Kidny

Kidny

அமைச்சர் றிஷாட் மீது முன்னாள் எம்.பி ஹூனைஸ் பாறூக் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயமானதா?


அக்கரைப்பற்றில் அண்மையில் இடம்பெற்ற அறிமுக விழாவில் 
தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர்,முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா உல்லா, வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹ-னைஸ் பாறூக்,கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம். எஸ்.உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர் எம்.சீ.எம்.சுபைர் சட்டத்தரணி எம்.என்.எஸ்.ஏ மர்ஸூம் மௌலானா, அஷ்ரஃப் மன்றத்தின் தலைவர் அஷ்ரஃப் அஸீஸ், கலைச் செல்வன், லேக்ஹவுஸ் நிறுவன தமிழ் வெளியீடுகளின் ஆலோசகர் எம்.ஏ.நிலாம், கிழக்கின் எழுச்சியின் செயலாளர் நாயகம் அஸூர் சேகு இஸ்ஸதீன் , முன்னாள் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் என பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களில் பலர் வரலாற்று ரீதியாக முஸ்லிம்கள் எதிர் கொண்ட துன்ப,துயரங்கள் அழிவுகள்,பெரும்பான்மை சமூகங்களால் இழைக்கப்பட்ட அநீதிகள்,ஆயுதக் குழுக்களாலும்,வர்க்க வாதிகளாலும் ஏற்பட்ட உயிர் இழப்புகள் தொடர்பாகவும்,

முஸ்லிம்களின் வாழ்வியலில் ஊடகங்களின் வகிபாகங்களும், ஊடகவியலாளர்களின் பங்களிப்புகள் தொடர்பாகவும் பேசிய விடயங்கள் வரவேற்கத் தக்க நிலையில்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சகோதரர் ஹ-னைஸ் பாறூக் அவர்கள் தாம் கலந்து கொண்ட நிகழ்வின் கருப்பொருளை விட்டு சறுகல் நிலையில் பேசத் தொடங்கினார். எனக்கு இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போது இதில் கலந்து கொள்ளத்தான் வேண்டுமா என்று யோசித்தவனாக இருந்த வேளை ..... இதில் கலந்து கொள்ளத்தான் வேண்டும். ஏனென்றால், கிழக்கில் அரசியல் சாணக்கியமும் கல்வி மற்றும் ஏனைய துறைகளில் பாண்டித்தியம் பெற்ற அறிஞர்கள் ஞானிகள் இருக்கின்ற பிரதேசத்தில் கிழக்குக்கு வெளியே இருக்கும் வன்னியைச் சேர்ந்த றிஷாட் பதியுதீன் இங்கு வந்து கிழக்கின் அரசியல் தலைமையை கைப்பற்ற முயற்சி எடுக்கின்றார்.அவரைப் பற்றி கொஞ்சம் இந்த மக்களுக்குச் சொல்ல வேண்டும்| என்று கூறி தமது உரையைத் தொடர்ந்தார்.

அமைச்சர் றிஷாட்டிடமிருந்து அரசியல் கற்றுக் கொண்ட சகோதரரின் பேச்சு குற்றச்சாட்டுக்களை அடிக்கிக் கொண்டே களை கட்டிச் சென்றது.

உண்மையிலேயே அமைச்சர் றிஷாட் பதியுதீனை துவம்சம் செய்யும் அளவுக்கு அவர் பேசினாலும் அவர் பல உண்மைகளைக் கூறினார்.

கிழக்கில் முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட வேண்டிய இக்கால கட்டத்தில் கிழக்கின் தலைமையை இவர் (றிஷாட்) கைப்பற்ற நினைக்கின்றார் என்றார்.

கடந்த பொதுத் தேர்தலில் கிழக்கு முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டதனால் தான் திருகோணமலை,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் எம்.பிக்களையும் திகாமடுல்லையில் அ.இ.ம.காங்கிரஸ் தனித்து நின்று 33000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. திருகோணமலையில் முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியடைந்தது.

கடந்த பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா பெற்ற 17000க்கும் மேற்பட்ட வாக்குகள்,ஐ.தே.க.வுக்கு முஸ்லிம்கள் வழங்கிய 18000க்கும் மேற்பட்ட வாக்குகள் எல்லாம் ஓரணியில் நின்றிருந்தால் திகாமடுல்லையின் நிலைமை தலைகீழாக மாறியிருக்கும்.

 

முஸ்லிம் காங்கிரஸ் அதன் தொடக்கமான பொதுத் தேர்தலில் 1989ஆம் ஆண்டு தனித்துப் பெற்ற சுமார் 62000 வாக்குகளைத்தான் ஹக்கீம் இன்று ஐ.தே.காவுடன் கூட்டு வைத்து பெற்றுள்ளார்.

1989 பெப்ரவரி பொதுத் தேர்தலில் மு.கா. பெற்ற வாக்குகளுக்குக் கிடைத்த ஆசனம் ஒன்று.

மு.காவின் சாணக்கியத் தலைவர் ஹக்கீம் கடந்த 27வருடங்களுக்கு முன்னர் இருந்த வாக்கு வங்கியையே இப்போதும் வைத்திருக்கின்றார்.இந்த அடிப்படையில் பார்த்தால் ஒரு வருடத்துக்கு முன்னர் கிழக்கில் கால் வைத்த றிஷாட் திகாமடுல்லையில் மு.காவின் வாக்கு வங்கியின் 50% அல்லது அரைவாசிக்கு மேல் தக்க வைத்துக் கொண்டது சாதணை இல்லையா சகோதரரே!

அமைச்சர் றிஷாட் தேசியத் தலைவராக முயற்சிக்கிறார் என்று மற்றுமொரு குற்றச்சாட்டு. மட்டக்களப்பு, திருமலை,வன்னி,அநுராதபுரம்,புத்தளம் ஆகிய மாவட்டங்களில் எம்.பிக்களையும் திகாமடுல்ல,குருநாகலை ஆகிய இடங்களில் ஒரு சில ஆயிரம் வாக்குகளால் எம்பிக்களை இழந்தாலும் அந்த மாவட்டங்களில் அ.இ.ம.கா அகலக் காலூன்றிய விடயம் சாதனை இல்லையா?

தனது சொந்த மாவட்டத்தைவிட (வன்னி) வெளிமாவட்டங்களில் தனது சொந்த சின்னத்தில் (மயில்) அதிகம் வாக்குகள் பெற்ற கட்சியின் தலைவரை ஏன் தேசியத் தலைவராகக் கூற முடியாது.

தேசியத்தலைவர் எனக் கூறப்படும் மு.கா தலைவர் கூட தனது சொந்த (கண்டி) மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட போதும், அமைச்சர் ஹலீம் அவர்களை விட கீழ் நிலையில் தான் வாக்கைப் பெற்றார்.

தேசியத் தலைவர் என மு.கா. போராளிகளால் கூறப்படுபவர் சாதாரண ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வாக்கை விட மேவிச் செல்ல முடியாமற் போய்விட்டதே. மேற்படி தலைவருக்கு அந்த நிலைமை ஏற்பட்டதனால்தான் கிழக்கு முஸ்லிம்கள் மட்டுமல்ல நாடு பூராவுமுள்ள முஸ்லிம்கள் றிஷாட்டை தேசியத் தலைவர் என்கின்றார்கள்.

சத்தியத் தேசியத் தலைவர் என்று ஏன் அமைச்சர் றிஷாட் அழைக்கப்படுகின்றார்? என்று கேள்வி எழுப்பினார் சகோதரர் ஹூனைஸ்.

சகோதரரே! எங்கள் ஊர் பகுதியில் ஹக்கீம் ஐயாவை நாங்கள் தேசியத் தலைவர் என்று முன்னர் அழைத்து வந்தோம், ஆனால் அந்த தலைவர் பகிரங்க மேடைகளிலும், ஊர் மக்களிடமும், பள்ளித் தலைவர்களிடமும் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி விடுவார். சிறு வயதில் பொய் பேசும் பிள்ளைகளுக்கு மூத்தம்மாமார் நாக்குல நெருப்புக் கொள்ளி வைப்போம் என்று கூறுவார்கள். இது ஹக்கீமுக்குப் பொருந்தும். ஆனபடியால், சொல்வதைச் செய்பவரும் செய்வதைச் சொல்பவருமான அமைச்சர் றிஷாட் உண்மையின் அடையாளமாக சத்தியத் தேசியத் தலைவர் என்று மக்களால் அழைக்கப்படுகின்றார்.

இப்படியான ஒரு தலைவர் நாட்டிலும், சர்வதேசத்திலும் உலா வருவதை நீங்கள் கூறுவது போல் அவர் விலை கொடுத்து வாங்கிய ஊடகங்களில் காணலாமே.

முப்பது இணையத் தளங்களை காசு கொடுத்து வாங்கியுள்ளார் என்று கூறினீர்கள் அதில் 10ன் பெயர்களையாவது கூறுங்கள் பார்ப்போம். நீங்கள் கலந்து கொண்ட நிஜம் இணையத்தளமும் இதில் அடங்குகின்றதா சகோதரரே!

நீங்கள் சொன்ன இணையத்தளங்களை கையகப்படுத்துவதற்கு நாம் அறிய பல தடவைகள் ஹக்கீம் முயற்சி எடுத்துள்ளார். அதில் ஒன்று தாறுஸ்ஸலாம் கட்சித் தலைமையகத்திற்கு சில இணையத்தள பொறுப்பாளர்களை அழைத்து ஆதரவுக் கரம் நீட்டினார்.

அடுத்ததாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று TFC ஹோட்டலில் பத்து, பனிரெண்டு இணையத் தளங்களின் பொறுப்பாளர்களை அழைத்து கலந்துரையாடலையும் நடாத்தினார். கேள்வி கேட்கக் கூடிய இணையத்தளப் பொறுப்பாளர்களை கலந்துரையாடலுக்கு அழைக்க வேண்டாம் என்பதும் ஏற்பாட்டாளர்களின் நிபந்தனையாகும்.

பயங்கரவாதத்தால் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு அமைச்சர் றிஷாட் எதுவும் செய்யவில்லை என்று கூறினீர்கள்.

நீங்களும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்துக்காக பென்ஷன் எடுக்கும் வரை வன்னியின் பிரதிநிதியாக இருந்துள்ளீர்கள். அப்படியானால் அம்மக்களுக்கு நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்.

வடபகுதியை விட்டு வெளியேறிய மக்கள் புத்தளத்தில் முடங்கிக் கிடக்கின்றார்கள் என்று பேசினீர்கள். 1994ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் புத்தளத்தைச் சேர்ந்த டாக்டர் இல்யாஸ் அவர்கள் யாழ் மாவட்ட பிரதிநிதியாக 2000ஆம் ஆண்டு வரை இருந்தவர்.புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சராக நமது பெருந் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் மற்றும் எஸ்.எம்.எம்.அபூபக்கர் வன்னியிலிருந்து தெரிவாகி விஞ்ஞான கைத்தொழில் பிரதியமைச்சராக இருந்தவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக பெருந்தலைவர் புனர்வாழ்வுக்காக வைத்திருந்த நிதி பற்றி நாங்கள் அறிவோம். அப்படிப்பட்டவர்களால் கூட நமது இடம் பெயர்ந்த அகதி சகோதரர்களுக்கு முழுமையாக உதவ முடியாமற் போனால்? எப்படி தனி ஒருவராக இருந்து கொண்டு பல்வேறுபட்ட சேனாக்களுக்கும், சமூகம் சார்ந்த பல சேனாக்களுக்கும் மத்தியில் சட்டப்படியும், அதன் ஓட்டல் ஒடிசல்களையும் மீறி பணியாற்றுவது உங்களால் பொறுக்க முடியவில்லையா?

வில்பத்து பிரச்சினைகளைப் பூதாகரமாக்கி தேர்தலில் வெற்றி பெற்றார் என்கின்றீர்கள். சகோதரரே உங்கன் கைகளை நெஞ்சில் வைத்தச் சொல்லுங்கள் நாட்டில் அந்த விடயம் பூதாகரமாகவில்லையா? வன்னி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றார் என்கின்றீர்கள். அப்படியானால் உங்களை அந்த மக்கள் ஏமாற்றியது ஏன்? வுழிகாட்டிச் சென்றவன் பாதையை நீங்கள் மண் போட்டு மூட முற்பட்டதற்காகவா?

அமைச்சர் றிஷாட் ஒரு வேலையைச் செய்தால் அளவுக்கதிகமாக விளம்பரம் செய்கின்றார் என்பது குற்றச் சாட்டு

பொது மக்களை இலகுவாகச் சென்றடைவதற்குரிய இலகுவான சாதனம் ஊடகம். அது பல கோணங்களில் உள்ளது.அப்படி இருக்க அரசியல்வாதியால் ஊடகம் இல்லாமல் காரியம் பார்க்க முடியுமா?

அமைச்சர் றிஷாட் காலத்துக்குக் காலம் நாடகம் ஆடித்தான் அரசியல் இருப்பைத் தக்க வைத்துள்ளார் என்று கூறுகின்றீர்கள்.

சகோதரரே! அவர் போட்ட ஜூலியர்ஸ் வேடத்தில் நீங்களும் ஸீஸராக நடித்திருப்பீர்கள் தானே!

இடம் பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் போது மோசடி இடம் பெறுவதாகவும், அமைச்சரின் ஆதரவாளர்களும் பயன் பெறுகின்றார்கள் என்று கூறுனீர்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் வீடுகளைக் கட்டிக் கொடுக்கின்றார் என்று கூறியதிலிருந்து அவருடைய சேவை பற்றி நீங்களே சாட்சி கூறுகின்றீர்கள். அத்துடன் தன்னை உயர் நிலைக்கு கொண்டு வருதற்குப் பாடுபடும் ஆதரவாளர்களுக்கு வருமான மார்க்கத்தையும் அவர் காட்டி இருப்பது அவரது நன்றி உணர்வை வெளிப்படுத்துகின்றது.

நீங்கள் கலந்து கொண்டு உரையாற்றிய ஊரின் பிரதேச எல்லைக்குள் இருக்கும் நுரைச்சோலைலையில் சவூதி அரசால் 2005ஆம் ஆண்டளவில் சுமார் (20) இருபது இலட்சம் ரூபா செலவில் கட்டப்பட்ட 500க்கும் அதிகமான வீடுகளும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளும் காடு பற்றிக் கிடக்கின்றன. எங்களை வழிநடாத்த வந்த சாணக்கியத் தலைவர் ஹக்கீம் எத்தனையோ அமைச்சுப் பதவிகளை வகித்த போதிலும் அதை உரிய மக்களுக்குப் பெற்றுத்தர முடியாமலிருக்கின்றது.

அமைச்சர் கடந்த ஆட்சிக் காலத்தில் எத்தனையோ இளைஞர் யுவதிகளுக்கு சமூர்த்தி தொடக்கம் மற்றும் பல தொழில்களை வன்னி மாவட்டத்ததுக்கு வழங்கியுள்ளார். இப்போதும் வழங்கிக் கொண்டிருக்கின்றார். வடக்கு மாகாணத்தில் பெருமளவு சேவை செய்து கொண்டு ஏனைய மாவட்டங்களிலும் பயனுறு சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கும் வன்னி மைந்தனை மனசாட்சிக்கு விரோதமாக வசைபாடுவது உங்கள் தகுதிக்கு தகுமானதன்று சகோதரரே!

அமைச்சர் றிஷாட் தானாக கிழக்கின் தலைமைத்துவத்தை ஒரு போதும் கேட்கவில்லை. ஆனால் மக்கள் அவரை தேசியத் தலைவராகப் பார்க்கின்றனர். மக்கள் அவரை கடலாகப் பார்க்கின்றனர்.நீங்கள் குட்டையாகப் பார்க்கின்றீர்கள்.அவ்வளவுதான்.

கிழக்கின் நிலையைப் பற்றி நாங்கள் கூறுகின்றோம், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் தேர்தல்களில் ஹக்கீம் தவிர்ந்த அனைத்து சக்திகளும் ஒன்று படும். அந்த ஒன்றிணைவு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் அடித்தளத்திலிருந்து உருவாகும் என்பதை காலம் பதில் சொல்லும்.

இம்முறை திகாமடுல்லையில் யானையின் வாலில் இழுபட்டுச் சென்றதனாலும் தயாகமகேயின் தோளில் நின்று அங்குசத்தை ஏந்திச் சென்றதனாலும் மு.கா.தப்பியது என்பதற்கு முடிவுகள் சான்றாகும்.

காலத்துக்குக் காலம் நமது நாட்டில் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் வழிகாட்டலில் ரி.பி.ஜாயா, சேர் றாசீக் பரீட், டாக்டர் பதியுதீன் மஹ்மூத், பெருந் தலைவர் அஷ்ரஃப், ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களையடுத்து வந்திருப்பவர் றிஷாட் பதியுத்தீன். இது அவரது பொற் காலம்.

இந்நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர் அதாஉல்லா பேசும் போது கூறியவை. நான் ஒரு முறை வன்னிக்குச் சென்றிருந்தேன். அங்கு போன போது என் நெற்றியில் கையால் அடித்தேன். எப்படிரா வாப்பா இத றிஷாட் கொண்டு முடிக்கப் போகின்றான்? எல்லாம் பற்றைக்காடுகள். பாதைகள் போடு முன் பற்றைக் காடுகள் அழிக்கப்பட வேண்டும். காடுகள் அழிக்கப்பட்ட பின் பாதைகள் போட வேண்டும். பாதைகள் போட்ட பின் மின்சாரம் போட வேண்டும். மின்சாரம் போட்ட பின் இடங்களை அடையாளப்படுத்த வேண்டும். பின்னர் மக்களுக்கு குடிலாவது கட்டிக் கொடுக்க வேண்டும். வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் செய்து முடிக்க பத்து வருடங்களாவது வேண்டும். றிஷாட்டுடன் நாம் எல்லோரும் சேர்ந்து அம்மக்களுக்கு உதவ வேண்டும்.

நாம் இங்கு (கிழக்கில்) இருப்பதைக் கொண்டு அபிவிருத்தி செய்கின்றோம். அங்கு அடித்தளமே இல்லை. இது தான் உண்மை நிலை.

அங்குள்ள மக்கள் மீண்டும் தாமாக வந்து குடியேறுவார்கள் என்றால் எல்லா விடயங்களும் தானாகவே முடியும். மக்களுக்கு விருப்பமில்லை. அவர்கள் கடந்த காலங்களில் பட்ட துன்ப துயரங்களை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருப்பதால் புத்தளம் போன்ற இடங்களில் குடியேறி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.(இது முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் உரையிலிருந்து பதிவு செய்யப்பட்டது)

ஆகவே சகோதரர் ஹூனைஸ் அவர்களே புத்தளம் மக்கள் அகதி முகாமில் முடங்கிக் கிடக்கின்றனர் என்றீர்கள். அவர்கள் சந்தோசமாக இருப்பதாக உங்களில் பேசிய அதாஉல்லா கூறுகின்றார். இவை யாவும் ஒரே மேடையில் நடந்த கதைகள்.

நமது சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு சீறிப் பாயும் சேனாக்களின் கர்ஜித்தல் ஒன்றும் ஓயப்போவதுமில்லை. நம்மைப் பாதுகாக்க அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான். இங்கேயே வாழ்வோம். நம் மண்ணிலேயே வீழ்வோம்.

நீங்கள் பெற்ற கல்வி, அனுபவம், நன்னோக்கம் எல்லாம் நம் சமூகத்துக்குப் பயன்பட வேண்டும். ரீ.பி.ஜாயா வந்தார் அடையாளம் தந்தார். சேர் ராஸீக் பரீட் நமக்கு முகவரி தந்தார். டாக்டர் பதியுத்தீன் வந்தார் கல்வியைத் தந்தார்.மாமனிதர் அஷ்ரஃப் வந்தார் எழுச்சியைத் தந்தார். அதாஉல்லா வந்து அபிவிருத்தியைத் தந்தார். இது றிஷாட்டின் காலம் இப்போது இருப்பவர்கள் பற்றி நமது சந்ததிகள் சொல்லட்டும்.

அமைச்சர் றிஷாட் மீது முன்னாள் எம்.பி ஹூனைஸ் பாறூக் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயமானதா? அமைச்சர் றிஷாட் மீது முன்னாள் எம்.பி ஹூனைஸ் பாறூக் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயமானதா? Reviewed by Madawala News on 9/24/2016 05:54:00 PM Rating: 5