலின் அட்டை வடிவமைப்பு நூலுக்கு மென்மேலும் பொருள் சேர்த்திருக்கின்றது. ஒரு படைப்பாளிக்கு தனது நூலை நூலுருப்படுத்தல் என்பதை வெறுமனே வாய் வார்த்தைகள் அல்ல. அது தாயினது கர்ப்பச் சுருளுக்கான போராட்டம். அடுத்த கட்ட நகர்வுக்கான வரலாற்று முயற்சியாகும். சாதாரண வாசகர் மனதிலும் சங்கிலித் தொடராய் ஈர்ப்புக்களைப் பின்னிச் செல்லும் இவரது தொகுதியை காலம், காலங்காலமாய் உச்சாடணம் செய்யும். நாச்சியாதீவு பர்வீன் இனிமேல் தனது நான்காவது இதயமாக 'மூன்றாவது இதயம்' தொகுதியை கம்பிராமாகச் சொல்லிச் செல்லலாம். அவ்வளவு கணதி மிக்கதாகவே இந்நூல் எனது கண்களுக்குள் காட்சியளிக்கிறது.


ஆயிரம் பூக்களை அள்ளிக் கோர்த்து உருவாக்கிய மலர்ச் செண்டொன்றை மனப்பூர்வமாய் தூவி நீண்ட தூரப் பயணிப்புகளுக்காய் சதிகளை நிராகரித்தபடி மூன்றாவது இதயத்தின் லப்டப் ஓசைகளுடன் அணுத்திறன்மங்களின் அறிவை அப்படியே சொறிந்தபடி பயணிக்கின்றேன். காலங்களின் கணிப்பில் மீண்டும் ஒருநாள் நமக்கான சந்திப்பு மெல்லிய ஓசைகளுடன் மீண்டும் ஒரு நாள் மீட்டப்படலாம் அல்லது மீட்கப்படலாம்.