Saturday, September 17, 2016

கருக்கலைப்பு மனித படுகொலைக்கு ஒப்பானதாகும் ..

Published by Madawala News on Saturday, September 17, 2016  | 

 
-முகம்மது தம்பி மரைக்கார்-
அந்தப் பெண்ணுக்கு 42 வயதைத் தாண்டியிருந்தது. பல்கலைக்கழகத்தில் கற்கும் ஆண் மகன், உயர்தரம் படித்து முடித்த பெண் பிள்ளை வீட்டில் இருந்தனர். 

ஒருநாள் தனது கணவருடன் வைத்தியர் ஒருவரை சந்திக்க வந்திருந்த அந்தப் பெண், தான் கர்ப்பம் தரித்திருப்பதாகக் கூறினார். அந்த வயதுக் கர்ப்பம் தமக்கு அவமானத்தைத் தேடித் தந்துவிடும் என்று அந்தப் பெண்ணும் அவரின் கணவரும் அச்சப்பட்டனர்.

இந்த வயதில் தனது தாய் கர்ப்பம் தரித்திருக்கின்றமையால், தான் அவமானத்தை உணர்வதாக தங்கள் மகள் கூறியமையை அந்தத் தாய் வருத்தத்துடன் தெரிவித்தார். 

இதனால், தனது கர்ப்பத்தைக் கலைத்து விடுவதற்குத் தாம் தீர்மானித்துள்ளதாக அந்தப் பெண்ணும் கணவரும் தாங்கள் சந்தித்த வைத்தியரிடம் கூறினார்கள். அதற்கான உதவியையும் வைத்தியரிடம் கோரினார்கள். 

அந்தப் பெண்ணின் பிரச்சினையைப் புரிந்து கொண்ட வைத்தியர், அவருடன் பேசினார். கருச்சிதைவு செய்வது சட்டப்படி குற்றம் என்பதோடு, அது உயிராபத்தானதொரு செயற்பாடு என்பதையும் புரியவைத்தார். 

பின்னர், அந்தப் பெண்ணுடைய மகளை அழைத்துப் பேசினார். சமரசப்படுத்தினார். இதனால், தனது கருவைக் கலைத்து விடும் எண்ணத்தை அந்தப் பெண் கைவிட்டார். இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 

அந்தப் பெண் கலைத்துவிட நினைத்த அந்தக் கரு, இப்போது ஒரு குழந்தையாக ஓடியாடி விளையாடுகின்றது. இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 650 கருக் கலைப்புகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்ப நலப் பிரிவு கடந்த வருடம் தெரிவித்திருந்தது. 

இத்தனைக்கும் இலங்கையில் கருக்கலைப்பு சட்டவிரோதமான செயற்பாடாக உள்ளது. இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவையின் படி, வலிந்து கருக்கலைப்புச் செய்கின்ற ஒருவருக்கு 03 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது அபராதம், அல்லது இரண்டினையும் சேர்த்து விதிக்க முடியும். தாயின் உயிரைப் பாதுகாப்பதற்கான நன்நோக்கத்துக்காக மட்டும் கருக்கலைப்பை சட்டம் அனுமதிக்கின்றது. 

மேலுள்ள புள்ளிவிவரத்தின்படி பார்க்கும்போது, ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் கருக்கலைப்புக்கள் இலங்கையில் நடக்கின்றன. வருடத்துக்கு சுமார் இரண்டரை இலட்சம் கருக்கலைப்புக்கள் இடம்பெறுகின்றன என்பதை நினைக்கையில், மனசு பதறுகிறது. 
ஒவ்வொரு கருக்கலைப்பின்போதும், ஒரு மனித உயிர் கொல்லப்படுகிறது. 

கருக்கலைப்பு என்பது மனிதப்படுகொலைக்கு ஒப்பான செயலாகும். ஆனால், கணிசமானோர் எந்தவொரு உறுத்தலும் இன்றியே அதைச் செய்து விடுகின்றனர். இலங்கையில் நிகழும் கருத்தரிப்புக்களில் 77 சதவீதமானவை எதிர்பாராத கருத்தரிப்புக்கள் என்று சுகாதார அமைச்சின் குடும்ப நலப் பிரிவு கூறுகிறது. 

எதிர்பாராத கருத்தரிப்புகளே சட்டவிரோதமான கருக்கலைப்புகளுக்கு இட்டுச் செல்கின்றன என்பது இங்குள்ள உறுத்தும் உண்மையாகும். 

குடும்பத் திட்டமிடலைப் பின்பற்றும்போது, எதிர்பாராத கருத்தரிப்புக்கள் ஏற்படுவதில்லை. ஆனால், குடும்பத் திட்டமிடல் என்பது எம்மில் அநேகமானோரிடம் கிடையாது. 'குடும்பத் திட்டமிடல் என்பது குடும்பக் கட்டுப்பாடு (Birth control) அல்ல என்கிறார் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பறூசா நக்பர். குடும்பத் திட்டமிடல் மூலமாக ஒரு தம்பதியினர் விரும்பிய எண்ணிக்கையான குழந்தைகளை, விரும்பிய காலத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இளவயது மற்றும் பிந்திய வயதுகளில் கர்ப்பம் தரிப்பவர்களில் கணிசமானோர் கருக்கலைப்பில் ஈடுபடுகின்றனர். 

அந்தக் கருக்கலைப்புகளை நியாயப்படுத்துவதற்காக அவர்கள் தரப்பில் ஏராளமான காரணங்கள் முன்வைக்கின்றன. வறுமை, பராமரிக்க முடியாமை, இப்போதைக்குத் தேவையில்லை, எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்டது என்று அவர்கள் கூறும் எந்தக் காரணத்தாலும் கருக்கலைப்பை நியாயப்படுத்திவிட முடியாது. இளவயதில் கர்ப்பம் தரித்தலுக்கு இளவயதுத் திருமணம் மிகப் பிரதான காரணமாகும். '19 வயதுக்குப் பின்னர் கர்ப்பம் தரித்தல் நல்லது' என்று டொக்டர் பறூசா நக்பர் கூறுகிறார். பெண்ணொருவர், உடல் மற்றும் உள ரீதியாக 19 வயதுக்குப் பின்னரே முதிர்ச்சியடைகிறார் என்றும் டொக்டர் பறூசா சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொத்துவில் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் இளவயதுக் கர்ப்பங்கள் அதிகம் நிகழ்கின்றன என்று டொக்டர் பறூசா தெரிவித்தார்.

இளவயதுத் திருமணத்துக்கு வறுமை மற்றும் கல்வியறிவின்மை மிக முக்கிய காரணங்களாக உள்ளன. மேலும், பெற்றோர் வெளிநாடு செல்லும்போது, தமது பெண் பிள்ளைகளை தனியாக விட்டுச் செல்வதற்குப் பயந்து, அந்தப் பிள்ளைகளுக்கு இளவயதில் திருமணத்தைச் செய்து கொடுத்து விடுகின்றனர். அதேபோன்று, கிழக்கு மாகாணத்தில் நிலவும் சீதனக் கொடுமையும் இளவயதுத் திருமணங்களுக்குக் காரணமாக அமைந்து விடுவதாகக் கூறப்படுகிறது. 

'திருமணத்தின்போது, பெண் தரப்பினரிடமிருந்து பெருமளவான சொத்துக்களையும் பணத்தையும் மணமகன் சீதனமாகக் கேட்டுப் பெற்றுக்கொள்ளும் மோசமானதொரு பழக்கம் அநேகமாக, இலங்கையின் கிழக்கு மாகாணம் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. ஆனால், ஏழைப் பெற்றோர்களால் இவ்வாறு சீதனம் வழங்கி தமது பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து கொடுக்க முடிவதில்லை. எனவே, சீதனங்கள் எவையுமின்றி தமது பெண் பிள்ளைகளை திருமணம் முடிப்பதற்கு யாராயினும் முன்வரும்போது, தமது பெண் பிள்ளைகளின் இளவயதையும் பொருட்படுத்தாமல், பெற்றோர் திருமணம் செய்து கொடுத்து விடுகின்றார்கள்' என்று டொக்டர் பறூசா விபரித்தார். 

இளவயதுத் திருமணம் நிகழ்வதற்கு கல்வியறிவின்மை ஒரு காரணமாக அமைந்துள்ள போதும், கருக்கலைப்புச் செய்து கொள்வதற்கும் கல்வியறிவின்மைக்கும் தொடர்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. 

காரணம் உலகளாவிய ரீதியில் கல்வியறிவில் முன்னேறிய நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் வருடமொன்று 11 இலட்சம் கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, நாளொன்றுக்கு 03 ஆயிரத்துக்கும் அதிகமான கருக்கலைப்புக்கள் நிகழ்கின்றன. கருக்கலைப்பு தொடர்பில் அமெரிக்கப் புள்ளிவிவரங்கள் அச்சமூட்டும் வகையில் அமைந்துள்ளன. 

அபிவிருத்தியடைந்த நாடுகளில் அமெரிக்காவிலேயே அதிகம் கருக்கலைப்புக்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் நான்கு பெண்களில் ஒருவர் கலைக்கலைப்புச் செய்து கொள்கின்றார். மேலும், அங்குள்ள பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தமது 45 வயதுக்குள் ஆகக்குறைந்தது ஒரு தடவையாவது கருக்கலைப்புச் செய்து விடுகின்றார்கள். அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் கருக்கலைப்புக்களில் கணிசமானவை திருமணத்துக்கு முந்திய உறவினால் ஏற்படும் கர்ப்பத்தை இல்லாமல் செய்வதற்காக மேற்கொள்ளப்படுகின்றன. 

அந்த நாட்டின் கலாசாரம், அளவுக்கு மீறிய சுதந்திரம் போன்றவை திருமணத்துக்கு முந்திய கர்ப்பம் ஏற்படுவதற்கு ஏதுக்களாக அமைந்து விடுவின்றன. ஆனாலும், இலங்கையில் திருமணத்துக்கு முன்னரான கர்ப்பம் தரித்தல் என்பது மிகவும் குறைவாகும். 

எமது மக்களின் மத நம்பிக்கை, கலாசாரக் கட்டுப்பாடுகள் போன்றவை, திருமணத்துக்கு முன்னரான உடலுறவு மற்றும் கருத்தரிப்பு ஆகியவற்றை அனுமதிப்பதில்லை. எவ்வாறாயினும், எமது நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத கருக்கலைப்புக்களில், திருமணத்துக்கு முன்னரான கருத்தரிப்புக்களும் உள்ளடங்குகின்றன. அவை  கணிசமானவையாகும். இவற்றைப் போலவே, திட்டமிடாத அல்லது எதிர்பாராத கருத்தரிப்புக்களில் கணிசமானவையும் கலைக்கப்படுகின்றன. குடும்பத் திட்டமிடல் மூலமாக எதிர்பாராத கருத்தரிப்புக்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

 19 தொடக்கம் 30 வயதுவரை குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்குப் பொருத்தமான பருவமாகும் என்கிறார் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பறூசா நக்பர். இரண்டு குழந்தைப் பேறுகளுக்கிடையில் 03 தொடக்கம் 05 வருட இடைவெளி இருக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்துகின்றார். 

கால இடைவெளியின்றி குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதால், தாய் மற்றும் பிள்ளைகள் மன இறுக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார். 

எனவே, திருமணமான தம்பதியினர் கருத்தரித்தலுக்கு முன்னரான மருத்துவ ஆலோசனைகளையும் மருத்துவ சேவையினையும் பெற்றுக்கொள்ளுதல் அவசியமானதாகும். கருத்தரித்தலுக்கு முன்னரான மருத்துவச் சேவை நாட்டில் பரவலாக வழங்கப்பட்டு வருகின்றபோதும், இதனைப் பயன்படுத்திக் கொள்கின்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும். இளவயதுக் கர்ப்பம் தரித்தலைப் போலவே, வயதான பின்னர் தரிக்கும் கர்ப்பங்களும் தாய்க்கு பல்வேறு பிரச்சினைகளையும் ஆபத்துக்களையும் ஏற்படுத்தும் வகையிலானவையாகும். 35 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பம் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. 

மட்டுமன்றி, அவ்வாறான வயதில் கிடைக்கும் குழந்தைகள் நோய்த்தாக்கத்துக்கு ஆளாகும் வகையிலானவர்களாவும் மந்த புத்தியுடையோராகவும் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன என்று கூறப்படுகிறது. எனவே, குடும்பத் திட்டமிடல் மூலமாகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்தல் தாய் - சேய் இருவருக்கும் ஆரோக்கியமானதாகும் என்று கூறும் டொக்டர் பறூசா, ஆரோக்கியமான குடும்பங்களை உருவாக்குவதே குடும்ப திட்டமிடலின் நோக்கமாகும் என்றும் தெரிவிக்கின்றார். இதன் மூலம் திட்டமிடாத அல்லது எதிர்பாராத கருக்கள் உருவாகுவது தடுக்கப்படுவதோடு, அவற்றைக் கலைக்கும் கொடிய செயற்பாடுகளும் இல்லாமலாகும். 

கருக்கலைப்பு என்பது சட்டப்படி எமது நாட்டில் ஒரு குற்றமாகும். மட்டுமன்றி, அது ஒரு கருணையற்ற செயலுமாகும். எமது இரத்தத்திலிருந்து உருவான ஒரு ஜீவனை நாமே அழித்து விடுவதென்பதை விடவும் பெருங்கொடுமை வேறெதுவாக இருக்க முடியும். ஆனாலும், உலகளவில் உருவாகும் ஐந்து கருவில் ஒன்று வலிந்து கலைத்து விடப்படுகிறது என்கிற கசப்பான தகவலை ஜீரணிக்க முடியாமலுள்ளது.   - .


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top