Wednesday, September 21, 2016

இறைவனைத் தவிர எவருக்கும் பயப்படவும் இல்லை எத்தனை குற்றச்சாட்டுக்களை என் மீது அடுக்கினாலும் நான் கதி கலங்கப்போவதும் இல்லை...

Published by Madawala News on Wednesday, September 21, 2016  | 

– சுஐப்.எம்.காசிம் –

அகதி என்ற வார்த்தை எழுதுவதற்கும் பேசுவதற்கும் எளிதாக இருந்தாலும் அதனை அனுபவிக்கும் போது தான் உண்மையான கஷ்டம் விளங்கும். அகதி என்ற பட்டத்தை தாங்கிக் கொண்டு காலம் கடத்துவது எவ்வளவு கஷ்டமானது என்பதை நானும் அனுபவ ரீதியாக உணர்ந்தவன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் பொற்கேணியில் இடம் பெற்ற ஹஜ் விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்;


மன்னாரில் இருந்து 90ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தமது பிரதேசங்களில் குடியேறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் முசலிப் பிரதேச மக்களும் குடியேற முனையும் போது பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். நானும் இந்த மாவட்டத்தில் இருந்து 18 வயதிலே அகதியாக சென்றவனே. அகதி முகாமில் வாழ்ந்து கல்விபெற்று, பின்னர் தொழில் பெற்று, அரசியலுக்குள் உந்தப்பட்டேன் அகதி முகாம் வாழ்வின் போது ஏற்பட்ட கசப்பான, வேதனையான சம்பவங்களே அரசியலுக்குள் நுழைய வேண்டும் என்ற ஆசையை தூண்டியது.

வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அகதிச் சமுதாயத்தின் விடிவுக்கு அரசியல் தான் சிறந்த வழி என்பதை நம்பியே அரசியல் செய்தேன். அகதியாக தென்னிலங்கைக்கு சென்ற எனக்கு அமைச்சராக சொந்த மாவட்டத்துக்கு வருவதற்கான சந்தர்ப்பத்தை இறைவன் எனக்கு வழங்கினான்.

நாம் இரண்டு தசாப்த காலத்துக்கு முன்னர் இழந்த மண்ணை நிரந்தரமாகவே தாரை வார்த்து விட்டோம் என்று தான் எண்ணியிருந்தோம். எனினும் மீண்டும் நமது மண்ணுக்கு வருவதற்கு இறைவன் உதவி செய்துள்ளான்.

முசலி பிரதேசத்தில் நமது சொந்தக் காணிகளில் குடியேறும் போது வில்பத்தை அழிக்கிறார்கள் என்று கூக்குரலிட்டார்கள், றிஷாட்டே இதற்கு மூல காரணம் என்றும் திட்டித் தீர்த்தார்கள். சமூக வலைத் தளங்களான முகநூல்களும், இணையத் தளங்களும் என்னைப் பற்றிய கட்டுக் கதைகளையும் அபாண்டங்களையும் தாரளமாகவே பரப்பிவருகின்றன.

இனவாத இணையத் தளங்கள் சில என்னை குற்றம் சாட்டுவதற்காவே திட்டமிட்டு ஒரு சில பக்கங்களை திறந்து ஒவ்வொரு நாளும் சேறு பூசி வருகின்றனர். வில்பத்துவிலும், பெரியமடுவிலும், சன்னாரிலும், நான் காடுகளை அழித்ததாக இனவாத சூழலியலாளர்கள் 6 வழக்குகளை தொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சமூகத்தை மீளக் குடியேற்றுவதற்கு நான் முன்னின்று செயற்படுவதால் தான் இவ்வாறு செய்கிறார்கள்.

எனது குரல் வளையை இறுக்குவதற்கும் என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்கும் என் மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்களும் பாடாய்ப் படுகின்றனர்.

இத்தனைக்கு மத்தியிலே குர்-ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுவதாகக் கூறும் ஒருகட்சி என்னைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை சோடித்து, கோவைப்படுத்தி இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவிலும் நிதி மோசடி விசாரணைப்பிரிவிலும் இரகசியப் பொலிசாரிடமும் பொலிஸ் நிலையத்திலும் கொடுத்துவிட்டு ஏதோ என்னை குற்றவாளி போலாக்கி பத்திரிகைகளையும் வானொலி, தொலைக்காட்சிகளையும் நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து ஊடகவியலாளர் மகாநாடுகளை நடாத்தியது.

நான் எந்தத்தவறும் இழைக்கவில்லை. இறைவனைத் தவிர எவருக்கும் பயப்படவும் இல்லை எத்தனை குற்றச்சாட்டுக்களை என் மீது அடுக்கினாலும் நான் கதி கலங்கப்போவதும் இல்லை. குற்றம் செய்யாத என்னை எவ்வாறாவது சிக்கலுக்குள் மாட்டவைத்து சிறையில் அடைப்பதன் மூலம் தாங்கள் சந்தோசமாக இருக்கமுடியும் என இந்த கட்சிக்காரர்கள் பகற்கனவு காண்கின்றனர்.

நாங்கள் வரலாறுகளை மறந்து வாழக்கூடாது. நன்றி மறந்து வாழவும் கூடாது. யுத்தகாலத்தில் காடாகியும் புதர்கள் மண்டியும் இடிபாடுகளுடான கட்டிட சிதைவுகளுடனும் காட்சி தந்த இந்தப்பிரதேசம் இப்போது எப்படி இருக்கின்றது என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

பொற்கேணியில் இருந்து அரிப்பு வரை கட்டடங்களையும் வீடுகளையும் மாடிகள் கொண்ட பாடசாலைகளையும் காண முடிவதற்கு யார் காரணம் என்பதும் உங்கள் மனச்சாட்சிக்கு தெரியும். இதற்கெல்லாம் எனக்கு கிடைக்கும் வாழ்த்துக்களே எனக்கெதிரான வழக்குகளும் என்னைத் தூசிக்கும் வார்த்தைகளுமாகும் .

வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்ற சர்வதேசமும் அரசாங்கமும் எந்த உதவியும் வழங்கவில்லை. அரச சார்பற்ற நிறுவனங்கள் மாற்றாந் தாய் மனப் பாங்குடனேயே எம்மை நடாத்துகின்றன. நான் வெளிநாடுகளுக்கு சென்று பரோபகாரிகளை சந்தித்து கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வந்த வீடுகளே இவை. எனது சொந்த முயற்சியினால் கொண்டு வரப்பட்ட இந்த வீடுகள் தொடர்பிலும் இனவாதிகள் என்னை பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்.

மீள்குடியேற்றத்தை முறையாக செயற்படுத்துவதற்காகவே அரசாங்கத்திடம் நான் பல முறை விடுத்த வேண்டுகோளின் பின்னரேயே விசேட செயலணி ஒன்று அமைக்கப்பட்டது அதற்கும் தடை போடுகின்றனர் என்றும் அமைச்சர் கூறினார். இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top