Ad Space Available here

மன நோயாளிகளாகும் காஷ்மீரிகள்..

- எம்.ஐ.அப்துல் நஸார்  -
18 இலட்சம் காஷ்மீர் மக்கள் உள நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருப்ப­தாக புதிய ஆய்வில் தக­வல்

ஹாபிஸா பானு­வுக்கு வயது 52. சில வேளை­களில் விட்­டத்தைப் பார்த்­த­வாறு கூரைப் பல­கை­களை எண்­ணிக்­கொண்­டி­ருப்பார் அல்­லது கதவின் வரி­களை எண்ணிக் கொண்­டி­ருப்பார் அல்­லது தரை விரிப்பில் காணப்­படும் பூக்­களை எண்­ணிக்­கொண்­டி­ருப்பார் .


அந்தப் பெண்­ம­ணியின் வீட்டில் மூன்று சிறிய அறை­களும், ஒரு சமை­ய­ல­றையும் இருக்­கின்­றன. களி மண்ணால் பூசப்­பட்ட ஒரு அறையில் விசேட தேவை­யுள்ள உற­வினர் ஒருவர் வசிக்­கின்றார், மற்­று­மொரு அறை வர­வேற்­ப­றை­யாகப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. மூன்­றா­வது அறை இறந்து போன அப்­பெண்ணின் மக­ளி­னதும், 'காணாமல் போன' மக­னி­னதும் நினை­வு­களை சுமந்து கொண்­டி­ருக்­கின்­றது. அந்த அறை­யில்தான் ஹாபிஸா உறங்­கு­கிறார்.

அந்த அறையில் அப்­பெண்ணிண் மகனின் புகைப்­ப­ட­மொன்றும், ஒரு பாத்­திரம் நிறைய அன்­றாடம் பயன்­ப­டுத்த வேண்­டிய மருந்து மாத்­தி­ரை­களும், கட்­டி­லுக்­க­ருகில் துணித் துண்­டினால் கட்­டப்­பட்ட உடைந்த வானொ­லி­யொன்றும் காணப்­ப­டு­கின்­றன. 

அப்­பெண்­மணி ஒவ்­வொரு இர­விலும் கனவில் தனது மக­னுக்­காக பெரு­நா­ளுக்­கான ஆடை­களைக் கொள்­வ­னவு செய்­கின்றார். பெரும்­பாலும் காலையில் அழு­து­கொண்டே எழுந்­தி­ருக்­கின்றார். 

இசை­யினைக் கேட்­டா­லா­வது சிந்­த­னை­யினை மாற்றிக் கொள்வார் என்ற எதிர்­பார்ப்பில் அப்­பெண்ணின் குடும்பம் அந்த வானொ­லியை அவ­ருக்கு கொடுத்­துள்­ளது. ஆனால் இவை­யெல்லாம் ஹாபி­ஸாவின் உள நிலை­யினைத் தெளி­வாகப் புலப்­ப­டுத்­து­கின்­றன. 

காஷ்­மீரில் உளச் சுகா­தாரம் என்ற விடயம் தொடர்பில் விரி­வான அறிக்­கை­யொன்­றினை 'எல்லை கடந்த வைத்­தி­யர்கள்' என்ற அமைப்பு அண்­மையில் வெளி­யிட்­டது. அந்த அறிக்­கையின் முடி­வுரை அந்தப் பள்­ளத்­தாக்கில் வசிக்கும் அனை­வ­ரிலும் அரை­வா­சிப்­பே­ருக்கு 'உள­நலப் பிரச்­சி­னைகள் உண்டு' எனக் குறிப்­பி­டு­கின்­றது. 

காஷ்­மீரின் வளர்ந்தோர் சனத்­தொ­கையில் 45 வீத­மானோர் அதா­வது 1.8 மில்­லியன் பேர் ஏதே­னு­மொரு மன அழுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். பெரும்­பான்­மை­யாக 93 வீத­மானோர் முரண்­பா­டு­களில் சிக்­குண்டு அதிர்ச்­சி­ய­டைந்த நிலையில் காணப்­ப­டு­கின்­றனர்.

காஷ்­மீ­ரி­லுள்ள வளர்ந்த ஒரு சரா­சரி மனி­தனை எடுத்துக் கொண்டால் அவன் தனது வாழ்­நாளில் குறைந்­த­பட்சம் எட்டு அதிர்ச்­சி­களை நேர­டி­யாக அனு­ப­வித்­தி­ருக்­கின்றான். 70 வீதத்­திற்கும் மேற்­பட்டோர் தமக்குத் தெரிந்த ஒரு­வரின் திடீர் மர­ணத்தை அல்­லது வன்­மு­றையால் ஏற்­பட்ட மர­ணத்தை நேரில் கண்ட அனு­ப­வத்தை கொண்­ட­வ­ராகக் காணப்­ப­டு­வ­தாக அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  

அந்த அறிக்­கையின் பிர­காரம் 50 வீத­மான பெண்­களும் 37 வீத­மான ஆண்­களும் உளச்­சோர்­வினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்,  36 வீத­மான பெண்­களும் 21 வீத­மான ஆண்­களும் கலக்க மன­நிலைப் பிறழ்­வினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர், 22 வீத­மான பெண்­களும் 18 வீத­மான ஆண்­களும் அதிர்ச்­சிக்குப் பிற்­பட்ட அழுத்தப் பிறழ்­வினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

மன­நலம் தொடர்பில் எல்லை கடந்த வைத்­தி­யர்கள் அமைப்­பினால் தயா­ரிக்­கப்­பட்ட மூன்­றா­வது அறிக்கை இது­வாகும். இதற்கு முன்­ன­தாக எல்லை கடந்த வைத்­தி­யர்கள் அமைப்­பினால் ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடு­களில் ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. 
இந்­திய நிரு­வா­கத்­திற்­குட்­பட்ட காஷ்­மீரில் மூன்று பிராந்­தி­யங்கள் காணப்­ப­டு­கின்­றன. ஜம்மு, காஷ்மீர் பள்­ளத்­தாக்கு, லடாக் ஆகி­ய­னவே அம் மூன்று பிராந்­தி­யங்­க­ளு­மாகும். 

புது­டெல்லி அர­சாங்­கத்­திற்கு எதி­ராக கிட்­டத்­தட்ட 27 ஆண்­டு­க­ளாகக் கிளர்ச்சி செய்யும் கிளர்ச்­சிக்­குழு இந்தப் பள்­ளத்­தாக்­கி­லேயே நிலை கொண்­டுள்­ளது. அந்தப் பிர­தே­சத்­தி­லி­ருந்தே தற்­போது அதி­க­ள­வான உள நோய்கள் தொடர்­பாக அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளன. 

அங்கு நிலை­கொண்­டுள்ள இலட்­சக்­க­ணக்­கான இந்­திய இரா­ணு­வத்­திற்கு எதி­ராக ஆயுதக் குழுக்கள் சண்­டையில் ஈடு­பட்டு வரு­கின்­றன. – சிலர் சுதந்­திரம் கேட்டுப் போரா­டு­கின்­றனர், சிலர் பாகிஸ்­தா­னோடு இணைய வேண்டும் என்­ப­தற்­காகப் போரா­டு­கின்­றனர்.  

முரண்­பாடு ஆரம்­பித்த 1989ஆம் ஆண்டு காஷ்­மீரில் இருந்த ஒரே­யொரு மன­நல மருத்­து­வ­ம­னைக்கு 1,700 பேர் சிகிச்­சைக்­காகச் சென்­றனர். கடந்த ஆண்டு அந்த எண்­ணிக்கை ஒரு இலட்­சத்­தையும் தாண்­டி­யது.

இது மிகப் பெரும் பிரச்­சி­னை­யாகும் என மன­நல மருத்­துவர் முஸ்தாக் மர்கூப் தெரி­வித்தார். 

1989ஆம் ஆண்­டுக்கு முன்னர் அதிர்ச்­சிக்குப் பிற்­பட்ட அழுத்தப் பிறழ்வு காணப்­ப­ட­வில்லை. ஆனால் தற்­போது அது காஷ்­மீரில் பர­வி­வ­ரு­கின்­றது. தலை­முறை தலை­மு­றை­யாக இந்தப் பாதிப்­புகள் ஏற்­பட்டே வரு­கின்­றன.

யாரா­வது ஒருவர் கொல்­லப்­பட்டால் அல்­லது தாக்­கு­த­லுக்கு இலக்­கானால் நிலைமை கவ­லைக்­கி­ட­மா­ன­தாக மாறு­கின்­றது.

எனவே இது தலை­முறை தலை­மு­றை­யாக கடத்­தப்­படும் அதிர்ச்­சி­யாகும். 

இரா­ணுவம் மற்றும் இரா­ணுவ நட­வ­டிக்­கைகள் இவை இரண்­டுமே மக்­களும் அவர்­க­ளது மன­ந­லமும் பாதிக்­கப்­ப­டு­வ­தற்கு கார­ண­மா­வ­தனை ஆளும் மக்கள் ஜன­நா­யகக் கட்சி ஏற்­றுக்­கொள்­கின்­றது. 'இந்தப் பிரச்­சி­னை­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான உபா­யங்­களைக் கண்­ட­றி­வ­தற்கு முயற்­சித்து வரு­கின்றோம்' என மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் பேச்­சாளர் வஹீட் உர் ரஹ்மான் பரா தெரி­வித்தார்.  

வன்­முறை நிகழும் ஒரு பிர­தே­சத்தில் நீங்கள் வாழும்­போது, அது உங்­க­ளது மன­ந­ல­னையும் மன­நி­லை­யி­னையும் பாதிப்­ப­டையச் செய்­கின்­றது. வன்­மு­றைகள், கட்­டுப்­பா­டுகள் தாக்­கு­தல்கள், ஊர­டங்குச் சட்­டங்கள் ஆகி­யன மன­ந­ல­னையும் ஸ்திர­மற்­ற­தாக்­கு­வதில் பங்­க­ளிப்புச் செய்­கின்­றன. இந்த பார­தூ­ர­மான பிரச்­சி­னை­யினைக் கையாள்­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு விரி­வான  கொள்­கை­யொன்று அவ­சி­ய­மாகும். 

1993 ஆம் ஆண்டு குளிர் காலத்­தின்­போது தெற்கு மாவட்­ட­மான புல்­வா­மாவில் தனது வீட்டில் பக­லு­ணவை குடும்­பத்­தா­ருடன் சாப்­பிட்டுக் கொண்­டி­ருந்த ஹாபி­ஸாவின் 13 வயது மகன் ஜாவிட் அஹமட் இந்­திய எல்லைக் காவல் படை­யி­னரால் கொண்டு செல்­லப்­பட்­டது தொடக்கம் ஹாபி­ஸாவின் மன நலனில் பாதிப்பு ஏற்­பட்­டது.  

'ஜாவிட் அஹமட் இந்­திய எல்லைக் காவல் படை­யி­னரால் கொண்டு செல்­லப்­பட்­ட­போது காஷ்­மீரில் ஊர­டங்குச் சட்டம் பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. அப்­போது கோடை­காலத் தலை­ந­க­ரான ஸ்ரீந­க­ருக்கு அண்­மித்­த­தா­க­வுள்ள ஹஸ­ரத்பால் தர்­ஹா­வுக்­க­ருகில் ஆயு­த­தா­ரிகள் இந்­தியப் படை­யி­ன­ருடன் மோதலில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­தனர்' எனத் தெரி­வித்த ஹாபிஸா 'தர்ஹா முற்­று­கை­யி­டப்­பட்­டி­ருந்­தது.

எனவே அன்று பாட­சாலை நடை­பெ­ற­வில்லை. முழுப் பிர­தே­சத்­தி­லுமே பதற்றம் நில­வி­யது. அயலில் இருந்த பிள்­ளை­க­ளோடு அவன் விளை­யாடச் சென்றான். அவன் பசி­யோடு வீட்­டுக்கு வந்தான்.

சிறிது நேரம் கூட இருக்­க­வில்லை. திடு­திப்­பென படை­யினர் எமது வீட்­டினுள் நுழைந்­தனர். எங்­க­ளது கண் எதி­ரி­லேயே எங்­க­ளது மகனை அவர்கள் கொண்டு சென்­றனர்.

அவர்­க­ளிடம் எங்கள் மகனை விட்­டு­வி­டு­மாறு மன்­றா­டினோம், ஆனால் அவர்கள் அதை காதில் வாங்­கிக்­கொள்­ள­வில்லை'  என நடந்­த­வற்றை நினைவு கூர்ந்தார் ஹாபிஸா. 'அவன் அதன் பின்னர் வீடு திரும்­பவே இல்லை' அழு­த­வாறே கூறினார் அவர்.

அன்று 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி. பொலிஸில் முறைப்­பா­டொன்றைப் பதிவு செய்­த­தாக குடும்­பத்­தினர் கூறி­னார்கள். ஒரு வாரத்தின் பின்னர், முறைப்­பாடு கிடைத்­ததும் வழங்­கப்­ப­டு­கின்ற முதல் தகவல் அறிக்கை பிர­தி­யொன்று கிடைத்­தது.

 அந்த அறிக்­கையில் 13 வய­தான அவர் ஆயுதக் குழுவின் உறுப்­பினர் எனவும், அவரை வாக­னத்தில் அழைத்துச் செல்­லும்­போது தாக்­கு­தல்­தா­ரிகள் மறைந்­தி­ருந்து தாக்­கி­யதால் துப்­பாக்கிச் கூட்­டுக்கு இலக்­காகி நவம்பர் 04ஆந் திகதி மாலை உயி­ரி­ழந்­த­தாகத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. 

துப்­பாக்கிப் பிர­யோகம் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­போது இருட்­டி­னூ­டாக ஜாவிட் தப்பிச் செல்ல முனைந்­த­தா­கவும் அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. 

இந்தப் புனை­க­தை­யினை குடும்­பத்­தினர் ஏற்க மறுத்­துள்­ள­தோடு தங்­க­ளது மகன் சாதா­ரண பாட­சாலை மாணவன் எனவும், அவன் அவ்­வாறு தப்­பித்­தி­ருந்தால் எங்­களைத் தொடர்­பு­கொண்­டி­ருப்பான் எனவும் வலி­யு­றுத்­தினர். 

சட்­டத்­த­ர­ணி­களைப் பிடிப்­ப­தற்­கா­கவும், ஜாவிதைத் தேடி சிறைச்­சா­லை­க­ளுக்கும், இரா­ணுவ முகாம்­க­ளுக்கும் தங்­க­ளிடம் இருந்த அனைத்­தையும் விற்­று­விட்­ட­தாக அந்தக் குடும்­பத்­தினர் தெரி­விக்­கின்­றனர். 

'நீதியை வேண்டி நாம் எவ்­வ­ளவு செலவு செய்­தி­ருக்­கின்றோம் என்­பது எங்­க­ளுக்கே தெரி­யாது. வீட்டில் இருந்த பெறு­ம­தி­யான அனைத்­தையும் விற்றோம்.

இறு­தி­யாகத் தரை விரிப்­பைக்­கூட விற்றோம்' என தரை விரிப்பு பின்­னு­ப­வ­ராக இருந்து தற்­போது முச்­சக்­க­ர­வண்டி ஓட்­டு­ந­ராக இருக்கும் ஹாபி­ஸாவின் கண­வ­ரான 55 வய­து­டைய குலாம் நபி தெரி­வித்தார். 'அதனால் தான் எங்­க­ளுக்கு சரி­யான வாழ்­விடம் கூட இல்லை' என்­கிறார் அவர்.

புல்­வமா மாகா­ணத்தின் மொங்­கோஹொம் கிரா­மத்தில் அமைந்­துள்ள அவர்­க­ளது வீடு களி­யி­னாலும் மரத்­தி­னாலும் உரு­வாக்­கப்­பட்­டது. அண்மைக் காலம் வரை அதற்கு எந்த ஜன்­னலும் இருக்­க­வில்லை. ஆனால் பின்னர், அரச சார்­பற்ற நிறு­வ­ன­மான காணாமல் போனோரின் பெற்­றோர்­களின் அமைப்பு மரத்­தி­னா­லான ஜன்­ன­லொன்றைப் பொருத்திக் கொடுத்­தது. 

வாஜித் காணாமல் போய் மூன்று ஆண்­டு­களின் பின்னர் 14 வய­தான ஜாவிதின் சகோ­த­ரி­யான று­க்ஷானா மார­டைப்பால் கால­மானார். 
எனது மகள் 1996ஆம் ஆண்டு ரமழான் மாதத்­தின்­போது தனது சகோ­த­ரனைத் தேடிக்­கொண்­டி­ருந்த நிலையில் மார­டைப்பால் கால­மானார். ஜாவிதைத் தேடி அலைந்­த­போது அவள் எல்லா இட­ங்­க­ளுக்கும் எங்­க­ளோடு வந்தாள்.

 தற்­போது ஹாபிஸா மற்றும் குலாம் ஆகி­யோ­ருடன் ஒரே­யொரு மக­ளான 30 வய­தான ஷபீக்கா மாத்­திரமே இருக்­கின்றார்.

'நாங்கள் மிகவும் கஷ்­டங்­களை எதிர்­கொண்டு வரு­கின்றோம். நான் தினமும் உள­ரீ­தி­யாக பல­வீ­ன­ம­டைந்­து­கொண்டே வரு­கின்றேன். நான் எனது மகளை ஒரு­வ­ருக்கு திரு­மணம் செய்து கொடுப்­ப­தற்கு முயற்­சித்தேன். ஆனால் எங்­க­ளது குடும்ப நிலைமை அவர்­க­ளது கௌர­வத்­திற்கு பொருந்­த­வில்லை என்று திரு­ம­ணத்­திற்கு மறுப்புத் தெரி­வித்­து­விட்­டனர்' என ஹாபிஸா கூறினார்.

குலாமின் விஷேட தேவை­யு­டைய சகோ­தரன் வாலி மொஹமட் இந்தக் குடும்­பத்­தி­ன­ரு­டன்தான் வசித்து வரு­கின்றார். 

'எனது விசேட தேவை­யு­டைய மைத்­துனர் கடந்த ஆறு ஆண்­டு­க­ளாக படுத்­த­ப­டுக்­கை­யாக இருக்­கின்றார். எனது கணவர் நக­ரத்­திற்கு (ஸ்ரீநகர்) முச்­சக்­க­ர­வண்­டி­யோ­டு­வ­தற்குச் சென்று விடு­வதால் அயல்­வீட்டுச் சிறுவன் ஒரு­வனின் துணை­யுடன் நானே அவரை கழி­வ­றைக்கும் குளிப்­ப­தற்கும் அழைத்துச் செல்­கின்றேன்' (குளி­ய­ல­றையும் கழி­வ­றையும் வீட்­டுக்கு வெளி­யி­லேயே இருக்­கின்­றன).

நாங்கள் அவரை பரா­ம­ரிக்­கா­விட்டால் ஊரில் உள்­ள­வர்கள் என்ன சொல்­வார்கள்?

ஹாபிஸா மிக அரி­தா­கவே உறங்­கு­கின்றார். அவ­ரு­டைய மருத்­துவ அறிக்­கை­யின்­படி அவர் மன­நிலைப் பாதிப்பு மற்றும் ஒற்றைத் தலை­வ­லி­யு­டன்­கூ­டிய 'பார­தூ­ர­மான எதி­ரி­ணக்க ஏக்­கத்தால்'  பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்றார்.

மனச்­சோர்­வுக்கு எதி­ரான மருந்­து­களை உட்­கொள்­வதை கடந்த வாரம் தொடக்கம் அவர் நிறுத்­திக்­கொண்­டுள்ளார், ஏனெனின் அவற்றைக் கொள்­வ­னவு செய்­வ­தற்­கான பொரு­ளா­தார நிலை அந்தக் குடும்­பத்­திடம் இல்லை. 

குலா­முக்கும் அவ­ருக்­கு­ரிய ஆரோக்­கியப் பிரச்­சி­னைகள் உள்­ளன. அவ­ருக்கும் கடு­மை­யான முது­கு­வலி இருக்­கின்­றது. ஆனால் மருத்­துவப் பரி­சோ­த­னைக்கும் வலி நிவா­ரண மருந்­து­க­ளுக்கும் செலவு செய்தால்  தனது குடும்பம் பட்டினியால் வாட வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார். 

'அவரது முச்சக்கர வண்டியும் எதிர்வரும் சில மாதங்களில் தடை செய்யப்படவுள்ளது.

ஏனெனில் அது மிகவும் பழைய வாகனம்' என விபரித்தார் ஹாபிஸா. சுற்றாடல் மாசுபடும் அளவினைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கையால் தமது குடும்பத்திற்கு என்ன பயன் என அந்தக் குடும்பம் கவலை கொண்டுள்ளது. 

'எங்களது குடும்பத்திற்கு இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது? ' என கேட்கும்போதே மீண்டும் அவரது கண்ணில் இருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது.

'எனது மனைவி பைத்திய நிலைக்குச் சென்றுவிடுவாரோ என சிலவேளைகளில் அச்சம் ஏற்படுகின்றது. ஜாவிட் எங்களுடன் இருந்திருந்தால் எங்கள் குடும்பத்தின் நிலை சிறப்பாக  இருந்திருக்கும், அவன் பாடசாலைக்கு சென்று வந்துகொண்டு இருந்திருப்பான், ஓய்வு நேரத்தில் அப்பிள் தோட்டங்களில் வேலை செய்திருப்பான்' என தழுதழுத்த குரலில் கூறினார் குலாம்.

அவன் மிகவும் பொறுப்புள்ள பிள்ளையாக இருந்தான். பாடசாலை விட்டு வந்ததும் அவன் ஐஸ் கிரீம் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தான். 
'ஜாவிட் உயிருடன் இருந்திருந்தால், எனக்கு நல்ல மகனாகவும், குடும்பத்திற்கு உதவியாகவும் இருந்திருப்பான்' எனக் கூறினார் அந்தத் தந்தை.
மன நோயாளிகளாகும் காஷ்மீரிகள்.. மன நோயாளிகளாகும் காஷ்மீரிகள்.. Reviewed by Madawala News on 9/20/2016 01:49:00 PM Rating: 5