Kidny

Kidny

தற்கொலைகளைத் தடுப்பது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகுமா?


 
ஒவ்வொரு வரும் சாதாரண வாழ்க்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றபோது,  எதிர்பார்த்தோ எதிர்பாராமலோ பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில்  பலர் தன்னம்பிக்கையோடு செயற்பட்டு அப்பிரச்சினைகளிலிருந்து விடுவித்துக்கொள்கின்றனர் ஆனால,; சிலரோ அப்பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற முடியாதவர்களாக காணப்படுகின்றனர். இத்தகையவர்கள் தன்னம்பிக்கை இழந்து, அப்பிரச்சினைகளுக்குள் மூழ்கி அவற்றினால் ; உடல் உள ஆரோக்கியம் இழந்தவர்களாக மாறுவதைக் காணமுடிகிறது.
 
வாழ்க்கையில் எத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அவற்றை தன்னம்பிக்கையோடு எதிர்நோக்குகின்றபோதுதான் அவற்றில் வெற்றிபெற முடியும். இருப்பினும், வாழும் காலங்களில்  எதிர்நோக்குகின்ற எல்லாவற்றிலும் வெற்றி காண முடியாது. தோல்விகளையும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அதுதான் வாழ்க்கைத் தத்துவமாகும்..
 
வாழ்க்கையின் தத்துவங்கள்  தொடர்பில் சரியான புரிதல் இல்லாதனாலும், நேர்மய எண்ணங்களை தங்களுக்குள் வளர்த்துக்கொள்ள முயலாதனாலும்,  எதிர்நோக்கும் சிக்கல்களுக்கும், நெருக்கடிகளுக்கும் தீர்வாக தங்களைத் தாங்களாகவே அழித்துக்கொள்ள சிலர் முனைகின்றனர். இவ்வாறு தங்களை அழித்துக்கொள்ள துணிவுகொள்வோர் துன்பங்களையும் துயரங்களையும் நெருக்கடிகளையும் சவாலாகக் கொண்டு வாழத் துணிவு பெறாமல் இருப்பது வேதனைக்குரியது.
 
அந்தவகையில், எல்லோரையும்  மிகவும் துயரத்தில் ஆழ்த்தும் தற்கொலை எனும் துன்பியல் சம்பவங்கள் வயது வித்தியாசமின்றி இடம்பெற்று வருகின்றன. இதனால், அவற்றைத் தடுக்கும் முயற்சிகளில் தங்களை அர்ப்பணிப்பது சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பொறுப்பாகக் கருத வேண்டியுள்ள..
 
அதிகரித்து வரும் தற்கொலைகளைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு 2003 ஆண்டு முதல் ஒவ்வொரு வருடத்தினதும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது அந்தவகையில் கடந்த 10ஆம் திகதி உலக தற்கொலை தடுப்பு தினம் இணைப்பு, தொடர்பாடல், கவனிப்பு என்ற தொணிப் பொருள் கொண்டதாக உலகளரிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டது.
 
தற்கொலைகளும், காரணங்களும்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கைகளின் பிரகாரம் ஒவ்வொரு வருடமும் 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு 3 வினாடிகளில் 24 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். ஓவ்வொரு 40 வினாடியிலும் ஒருவர் இறக்கின்றார்.  தினமும் 3000 பேர் தற்கொலை புரிந்து கொள்கின்றனர். 2020ஆம் ஆண்டளவில் தற்கொலையினால் வருடமொன்றுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை 1.5 மில்லியனாகக் காணப்படுமெனவும் உலகில் உயிர் இழப்பதற்கு காரணமாகவுள்ள காரணிகளில் தற்கொலையானது மூன்றாவது இடத்தை வகிக்குமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
பொதுவாக தற்கொலை இடம்பெறுவதற்கு மூன்று முக்கிய காரணிகள் காணப்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அவை. உளவியல், உயிரியல் மற்றும் சமூக பொருளாதாரக் காரணிகளாமாகும். இம்மூன்று காரணிகளுள்; ஏதாவது ஒன்றின் காரணமாக தற்கொலைகளும் தற்கொலைக்கான முயற்சிகளும் உலகளாவிய ரீதியில் இடம்பெற்று வருகிறது.
 
மூன்றாம் உலக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வறுமை காரணமாக ஏற்படுகின்ற மன அழுத்தம் மற்றும் குடும்பத் தகராறுகள், காதல்  தோல்வி. போதைப் பொருளுக்கு அடிமை, வீட்டு வன்முறைகள், தொழில்வாய்ப்பிண்மை போன்றவை இந்நாடுகளில் ஏற்படுகின்ற தற்கொலை முயற்சிகளுக்கும் தற்கொலை புரிதலுக்கும் பிரதான காரணமாகவுள்ளன.
 
இயற்கைக்கு மாறாக மரணத்தை ஏற்படுத்துகின்ற தற்கொலையானது இலங்கை சுதந்திரமடைந்த காலம்தொட்டு ஒரு பொதுவான நிகழ்வாக  சமூத்தில் காணப்பட்டு வருகிறது. இருப்பினும், அது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இலங்கையின் தற்கொலை தொடர்பான புள்ளிவிபரங்களை நோக்குகின்றபோது ஆண்களும் பெண்களும் அடங்கலாக ஏறக்குறைய மூவாயிரம்; பேர் ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்து கொள்கின்றனர்
 
பொலிஸ் திணைக்களத்தின் புள்ளவிபரங்களின் பிரகாரம், 2014ஆம் ஆண்டு 2,484 ஆண்களும் 660 பெண்களும் தற்கொலை செய்துள்ளனர். அவ்வாறு 2015ஆம் ஆண்டில் 2,389 ஆண்களும் 669 பெண்களும் தற்தொலை புரிந்துள்ளனர்.
 
கடந்த இரு வருடங்களிலும் தற்கொலை செய்துள்ளவர்களின் வயதெல்லையையும் எண்ணிக்கையையும் நோக்குகின்றபோது, 50 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகளவில் தற்கொலை புரிந்துள்ளனர். இதன்பிரகாரம் 51க்கும் 55 வயதுக்குமிடைப்பட்டவர்கள் 470 பேரும் 56க்கும் 60க்குமிடைப்பட்டவர்கள் 481 பேரும் 61க்கும் 65 வயதுக்குமிடைப்பட்டவர்கள் 399 பேரும் 66க்கும் 70 வயதுக்குமிடைப்பட்டவர்கள் 256 பேரும், அத்தோடு 71 வயதுக்கு மேற்பட்டவர்கள் 531 பேரும் தற்கொலை புரிந்துள்ளனர்.
 
இந்நிலையில் 21க்கும் 25 வயதுக்குமிடைப்பட்டவர்கள் 377 பேரும், 26 முதல் 30 வயதுக்கிடைப்பட்டவர்கள் 431 பேரும,; 31க்கும் 35க்குமிடைப்பட்டவர்கள் 418 பேரும், 36 முதல் 40 வயதுக்கிடைப்பட்டவர்கள் 398 பேரும் தற்கொலை செய்துள்ளனர். இப்புள்ளிவிபரங்களை நோக்குகின்றபோது 71 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகளவில் கடந்த இரு வருடங்கள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த ஒரு சில வருடங்களாக தற்கொலை அதிகம் இடம்பெறும் மாவட்டங்களாக இரத்தினபுரி, அநுராதரம், கண்டி மற்றும் குருநாகல் மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
 
இவ்விரு வருடமும் இடம்பெற்ற தற்தொலை சம்பவங்களுக்கு பொருளாதார நெருக்கடி.(வறுமை, தங்கி வாழ்தல்), தொழில் பிரச்சினை, முதுமை, வீட்டு வன்முறை, பாலியல் வன்முறை, துன்புறுத்தல், மது மற்றும் போதைப்பொருள் பாவனை, சொத்து இழப்பு, காதல் தோல்வி, பரீட்சைத் தோல்வி, உளநோய்கள், தீராது உடல் நோய், உடல் இயலாமை மற்றும் ஏனைய காரணங்களினால் பங்குவகித்துள்ளன.
 
இருப்பினும், பொதுவாக இலங்கையில் இடம்பெறும் 40 வீதமான தற்கொலைகளுக்கு உளக்கோளாரான மனச்சோர்வு காணரமாகவுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதுது. இலங்கiயில் வருடந்தோரும் 80,000 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்வதுடன் 4 இலட்சம் பேர் தற்கொலைக்கான எண்ணத்துடன் காணப்படுகின்றை தற்கொலைகளைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உறுதிப்படுத்துகிறது.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 2.3 மில்லியன் பேர் உளப் பிரச்சினைகளை உடையவர்களாகக் காணப்படுவதாகவும்  இவர்களில் 15 வீதம் முதல் 20 வீதமானோர் தற்கொலைக்கு முயற்சி செய்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளதுடன் கட்டிளமைப் பருவத்தினரின் தற்கொலை முயற்சி அல்லது தற்கொலைக்கு பெற்றோரின் கவனிப்புக் குறைவு, காதல் தோல்வி, வாழ்வாதார மாற்றங்கள், தொழில்வாய்ப்பின்மை, தொழில் இழப்பு, தவறான குற்றச்சாட்டுகளினால் ஏற்படும் அவமானம் என்பன காரணமாகவுள்தாக கூறப்படுகிறது.

இது தவிர, 172 உலக நாடுகளைக் கொண்டு உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட  ஆய்வில் தற்கொலைகள் இடம் பெறும் நாடுகள் வரிசையில் இலங்கைக்கு  நான்காம் இடம் கிடைத்துள்ளது. 2011ஆம் ஆண்டில் தற்கொலை புரியும் நாடுகள் வரிசையில் 11வது இடத்தில் இருந்த இலங்கை 2014ல் நான்காவது இடத்திற்கு உயர்ந்து. தற்கொலை இடம்பெறும் நாடுகள் வரிசையில் முதலாவது இடத்தில் கயானாவும், இரண்டாம் இடத்தில்  வட கொரியாவும், மூன்றாம் இடத்தில்  தென்கொரியாவும் உள்ளன. நான்காம் இடத்தில் உள்ள இலங்கையில் ஒவ்வொரு 100,000 பேரிலும் 28.8 வீதமானோர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் கண்டறிந்துள்ளது.
 
இலங்கையில் தற்கொலைக்கு பிரதான காரணமாக இருப்பது வறுமை, இளைய தலைமுறையினரிடையே மன அழுத்தம்,; வீட்டு வன்முறைகள் மற்றும் போதிய கல்வியறிவு இன்மை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பீடப் பேராசிரியர் சிறி கெட்டிகே குறிப்பிடுகிறாh.;
 
உளவளத்துணை நிலையங்கள் அதிகரிக்கப்பட்டு அதனூடாக மனச்சோர்வுக்கு உட்பட்டவர்கள் அடையாளம் காணப்படுமிடத்து மனச்சோர்வினால் தற்கொலை புரிபவர்களின எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், உளவளத்துணை நிலையங்கள் உள்ளபோதிலும் அந்நிலையங்களுக்கு போதிய பயிற்சி கொண்ட உளவளத்துணையாளர்கள் நியமிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் அதிகரித்துள்ள தற்கொலைச் சம்பவங்களைக் தடுப்பதற்கான விழிப்பூட்டல், அறிவூட்டல் செயற்றிட்டங்களும் அதிகரிக்கப்படுவதும் அவற்றிற்கு ஊடக நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டியதும் காலத்தின் தேவையாகவுளளன.
 
சமூக வலைத்தளங்களினதும் இலத்திரனியல் ஊடகங்களினதும் வகிபாகம்.
ஒரு நாட்டின் நான்கு தூண்களில் ஊடகம் 4வது இடத்தை வகிக்கிறது. ஊடகம் சக்தி மிக்கது என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாகும். ஊடகங்களினால் ஆட்சி மாற்றம் முதல் அரங்க மாற்றம் வரை மேற்கொள்ள முடியும். ஆக்கவும் முடிந்த அழிக்கவு முடிந்த சக்தி கொண்ட ஊடகங்கள்; தமது பங்கை சமூகப் பிரச்சினைகளை சமூகத்திலிருந்து ஒழிப்பதற்கும் பயன்படுத்த வேண்டும்.
நாட்டில் காணப்படும் சமூகப் பிரச்சினைகளில் பொரியதொரு தடுக்க முடியாத பிரச்சினையாக தற்கொலை  தலைதூக்கியுள்ளது. இவற்றைத் தடுப்பதற்கான வினைத்திறன் உள்ள விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது இந்நாட்டில் இயங்கும் அச்சு, இலத்திரினல் மற்றும் இணையத்ள ஊடகங்களின் முக்கிய பொறுப்பாகும்.
 
தற்கொலைகளைத் தடுப்பதில் அச்சு ஊடகங்கள் அதன் பங்களிப்பைச் செய்து வருகின்றபோதிலும் தற்கொலைச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது. இருப்பினும், தற்கொலைச் சம்பவங்கள் தொடர்பில் தனிக்கை செய்வது காலத்தின் தேவையாகவுள்ளது.
 
சமகாலத்தில் நேர்மறையான செய்திகளுக்கு வழங்குகின்ற முக்கியத்துவத்தை விட எதிர்மறையான சம்பவங்களுக்கு அதிக முக்கியத்துவம் ஊடகங்களினால்; வழங்கப்படுவதைக்; காணமுடிகிறது. குறிப்பாக ஏதாவதொரு தற்கொலைச் சம்பவம்  நாட்டின் ஏதாவதொரு பகுதியில் நடந்துவிட்டால் அச்செய்தியானது ஒரு சில பத்திரிகைகளின் முன்பக்கச் செய்தியாக வெளி வருகிறது.
 
இச்செய்திகள் அல்லது கட்டுரைகளில் தற்கொலைச் சம்;பவம் நடைபெற்ற முறை தொடர்பான இப்பதிவுகள் தற்கொலை எண்ணம் கொண்;டவர்களை இச்செயற்பாட்டின்பால் ஊக்குவிக்கத்தூண்டும். எனவே தற்கொலைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்ந்து வாழ்வின் நெருக்கடிகளினால் ஏற்படும் துயரங்களிலிருந்து எவ்வாறு வாழ்வைக் கட்டியெழுப்ப முடியும் என்ற எண்ணங்களைப் பிரதிபலிக்கும் விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குவது வசாகர்களுக்கு நன்மை பயக்கும்.
 
இவ்வாறு, சமூக வலைத்தளங்களும்,  வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களும் தற்கொலையைத் தடுப்பதற்காக வகிக்கும் பங்கு தொடர்பில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் திருபத்தியற்றதொரு நிலை காணப்படுகிறது.
 
24 மணித்தியாலமோ அல்லது அதைவிடக் குறைந்த மணித்தியாலங்களோ சேவை நடாத்துகின்ற வானொலி சேவைகளும் தொலைக்காட்சி சேவைகளும் சமூகத்திலுள்ள சமூகப் பிரச்;சினைகளைச் சுட்டிக்காட்டுவதற்காக அல்லது அவற்றைத் தடுப்பதற்கான நிகழ்ச்சிகளை ஒலி, ஒளிபரப்புச் செய்வதற்கு தங்களது சேவை மணத்தியாலயங்களில் எத்தனை மணித்தியாலங்களை ஒதுக்கியுள்ளன?
 
ஒவ்வொரு தொலைக்காட்சி சேவையிலும் நாளொன்றுக்கு மூன்று அல்லது நான்குக்கு மேற்பட்ட நாடகங்கள் ஒளிபரப்புச் செய்யப்படுகின்றன. இதில் தற்கொலை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஊக்கப்படுத்தும் காட்சிகள் தணிக்கை செய்யப்படுவதை காண முடிவில்லை.  தனிக்கைகள் எதுமின்றி பல நாடகங்கள்  ஒலி, ஒளிபரப்புச் செய்யப்படுகின்றன, ஒவ்வொரு தொலைக்காட்சி சேவை நிறுவனங்களும் தங்களது நிறுவனம் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைய வேண்டும். அல்லது முதன்மை பெற வேண்டும் என்பதற்காக நிழக்ச்சிகளைத் தயாரித்து ஒளிபரப்புச் செய்வதனால் வர்த்தக ரீதியாகவோ அல்லது வேறு விதத்திலோ நன்மையடைவது அந்நிறுவனங்களே தவிர நேயர்கள் அல்ல என்பது புரியப்பட வேண்டும்.
 
வெறுமெனே சினிமா பாடல்களைக் கொண்ட நிகழ்ச்சிகளை வடிவமைத்து அதனை ஒலி,ஒளி பரப்புச் செய்து நேயர்களையும் ரசியர்களையும் தமது சேவை வசம் வைத்துக்கொள்வதற்கு முக்கியத்துவம் வழங்குகின்ற, அதற்காக போட்டி போட்டுச் செயற்படும் ஊடக நிறுவனங்கள் சினிமா பாடல்களினாலும், திரைப்படங்களினாலும், தொடர் நாடகக் காட்சிகளினாலும் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக அக்கறைகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் சமூகங்களின் மத்தியில் முன்வைக்கப்படுவதை மூடிமறைக்க முடியாது.
 
திரைப்படங்களில், மெகாநாடகத் தொடர்களில் வருகின்ற மது மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பான காட்சிகள் தணிக்கை செய்யப்படாது அவற்றின் தாக்கம் குறித்து அச்சுறுத்தும் வசனங்கள் அக்காட்சிகள் வருகின்றபோது ஒளிபரப்புச் செய்யப்படுகின்றன. ஆனால் அவை எந்தளவுக்கு வெற்றியளித்துள்ளது என்பர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியர்.
 
ஆனால் தற்கொலை புரிகின்ற அல்லது அதற்கு முயற்சி செய்கின்ற காட்சிகள் எவ்வித அச்சுறுத்தல் வசனங்களோ அல்லது தணிக்கையோ செய்யப்படாது அவ்வாஆற காட்சிப்படுத்தப்படுகின்றன.
 
நாடகங்களும் சினிமாவும் இன்று இளைஞர்களையும் யுவதிகளையும் கட்டி ஆண்டு கொண்டிருக்கின்றன. பல்வேறு காரணங்களினால் தற்கொலை எண்ணத்துடன் பலர் சமூகத்தின் மத்தியில் உள்ளனர் இத்தகையவர்களுக்கு தற்தொலை புரியக் கூடிய முறைகளை காண்பிக்கின்ற காட்சிகள்  ஊக்கியாக அமையக் கூடும். இவை குறித்து ஊடகங்கள் கருத்திற்கொள்வது அவசியமென சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
 
வர்த்தகத்தையும் போட்டிச் செயற்பாடுகளையும் நோக்காக் கொண்டு ஒலி. ஓளிபரப்பப்படுகின்ற நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதுபோன்று சமூகத்தில் புரையுண்டு கிடக்கும் சமூகப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி அவற்றைத் தடுப்பது தொடர்பான நிகழ்ச்சிகளை ஒலி, ஒளி பரப்புச் செய்வதற்கும் ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
 
வெறுமனே இளைய தலைமுறையினரைக் கவர்ந்திலுக்கும் நிகழச்சிகளை ஒலி,ஒளி பரப்புச் செய்வதன் ஊடாக ஒட்டுமொத்த ஊடக தர்மத்தை நிலைநாட்ட முடியாது. ஊடகங்கள் இன்றி சமூகங்கள் இல்லை. சமூகங்கள் இன்றி ஊடகங்கள் இல்லை. என்பது ஊடகங்களால் கருத்திற்கொள்ளப்படுவது அவசியமாகும். ஆரோக்கியமுள்ள சமூகக் கட்டமைப்பையும் எதிர்கால சந்ததியினரையும் உருவாக்குவதில் முக்கிய பங்கை தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகள் வகிக்க முடியும்.
 
அத்தோடு, சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றவர்கள் தற்கொலை சம்பவங்கள் போன்ற சமூக பிரச்சினைகள் தொடர்பில் தங்களது பதிவுகளை மேற்கொள்கின்றபோது மிக அவதானமாக அவற்றை பதிவேற்ற முயற்சிக்க வேண்டும். தற்கொலைகளை ஊக்குவிக்கின்ற விடயங்களை பதிவேற்றுவதிலிமிருந்து தவிர்ந்துக்கொள்வது காலத்தின் தேவையாகவுள்ளது.
 
சமகாலத்தில் சமூக வலைத்தளங்கள் குறிப்பாக 'பேஸ்புக், வட்ஸ்அப்' போன்றவற்றைப் பயன்படுத்துகின்றவர்கள் தேவையற்ற பல்வேறு விடயங்களை பதிவேற்றுவதற்கும் பரிமாறுவதற்கும் தங்களது நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு சில வட்ஸ்அப் குழுவில் உள்ளவர்கள் கொக்குக்கு எத்தனை கால் என்று சின்னப்பிள்ளைகள் கேள்வி கேட்டு விடை சொல்வது போன்ற விடயங்களைப்; ; பதிவேற்ற அவற்றைப் பரிமாறுவதில் நேரத்தைக் கழித்துக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இவற்றைத் தவிர்த்து சமூகம் நன்மையடையக் கூடிய விடயங்களுக்கு நேரத்தை பயன்படுத்துவது அனைவருக்கும் பயனளிக்கும் எனச் சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும்.
 
அந்தவகையில,; தற்கொலை போன்ற பாரிய சமூகப் பிரச்சினைகளை  சமூகத்திலிருந்து குறைப்பதற்கு அவை சமூகத்தில் இடம்பெறாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வை மக்கள் முன் கொண்டு செல்வதற்கு  சமூக வலைத்தளங்களும் இலத்திரனியல் ஊடகங்களும் தங்களால் முடிந்த பங்களைப் செய்வது அவசியமாகும். இருப்பினும் ஒரு சில ஊடகங்களினால் இவற்றதை; தடுப்பதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் நிகழ்ச்சிகள் ஒளி, ஒலிபரப்புச் செய்யப்பட்டாலும் இவை மக்கள் மத்தியில் வினைத்திறனை ஏற்படுத்தவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
 
எனவே,  ஊடகங்கள் உட்பட ஒவ்வொரு வரும் தற்கொலை போன்ற சமூகப் பிரச்சினைகளைத் தடுப்பதில் அக்கறைகொள்வது அவசிமாவதுடன் இப்பொறுப்பானது ஆரோக்கியமுள்ள எதிர்கால சமூகத்தை உருவாக்க வழிகோலும் என்பது திண்ணமாகும்.

(நன்றி: வீரகேசரி -14.09.2016)
தற்கொலைகளைத் தடுப்பது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகுமா? தற்கொலைகளைத் தடுப்பது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகுமா? Reviewed by Madawala News on 9/15/2016 10:22:00 AM Rating: 5