Oceas

கிழக்கு மாகான பட்டதாரி ஆசிரியர்களின் அவலநிலைக்கு தீர்வு கிடைக்குமா?


இதுவரை காலமும் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் போது வெற்றிடம் நிலவுகின்ற பாடத்திற்கேற்றவாறு விண்ணப்பங்கள் கோரப்பட்டு அக்குறிப்பிட்ட பாடம் குறிப்பிடப்பட்டே நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டு வந்துள்ளது. அதாவது கணித பாட ஆங்கிலபாட ஆசிரியர் நியமனம் எனக்குறிப்பிட்டே நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டு வந்துள்ளது. 

இலங்கையிலுள்ள மாகாண அமைச்சு நியமனங்களாயிருந்தாலும் மத்திய அரசு நியமனங்களாக இருந்தாலும் இந்நடைமுறைகளே இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.

ஆனால் ஏனைய மாகாணங்களைவிட கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் வழமைக்கு மாற்றமாக  2008ல் வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனத்தினூடாக புதிய வகையான ஆசிரியர் நியமனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.அதுதான் 'பட்டதாரி ஆசிரியர் நியமனம்'. எந்தவொரு பாடமும் குறிப்பிடப்படாது வெறுமனே பட்டதாரி ஆசிரியர் நியமனம் எனக்குறிப்பிட்டு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் எந்தப் பாடசாலையில் பட்டதாரி பாடம் கற்பிக்கப்படுகின்றதோ தெரியவில்லை.

இந்நியமனத்தின் மூலமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சாதாரண சுகாதார தொழிலாளி ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய தொழில் திருப்திகூட இல்லாத நிலையிலேயே காணப்படுகின்றனர்.

மேற்குறிப்பிடப்பட்ட ஆசிரியர் நியமனமானது, 2007.03.16ம் திகதி கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விளம்பரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட பாட பிரிவுக்குத் தேவையான தகைமைகளைப் பூர்த்தி செய்து,போட்டிப் பரீட்சையின் மூலம் பெறப்படும் புள்ளிகளுக்கேற்ப முன்னுரிமை அடிப்படையில் விருப்பத்தெரிவின் பிரகாரம் குறித்த பாடம் வெற்றிடமாக்கக் காணப்பட்ட பாடசாலைகளுக்கே ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது. எனினும் அந்நியமனக் கடிதத்தில் விண்ணப்பித்த ஆசிரிய வகுதி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
 
நியமனக் கடிதத்தில் பாட வகுதி குறிப்பிடப்படாததினால் நியமனம் கிடைக்கப்பெற்ற பாடசாலையின் தன்மைக்கேற்ப வேறு பாடங்களை கற்பிப்பதற்கான தகைமையில்லாத நிலையிலும் அப்பாடசாலையின் அதிபர்கள் மற்றும் வலயக்கல்வி அதிகாரிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாக பொறுத்தமற்ற துறைகளுக்குக் கற்பிக்க குறித்த ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்கள்.அதாவது விஞ்ஞான, வர்த்தக பட்டதாரிகள் ஆங்கில பாடத்திற்கு விண்ணப்பித்து அப்பாடம் வெற்றிடமாகக் காணப்பட்ட பாடசாலைக்கு நியமனம் கிடைக்கப்பெற்ற போதும் நியமன வகுதி குறிப்பிடப்படாததன் காரணத்தினால் ஆரம்பப் பிரிவுக்குக் கற்பிக்கவேண்டிய நிலை.
 
இதனால் இவ்வாசிரியர்கள் பல்வேறு அசௌகரிகங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக அவர்கள்  கீழுழைப்பு நிலையிலேயே தொடர்ந்தும் கடமையாற்ற வேண்டியுள்ளது.
மேலும் இந்நியமனமானது விளம்பரப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு விதி முறைகளுக்கு முரணானதாகும். அத்துடன் பாடம் குறிப்பிடப்படாத இத்தகைய ஆசிரியர்கள் ஆளனிக் கணிப்பீட்டில் எத்தகைய பாட வகுதிக்கும் உட்படுத்த முடியாத நிலை காணப்படுவதுடன் நிலையான பாடவகுதி ஒன்று இல்லாமையின் காரணமாக இலங்கை கல்வி நிருவாக சேவை போன்ற உயரிய பதவிகளுக்கான போட்டிப் பரீட்சைகளுக்கும் விண்ணப்பிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
 
பொறுப்புவாய்ந்த நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான பிழைகளினால் மாணவர்களின் கற்றல் செயற்பாடு பாதிக்கப்படுவது மாத்திரமன்றி இவ்இவாசிரியர்களின் அடிப்படை உரிமையும் இதனால் மீறப்பட்டுள்ளது.
 
 
இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்தும் பராமுகமாகக் காணப்படுவது ஏனோ? அண்மையில் கிழக்குமாகாண கல்வி அமைச்சரும், மாகாணக் கல்விப்பணிப்பாளர் அவர்களும் கிழக்குமாகாண கல்வியானது பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தமையை இங்கு சுட்டிக்காட்டவேண்டியுள்ளது.
 
இந்நியமனத்திற்குப் பின்னர் 2012, 2014 காலப்பகுதியில் போட்டிப் பரீட்சையின்றி வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனத்திற்கும் மற்றும் உதவி ஆசிரியர் நியமனத்திற்கும்கூட ஆசிரிய வகுதி குறிப்பிடப்பட்டே நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
கல்வி அபிவிருத்தி, கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களானது அடிப்படையில் இவ்வாறான முரண்பாடுகளை வைத்துக்கொண்டு அடைவது அசாத்தியமே. உரிய துறைகளுக்கென தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களை அத்துறைகளுக்குப் பயன்படுத்தாமல் பொருத்தமற்ற துறைகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் எவ்வாறு கல்விக் குறிக்கோல்களை அடைய முடியும்.
 
 
 
எனவே சம்மந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் இவ்விடயத்தின் ஆழத்தினை கருத்திற் கொண்டு இவ்வாசிரியர்கள் எந்தப் பாடத்திற்காக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டார்களோ அப்பாடம் குறிப்பிடப்பட்ட நியமனக்கடிதத்தை வழங்கி அவர்களை அத்துறைகளுக்குப் பயன்படுத்துவதற்கும் உரிய தகைமைகளைக் கொண்டிராமலும் அத்துறையில் பாண்டித்தியமில்லாதவர்களைக் கொண்டு மாணவர்களின் கல்விச் செயற்பாடு பாழ்படுத்தப்படுவதிலிருந்தும் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
 
 
கிழக்கு மாகான பட்டதாரி ஆசிரியர்களின் அவலநிலைக்கு தீர்வு கிடைக்குமா?  கிழக்கு மாகான பட்டதாரி ஆசிரியர்களின் அவலநிலைக்கு தீர்வு கிடைக்குமா? Reviewed by Madawala News on 9/01/2016 08:15:00 PM Rating: 5