tg travels

நல்லாட்சி மீள்பரிசீலனை செய்யவேண்டிய தேவையில் உள்ளது...

(எம்.ஏ.றமீஸ்)

நல்லாட்சி அரசாங்கத்தில்  அடாவடித்தனங்களும் அட்டகாசங்களும் புரிகின்ற அமைச்சர்களை தொடர்ந்தும் தமது அமைச்சரவையில் வைத்துக் கொண்டிருப்பதா இல்லையா? ஏன்பது பற்றி மீள் பரிசீலனை செய்ய வேண்டிய தேவையில் உள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் ஏற்பாட்டில் இன்று(07) அந்நாரின் அக்கரைப்பற்றுக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்கடந்த ஆட்சிக்காலத்தில் அட்டகாசங்களும் அடாவடித்தனங்களும் புரிந்த அரசியல்வாதிகளை மக்கள் நிராகரித்து விட்டு புதியதோர் நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்கினார்கள். தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற தோரணையிலேயே மக்கள் இந்நல்லாட்சி அரசாங்கத்தினைத் தோற்றுவித்தார்கள்.

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இந்நல்லாட்சி அரசாங்கத்திலும் கடந்த கால அராஜகம் மிக்க நிலை தொடர்கின்றதாஅல்லது நல்லாட்சி மிக்க அரசாங்கத்தினையும் மீறி அமைச்சர்கள் சிலரின் இவ்வாறான அத்துமீறல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதா என்று மக்கள் கேட்கின்ற அளவிற்கு சூழல் மாறியிருக்கின்றது. மக்களின் எதிர்பார்ப்பு மிக்க நல்லாட்சி அரசாங்கத்தில் அட்டகாசங்கள் புரிகின்ற அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

கடந்த முதலாந்திகதி அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி நூலகமென்றை தாங்களே திறக்க வேண்டும் என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அவரின் ஆதரவுக் குழுவினர் அத்துமீறி அட்டகாசம் புரிந்து அங்கிருந்த சுமார் ஐந்து இலட்சம் பெறுமதியான உடமைகளை நாசப்படுத்தியுள்ளார்கள். கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சின் அதிகாரத்தின் கீழ் உள்ள நூலகமொன்றுக்குச் செல்ல வேண்டுமாக இருந்தால் உரிய நடைமுறையில் அங்கு செல்ல வேண்டும். மத்திய அரசின் அமைச்சர் ஒருவர் இவ்வாறு மாகாண அதிகாரத்தினைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வது சட்டத்தின் முன் குற்றமான செயலாகும்.

கடந்த முதலாந்திகதி அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு அட்டாளைச்சேனையில் நடைபெற்ற நடமாடும் சேவைக்காக நூலக உத்தியோகத்தர்கள் சென்றபோது மாவடிப்பள்ளியில் மூடப்பட்டிருந்த நூலகமொன்றை திறக்க வேண்டும் என்ற தோரணையில் தமது ஆதரவாளர்களுடனும் அடியாட்களுடனும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சென்றுள்ளார். இவ்வாறு சென்ற குழுவினர் அடாவடித்தனமாக நூலகத்தின் உடமைகளை வேண்டுமென்றே உடைத்துச் சேதமாக்கியுள்ளனர். பொதுமக்களின் சொத்துக்களை சேதமாக்குவதில் முன்னிற்கும் அரசியல் தலைவரான அமைச்சர் ரிஷாதின் அடாவடித்தனம் மிக்க அரசலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

வன்முறை கலந்த அரசியலை ஊக்குவிப்பதில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைதேர்ந்த வல்லவர். அவரின் ஆரம்ப கால அரசியல் தொட்டு இன்று வரை அவர் இவ்வாறான அராஜகம் மிக்க அரசியலையே செய்து வருகின்றார். மன்னார் நீதிமன்றத்திற்கு கல்லெறிந்த சம்பவமானது அவரின் அடாவடித்தனம் மிக்க அரசியலை உலகறியச் செய்தது. இது தவிர தலைமன்னாரில் உள்ள ஒருவரின் தனிப்பட்ட காணியொன்றை தனது காணி என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அடாவடித்தனமாக அதனை விற்று பணமாக்கிய சம்பவமும் உள்ளது. இப்பிரச்சினை தற்போது நீதி மன்றம் வரை சென்று வழக்குத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இலந்தைக் குளத்திற்குச் செல்லும் வழியில் உள்ள பிரதேசத்தில் அமைச்சர் ரிஷாத் தனக்காக காணிகளை அபகரிக்க முற்பட்டதுடன் மர வியாபாரம் செய்ய முற்பட்டதாலேயே அங்கு பிரச்சினைகள் எழக் காரணமாக அமைந்தது. இவரின் தனிப்பட்ட விடயத்தின் நகர்வினால் நமது முஸ்லிம்களுக்கென்றிருந்த உண்மைக்குண்மையான காணிகளும் அவர்களுக்கு கிடைக்குமாஎன்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இதுதவிர பட்டாணி ராசிக்கின் விடயத்தோடு அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு தொடர்பிருக்கின்றது என்ற சந்தேகம் பல்வேறான ஊடகங்களில் பாரியளவில் வெளிவந்தது மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் பகிரங்கமாகவும் பரவலாகவும் பேசப்பட்து. இவ்வாறாக அவரின் வன்முறை கலந்த அரசியல் நடவடிக்கைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

எமது கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தின் கீழுள்ள நூலக உடைப்பிற்கு காரணமாக இருந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றமிழைத்துள்ளார். இவர் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும். இவ்விடயம் சம்பந்தமாக கிழக்கு மாகாண சபையில் உள்ள அமைவரும் ஏகோபித்த கருத்தில் உள்ளோம். அதற்கமைவாக இவ்விடயத்தில் தீர்க்கமான முடிவொன்றை எடுக்குமாறும் சட்ட ரீதியான நடவடிகையினையும் மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு அழுத்தங்களைக் கொடுத்திருக்கின்றோம்.

விட்டுக் கொடுப்புக்கள் இன்றி சம்பந்தப்பட்ட அனைவரும் இவ்விடயத்தின்பால் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் தண்டனையைப் பெற்றாக வேண்டும் என்று உறுதியான நிலைப்பாட்டுடன் நாம் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

நல்லாட்சி மீள்பரிசீலனை செய்யவேண்டிய தேவையில் உள்ளது... நல்லாட்சி மீள்பரிசீலனை செய்யவேண்டிய தேவையில் உள்ளது... Reviewed by Madawala News on 9/07/2016 01:32:00 PM Rating: 5