Sunday, September 18, 2016

சிரியாவில் யுத்த நிறுத்தம்; மக்களை அழிக்கும் மற்றுமொரு சூழ்ச்சி ..

Published by Madawala News on Sunday, September 18, 2016  | 

-எம்.ஐ.முபாறக் -

சிரியாவில் இடம்பெற்று வரும் 5 வருட யுத்தத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தல் என்ற போர்வையில்  மற்றுமொரு சூழ்ச்சி  இப்போது அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த யுத்தத்தில் எதிர் எதிராக நின்று போராடி வரும் இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் நேற்று முன்தினம் திங்கள் கிழமை சிரியா முழுவதும் நடைமுறைக்கு வரும் வகையில் யுத்த நிறுத்தம் ஒன்றைப் பிரகடனப்படுத்தியுள்ளன.

இறுதியாக இந்த வருடம் பெப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட பகுதியளவிலான யுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்தே இப்போதைய யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 பெப்ரவரி மாத யுத்த நிறுத்தம்போல் இந்த யுத்த நிறுத்தமும் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையிலான யுத்த  நிறுத்தமாக அமைந்துள்ளதோடு ரஷ்யாவும் அமெரிக்காவும் இணைந்து எதிர்க்கட்சி சாரா ஆயுதக் குழுக்கள்மீது தொடர்ந்தும் தாக்குதல் நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாத யுத்த நிறுத்தத்தினால் சிரியா மக்கள் எந்தவித நன்மையையும் அடையாததுபோன்றே இந்த யுத்த நிறுத்தமும் அமையும் என்ற நிலை இருப்பதால் சிரியா மக்கள் இதை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை;இது குறித்து மகிழ்ச்சியடையவில்லை.மாறாக,மேலும் அச்சம்தான் அடைந்துள்ளனர்.

சிரிய ஜனாதிபதி பசர் அல் ஆசாத்தை பதவில் இருந்து விரட்டுவதற்காக  2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வேகமாக  ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது;பல ஆயுதக் குழுக்கள் உருவாகுவதற்கு அது வித்திட்டது.

சிரிய விடுதலை இராணுவம் என்ற பெயரில் உருவான ஆயுதக் குழு முதலில் ஆயுதப் போராட்டத்தைத் துவைக்கி வைத்து.அதன் பின் பல ஆயுதக் குழுக்கள் உருவாகின.அந்த வகையில்,சுமார் ஒரு லட்சம் ஆயுதப் போராளிகள் இன்று சிரியா அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.மறுபுறம்,சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற நாடுகளும் ஹிஸ்புல்லாஹ் ஆயுதக் குழுவும் களமிறங்கியுள்ளன.

இவ்வாறு ஐந்து வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்தம் 5 லட்சம் மக்களின் உயிரைக் குடித்துள்ளது.ஒரு கோடி 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.மேலும்,50 லட்சம் சிரியா மக்கள் சிரியாவுக்குள் சிக்கியுள்ளனர்.அவர்களுள் சுமார் 4.5 லட்சம் மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளனர்.

இப்படியான ஒரு பேரவலத்தை நிறுத்துவதற்காக ஐ.நாவும் சில நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டன.அதன் பலனாக 2012,2014 மற்றும் 2016 ஆகிய வருடங்களில்  யுத்தத்தில் ஈடுபடும் இரு தரப்புகளுக்கிடையில் ஜெனிவாவில் அமைதிப் பேச்சுக்கள் இடம்பெற்றன.அவை எதுவும் வெற்றிபெறவில்ல.

சமாதனப் பேச்சுக்கள் இவ்வாறு தோல்வியடைந்து கொண்டு சென்றதால் யுத்தம் மேலும் தீவிரமடையவே செய்தது.ரஷ்யாவின் ஆதரவு பெற்ற சிரியா அரசும் அமெரிக்க ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களும் சம பலத்தில் இருந்து வருவதால் இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது சிரமமாகவே இருக்கின்றது.

இந்த நிலையில்,மூன்று வருடங்களாக ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த அலெப்போ மாகாணம்  பெப்ரவரி மாதம் சிரியா அரசின் கைகளுக்கு வந்தது.இதுவே அப்போது உடனடியாக யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க தரப்பைத் தூண்டியது.

அமெரிக்காவும் ரஷ்யாவும் இது தொடர்பில்  கூடிப் பேசி பெப்ரவரி மாதம் யுத்தத்தை நிறுத்துவதற்கு முடிவு செய்தன.ஆனால்,அது முழுமையான யுத்த நிறுத்தமாக அமையவில்லை.அந்த யுத்த நிறுத்தத்தால் சிரியா அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான மோதல்கள் மாத்திரமே நிறுத்தப்பட்டன.

சிரியா அரசுக்கு எதிராகப் போராடும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் அல்-கைதா சார்பு அல்-நுஸ்ராவுடன் இணைந்ததான ஆயுதக் குழுக்கள் உள்ளிட்ட மேலும் பல ஆயுதக் குழுக்கள் இந்த ஒப்பந்தத்திற்குள் உள்வாங்கப்படவில்லை.சிரியா அரசுக்கு எதிராகப் போராடும் எதிர்க்கட்சிகள் சார்பு ஆயுதக் குழுக்களின் எண்ணிக்கையை விட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படாத ஆயுதக் குழுக்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

இதனால் அந்த ஆயுதக் குழுக்கள் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டன.ஆயுதக் குழுக்கள் மீதான தாக்குதல்கள் என்பதையும்விட மக்கள் மீதான தாக்குதல் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.பயங்கரவாதிகளை அழிக்கின்றோம் என்ற பெயரில் தினமும் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்;கொன்று குவிக்கப்படுகின்றனர்.

மறுபுறம்,துருக்கியும் இப்போது சிரியாவுக்குள் நுழைந்து ஐ.எஸ் மற்றும் குர்திஷ் குழுக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.இந்தத் தாக்குதலாலும் மக்கள்தான் கொல்லப்படுகின்றனர்.அத்தோடு,யுத்த நிறுத்தத்துடன் தொடர்புபட்ட தரப்புகள்கூட யுத்த நிறுத்தத்தை மீறின. இதனாலும் மக்கள்தான் அழிந்தனர்.

இவ்வாறானதொரு நிலையில்தான் மீண்டுமொரு யுத்த நிறுத்தம் நேற்று முன்தினம் திங்கள் கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பெப்ரவரி ஒப்பந்தம்போல்தான் இதுவும் அமைந்துள்ளது.ஆனால்,இதில் உள்ள வித்தியாசம் என்னவென்றால் இம்முறை அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒன்றிணைந்தே பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.இதற்கான ஒருங்கிணைப்பு நிலையம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.இதனால் மக்கள் அழிவு மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த யுத்த களத்தில் நிற்கும் வல்லரச நாடுகளினதும் அவர்களின் சகாக்களினதும் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கிலான இராஜதந்திர நகரவே இந்த யுத்த நிறுத்தம் என்பது உறுதி.இது வரை சுமார் 5 லட்சம் மக்கள் அழிந்துள்ளனர்.அந்நாட்டின் சனத் தொகையில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அனைவரையும் அழித்து அல்லது இடம்பெயரச் செய்து சிரியா பூஜ்ய சனத் தொகையை எட்டும்வரை யுத்தம் தொடரும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

 அங்கு இடம்பெறுவது ஆயுதக் குழுக்களுக்கும் அரசுக்கும் இடையிலான யுத்தமல்ல. இது ஒட்டுமொத்த மக்களையும் அழிக்கும் மாபெரும் சூழ்ச்சியாகும். இப்போது செய்துகொள்ளப்பாட்டிருக்கும் யுத்த நிறுத்த உடன்படிக்கையைப் பார்க்கும்போது இந்த சூழ்ச்சி மிகத் தெளிவாகத் தெரிகிறது.இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top