Yahya

டயஸ்போராக்களின் சூழ்ச்சியினாலே அதாஉல்லாவின் தோற்கடிக்கப்பட்டார்....


கிழக்கு மாகாணம் தனித்தே இருக்க வேண்டுமென குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் அதாஉல்லா டயஸ்போராக்களின் சூழ்ச்சியினாலே தோற்கடிக்கப்பட்டார் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

ஏறாவூரில் அண்மையில் நடைபெற்ற சுதந்திர கிழக்கு பிரகடனப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாணம் ஒருபோதும் வடக்குடன் இணைந்திருக்க முடியாது அது தனியாகப்பிரிக்கப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தனது உயிரையும் துச்சமென மதித்து பகிரங்கமாக குரல் கொடுத்து வந்தார். 

அதன்காரணமாகவே அவர் கடந்த பொதுத் தேர்தலில் டயஸ்போராக்களின் சூழ்ச்சியினாலே தோற்கடிக்கப்பட்டார்.
வட கிழக்கை இணைத்து முஸ்லிம் சமூகத்தை அடிமைகளாக்குவதற்கும் பணங்களுக்கு சோரம் போகாமலும் தைரியமாக குரல் கொடுத்து வந்த முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவை தோற்கடிப்பதற்கு பணங்கள் வீசப்பட்டு போலி முகநூல் தரகர்கள் ஊடாக சமூக வலயத்தளங்களில் போலிப்பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டது. அதனாலே அவர் தொற்கடிக்கப்பட்டார். அன்று டயஸ் போராக்களின் சூழ்ச்சியும் நிறைவேறியது.

அன்று  பாராளுமன்றத்திலும் வட கிழக்கு இணைப்புக்கு எதிராக அதாஉல்லா குரல் கொடுத்து வந்தார். அவரது தோல்விக்குப் பின் இப்போது மீண்டும் வட கிழக்கு இணைப்பு பற்றிப் பேசப்படுகிறது. 

இவ்விடயம் பற்றி தைரியமாகும தெளிவாகவும் பேசுவதற்கு எந்தவொரு முஸ்லிம் தலைமையும் தயாரில்லை. இத்தலைமைகளின் பலவீனத்தின் காரணமாகவே இன்று வட கிழக்கு இணைப்பு தொடர்பில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இவ்வாறான சூழ்ச்சிகளை அறிந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா வட கிழக்கு இணைப்புக்கு எதிராக அண்மைக்காலமாக குரல் கொடுத்து வருகிறர். கிழக்கிலே பிறந்தவன் என்ற அடிப்படையில் அவர் எதிர்நோக்கிய கஷ்டங்களையும இன்னல்களையும் அனுபவ ரீதியாக சிந்தித்து வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்க அனுமதிக்க மாட்டேன் என பாராளுமன்றத்திலும் சூளுரைத்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெயந்த என்பவர் வட கிழக்கு இணைப்புக்கு எதிராக பிரேரணையொன்றை கிழக்கு மாகாண சபையிலே கொண்டு வந்த போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து கட்சிக்குழுக் கூட்டத்திலே இந்தப் பிரேரணையை எடுக்கக்கூடாது இது எங்களுடைய முதலமைச்சர் பயணத்தை தடைசெய்வதற்கான சூழ்ச்சியாகும் எனக்கூறி பிரேரணையை அவர்கள் தூக்கி வீசிவிட்டார்கள்.

குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய உறுப்பினரும கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான துரைராச சிங்கம் அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திலே வைத்து வட கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென பகிரங்கமாக பேசுமளவிற்கு இன்று வடக்கிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரவல் ஊடுருவிக்கொண்டிருக்கிறது.

இணைந்த வட கிழக்கிலே எமது சமூகம் நிருவாக ரீதியாகவும கல்வி ரீதியாகவும சுகாதார ரீதியாகவும் எதிர்நோக்கிய பிரச்சிணைகளை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. அன்று புலிகளின் பின்புலத்தை வைத்துக்கொண்டு முஸ்லிம் சமூகத்தை அடக்கி ஆழ்வதற்கு ஒரு சிலர் முற்பட்டனர். குறிப்பாக எமது சமூகம் அடிமைச்சமூகமாக தமிழர்களால் ஆளப்பட்டு வந்தது. வடகிழக்கு இணைக்கப்பட்டிருந்த காலப்பகுதியிலேதான் துவேசம் தலைவிரித்தாடியது.

வடகிழக்கு இணைக்கப்பட்டிருந்த வேளையில் நோயாளிகளாக இருந்த எமது மக்களுக்கு சிகிச்சியளிப்பதிலும் பாரபட்சம் காட்டப்பட்டது. பல்கலைக்கழகங்களுக்கு செல்வதிலும் எமது மாணவர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது. நிருவாக ரீதியாகவும் அநீதி இழைக்கப்பட்டது. 

இவ்வாறன துவேசங்களால் அடக்கி ஆளப்பட்ட எமது சமூகத்திற்கு நல்லதொரு தீர்வைினை பெற்றுக்கொடுக்க வேண்டும். என்ற தூய சிந்தனையோடு மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் அரும்பாடுபட்டார்.

எமது சமூகத்தின் விடுதலைக்காக மறைந்த பெருந் தலைவரின் முயற்சியினால் முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கென்று தனியான பிரதேச செயலகங்கள பல்கலைக் கழகங்கள வைத்தியசாலைகள் என பல்வேறு அபிவித்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அன்று இணைக்கப்பட்ட வட கிழக்கில் சிக்கிக்கொண்ட எமது சமூகத்துக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பதற்காக எமது தலைவர் பட்ட இன்னல்களை மறந்து இன்றைய முஸ்லிம் அரசியல் தலைமைகள் அற்பசொற்ப இலாபங்களுக்காக வடகிழக்கை இணைக்கத் துணைபோயுள்ளார்கள்.

இன்று பிரிக்கப்பட்டிருக்கின்ற கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சிணைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. குறிப்பாக   ஏறாவூர் பிரதேசத்திலே இருக்கின்ற அப்பாவி முஸ்லிம்களுடைய காணிகள் சுமார் 20வருட காலமாக ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது.ஒரு துண்டுக் காணி கூட அந்தப்பிரதேச செயலகத்தினால் முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்திலே ஆயிரம் துவேசங்களும் வெட்டுக்குத்துக்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பிரிந்த கிழக்கிலே இவ்வாறான நிலமை என்றால் வடகிழக்கு இணைக்கப்பட்டால் எமது சமூகத்தின் நிலமை என்னவாகும்.
வட கிழக்கு இணைந்தால் என்னவென்று பேசுமளவிற்கு  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் நிலை மாறியிருக்கிறது.

கிழக்கு இணைந்தால் என்ன நாங்கள் எங்களுடைய பலத்தோடுதானே இருப்போம் முதலமைச்சரையும் நாங்கள் கைப்பற்றலாமே என்ற முதலமைச்சர் மாயைக்குள் அக்கட்சி உறுப்பினர்கள் சிக்குண்டுள்ளார்கள். எனவே வட கிழக்கு இணைப்பிற்கு அக்கட்சியின் தலைமையும உறுப்பினர்களும் துணைபோயுள்ளார்கள் என்றவிடயத்தினை எமது சமூகத்திற்கு தெளிவாகச் சொல்ல வேண்டிய காலம் உருவாகியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
 
டயஸ்போராக்களின் சூழ்ச்சியினாலே அதாஉல்லாவின் தோற்கடிக்கப்பட்டார்.... டயஸ்போராக்களின் சூழ்ச்சியினாலே  அதாஉல்லாவின் தோற்கடிக்கப்பட்டார்.... Reviewed by Madawala News on 9/07/2016 12:15:00 AM Rating: 5