Tuesday, September 6, 2016

கொள்கையளவில் முரண்பாடுகள் இருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறீ லங்கா சுதந்திரக்கட்சிகளுக்கு நாட்டிற்காகப் பயணிக்கும் இப்பயணத்தை நிறுத்த முடியாது ..

Published by Madawala News on Tuesday, September 6, 2016  | 


"சென்ற பொதுத் தேர்தலில், நாங்கள் தனிக்கட்சியாக ஆட்சியமைப்பதற்குரிய சந்தர்ப்பத்தை மக்கள் தந்திருந்தாலும், ஜனாதிபதியினதும், பிரதமரதும் நோக்கமாக இருந்தது, இந்த நாட்டை சரியான திசையில் பயணிக்கச் செய்வதாகும். மிகவும் கடினமான அப்பயணத்தில், ஒன்றுக்கு ஒன்று எதிரான கொள்கைகளையுடைய இரு கட்சிகள் ஒன்றாகப் பயணிக்கும் இவ்வேளையில் கொள்கை முரண்பாடுகள் அதிகம் ஏற்படுகின்றன. தேசிய ரீதியிலான இலக்கை நோக்காகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பயணத்தை நிறுத்திவிட முடியாது." என்று அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தின் (CMA) ஸ்தாபக தினத்தை முன்னிட்டு இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்ற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், "தேசிய அரசாங்கம் என்ற வகையில் எமது இலக்கு, தயாரிப்புத் துறையில் வளர்ச்சியடைவதாகும். இவ் அபிவிருத்தியை முன்னெடுக்கும் போது, தேர்தலை மாத்திரம் இலக்காகக்கொண்டு செயற்படும் திட்டங்கள் மூலம் மாத்திரம் வெற்றி பெற முடியாது. இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்டே எமது அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்நோக்கத்தை அடைய வேண்டுமென்றால், சமூகம் கல்வியில் சிறந்த சமூகமாக மாற வேண்டும். இது வரை இருந்த அரசாங்கங்கள் இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ளவில்லை. 

உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் தமது தேசிய வருமானத்தில், கல்விக்காக 10% முதல் 12% வரை ஒதுக்கும் போது, 2014 ஆம் ஆண்டு இருந்த அரசாங்கம் ஒதுக்கியது 1.8% மாத்திரமே. கல்வியின் அவசியத்தயே புரிந்துகொண்டதாலேயே எமது அரசு வரலாற்றில்  முதன்முறையாக தேசிய வருமானத்தில் 6% கல்விக்காக ஒதுக்கியது. நாட்டின் அபிவிருத்தியைப் போன்றே, கல்விக்கும் தனியார் துறையின் பங்களிப்பு அவசியமாகிறது. இது போன்ற நிறுவனங்களால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களால், நாட்டிலுள்ள புத்திஜீவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதனுள்ளே பாரியளவு இளைஞர், யுவதிகள் உள்வாங்கப்படுகின்றனர். இது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் இன்றியமையாதது. 

இன்று நாட்டில் அதிகமானோர் எதிர்பார்ப்பது அரச தொழில் ஒன்றையாகும். அவ்வாறானவர்களிடம் ஏன் என்ற கேள்வியைாக் கேட்டால் சொல்வார்கள், ஓய்வூதியம் பெற முடியும் என்பதால் அரச துறையை விரும்புகிறோம் என்று. இன்னும் சிலர் சும்மா இருந்து மாதாந்த சம்பளம் பெறுவதற்காகவும் அரசதுறைக்கு வருகின்றனர். இன்று எமது அரச சேவையில் 14 இலட்சம் பேர் உள்ளனர். இது மிகவும் அதிகமானது. வளர்ச்சியடைந்த நாடுகளிலுள்ள அரச துறையினரின் வீதாசாரத்தை விட எமது வீதாசாரம் அதிகம். எமது தேசிய வருமானத்தின் பெரும்பகுதி அரச ஊழியர்களின் சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் ஒதுக்கப்படுகிறது. இந்நிலை தொடர்வது சரியல்ல. இந்நிலையைப் புரிந்து கொண்டதாலேயே ஜனாதிபதியும் பிரதமரும் அரச சேவை மாற்றங்களுக்கு உட்படும் என்று கூறியுள்ளனர். இம்மாற்றம் படிப்படியாகக் கொண்டுவரப்படும். 

இதற்குச் சமாந்தரமாக தனியார் துறையை, நாட்டின் அபிவிருத்திக்காக அதிகமாக பயன்படுத்தவேண்டியுள்ளது. அதன் மூலம் உற்பத்திப் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தின் இந்த முயற்சியின் மூலம், அறிவுத்திறன் மிக்க இளைஞர் அணியொன்றை நாட்டிற்கு வழங்க முடியும். அதே போன்று நாட்டின் முன்னேற்றத்திற்கு சிறந்த தளமாக அமையும் எனவும் நம்புகிறேன்."

இந்நிகழ்வில் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் லக்ஸ்மன் ஆர் வடவல உள்ளிட்ட நிறுவனப் பிரதானிகளுடன், புலமைப்பரிசில் பெறும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சமூகமளித்திருந்தனர்.

- கஹட்டோவிட்ட ரிஹ்மி -


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top