Yahya

பிரிவினைகளைத் தோற்றுவிக்கும் துற்குணங்களை வாழ்விலிருந்து களைவோம்...~அ(z)ஸ்ஹான் ஹனீபா~

பொறாமை, வஞ்சகம், புரிந்துணர்வின்மை, வரட்டு கௌரவம் மற்றும் விட்டுக்கொடுப்பின்மை என்பவையே மக்கள் மத்தியில் அதிகம் பிரிவினைக்குக் காரணிகளாக அமைகின்றன. 

உலகில் பிரச்சினையற்ற மனிதன் யாருமிருக்கமுடியாதளவு மனிதன் இடைக்கிடை பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் அமைப்பிலே தான் படைக்கப்பட்டுள்ளான். பிரச்சினைகளின் பொழுது மக்களில் ஒரு சாரார் அவற்றில் குளிர்காய எத்தனிப்பர், மறுபுறம் அவர்களில் மற்றுமொரு சாரார் பிரச்சினைகளுக்கான தீர்வினைக் காண்பதில் முனைப்போடு செயற்படுவர், இவ்வேளையில் பிரச்சினைக்குட்பட்டவன் இரு சாராரது கருத்துக்களிலும் ஆலோசனைகளிலும் சிக்கித் தவித்து பாடாபடுவதை  உணரமுடியும், ஓரளவு சிந்தித்து செயலாற்றும் மனிதன் எனில் பிரச்சினைக்கான காரணிகளைக் கண்டறிந்து அவை விஸ்வரூபமாக மாறும் முன் அவற்றிற்கான தீர்வினைத் தெரிந்து கட்சிதமாக முடிவுக்குக்கான வழிகளை அமைத்துக்கொள்ளவான்.

ஒரு மனிதனது முன்னேற்றத்தைக் காணுகையில் மற்றவன் பொறாமையினால் உள எரிச்சல் அடைந்து அவனை எவ்வாறாவது வீழ்த்தவேண்டும் என மன உறுதி கொள்கின்ற போது பிரிவினைக்கான கதவு தானாகவே திறந்துகொள்கிறது. வரட்டு கௌரவம், விட்டுக்கொடுப்பின்மை, புரிந்துனர்வின்மை என்பன பிரச்சினைகளை வரவழைக்கும் காரணிகளுள் முதல் இடங்களைப் பிடிக்கின்றன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவானதாகும். 

குறுகிய மனித வாழ்வில் மேற்குறித்த செயற்பாடுகளினால் அழகிய குருவிக்கூடு போன்று இருந்த அநேக குடும்பங்கள் இன்று பிரிந்து சின்னாபின்னமாகி நடுக்கடலில் தத்தளிப்பதைக் காணுகையில் உறுதியற்ற அடுத்த நொடிப்பொழுதைக் கொண்ட நாம் பெருமை, பொறாமை, வரட்டு கௌரவம், தற்பெருமை எனபனவற்றால் என்ன தான் சாதித்திடப் போகின்றோம் என எண்ணத் தோன்றுகிறது!  இறுதியில் இறைக் கோபத்தை சம்பாப்பதன்றி வேறொன்றும் மீதமாகப் போவதில்லை. 

அவ்வாறே அதீத எண்ணங்களும் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதில் முன்னிலை வகிக்கின்றன என்றால் மிகையாகாது; ஏனெனில் சூழ்நிலைக் கைதியான ஒருவரது செயலை வைத்து தாமாக மனதில் எழுந்தவற்றை அடிப்படையாகக் கொண்ட எண்ணங்கள் அதிக பிளவுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் காரணிகளாக தலைமை வகித்து நினையாதளவு விபரீதங்களுக்கும் உந்துகோளாக அமைந்துவிடும். இவ்வேளையில் மனதில் ஏற்பட்ட எண்ணத்திற்கான தெளவை சம்பந்தபட்டவனோடு மனந்திறந்து பேசுவதினால் மாத்திரமே பெற்றுக்கொள்ளமுடியும் இல்லையேல் விசாரனைக்குட்படுத்தப்படாத கலந்துரவாடாத அவ்வெண்ணங்கள பல விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 

எனவே பினக்குகளுக்கும், பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும் துற்குணங்களிலிருந்து விடுபட்டு தாராள மனதோடும் புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் நிறைந்த ஒற்றுமையான வாழ்க்கை வாழ முயற்சிப்போம்.

நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
24/09/2016
பிரிவினைகளைத் தோற்றுவிக்கும் துற்குணங்களை வாழ்விலிருந்து களைவோம்... பிரிவினைகளைத் தோற்றுவிக்கும் துற்குணங்களை வாழ்விலிருந்து களைவோம்... Reviewed by Madawala News on 9/24/2016 09:09:00 AM Rating: 5