Kidny

Kidny

இந்த விடயத்தில் அமைச்சர் ரிஷாத் அவர்களுக்கு இன்னும் கூடுதல் கவனம் தேவை !


'இது கூட்டிட்டு வந்த கூட்டம் இல்ல. அன்பால தானா சேர்ந்த கூட்டம்" என்ற என்ற ரஜினி காந்தின் டயலக்  என்பது ஏதோ என்னைப் பொறுத்த வரையில் அனைத்துக்கும் சரியாகப் பொருந்தும் என   நினைக்கவில்லை.. 

சிலவேளைகளில் சினிமாவுக்கு இந்த வசனம் பொருந்தலாம். 

ஆனால், அரசியலுக்கு பொருந்தவே மாட்டாது என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன் நான் .

இன்னொரு விடயத்தையும் இங்கு நான் குறிப்பிட வேண்டும். அதாவது   அரசியல் கட்சி ஒன்றின் பகிரங்கக் கூட்டம்  ஒன்று இடம்பெறும் போது அதில் கலந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கையைக்  கொண்டு தங்களுக்கு ஆதரவு கூடிவிட்டது என்று கூட்டத்தை நடத்தியவர்கள் கணிப்பதும்   யாராவது அவ்வாறு கூறினால் நம்புவதும் தவறானதே. 

ஓர் அரசியல் கூட்டம் நடந்தால் அதனைப் பார்ப்பதற்கு ஆதரவாளர்கள் மட்டுமல்ல. உளவு பார்ப்பவர்களும்  மாற்றுக் கட்சிகளின் ஆதரவாளர்களும் வருவர்.  ஏன் வழியால் போவோரும் வருவோரும் என்ன நடக்கிறது என்று  புதினம் பார்ப்பதும் வழமைதானே?

ஆக, இவர்கள் அனைவருமாகக் காணப்படும் மக்கள் எண்ணிக்கையைக் கொண்டு எங்கள் கூட்டத்துக்கு சாரிசாரியாக ஆட்கள் வந்தனர். எங்கள் கட்சிக்கு ஆதரவாளர்கள் அதிகரித்துள்ளனர் என்றெல்லாம் கூறுவது எனக்கென்றால் சரியான கணிப்பாகத் தெரியவில்லை.  

பொதுபல சேனா ஒரு கூட்டத்தை கல்முனையில் நடத்தினாலும் சனங்கள் வரத்தான் செய்யும். அதற்காக அவர்கள் அனைவரும் பெதுபலசேனா ஆதரவாளர்கள்  என்று நிகை்க முடியாது அல்லவா?

இந்த விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் சற்று வீக் என்று நான் நினைக்கிறேன்.

வெளுத்தவை எல்லாவற்றையும் வெள்ளையாகவும் திரண்டவர்கள் அனைவரையும்  ஆதரவாளர்களாகவும் அவர் நினைத்துக் கொள்கிறார் என்பதனை அண்மைக் காலத்தில் நான் உணரக் கூடியதாக இருந்தது. இந்த விடயத்தில் அவர் சற்று ஜாக்கிரதையாகச் செயற்பட வேண்டும்.

அமைச்சர் ரிஷாத் அவர்களே! உங்களிடம் யாராவது வந்து சேர் உங்கள் கூட்டத்துக்கு ரொம்ப சனங்கள் வந்தாங்க.. நம்மட கட்சி எங்கேயோ விட்டது என்று யாராவது உங்களுக்கு ஐஸ் வைப்பாரானால் நீங்கள் அவர் கூறுவதனை நம்பி பனி போன்று உருகி விடாதீர்கள். அந்த நபர் தொடர்பில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவரது வெறும் முகப்புகழ்சிக்கு நீங்கள் மசிந்து விட்டால் டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி உடைந்த கதைதான் கட்சிக்கு ஏற்படும். இறுதியில்  டைடானிக் கதாபாத்திரங்களான ரோஸும் ஜெக்கும் கரை ஒதுங்கிய  அவலம்தான் காணப்படும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் சுமார் 33,000 வாக்குகளை அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கட்சி பெற்று எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது உண்மைதான். இது அந்தக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணை. அதனை மறுக்க முடியாது.

அதேவேளை, மிக..மிக அண்மைக் காலமாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்த வண்ணமே உள்ளனர். நல்லவர்களையும் தெரியவில்லை. நயவஞ்சகர்களையும் தெரியவில்லை, உளவாளிகளையும்  தெரியவில்லை. எல்லோரும் இணைகிறார்கள். “நாங்கள் ரிஷாத் கட்சி” என்று கூறுகிறார்கள். கூறிக் கொண்டே என்னென்னவெல்லாமோ  செய்கிறார்கள். 

இந்த விடயத்தில் அமைச்சர்  ரிஷாத் கரிசனையுடன் செயற்பட வேண்டும். தவறின் அவரையே சிலர் ஏலம் போட்டு விடும் நிலைமையும் ஏற்படலாம். கட்சியில் இணைத்துக் கொள்பவர்களை விட தானாக வந்து இணைந்து கொள்பவர்கள் விடயத்தை மிகக் கவனமாக அவர் கையாளவேண்டும்.

கட்சியில் இணையும் உண்மைத் தொண்டர்களை தவிர, தங்களது நிகழ்ச்சி நிரல்களுக்கும் தேவைகளுக்கும் கட்சியையும் தலைமையையும் பயன்படுத்துவதற்காக இணைய முயற்சிப்போர் தொடர்பில் அதிக கவனத்தை அமைச்சர் ரிஷாத் செலுத்த வேண்டும். விசேடமாக, கிழக்கில் அதிலும் சிறப்பாக அம்பாறை மாவட்டத்தில் இணைவோர் தொடர்பில் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

கட்சியில் இணைவதற்கு அதிக ஆர்வம் கொள்வோர் மற்றும் இணைந்த பின்னர் அவர்களது நடவடிக்கை தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கூழுக்கும் ஆசை  மீசைக்கும் ஆசை என்ற நிலையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். கட்சியின்  உண்மை விசுவாசிகளாக நான்கு பேர் இருப்பது சிறந்ததா? “நாங்களும் ரிஷாத் கட்சி”  என்று  மாமூலுக்காக கூறிக் கொண்டு தங்களது தேவைகளுக்காக இணைந்து உள்ளிருந்து அறுக்கும் நாற்பது பேர் இருப்பது சிறந்ததா என  அமைச்சர் ரிஷாத் சற்று நின்று நிதானிக்க வேண்டும். 

இவ்வாறானவர்களால் கட்சியின் உண்மை விசுவாசிகளும் தலைமைக்கு நேர்மையாகச் செயற்படுபவர்களும் மனச்சலிப்படைந்து  விலகிச் செல்லும் மிக மோசமான நிலைமைகளுக்கும் முகங்கொடுக்க நேரிடலாம். மக்களும் கட்சி மீது வெறுப்படையலாம்.

பல கட்சிகளில் நான் அவதானித்த விடயம் ஒன்று உள்ளது. யதார்த்தவாதிகள், கட்சி விசுவாசிகள்  தூரமாக்கப்பட்டும் நயவஞ்சகம் கொண்ட சுயநலவாதிகள் நெருக்கமாக்கப்படுவதுமே அதுவாகும். அதற்காக நான் பாண்டவர்களை நல்லவர்கள் என்றோ கௌரவர்களை சூழ்சிக்கார்கள் என்றோ எடுத்த எடுப்பில் குற்றஞ் சொல்லவில்லை. ஆனால், இவர்களிடையே பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் சகுனிகளும் இருக்கலாம் என்பதனையே இங்கு சொல்ல வருகிறேன்.

 எனவே 'இது கூட்டிட்டு வந்த கூட்டம் அல்லாமல் கட்சிக்காக. அன்பால தானா சேர்ந்த கூட்டம்” என்ற நிலையை உங்கள் கட்சி அடைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
இந்த விடயத்தில் அமைச்சர் ரிஷாத் அவர்களுக்கு இன்னும் கூடுதல் கவனம் தேவை ! இந்த விடயத்தில் அமைச்சர் ரிஷாத்  அவர்களுக்கு இன்னும் கூடுதல் கவனம் தேவை ! Reviewed by Madawala News on 9/18/2016 10:24:00 PM Rating: 5