Free Space

இடமாற்றம் செய்யும் பொது நிருவாக அமைச்சின் நடவடிக்கைகளில் பாரபட்சம் ...

 


ஊடக அறிக்கை
கிழக்கு மாகாண சபையில் கடமையாற்றும் இலங்கை நிருவாக சேவை விசேட தரப்பதவிகளில் கடமையாற்றும் இலங்கை நிருவாக சேவை ஐம் தர உத்தியோகத்தர்களை அப்பதவியில் இருந்து இடமாற்றம் செய்யும் பொது நிருவாக அமைச்சின் நடவடிக்கைகளில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
 
இது தொடர்பாக மேற்படி சங்கம் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ மற்றும் அரச சேவை ஆணைக்குழு மற்றும் பொது நிருவாக அமைச்சிற்கும் எழுத்து மூலம் முறையிட்டுள்ளது. அதன் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
 
நாடாளவிய ரீதியில் உள்ள அரச அலுவலகங்களில் இலங்கை நிருவாக சேவை விசேட தரப்பதவிகளில் உள்ளோரை அவர்களது தரத்திற்கேற்ப பதவிகளில் கடமைக்கு அமர்த்தவும், அப்பதவிகளில் பதில் அடிப்படையில் கடமையாற்றும் இலங்கை நிருவாக சேவை முதலாம் வகுப்பு அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் அரச சேவை ஆணைக்குழு பொது நிருவாக அமைச்சிற்கு பணிப்புரை வழங்கியுள்ளது.
 
இதனடிப்படையில் கிழக்கு மாகாண சபையில் உள்ள பேரவைச் செயலகம், அரச சேவைகள் ஆணைக்குழு என்பவற்றின் செயலாளர் பதவி இலங்கை நிருவாக சேவை விசேட பதவி என அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பதவிகளை தற்போது முதலாம் தர அதிகாரிகள் இருவர் பதில் அடிப்படையில் கடமையாற்றி வருகின்றனர்.
 
இவர்களுள் பேரவைச் செயலாளராக கடமையாற்றும் முஸ்லிம் அதிகாரி அப்பதவியில் இருந்து அகற்றப்பட்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் பதில் செயலாளராக கடமையாற்றும் பெரும்பான்மையின அதிகாரி இத்திட்டத்தின் கீழ் இடமாற்றம் செய்யப்படவில்லை. இதன்மூலம் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதுடன் நேர்மையான முஸ்லிம் அதிகாரிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
 
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுச் செயலாளருக்கு எதிராக உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் என்பவற்றில் அவரது அதிகார துஸ்பிரயோகம் என்பன தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 05 வருடத்திற்கு மேல் தொடர்ச்சியாக அப்பதவியில் இருந்து வருகிறார்.
 
நல்லாட்சி அரசாங்கம் எல்லோருக்கும் சமநீதி வழங்கும் என்ற எண்ணத்தில் அரச அதிகாரிகளாகிய நாம் இருக்கிறோம். அதற்கு மாற்றமாக கிழக்கு மாகாணத்தில் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
 
எனவே, இவ்விடமாற்றத்தில் சமநீதி வழங்கப்பட வேண்டும். இல்லையேல் இதற்கு எதிராக சட்ட உதவி நாடப்படுமென மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது.
இடமாற்றம் செய்யும் பொது நிருவாக அமைச்சின் நடவடிக்கைகளில் பாரபட்சம் ... இடமாற்றம் செய்யும் பொது நிருவாக அமைச்சின் நடவடிக்கைகளில் பாரபட்சம் ... Reviewed by Madawala News on 9/29/2016 09:00:00 PM Rating: 5