Accaddemy

மலேசிய முருகன் கோயில், பொழுது போக்குப் பூங்காக்களில் தாக்குதல் நடத்த முயற்சித்த மூவர் கைது.



மலேசிய சுதந்திர தின விழாவை (ஆக 31) சீர்குலைக்கும் நோக்கில், அங்குள்ள உலகப் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோயில், பொழுது போக்குப் பூங்காக்கள், பொலிஸ் நிலையங்கள் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் திட்டியதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் மூவரை அந்தநாட்டுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதுகுறித்து மலேசிய பொலிஸ் ஐ.ஜி. காலித் அபு பக்கர், செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

மலேசியாவில் ஞாயிற்றுக்கிழமை சுதந்திர தினம் அமைதியாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக, சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது, பத்துமலை முருகன் கோயில், பொழுது போக்குப் பூங்காக்கள், பொலிஸ் நிலையங்கள் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய மூவரை சில தினங்களுக்கு முன்பு கைது செய்தோம்.

அவர்கள் மூவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை செலாங்கர் நகரில் சந்தேகத்தின் பேரில் கடந்த 27-ம் திகதி கைது செய்தோம். அவரிடம், துப்பாக்கிகளும், தோட்டாக்களும் இருந்தன. இதேபோல், கடந்த 29-ம் திகதி மேலும் இருவரைக் கைதுசெய்தோம்.

மலேசியாவில் தாக்குதல் நடத்திவிட்டு, சிரியா தப்பிச் செல்வதற்கு அவர்கள் மூவரும் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று காலித் அபு பக்கர் தெரிவித்தார்.

முன்னதாக, ஐ.எஸ். இயக்கத்தில் சேர்வதற்காக சிரியா செல்ல திட்டமிருந்த 68 பேரின் கடவுச்சீட்டுகளை மலேசிய அரசு கடந்த மாதம் திரும்பப் பெற்றது.

தலைநகர் கோலாலம்பூரை அடுத்துள்ள புசாங் நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் கடந்த ஜூன் மாதம் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் சிலர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
மலேசிய முருகன் கோயில், பொழுது போக்குப் பூங்காக்களில் தாக்குதல் நடத்த முயற்சித்த மூவர் கைது. மலேசிய முருகன் கோயில், பொழுது போக்குப் பூங்காக்களில்  தாக்குதல் நடத்த முயற்சித்த மூவர் கைது. Reviewed by Madawala News on 9/01/2016 09:44:00 AM Rating: 5