Kidny

Kidny

மறைந்த மாமனிதர் அல்ஹாஜ் M H M அஷ்ரப் அவர்களை பற்றி வை.எல்.எஸ்.ஹமீட் எழுதிய கட்டுரை…!!

இந்நாட்டில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே 
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இருந்தார்கள் .

முஸ்லிம்களுக்காக நியாயமான பணியையும் ஆற்றினார்கள்.
ஆனாலும் முஸ்லிம் அரசியல் இருக்கவில்லை .

முஸ்லிம் அரசியலின் தேவையும் அன்றிருக்கவில்லை.
அதனால்தான் அன்றைய நம் தலைவர்கள் தேசிய அரசியலை நாடி நின்றனர் .
அன்றைய நிலையில் அது முஸ்லிம்களுக்கு போதுமானதாகவே இருந்தது.
காரணம், இனவாத வேர்கள் அன்று நிலத்தடியில்
இழையோடிய போதும்
அது ஒரு தேசிய வியாதியாக உருப்பெற்றிருக்க வில்லை.

கால ஓட்டத்தில் தேசிய அரசியலுக்குள் இனவாதம் புகுந்து கொண்டது.
சமூகங்கள் துருவப்படுத்தப்பட்டன.
இதனைப் புரிந்துகொண்ட தமிழர்களின் அரசியல் 
தமிழ் அரசியலாக ஏற்கனவே பரிணாமம் எடுத்து தன் பயணத்தில் முனைப்பாகிய போதும் முஸ்லிம்களின் அரசியல் வெறும் முஸ்லிம்களின் அரசியலாகவே இருந்தது.

முஸ்லிம்களின் அரசியல் முஸ்லிம் அரசியலாக மாற வேண்டியது காலத்தின் தேவை என்பதை உணர்ந்த சில தலைவர்கள் அதற்காக முயற்சிக்காமலும் இல்லை. ஆனாலும் வெற்றிபெற முடியவில்லை .
காரணம் முஸ்லிம் அரசியலுக்கும் முஸ்லிம்களின் அரசியலுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் அன்று சமூகம் இருக்கவில்லை .

விளைவு, அன்று புத்தளப் பள்ளிவாசலுக்குள் நம் சொந்தங்கள் துவம்சம் செய்யப்பட்டபோது குரலின்றி இருந்தோம் ; தமிழ் அரசியல், தந்தை செல்வாவின் வடிவில் நமக்காக குரல் கொடுத்தது .
காலி இனக்கலவரவரத்தில் கையறு நிலையில் இருந்தோம். நமக்காக தமிழ்க்குரல்,  அண்ணன் அமிர்தலிங்கத்தின் வடிவில் அச்சமின்றி முழங்கியது .
இலங்கை இந்திய ஒப்பந்தம் நமக்கு வழங்கிய அடிமைச் சாசனத்திற்கெதிராகப் பேச தமிழ்க்குரலும் இல்லாமல் நமக்கும் குரலில்லாமல் நிர்க்கதியாய் நின்றோம்.

இந்நிலையில் தான் கிழக்கில் இருந்து அச்சூரியன் உதித்தது .
பாராளுமன்றமே அதிர்ந்தது.
கற்பனை பண்ணியிராத பல்கலைக்கழகமும் கல்வியியல் கல்லூரியும் துறைமுகமும் பத்துப்பேருக்கே வேலைபெற முடியாத துறைமுகத்தில் பல்லாயிரக் கணக்கானோர்க்கு வேலையும் என்று சாதனை விரிந்தது. முஸ்லிம் அரசியலின் அர்தம் புரிந்தது.

ஏன், இன்று புதிய அரசியல் யாப்பு எழுதப் பட்டுக் கொண்டிருக்கின்றது , ஆனால் நாம் அதில் எங்கே இருக்கின்றோம் ; என்று தெரியாமல் அலைகின்றோம். எத்தனையோ அமைப்புகள் அறிக்கைகள் எழுதுகிறார்கள் . ஆனாலும் கண்ட பலன் எதுவுமில்லை . ஆனால் 2000 மாம் ஆண்டும் ஒரு புதிய யாப்பு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப் பட்டது, மட்டுமல்ல ஒரு சிறுபான்மைத் தலைவரான நம் தலைவரே, G L பீரிஸ் போன்ற சட்டக் கடல்கள் அமர்ந்திருந்த அச்சபையில் அந்த யாப்பை சமர்ப்பித்து மூன்று மணி நேரம் உரையாற்றினார் . அந்த யாப்பு வரையப் பட்ட போது அதில் என்ன விடயங்கள் வரும் எது வராது, என்று சமூகத்தில் யாரும் அலட்டிக் கொள்ளவில்லை ஏனெனில் அவர் மீது அவ்வளவு அபார நம்பிக்கை சமூகத்திற்கு இருந்தது. இன்று அந்நிலை இருக்கின்றதா?

ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரவேண்டும். அந்த சூரியன் மறைந்து விட்டது.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மறைந்தோர் வருவதில்லை மாநிலத்தில்.
ஆனாலும் அவர் பணியை விட்ட இடத்தில் இருந்து நாம் தொடரத்தானே வேண்டும்.
யார் அதனைச் செய்வது.

எத்தனை பேருக்குத்தான் அதில் ஆர்வம், எவ்வளவு அவசரம் 
மரணித்து மூன்று நாட்களாவது தாமதிக்க பொறுமையில்லை. ஜனாசா, அன்றிரவு நல்லடக்கம் செய்யப்பட்டது . அடுத்த நாள் விடிந்ததா என்று இன்னும் திட்டமில்லை. தலைமைத்துவப் போட்டி. பதவிப் போட்டியல்ல, தலைவரின் சமூகப் பயணத்தை முன்னெடுத்து சமூக விடுதலையை விரைவில் வாங்கிக் கொடுத்துவிட வேண்டுமென்ற வேட்கை.
அப்படித்தான் நமது மக்கள் நம்பினார்கள் .

" சமூக விடுதலை வேட்கை" என்ற சொற்றொடருக்கு அகராதியில் பொருள் மாற்றம் செய்யப் பட்டிருந்ததை நமது சமுதாயத்தில் யாரும் அறிந்திருக்க வில்லை.
இச்சொற்றொடரின் புதிய பொருள், சுயலம், அரசியல் சந்தர்ப்பவாதம், வாய்களுக்கு தலைவர் உடைத்தெறிந்த பூட்டுக்களை மீண்டும் இடல், சமூகத்திற்காக எதையும் செய்யாமலிருத்தல், என்பனவாகும் , என்பது அப்பொழுது தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். அது மக்களின் தவறுமல்ல, ஆனால் புதிய அகராதி விற்பனைக்கு வந்தபின்பாவது மக்கள் உணரவில்லையே! அது யார் குற்றம் ?

ஆனாலும்  அகராதியில் பழைய அந்த சொற்றொடரின் புதிய பொருளை உணர்ந்தவர்கள், அச்சொற்றொடரின் உண்மையான அர்த்தத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்கும்  பயணத்தை ஆரம்பித்தாரகள். குழந்தைகள் கள்ளங்கபடமற்றவர்கள், கறை படியாதவர்கள்; என்பார்கள் .
எனவே அன்று அரசியல் குழந்தைகளாக இருந்து விடலைப் பருவத்திற்கு வந்தவர்கள் , அச்சொற்றொடரின் பொருளைப் புரிந்திருக்கின்றோம் ; புறப்படலாம் என்றபோது நம்புவது தவறாகுமா? விடலைப் பருவம் தாண்ட, தாண்ட விகற்பமும் வளர்ந்த ரகசியத்தை எவ்வாறு அறிவது. "முந்தியது முழங்கால் மட்டுமென்றால் பிந்தியது அதற்கு மேல்" என்பது போல், அகராதியில் அச்சொற்றொடரின் பொருளை முந்தியவர்கள் திருத்தியது போதாதென்று பிந்திய நம் விடலைகள் அரசியல் வாலிபத்திற்குள் புகுந்ததும் அவர்களும் தம் பங்கிற்கு திருட்டுத்தனமாக திருத்தியிருக்கின்றார்கள். அச்சொற்றொடரின் புதிய பொருள் " வாய்திறந்தால் பொய் , பொய்ச் சத்தியம், சுயநலம், சந்தர்ப்வாதம், செய்யாதவற்றை செய்ததாக ஊடகங்களில் தினசரி தன் அடியாட்களை வைத்து எழுதுவது, எல்லா மகா பாவங்களையும் செய்துவிட்டு, மகான் வேசம் போடுவது, ---- என்று பொருள் நீண்டு கொண்டே செல்கின்றது.

இதில் தவறு எங்கே இருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது . கானலை சில நேரம் "நீர்" என்று நம்பலாம் . ஆனால் கானலை, கானல் என்று தெரிந்த பின்பும் நீர் என்று செயற்கையாக நம்ப முற்பட்டால் அது சமூகத்தின் தவறல்லவா?  இன்று கானலை நீர் என்று நம்பவைப்பதறகாவே சில ஊடகங்களும் கைக்கூலி எழுத்தாளர்களும் இருக்கின்றார்கள் . இதற்காக மறைந்த தலைவரின் பெயரும் விற்பனைப் பொருளாக்கப் பட்டுவிட்டது.

மறைந்த தலைவர் தந்தை செல்வாவை மீட்டு வர முயற்சித்தது போன்று, மறைந்த தலைவரை நேசிக்கின்ற நாம் அவரை மீட்டுக் கொண்ணுவர முயற்சிக்க முடியாதா? அவரை மீட்டுக் கொண்டுவருவதென்பதென்ன? அதுதான் அவரது கொள்கைகளை, அவரது சமூகப்பார்வையை மீண்டும் உயிர்பெறச் செய்வது. இதை விட வேறு வழியில் அவருக்கு நன்றிக் கடன் செலுத்தாலாமா? முயற்சிப்போமா? இன்ஷா அல்லாஹ் .

யாஅல்லாஹ் எமது மறைந்த தலைவரின் பாவங்களை மன்னித்து அவருக்கு ஜன்னதுல் பிர்தௌஸில் அஃலாவைக் கொடுப்பாயாக . எங்களுக்கும் அந்த பாக்கியத்தைத் தந்தருள்வாயாக. ஆமீன் .
மறைந்த மாமனிதர் அல்ஹாஜ் M H M அஷ்ரப் அவர்களை பற்றி வை.எல்.எஸ்.ஹமீட் எழுதிய கட்டுரை…!! மறைந்த மாமனிதர் அல்ஹாஜ்  M H M அஷ்ரப்  அவர்களை பற்றி வை.எல்.எஸ்.ஹமீட் எழுதிய கட்டுரை…!! Reviewed by Madawala News on 9/17/2016 02:23:00 AM Rating: 5