Wednesday, September 21, 2016

விக்னேஸ்வரனே பொறுப்புக்கூற வேண்டிவரும் !

Published by Madawala News on Wednesday, September 21, 2016  | 

-ஒட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
பெரும்பான்மை தமிழ்மொழி மாகாணங்களான வடக்கினதும், கிழக்கினதும் ஒன்றிணைப்பு, மற்றும் சமஷ்டி ஆட்சி விவகாரங்கள் என்பவற்றுக்கு வடமாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரனே பொறுப்புக்கூற வேண்டிவரும்  என்று கலைக்ககப்பட்ட வட-கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சரும், முஸ்லிம் தேசிய முன்னணியின் செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி, வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார். 

புனித ஹஜ்ஜுப்பெருநாள் ஒன்றுகூடலைத் தொடர்ந்து நடந்த முஸ்லிம் தேசியவாதிகளின் கூட்டம் மதினாபுரம், சேகு மலைச்சோலையில் நடைபெற்றபோது சேகு இஸ்ஸதீன் தொடர்ந்து கூறியதாவது: 

07.04.2016ல் வடமாகாண சபை சார்பாக முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் வடமாகாண சபையில் முன்மொழியப்பட்ட தேசிய இனப்பிரச்சினை தொடர்பான அரசியல் தீர்வு வரைபுகள் அச்சபையில் விவாதிக்கப்பட்டு அம்மாகாண சபை தமிழ் பிரதிநிதிகளால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. 

அந்த தீர்வு வரைபில், வடக்கு கிழக்கு ஒன்றிணைத்தலின்போது முஸ்லிம் தன்னாட்சி பிராந்திய சபை உருவாகும் என்றும் அந்த தன்னாட்சி பிராந்தியத்தின் நிலை, பரிமாணம், மற்றும் நியாயாதிக்க எல்லைகள் ஆகியன தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்டு முடிவு செய்யப்படவேண்டும் என்றும் ஏற்கப்பட்டுள்ளன. 

எந்த முஸ்லிம் அரசியல் அமைப்பையும் கலந்துகொள்ளாத நிலையில் வடமாகாணசபை உருவாக்கிய இந்த தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தில், வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் தனித்துவத்தையும், பிரத்தியேக அரசியல் அடையாளத்தையும் ஏற்றுக் கொண்டதில் வடக்கு கிழக்கு ஒன்றிணைத்தலின்போது முஸ்லிம் தன்னாட்சி பிராந்தியசபை உருவாகும் என்று தீர்வுத் திட்டத்தில்  சேர்த்துக்கொண்டிருப்பது விக்கியின் நீதி நியாயத்தில் முஸ்லிம்கள் வைத்திருந்த நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தியுள்ளது. 

எனினும், வடக்கு கிழக்கு ஒன்றிணைத்தல் என்ற நிபந்தனை நடைபெறாது விடுமானால் எவ்வாறான அதிகாரப்பரவலாகத்திற்கு இந்த இரண்டு மாகாணங்களும், இங்குள்ள இரண்டு தமிழ்மொழிச் சமூகங்களும் முகங்கொடுக்க நேரிடும் என்பதைப்பற்றி விக்கி எந்த சைக்கினையையும் செய்யாமல் விட்டிருப்பதும் ஒரு குறைபாடாகவே தெரிகிறது. 

வ/கி ஒன்றிணைக்கப்படாவிட்டால் வ/கி தமிழர்களுக்கும், வ/கி முஸ்லிம்களுக்கும் எவ்வெவ்விதமான அதிகார ஏற்பாடுகள் பொருத்தமாக இருக்கும் என்பதை முன்கூட்டியே சொல்வதில் வட மாகாண சபை சிக்கல்களை தவிர்த்துக் கொண்டதாக தெரிகிறது. 

அவ்வாறான குறைகளை தற்சமயத்திற்கு ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, மிக முக்கியமான விடயங்கள் பற்றி வடமாகாண சபையின் நிலைப்பாட்டை தெரிந்துகொள்ள வேண்டியிருப்பது வடக்கு கிழக்கின் இரண்டு தமிழ்மொழித் தேசியங்களினதும் மொத்த நன்மையை கருதிய தேடலாகவே இருக்கிறது. 

1956 ஆகஸ்ட் 19ல் திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் நான்காவது மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் நான்கு அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் ஒன்று இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கில் ஓர் சுயாட்சி தமிழரசை உருவாக்குவதென்பதாகும். 

அப்போது அந்த மாநாட்டில் கலந்துகொண்ட முஸ்லிம் உறுப்பினர்கள் வடகிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கும் அவ்வாறான அதிகாரப் பரவலாக்கத்திற்கான கோரிக்கையை முன்வைத்தனர். இந்த முஸ்லிம் உறுப்பினர்களுடைய கோரிக்கைக்கு இணங்கி அதுவரை ஓர் சுயாட்சி தமிழரசு என்ற கட்சியின் நோக்கத்தை ~~சுயாட்சித் தமிழரசும், முஸ்லிம் அரசும்|| என்றவாறு நான்கு அம்சக் கோரிக்கை மாற்றி அமைக்கப்பட்டது.

1956லேயே தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் தமிழர்களுக்கு சுயாட்சித் தமிழரசும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு சுயாட்சி முஸ்லிம் அரசும் என்று தமிழரசுக் கட்சியின் நான்காவது மாநாட்டில் எடுக்கப்பட்ட பிரசித்தி பெற்ற திருமலை தீர்மானம் இன்றைய வடமாகாண சபைக்கு தெரியாத விடயம் என்று எப்படி நம்புவது?.

~~தமிழ்பேசும் மக்கள் கோரும் சுயநிர்ணய உரிமை - அவர்களின் ஓர் அங்கமான முஸ்லிம் மக்களுக்கும் உண்டு என்ற உன்னத சனநாயக தத்துவத்தின் அடிப்படையிலே அம்முடிவு செய்யப் பட்டதாக அன்று தமிழரசுக் கட்சி தெரிவித்திருந்தது.

அந்த உன்னத சனநாயகத் தத்துவத்தின் அடிப்படையை வடமாகாண சபை அங்கீகரிக்கவில்லையா? அல்லது தமிழ்பேசும் மக்களின் ஓர் அங்கம் முஸ்லிம் மக்கள் என்று அன்று தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொண்டதை வடமாகாணசபை இன்று நிராகரிக்கின்றதா? 
இந்த இரண்டு கேள்விகளுக்கும் வடமாகாண சபையின் பதில் ~~இல்லை|| என்பதாக இருக்குமானால் வஃகி தமிழர்களுக்கு சமஷ்டி ஆட்சிக்கும் வஃகி முஸ்லிம்களுக்கு தன்னாட்சி பிராந்திய சபைக்குமான தீர்வு வரைபுகளை முன்வைக்க வடமாகாண சபைக்கு எப்படி மனது வந்தது?

அதுவும் ஒரு புறம் இருக்க, தமிழர் விடுதலைக் கூட்டணியின் 1977 தேர்தல் விஞ்ஞாபனம் பற்றிக் கூட வடமாகாண சபை எதிவும் அறிந்திருக்கவில்லையென்று எப்படி எடுத்துக் கொள்வது?

அந்த விஞ்ஞாபனத்தின் பிரிவு 2இல் அரசியல் அதிகாரம் பன்முகப்படுத்தப்படுவதுடன் எந்த ஒரு பிரதேசமோ அல்லது எந்தவொரு சமயமோ மற்றொரு பிரதேசத்தை அல்லது சமயத்தை அடக்கி ஆள்வதற்கு வாப்ப்புக் கிடைக்காதவிதத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் வாழ்ந்துவரும் மக்களுக்கென சுவிட்சர்லாந்தில் உள்ளதைப்போல ஒரு சமஷ்டி ஆட்சிமுறை நிறுவப்படும். 
குறிப்பாக தமிழீழ அரசில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினாராக வாழ்ந்து வரும் பிரதேசங்களில் ஒரு சுயாட்சிமுறை ஏற்படுத்தப்படும்.
 
தமது விருப்பத்தின் பேரில் பிரிந்து செல்லும் அடிப்படையில் அவர்களுடைய சுயாதீனத்தை பாதுகாப்பதற்கும் தமிழர் விடுதலைக்கூட்டணி உத்தரவாதம் அளிக்கிறது|. என்று அன்று நகமும் சதையும்போல், தமிழரும், முஸ்லிம்களும் ஒட்டுறவாடிக்கொண்டிருந்த காலத்திலேயே 1977ல் தமிழர் விடுதலைக்கூட்டணி உத்தரவாதமளித்துள்ளது. 
இந்த உத்தரவாதம் பற்றி இன்றைய வடமாகாண சபைக்கு எதுவுமே தெரியாதா? தமது விருப்பத்தின் பேரில் பிரிந்து செல்லுவதை முஸ்லிம்கள் கற்பனைகூட பண்ணிப் பார்த்திராத அந்தக் காலத்திலேயே  அதற்காக தமிழரசுக் கட்சியால் அளிக்கப்பட்ட வாக்குறுதியையும், தமிழர் விடுதலைக் கூட்டணியினால் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தையும் நிறைவேற்றிப் பார்க்கும் எண்ணம்கூட அன்று முஸ்லிம்களுக்கு இருந்ததில்லை.
 
1990 ஓக்டோபர் இறுதியில் வடமாகாணத்தில் வாழ்ந்துவந்த அத்தனை முஸ்லிம்களையும் வடமாகாணத் தமிழர்கள், வடமாகாணத்தை விட்டும் விரட்டி அடித்ததுவும், 1985ல் இருந்து கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கிழக்கு தமிழர்களால் அடக்கி ஆளப்பட்டதுவுமாகச் சேர்ந்துதான் இன்று வஃகி முஸ்லிம்கள் தமது விருப்பத்தின் பேரில் பிரிந்து செல்லும் தெரிவை தேடிக்கொள்ளவேண்டி நேரிட்டது என்பதை வடமாகாணசபை மறுக்க முடியுமா? 

எனவே மேற்காட்டிய தமிழரசுக் கட்சியின் வாக்குறுதியும், தமிழர் விடுதலைக்கூட்டணியின் உத்தரவாதமும் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கான தனித்த பிரத்தியேகமான சமஷ்டி ஆட்சியேயே வலியுறுத்துகின்றன. எனவே தமது தீர்வுத் திட்டத்தில் வடமாகாண சபை 
வஃகி தமிழர்களுக்கென ஒரு சமஷ்டி ஆட்சியை கோரியுள்ளதைப்போல வஃகி முஸ்லிம்களுக்கும் ஒரு பிரத்தியேகமான சமஷ்டி ஆட்சியை வடமாகாணசபை கோரியிருக்க வேண்டும். 

அதைவிட்டுவிட்டு தமிழர்களுக்கு சமஷ்டி ஆட்சியும், முஸ்லிம்களுக்கு தன்னாட்சி பிராந்திய சபைக்குமான கோரிக்கைகளை வடமாகாண சபை முன்வைத்திருப்பது வஃகி. இல் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம்களை கீழ்நிலையிலும், வஃகி. இல் பெரும்பான்மையினராக இருக்கும் தமிழர்களில் தங்கியிருக்கும் வகையிலும் வடமாகாண சபையின் தீர்வுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதனால் வஃகி முஸ்லிம்கள் தமிழர்களின் முன்மொழிவுகளை ஒருமித்த குரலில் நிராகரிக்கின்றனர். 

1945ல் அதிகாரத்தை நாட்டு மக்களுக்கு கையளிப்பதற்குரிய நேரம் வந்தபோது அப்போதைய அமைச்சரவையானது புதிய அரசியல் அமைப்புக்காக தமது சொந்த முன்மொழிவுகளை சமர்ப்பித்த போது மேற்சொன்னவற்றையே காரணம் காட்டி தமிழர்கள் ஒருமித்த குரலில் நிராகரித்ததை வடமாகாண சபை தனது தீர்வு வரைபு கைநூலிலேயே வெளிப்படுத்தியுள்ளது. அன்று அவர்கள் உங்களுக்குச் செய்ததை இன்று நீங்கள் இவர்களுக்குச் செய்யலாமா? இரண்டுக்குமிடையே எந்த வேறுபாடும் கிடையாது. 

வஃகி இணைப்பையே நேரடியாகப் பாதிக்கின்றன இந்தக் குறைபாடுகளிலிருந்து வடமாகாண சபை  முதலில் தன்னை விடுவித்துக்கொண்டு, வஃகி இல் தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தமிழ்களுக்கு ஒரு சஷ்டி ஆட்சியும், முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு ஒரு சமஷ்டி ஆட்சியும் என்று தமது தீர்வுத் திட்ட வரைபை திருத்தி வெளிப்படுத்த வேண்டும். 
முஸ்லிம் தன்னாட்சி பிராந்திய சபை என்ற பெயருக்குப் பதிலாக முஸ்லிம் சமஷ்டி ஆட்சி என்று திருத்திக்கொள்ளுவது மட்டும் தான் செய்ய வேண்டி உள்ளதெல்லாம். அவ்வாறு செய்து விட்டு எந்த மனக்கிலேசமும் இல்லாமல் வடக்கு கிழக்கின் முழுத்தமிழ்மொழிப் பிரதேசங்களிலும், தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வடக்கு கிழக்கு தமிழ்பேசும் இரண்டு தேசியங்களினதும் அபிலாஷைகளை வென்றெடுக்கும் செயற்பாடுகளில் ஒருமித்து இறங்க வேண்டும்.

இவ்வாறு செய்யப்படுமானால் கிழக்கு பிரிவினைவாத கெடுபிடிகள் அத்திவாரமில்லாமல் ஆட்டம் கண்டுவிடும். 
வஃகி முஸ்லிம்களுக்கு சமஷ்டி ஆட்சி வழங்கக்கூடாது என்ற தவறான இறுமாப்பில் வடமாகாணசபை தனது குறைபாடுள்ள தீர்வுத் திட்டத்தையே முன்னெடுக்க நாட்டம் கொள்ளுமானால், அது கிழக்கு முஸ்லிம்களை மட்டுமல்லாது, கிழக்கு தமிழர்களையும் பலிக்கடாக்களாக்கும் நிலைக்கே தள்ளிக் கொண்டு செல்லும். 

வடக்கு கிழக்கு இணைப்புக்கும், தமிழ் தேசியத்தின் வடக்கு கிழக்கிற்கான சமஷ்டி ஆட்சி அபிலாசைக்கும், கிழக்கு தமிழ் மொழி மக்களின் அதிகாரப் பரவலாக்கத்திற்கும் வேட்டு வைத்த பழியையும், பாவத்தைம் வடமாகாண சபையே தூக்கிச் சுமக்கவேண்டி வரும். 

இந்த உபதேசம் சகல முஸ்லிம் கட்சிகளுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் சேர்த்துத்தான் செய்யப்படுகிறது.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top